Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

10/29/2017

இட்லிகளும் பின்ன நானும்

மடத்தில் சித்தர் இல்லை. ஆகவே இட்லி நான்கினை நிலக்கடலைத் தொகையலுடன் ’மாட் மாட்’டென மாட்டிவிட்டு இங்குமங்கும் பரபரத்தேன். ஏதோவொன்றை இழந்து தவிப்பது போன்ற உணர்வு. அப்பாவின் நினைவுதான் வந்தது. ஆமாம். மேலடவு, பின்னடைவு, அது எதுவானாலும் அப்பாவையே ஓர் எடுத்துக்காட்டாகக் கொள்கிறேன். அவருடைய சறுக்கலையும் கருத்திற்கொள்கிறேன். உறுக்கலையும் கருத்திற்கொள்கிறேன். அலைபேசியில் எப்போதும் திரைநிரை(screensaver)யாக உடன் இருக்கிறார். (இஃகி, எந்த மவராசனோ screensaverக்கு திரைக்காப்புன்னு விக்சனரியில போட்டு வெச்சிருக்கார். ஏம்ப்பா ஏன்?? கோயில்ல அம்மன் காட்சியளிப்பில்லா நேரத்தில் சாத்துவது திரைநிரைதானே?) அதை விடுங்கள்.

இட்லி நான்கினை வீசியவுடன் என்னவோ போலிருந்தது. அப்பாவை நினைத்தேன். இட்லிகளை வீசியவுடன் அவர் என்ன செய்வார்? ‘கொஞ்சம் சுடுதண்ணி’ என்று ஆட்காட்டி விரலையும் கட்டைவிரலையும் கொண்டு கோப்பையைச் சுருக்கி காற்றில் காண்பிப்பார். ஆகாவென நினைத்துக் கொண்டு நானே காப்பியைப் போட்டுக் குடித்துக் கொண்டிருக்கிறேன். நாவில் எஞ்சி இருக்கும் நிலக்கடலைத் தொகையலின் கார்ப்பும் காப்பியின் சுவையும் கலந்து எல்லையில்லா இடத்திற்கு என்னை, என் மனத்தை கவ்விக் கொண்டு போய்க்கொண்டிருக்கிறது. செம, சூப்பர் அப்பா!!
-பழமைபேசி.

6/20/2015

கரிக்குருவி


நான் அப்போது ஐந்தாம் வகுப்பு. பக்கத்து வீட்டு குமார் நான்காம் வகுப்பு. Selvakumar Kuppusamy குமாரின் அப்பா அம்மாவும்  விவசாயம். அதனால் தோட்டத்துக்குச் சென்று விடுவார்கள். ஆனால் எங்கள் வீட்டில் அம்மா எப்போதும் வீட்டில்தான் இருப்பார்கள். எனவே பள்ளிக்குச் சென்று வந்த நேரம் போக உள்ள உபரி நேரத்தில் நாங்கள் இருவரும் எங்கள் வீட்டிற்கு முன்பு இருக்கும் பெரு மைதானத்தில் எப்போதும் விளையாடிக் கொண்டிருப்போம். ஆமாம். நாங்களிருந்த வீட்டிற்கு முன்புறம் பரந்த இடம் இருக்கும். அது போக, விடுப்பு நாட்களில் மாடு மேய்க்கப் போவேன். நான் உதயசூரியன். குமார் இரட்டை இலை. ஆனாலும் எங்களுக்குள் சண்டையெல்லாம் கிடையாது.

தனக்கா அவர்களுக்கு சர்க்கார்பாளையத்தில் தோட்டமும் உறவினர்களும் உண்டு. அவ்வப்போது அவர்களது வீட்டார் ஜக்கார்பாளையம் போய் வருவது வழமை. அன்று மாலை ஐந்து மணி இருக்கும். தோட்டங்காடுகளுக்குச் சென்றவர்கள் ஊருக்குள் திரும்ப வேண்டிய தருணம் கூடி வருகிற வேளை. நானும் குமாரும் எங்கள் வீட்டுத் திண்ணைக்கு முன்பாக நின்று, எங்கள் வீட்டுக் கல்கட்டில் கூடு வைத்திருக்கிற வாலை வாலை ஆட்டிக் குதித்துக் கொண்டிருக்கும் அந்த கரிக்குருவியைப் பார்த்துக் கொண்டிருந்தோம். குமாரின் வீட்டுக்கு இடப்பக்கமாக இருக்கும் அந்த கல்கட்டு ஓரமாகத்தான் போயாக வேண்டும். அப்போதெல்லாம் அது அவன் தலையைக் கொத்தப் போகும். எனவே குமாருக்கு அதன் மீது கோபம். எனக்கு அது உட்கார்ந்து உட்கார்ந்து துள்ளிக்குதிக்கும் ஒயில் மிகவும் பிடிக்கும்.

“அதே... அப்பிடியே கசக்கி வீசணும்”, இது குமார்.

“ஏங்கொமாரு? அதென்ன பண்ணுச்சு உன்னிய?” இது நான்.

இந்த நேரத்தில்தான் எங்கள் வீட்டின் வலப்பக்க மூலையில் டமாலென ஏதோ ஓசை கேட்டது. ஏறெடுத்துப் பார்த்தால் சவாரி வண்டி(கூட்டு வண்டி)யொன்று பக்கவாட்டில் சாய்ந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் நாங்கள் இருவரும், “ஏய் வண்டி உழுந்திருச்சேய்... வண்டி உழுந்திருச்சேய்”யென்று கைகொட்டிக் குதூகலமாய்ச் சிரித்துக் குதித்தோம். அந்த நேரம் பார்த்து எங்கோ போய்விட்டுச் சைக்கிளில் வந்த அப்பா, சைக்கிளைக் கீழே போட்டு விட்டு வண்டியை நோக்கி ஓடினார். அம்மாவை நோக்கி எதோ உரத்த குரலில் கத்தினார். கடையையும், கடை வியாபாரத்தையும் அப்படியப்படியே போட்டு விட்டு, கைச்சொம்பில் தண்ணீரோடு அம்மாவும் போனார்கள்.

குமாரும் அதை வேடிக்கை பார்க்கப் போய் விட்டான். கடை திறந்திருக்கிறபடியால் நான் திண்ணையில் ஏறி உட்கார்ந்து கொண்டே அங்கே என்ன நடக்கிறதெனப் பார்த்துக் கொண்டிருந்தேன். சவாரி வண்டிக்குள் இருந்த தனக்காவையும், தனக்காவின் மாமியாரையும் கைத்தாங்கலாக அப்பா வெளிக்கொண்டு வந்தார். அம்மா தண்ணீர் கொடுத்து உட்காரச் சொன்னார். அதற்குள் பக்கத்திலிருந்தவர்களும் வந்து சேர, வண்டியையும் எருதுகளையும் ஓர்சலாக்கினார்கள். தன்க்காவைவும் அந்த பாட்டியையும் நடக்கச் சொன்னார்கள். உடலுக்கு ஒன்றும் பழுதில்லை என்றானவுடன் அவர்களை வீட்டில் விட்டுவர அம்மா போய்விட்டார். நான் மீண்டும் குமாரைக் கண்களால் தேடிக் கொண்டிருந்தேன்.

கண்ணிமைக்கும் நேரத்தில், பருத்திமார் விளார் என் கால்களிரண்டையும் பதம் பார்த்தது. அய்யோ அய்யோவெனக் கத்தினேன். எங்கள் வீட்டிற்குப் பின்புறம் இருந்த லைன்மேனக்கா வந்து தடுக்க முயன்றார்கள். இருந்தாலும் விளார் இறங்குவது நின்றபாடில்லை. அதற்குள் அம்மாவும் வந்து விட்டார். “ஏன், என்னாச்சு?” என்றார். அப்போதுதான் அங்கே இருந்தவர்களுக்கும் புரிந்தது. எனக்கும் புரிந்தது. “அங்க, வண்டி கொட சாஞ்சி கீழ உழுகுது. இவன் இங்க கைதட்டீட்டு குசியாச் சிரிக்கிறான்”னென்று சொல்லிக் கொண்டே மீண்டும் என்னை நோக்கியோடி வந்தவரை தடுத்துக் கொண்டார்கள். ஆனாலும் என் தலையில் ஒரு கொட்டு இறங்கியது. திரும்பிப் பார்த்தால், கடுங்கோபத்துடன் அம்மா.

நான் அழுதவன்... அழுதபடியே திண்ணையிலேயே தூங்கிவிட்டேன். திடுமெனக் கண்விழித்துப் பார்த்தேன். என் கால்களை அப்பா பிடித்து விட்டுக் கொண்டிருந்தார். “எதனா சப்புடுறா” என்றார். “முலுவா.. ஒனகென்னடா வேணும்... எது கேட்டாலும் வாங்கித்தர்றேன்” என்றார். நான் பிடியேதும் கொடுக்கவில்லை. கெஞ்சிக் கொண்டேயிருந்தார். என்னையும் மீறி என் மனம் இளகி விட்டிருந்தது. “எனக்கு நீச்சல் பழக கத்தாழமுட்டி வேணும்” என்றேன். “செரி. குப்புசாமியண்ணங்கிட்டச் சொல்லி அரக்கனிட்டேரியில இருந்து நாளைக்கே கொண்டு வந்து குடுக்கிறேன்” என்றார். அது போலவே கத்தாழ முட்டியும் வந்து சேர்ந்தது. மேலும், அன்று முதல் எனக்குத்தான் அவர் பயந்து கொண்டிருந்தார். 

கடைசியாக, நான் போய்ருவேனென்றார். ’இல்லை, எங்களுடன்தான் இருக்கப் போகிறீர்கள்’ என்றேன். மெலிதாகச் சிரித்துக் கொண்டார். 

Happy Father's Day! It's ours to show the same faith!!
-பழமைபேசி

10/29/2012

சுட்டு குட்டு

மகள், சில பல தமிழ்ப் போட்டிகளில் கலந்து கொண்டிருந்தாள். பரிசுகளும் பெற்றாள். அவள் மேடைக்கு அழைக்கப்பட்டிருந்த தருணத்தில், அய்யா பெரியவர் நல்லகண்ணு அவர்கள் அங்கிருந்த ஒரு இருக்கையில் உட்கார்ந்து இருந்ததைக் கண்ட நான், அவரிடம் வாழ்த்துகளைப் பெற்ற பின்னர் உள்ளே செல்லலாம் என மகளை வற்புறுத்தி இருந்தேன். அவளும் தந்தையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு, அவரது காலில் விழப் போக அவரோ நாணத்துடன் எழுந்து கொண்டார். எண்பத்து எட்டின் கைகள் எட்டின் கைகளைப் பற்றி வாழ்த்திக் குலுக்கியது. அத்தோடு நான் அதை மறந்து விட்டிருந்தேன்.

பிறிதொரு தருணத்தில் மேடையில் அல்லாடிக் கொண்டிருந்த போது தமிழ் நண்பர் ஒருவர் என்னிடம் வந்து, ”உங்கள் விருப்பத்திற்கு குழந்தையைக் கட்டாயப்படுத்தாதீர். அவர் என்ன கடவுளா? அவரும் நம்மைப் போல மனிதர்தானே?” என்றார். அதுவும் பலர் சூழ்ந்திருந்த நேரத்தில்! எனக்கும் குற்ற உணர்வு மேலிட்டது.

சில கணங்கள் கழித்து நான் விழா முன்றலுக்குச் செல்கிறேன், அங்கிருந்த திரைப்படக் கலைஞரைச் சுற்றிலும் மாபெரும் முட்டலும், நெரிசலும். மேற்கூறிய நண்பரும் அக்கூட்டத்தில் நின்று பிறவிப் பயனடையப் பெரிதும் முயன்று கொண்டிருந்தார். அந்த அவர் கூட இணையப் பெருவெளியின் ஏதோவொரு மூலையில் இருந்து கொண்டு, தன் தத்துவ சிந்தாந்தங்களை உதிர்த்துக் கொண்டிருக்க, நம் நண்பரும் அவற்றைப் பின்தொடர்ந்து, உள்வாங்கி, முழுமை அடைந்து கொண்டு இருப்பாராயிருக்கும்!!

10/21/2012

ஆவியழகி


மெலிதாக எழுந்து
ஒய்யாரமாய்த்
தன் இடையை 
ஆட்டி ஆட்டி
வளைந்து
நெளிந்து 
நெகிழ்ந்து
ஆடுகையில்
திடீரென
இரண்டு சுற்று
மெதுவாய்த்
தன்னைத் தானே
சுற்றி வந்து
கண் சிமிட்டி
மென்மையாய்க் கிசுகிசுத்துச்
சிரித்துக் கொண்டிருந்தாளவள்!

என்ன தேமேன்னு
எதையோ பார்த்து
உக்காந்துட்டு?
வெரசாக் குடிச்சிட்டு
டம்ளரைக் குடுங்க
அரட்டி விரட்டிய
மனைவியின் குரலில்
காணமற் போனது
என் சரசம் மட்டுமல்ல
அந்த ஆவியழகியும்தான்!!

10/05/2012

பணிதல்

சும்மா... 
அப்பா அப்பான்ட்டு
மனுசன் 
வேலையா இருக்கன்ல?!
போயிரு அந்தப்பக்கம்!
எதையும்
குத்திக்கிழிக்கும்
கூரிய பார்வையுடன்
திரும்பினேன்
திறபட்ட கதவு நோக்கி
நின்றிருந்தாள்
முறிக்கும் கண்களும்
காப்பிக் கோப்பையுமாக
அவளது அம்மா!!

10/01/2012

விடுதலை

சிற்றூர் பந்தம்
அறுபட்டு
நகரக் கொட்டடியில்
துள்ளுபவனுக்கு
நினைப்பு
தான்
விடுதலை அடைந்ததாக!!

9/29/2012

உச்சி மாநாடு


அந்தி ஒளிவதற்குச்
சற்று முன்பாக
எங்கள் தெருமுனை
மின்கம்பத்தில்
கருஞ்சிட்டுகளின்
உச்சி மாநாடு!
ஒருசிலர் மட்டும்
இடம் மாறி இடம் மாறி
அமர்ந்து கொண்டிருக்க
அவர்களின் அடாவடியைத்
தட்டிக்கேட்கப் போய்
தம்மீது நம்பிக்கையில்லாத்
தீர்மானம் வந்துவிடுமோ
எனும் அச்சத்தில்
பாவம்
சிட்டுகளின் ஊர்த்தலைவர்!!

9/28/2012

பல் சேகரம்

அதென்னமோ ஒன்னு
செவப்பா
அதுக்குள்ளார
குறும்பு செய்யுறவிங்க
பல்லு எல்லாம்
போட்டு வெச்சிருக்காங்க
அம்மா!
நான் குறும்பு செய்தா
என்னோட பல்லுகளையும்
அதுக்குள்ள போட்டு
வெச்சிக்குவாங்களாப்பா?!
அஃது யாதெனில்
அதன் பெயர்
மாதுளம் பழம்!!



9/27/2012

இறங்கு பொழுதில்...

”டொக் டொக்”
மடுத்தேன்
வினவினேன்
சென்றேன்
கழற்றினேன்
திறந்தேன்
பார்த்தேன்
முறுவினேன்
பெற்றேன்
ஒப்பினேன்
நவில்ந்தேன்
மூடினேன்
கிட்டித்தேன்
வந்தேன்
பிரித்தேன்
கண்டேன்
மகிழ்ந்தேன்
”குடும்ப வரைபடம்”

முத்தக்குஞ்சு


சாப்புட்டீங்களாப்பா
உதிர்ந்த வாஞ்சையான
சொல்லோடு
நெஞ்சுக்கதகதப்பில்
பொரிந்தது!

பொரிந்து உயிர்த்த
முத்தக்குஞ்சினை
தன்னுள் வாங்கியபின்
யாதுமறியாததாய்
துள்ளிக்குதித்து உள்ளே ஓடி
அம்மா இங்கே வா வா...
சொல்லிக்கொண்டிருக்கிறது
தாய்ப்பறவை!!


9/26/2012

அணைப்பு

வங்கிக்கு எழிலூட்டும்
இளநங்கையவள்
இன்முகத்தோடு
வரவேற்று
பட்டுக் கை
கை பற்றிக் குலுக்க
அதன் நீட்சியாக
நன்றி தெரிவிக்கையில்
தடுத்தணைத்தேன்
உங்க குதிரைவால்
நல்லா இருக்கு
எனச்சொல்லக் கிளம்பிய
உள்மனச் சிறுவனை!!

மிடுக்கு

எதோ வாங்க
அக்காவுக்கு 
பணம் வேணுமாம்
அம்மாகிட்ட நின்னு
அழுதுகுட்டே இருக்குறா
போங்க 
நீங்க இப்பவே கடைக்குப் போயி 
நிறைய 
பணம் வாங்கிட்டு வாங்கப்பா
ஆணையிட்ட மிடுக்கு
குழந்தைக்கு!!!

9/25/2012

ஏக்கம்

ஏக்கமாய்
இருக்கிறது!
என்னருகே
உதட்டோரத்தில்
வழியும் சிரிப்போடு
உறங்கும்
மகளின்
கனவுக்குள்
அப்படியென்னதான்
நிகழ்ந்து கொண்டிருக்கிறது?

கொழுக்கட்டை

பிள்ளையார் நாள்
மந்தமாய் நகரும்
நீண்ட வரிசை!

நீங்கொன்னு தின்னுங்க
நானொன்னு திங்கிறேன்
கொடுத்தவரிடமே
ஒன்றைக் கொடுத்துவிட்டு
அவர்மீது வைத்தகண் மாறாமல்
குழைந்து சிரித்துக் கொண்டே
தின்னுகிறது குழந்தை!!

உறைந்து
செயலற்றுப் போய்
நிற்கிறார்
கொழுக்கட்டைக்காரர்!

பாவம்
பின்னால்
நிற்கும்
அந்த நீண்ட வரிசை!!

9/24/2012

ஆதரம்


எங்கள் வீட்டில்
பையன்கள் மட்டுமே!
மிதிவண்டியில்
குடிதண்ணீருக்காய்
கிணற்றடிக்குச் 
சென்றிருந்தேன்!!

எவருமில்லாமல்
இறைக்கக் கயிறுமில்லாமல்
கிணறு மட்டுமே தனித்திருந்தது!

தண்ணி சேந்துறதுக்கு
கவுறு கொஞ்சம் வேணும்!
கேட்டதற்கு
மரகதத்தையும்
உடன் அனுப்பிவைத்தாள்
மச்சுவீட்டு செல்வி அத்தை!!

9/23/2012

உயிர்த் துடிப்பு


ஊர்ல மழையா?
அத்தைக்கு கால்ல வெடிப்புன்னாங்க??
ஓரிரு கேள்விகளோடு
உள்ளே சென்ற நீ
சிலமணித்துளிகளில்
திரும்பி வந்து
காப்பியைத் தருகிறாய்!!
கதவுநிலவுக்கப்பால்
பாதியாய் நீ ஒண்டியிருக்க
கொடுத்த காப்பியை
குடித்துக் கொண்டே
அங்கிருந்த குமுதத்தை
வெறுமனே புரட்டுவதில் 
சில கணங்கள் கழிந்தன!!
சரி நான் கிளம்புறேன்
மாமா வந்ததும் சொல்லிடு 
வாசலுக்கு வந்ததும்
நீ கேட்டது 
இன்னும் காதுகளில்!!
இன்னெப்ப வருவீங்க?!

9/16/2012

சிரிப்புச்சாயம்


ஓடாதே நில்!
ஓடாதே நில்!!
இஃகும்.. நான் நில்ல மாட்டேன்
நான் நில்லவே மாட்டேன்
ஓடிச் சென்று ஓய்ந்தபின்
மெலிதாய்ப் புன்னகைத்து நின்றவளின்
கண்களில் இருந்து வடிந்தது
பிடிவாதத்தின் தோல்வி!!
அக்கணமே அது நீங்கி
வெளியெங்கும் 
கொட்டிக்கிடந்தது
சிரிப்புச்சாயம்!
நானும் கொஞ்சமதை எடுத்து
என் உதடுகளில் பூசிக் கொண்டேன்!
நானும் கொஞ்சமதை எடுத்து
என் உதடுகளில் பூசிக் கொண்டேன்!!

9/15/2012

எங்கும் தமிழ்!!

வளைகுடாவிற்கு
சென்றிருந்த
எனக்கான
ஆனந்தபவன்
உண்டிகையின் போழ்தான
அறிமுகப்படலமிது!

நான் கூகுள்
நான் யாகூ
நான் லின்க்குடுஇன்
நான் ஆப்பிள்
நான் பேசுபுக்கு
நான் ஆரக்கிள்
நான் சேல்சுஃபோர்சு
நான் பெகா
நம்மவர்கள்
சொல்லி முடித்ததும்
எனக்கான வாய்ப்பு!

அடுத்து
நானும் எதையாவது
சொல்லியாக வேண்டுமே?
எங்கும் தமிழ்!!

9/12/2012

பின்புலம்


மூன்று வெள்ளிக்கு
வாங்கி வந்த
மின்விளக்கு எழுதுகோல்
மின்மினியை
வெளிக்காட்டாமல் இருக்க
அப்பா இது போய்டிச்சிப்பா
இனி இதை உங்களால
சரி செய்ய முடியாது!
அவள்
கூறியதில் 
சரியாக்கப்பட்டது அது!!

சரி செய்ய முடியாது
அப்படின்னு சொன்னா 
சரி செய்திடுவீங்க நீங்க!!
என்னிடம்
இருந்ததா இல்லையா?
அறுதியிட்டுச் சொல்ல முடியாது!
ஆனால்
அவளிடம் இருந்திருக்கிறது
நிறையவே
நம்பிக்கை!!

உசாத்துணைவன்


Old madal house for sale - Tamil Nadu
பிள்ளைகளுக்குக் கண்ணாலம்
குடும்பத்தில் சண்டை சச்சரவு
ஊருக்குள் ஏட்டி போட்டி
கொடுக்கல் வாங்கல்
காதுகுத்து கெடாவெட்டு
இவைகுறித்தான
முடிவு எடுக்கவியலா
தருணங்கள் வரும் போதெலாம்
யாருடனும் பேசமாட்டார் அய்யன்!
வீட்டுக் கொட்டத்தில்
அவருக்கேயான இடமொன்று உண்டு
எளிமையான பாயில்
இலவம்பஞ்சுத் தலையணையில்
தலைவைத்து மேல்நோக்கியபடி
ஆழ்ந்திருப்பார் அய்யன்!

அய்யன் படுத்திருக்கிறார் என்றால்
யாருமே அந்தப்பக்கம்
நினைத்துக்கூடப் பார்க்கமாட்டார்கள்
குழப்பத்தில் உள்ளே சென்றவர்
வெளியே வருகையில்
எப்போதும் ஒரு
தெளிவோடு வருவார்!!
அவருக்குப் பின்னான
காலத்தில்
அந்த இடம் அவ்வளவான
புழக்கத்தில் இல்லாது போனது!!

நகரத்தில்
குறுகலான இடத்தில்
கூட்டுக்குடும்பம் நடத்திவருகிற
எங்கள் வீட்டில்
பிணக்கு முட்டல் மோதல் 
எழுகிற போதெலாம்
அப்பா ஊருக்குச் சென்று விடுவார்;
ஓரிரு நாளில்
அவர் திரும்பியதும்
வீடு இயல்புக்கு வந்து விடும்!!

அப்படியாக ஊரில்
அப்பாவுக்கான எதோவொன்று இருக்கிறது
அது என்னவாயிருக்கும் எனக்கண்டறிய 
நாட்கள் வெகுவாயிற்று!
எனக்கும் ஆசை வந்துவிட்டது
தன்னைப் பார்த்து
வேண்டுவோர்க்கெலாம்
தெளிவான பாதையை
திடமான முடிவினை அள்ளித்தரும் 
எங்கள் வீட்டு 
விட்டத்தைப்
பார்க்க வேண்டும்!!