Showing posts with label நட்சத்திரப் பதிவு. Show all posts
Showing posts with label நட்சத்திரப் பதிவு. Show all posts

12/07/2008

நவசக்தி தமிழ் பண்பாட்டுக் குழு!

அன்னைதந்த பால் ஒழுகும் குழந்தைவாய் தேன் ஒழுக அம்மா என்று
சொன்னதுவும் தமிழன்றோ! அக்குழந்தை செவியினிலே தோய்ந்த தான
பொன்மொழியும் தமிழன்றோ! புதிதுபுதி தாய்க்கண்ட பொருளி னோடு
மின்னியதும் தமிழன்றோ! விளையாட்டுக் கிளிப்பேச்சும் தமிழே யன்றோ!

--பாவேந்தர் பாரதிதாசன்

வணக்கம். மாந்தனின் வாழ்வில், எதற்கும் முடிவு ஒன்று உண்டு என்பது நிதர்சனம். அந்த வகையிலே, தமிழ் மணம் வீசித் திகழும் தமிழ்மணம், இந்த வார நட்சத்திரப் பதிவராக்கி, எமக்கும் ஒரு வாய்ப்பளித்தது. அந்த நல்ல வாய்ப்பு முடிவுக்கு வந்து விட்டதான படியால், உங்களுடன் சில கருத்துகளை பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகிறேன்.

தமிழ்மணம் நல்கிய நல்லதொரு வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு, இயன்றளவு இடுகைகளை இட்டதில், அவையாவும் வாசித்த வாசகர்களுக்கும், இனி வாசிக்கப் போகிற வாசகர்களுக்கும் பயனுள்ள வகையில் இருக்கும் என்று நம்புகிறேன். மேலும் யாமொரு சாமன்யன் என்ற வகையிலே, அவற்றுள் மேம்பாடு காணக்கூடிய கூறுகள் மலிந்து கிடக்கும் என்பதிலும் ஐயமெதுவும் இல்லை. ஆகவே, தாங்கள் அது குறித்து, தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கும் பட்சத்தில், எதிர்வரும் காலத்தில் அவற்றைக் களைந்து, பதிவுகளை மேம்படுத்திக் கொள்ள முயல்வேன் என்றும் உறுதி கூறுகிறேன்.

எங்க‌ள் ம‌ண்ணின் மைந்தன், அன்புத் தோழ‌ன் ப‌ரிச‌ல்கார‌ன் அவ‌ர்கள், எம்மை வ‌லைச்ச‌ர‌ம் வாயிலாக‌ அறிமுகப் ப‌டுத்திய‌ பொழுது நினைவு கூர்ந்ததையே, இன்றும் நினைவு கூற‌ விரும்புகின்றேன். எட்டாம் வ‌குப்பு ப‌யின்று கொண்டிருந்த‌ நேர‌த்தில், த‌லைமை ஆசிரிய‌ர் அவ‌ர்க‌ள் எம்மை அழைத்து, இனி நீதான் பிரார்த்த‌னைக் கூட்ட‌த்தை வ‌ழி ந‌டாத்திச் செல்ல‌ வேண்டுமென‌ச் சொல்ல‌வே, எம் ம‌ன‌து ஆன‌ந்த‌ச் சிற‌க‌டித்துப் ப‌ற‌ந்த‌து. வ‌ழ‌மையாக‌, ப‌த்தாம் வ‌குப்பில் உள்ள சிறந்த‌ மாண‌வ‌ன்தான் கூட்ட‌த்தை வ‌ழி ந‌ட‌த்திச் செல்வ‌து. அந்த‌ வாய்ப்பு எம‌க்குக் கிட்டிய‌தை எண்ணிப் பெருமையும்! ம‌கிழ்வும்!!

அன்று மாலை, எம் வீட்டுக்க‌ருகில் வ‌சிக்கும் ஆசிரிய‌ர் வ‌ருகிறார், "டேய், நீ ந‌ல்ல‌ பைய‌ன்கிற‌தால‌ இந்த‌ வேலைய‌ உன‌க்குக் குடுத்து இருக்குறோம். இப்ப‌த்துல‌ இருந்து ப‌த்தாம் வ‌குப்பு முடிய‌ற‌ வ‌ரைக்கும், ப‌ள்ளிக்கூட‌த்துக்கு முன்கூட்டியே வ‌ந்திட‌ணும். துணி ம‌ணி எல்லாம் ந‌ல்லாப் போட்டு சுத்த‌ வ‌த்த‌மா இருக்க‌ணும். புரியுதா?" என்று சொல்கிறார். ம‌ன‌தில் இருந்த‌ அந்த‌ ம‌கிழ்வும், அந்த‌ இட‌த்தை அடைந்து விட்டேன் என்ற‌ உண‌ர்வும் ப‌ஞ்சாய்ப் ப‌ற‌ந்து, பொறுப்பு என்னும் க‌வ‌லை தொற்றிக் கொண்ட‌து. அதே உண‌ர்வுதான் மீண்டும் இந்நாளில் என‌க்கு. இயன்றவரை த‌னித்த‌மிழ், ந‌ம‌க்கென்று ஒரு எழுத்து ந‌டை என்றாகிவிட்ட‌ பிற‌கு, கால‌ம் முழுமைக்கும் அம்முகத்தைக் காப்பாற்ற வேண்டிய‌ பொறுப்பில் கால‌டி எடுத்து வைக்கிறேன். இய‌ன்ற‌வ‌ரை அத‌ற்குப் போராடுவேன் என்றும் உளமார‌ உறுதி கொள்கிறேன்.

விடைபெறும் முன்பாக‌, வ‌ட‌க்குக் க‌ரோலைனா, சார்ல‌ட் ந‌வ‌ச‌க்தி ப‌ண்பாட்டுக் குழு, மேலும் அத‌ன் செய‌லாக்க‌ம் குறித்த விப‌ர‌ங்களை உஙளுடன் பகிர்ந்து கொள்வதில், குழுவின் உறுப்பின‌ர் என்ற‌ முறையில் ம‌கிழ்ச்சி கொள்கிறேன். புல‌ம் பெய‌ர்ந்த‌ ம‌ண்ணிலே, த‌மிழ்ப் ப‌ண்பாடு பேண‌வும், அயல் மண்ணில் பிறந்த அடுத்த‌ தலை முறையின‌ர்க்கு த‌மிழை எடுத்துச் செல்வ‌துவுமே இத‌ன் ப‌ணி. அந்த‌ வ‌கையிலே குழும‌ம் ஒரு வார‌ம் விட்டு ஒரு வார‌ம், ஒவ்வொரு உறுப்பின‌ரின் இல்ல‌த்திலும் வ‌ரிச‌யாகக் கூடும். அப்போது, யோகா, த‌மிழ், ச‌மூக‌ம் குறித்த‌ பாட‌ங்க‌ள் க‌ற்பிக்க‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து. மேலும், விழாக் கால‌ங்க‌ளில் ந‌டைபெறும் நிக‌ழ்ச்சிக‌ளில் குழ‌ந்தைக‌ள் ப‌ங்கு பெறும் வ‌ண்ண‌ம், த‌மிழ்க் க‌லாசார‌ம் சார்ந்த‌ நாட‌க‌, நாட்டிய‌ங்க‌ளும் நடாத்துவதில் குழும‌ம் ப‌ங்கு பெற்று வ‌ருகிற‌து.

என்னாலும் எழுத‌ இய‌லும் என்று தெரியாம‌ல் இருந்த‌ என்னை, தெரிந்த‌ த‌மிழில் எழுத‌ வைத்த‌தில், பிள்ளையார் சுழி இட்ட‌ ந‌வ‌ச‌க்தி குழும‌த்திற்கும், செந்தாம‌ரை பிர‌பாக‌ர‌ன் ம‌ற்றும் ஜெய் சுப்ர‌ம‌ணிய‌ன் ஆகியோருக்கும் ந‌ன்றி கூறிக் கொள்கிறேன். குழும‌த்தின் மின்ன‌ஞ்ச‌ல் ப‌க்க‌த்தில் ஏற்ப‌ட்ட பார‌ம‌ரிப்புச் சிர‌ம‌ங்க‌ளின் கார‌ண‌மாக, எமக்கென்று வ‌லைப்பூ என்றாகி விட்ட‌ பிற‌கு, ப‌திவுக‌ளுக்கு ம‌றுமொழி இட்டும், ப‌திவில் நிக‌ழும் த‌வ‌றுக‌ளைச் சுட்டிக் காட்டியும் ஊக்க‌ம் அளித்து வ‌ரும் ச‌க‌ ப‌திவ‌ர்க‌ளுக்கும், வாச‌க‌ர்க‌ளுக்கும், மீண்டுமொருமுறை த‌மிழ‌ம‌ண‌ம் நிர்வாக‌த்திற்கும் ந‌ன்றி! ந‌ன்றி!! ந‌ன்றி!!!


பட்டு(த்) தெரிஞ்சுகிட்டேன்!

வணக்கம்! தீபாவளி சமயத்துல பட்டு சேலைகளைப் ப்ற்றி தங்கமணி ஏதோ கேட்க, நான் மேலும் கீழுமாக‌ப் பார்க்க, அவர்கள் அவர்களுக்கு தெரிந்த பட்டு வரலாறு பற்றிக் கூறினார்கள். மிகவும் சுவ்ராசியமாக இருந்தது. நானும் மேலதிகத் தகவலுக்காக வலையில் மேய்ந்த போது, மேலும் பல தகவல் கிடைக்கப் பெற்றேன். அதன் சாராம்சமே இந்தப் பதிவு.

சீனாவில் பண்டைய காலத்தில் ஒரு பேரரசின் இராணி(Si Ling-Chi) ஒருவர், அரண்மனைத் தோட்டத்தில் உலவிக் கொண்டு இருக்கையில், அங்கிருந்த முசுக்கொட்டைச் செடியில் இருந்து ஒரு புழு, நல்ல இளம் மஞ்சள் நிறத்தில் ஒரு கூடு ஒன்றைக் கட்டியதைப் பார்த்து இருக்கிறார். அத‌னைப் பார்த்து ஆச்சரியப்பட்ட அரசி, கூட்டின் இழையப் பற்றி இழுக்க, அது நெடிய தூரம் நீண்டதாம். அதிலிருந்து, ஒரு கூடு ஒன்று ஒரே இழையில் ஆனதையும் தெரிந்து கொண்டு, நிறைய கூடுகளைச் சேர்த்து, பின் அதன் இழைகளைக் கொண்டு ஒரு சிறு ஆடை தயாரித்துப் பார்த்து, அதன் அழகில் மயங்கி, இப்படியாகத் துவங்கியதுதான் பட்டு நூலாடைகள். மேலும் இந்த வகை ஆடைகள் இராச குடும்பத்தில், அதுவும் சீனாவில் மட்டுமே இரகசியமாக வைக்கப் பட்டதாம்.

இப்படியாக சுமார் 2500 ஆண்டுகள் கழிந்துவிட, ரோமானிய மன்னன் எதேச்சையாக சீன இளவரசியைத் திருமணம் செய்ய, முதல் முறையாக பட்டுக் கூடும், புழுவும் எல்லை தாண்டியது. எனினும் அவர்கள் அதனை வளர்க்கத் தெரிந்து இருக்கவில்லை. மீண்டும் பாதிரியார் ஒருவரைச் சீனாவுக்கு அனுப்பி, அவர் மூலமாகத் தெரிந்து கொள்ள முறபட்டும், முயற்சி தோல்வியிலேயே முடிந்தது. இப்படியாக, சீனாவின் பட்டு நூலாட்சி கொடி கட்டிப் பறந்தது.

இந்த‌ச் சூழ‌லில், ஜ‌ப்பானிய‌ர்க‌ள் வெகு சாம‌ர்த்திய‌மாக‌ ப‌ட்டு நூல் வ‌ள‌ர்க்க‌த் தெரிந்த‌ நான்கு சீன‌ப் பெண்ம‌ணிக‌ளைக் க‌ட‌த்திச் சென்று அல்லது பணிப் பெண் வேலைக்கென அழைத்துச் சென்று, பின் திரும‌ண‌ம் செய்து கொண்டார்க‌ள். அத‌ன் பின் ஜ‌ப்பானிய‌ர்க‌ள் அவ‌ர்க‌ள் மூல‌மாக‌ ப‌ட்டு நூல் வ‌ள‌ர்ப்பைத் துவ‌க்கி, அத‌ன் உற்ப‌த்தியில் மேம்பாடு க‌ண்டு சீனாவின் உற்ப‌த்தியை விட‌ ப‌ன்ம‌ட‌ங்கு உற்ப‌த்தி செய்ய‌ ஆர‌ம்பித்து விட்டார்க‌ளாம். ஆனால், சீன‌ர்க‌ளுக்கு அபிவிரித்தி செய்ய‌த் தெரிந்து இருக்க‌வில்லையாம்.

அதன் பின்னர் ஜப்பான் பட்டு நெசவு, வளர்ப்புக்கான காப்புரிமையை மேலை நாடுகளுக்கு தர முன் வந்ததும், இந்தியாவும் சீனாவின் இரகசியத்தைத் தெரிந்து கொண்டதும் உலகளாவிய பட்டு நெசவுக்கு வழி வகுத்தது. இப்படித்தான், இந்த ஆண்டு தீபாவளிக்கு பட்டுச் சேலை வாங்கித்தர இயலாததின் காரணமாக, பட்டுத் தெரிந்து கொண்டேன் பட்டு பிறந்த கதையினை!

பட்டே நீஎன்றன் பட்டினைப்
படாமல் பட்டேன் பெரும்பாடு!

12/06/2008

மாங்கா மடையன் யாரு?

1. வாத்து மடையன்

இது சம்பந்தமா ரெண்டு விளக்கம் சொல்லுறாங்க. முதலாவது, நம்ப ஊர்ல கோழி, சேவல அந்திசாயும் நேரத்துல அடைக்கப் போனா, நாலும் நாலு திசைல ஓடி, வேலை வாங்குமாம். அந்த அளவுக்கு சாதுரியமானது அதுக. ஆனா, ஒரு வாத்தப் புடிச்சு சாக்குப் பைல போட்டா, அடுத்தடுத்த வாத்துக, தானா வந்து கோணிப்பை (சாக்குப்பை)ல விழுமாம். அந்த அளவுக்கு மடம் கொண்டதாம் வாத்து. அதனால, புத்திக்கூர்மை இல்லாதவங்களை வாத்து மடையன்னு சொல்லுவாங்களாம்.

ரெண்டாவது விளக்கம், தங்க முட்டை இடும் வாத்தை, பேராசைப்பட்டு வயித்த அறுத்த மடையனை ஒப்பிட்டு சொல்லுற மாதிரி, வாத்தை அறுத்த மடையன் வாத்து மடையன்னும் சொல்லுறாங்க.

2. மாங்கா மடையன்

சிவன் கோயில் பெரிய பூசாரி, உச்சி நேர பூசைக்கு முக்கனிகளை வெச்சி பூசை செய்யணும்னு பிரயத்தனப்பட்டு, அது குறிச்சு மடத்துல இருந்த திருவாத்தான்கிட்ட சொன்னாரு, 'டேய் திரு, பலாவும் வாழையும் இருக்கு. மாங்காய் தான் இல்ல. போயி, மாங்கா பறிச்சிட்டு அப்படியே அதுல கொஞ்சம் இலையும் பறிச்சிட்டு வா' னு சொன்னாரு. கொஞ்ச நேரத்துல மாங்காய்களோட திருவாத்தானும் வந்தான். 'எங்கடா, மாவிலையக் காணோம்'னு பூசாரி கேக்க, திருவாத்தான் சொன்னான்,'நீங்க காய்களப் பறிச்சிட்டு, அதுல கொஞ்சம் இலையும் பறிச்‌சிட்டு வர சொன்னீங்க. ஆனா, எந்தக் காய்லயும் இலைக இல்லை'னு சொன்னான். உடனே பூசாரி திருவாத்தானை கடுமையா திட்டிகினு இருந்தாரு.

அந்த நேரம் கோயிலுக்கு வந்த ஜமீன் (ஊர்த் தலைவர்), என்ன பூசாரி திருவாத்தானை திட்டிகினு இருக்கீங்கன்னு கேக்க, 'அவன் மாங்காய்ல இலை தேடுன மாங்கா மடையன்'னு சொல்லிட்டு, நடந்ததை ஜமீன் கிட்ட சொன்னாரு பூசாரி. இப்படித்தாங்க, 'மாங்கா மடையன்'ங்ற அடை சொல்லு பொழக்கத்துக்கு வந்தது. குறிப்பா, 'மாங்கா மடையன், திருவாத்தான்'ங்ற வார்த்தைகள கொங்குச் சீமைல அடிக்கடி பொழங்குவாங்க.

ரெண்டாவது விளக்கம்: மாங்கா மடையன் என்ற சொற்றொடருக்கு நன்னன் அவர்கள் ஒருமுறை மக்கள் தொலைக்காட்சியில் விளக்கம் அளித்தார். மாங்காயை மா என்றும் அழைப்போம் அல்லவா, அதனால் மாங்காய் மடையன் என்றால் மாமடையன் என்று பொருள் என்றார். நன்றி: பாலராஜன்கீதா

3. மடச்சாம்பிராணி

அந்தக் காலத்துல மடம், கோயில் கூடம், சத்திரம்னு சனங்க கூடுற பொது இடங்கள்ல பெரிய சாம்பிராணிக் கட்டிய வெச்சிருப்பாங்களாம். இது தணல்ல போட்டு தூபம் போடுற சாம்பிராணி இல்லங்க. இருந்த இடத்துல இருந்து நல்ல வாசம் குடுத்து, காத்துல இருக்குற கிருமிகளநீக்குற சாம்பிராணி. இருந்த இடத்துல இருந்து, காத்துல கரைஞ்சு உருமாறி, நாளடைவுல இது அரை குறையா ஆயிடுமாம். அத வெச்சி, அரை குறையா புத்திக்கூறு இல்லாம இருக்கறவங்கள 'மடச்சாம்பிராணி'னு திட்ற பழக்கம் பொழக்கத்துல வந்தது. மடையன் சாம்பிராணினு ஒரு செடி இருக்குதுங்க. ஆனா, அதுக்கும் இந்த சொல்லுக்கும் எந்த சம்பந்தமும் இல்லீங்களாம். அது ஒரு மூலிக மருந்தாம்.

4.பல வண்ணங்கள் இருக்க, நம் ஊர்களில் சுவர்களுக்கு வெண்மை நிறம் அடிப்பதேன்?


வீடு குளிர்ச்சியா இருக்கவும், கூட வெளிசசமா இருக்கவும் பெரியவங்க வெண்மை நெறத்தை தேர்வு செஞ்சாங்க. அதே சமயம், கரியும் சில தாவரங்களும் கலந்து பூசின கருப்பு நெற வீடுகளும், கட்டிடங்களும் இருந்ததாம். இனப் பெருக்கம் சம்பந்தப்பட்ட இடங்களான கோழிப் பண்ணை, கால்நடைக் கொத்தளங்கள், பட்டுப்பூச்சி வளர்ப்புனு கொஞ்ச இடங்கள், அப்புறம் பார்வைக்கு எட்டக் கூடாத இடங்கலான கோட்டை, பதுங்கு குழிகள், அமைதி வேண்டிய இடங்கள்னு இருக்குற இடங்கள, கருப்பு நெறத்துல பூச்சு பூசி இருப்பாங்களாம்.

5.பல வண்ணங்கள் இருக்க, குடைகள் கருப்பு நிறத்தில் இருப்பதேன்?

குடைகள் கருப்பு நெறம்னு சொன்ன உடனே, கருப்பு நெறம் ஒளி வீச்சுக் கதிர்களை கவரக் கூடியதுனு சரியா சொல்லுவாங்க. அப்ப, பெரியவங்க ஏன் ஒளி வீச்சுக் கதிர்களை உடனே திருப்பி அனுப்புற வெள்ளை நெறத்தை தெரிவு செய்யல? பெருசு சொன்னது, 'கொடை தலைக்கு மேல அரை அடி ஒசரத்துல கருப்பு துணியோட இருக்கும். ஆனா, ஆறு அடி மனுசனை சுத்தி இருக்குற சூட்டையும் உறிஞ்சீரும்'னு. அதே சமயத்துல வயசுல மூத்தவங்க, கௌரவத்துல மூத்தவங்க, வெள்ளை நெற கொடைகள வெச்சிக்கறதும் பழக்கத்துல இருந்ததாம். இந்தப் பழக்கம் தன்னை தனிச்சுக் காமிக்கறதுக்காக இருந்து இருக்கலாம். இன்னைக்கும் நூறு வருசப் பழமையான லக்ஷ்மாபுரம் விநாயகர் கோயில் கல்வெட்டுல, 'மிராசுதார் வெண்குடை சுப்பையா'னு தான் போட்டிருக்கு.

6.பரிணாம வளர்ச்சி என்று கூறினாலும்,இறைவனின் ஒவ்வொரு படைப்புக்கு பின்னும் ஒரு அர்த்தம் பொதிந்து இருக்கிறது என்று நம்புகிறேன். நீங்களும் அதே கட்சியா? அப்படியானால், பிறப்பில் தலை மயிர் கருப்பாகவும் பின் (சிலருக்கு)வெள்ளை நிறமாகவும் மாறுகிறது. அது ஏன்?

கிட்டத்தட்ட மேல சொன்ன பதில் தான் இதுக்கும். ஆனா, ஒரு சிறு வித்தியாசம். அடர்ந்து இருக்குற கருப்பு நிற தலை முடி, சூட்டை உறிஞ்சி மேல் புறமாத்தான் வெச்சு இருக்கும். தலைக்கு உள்ள விடாதாம். ஆக, வெப்பம் நெறஞ்ச பூமியில உடலை சுத்தி இருக்குற சூட்டை கிரகிச்சு, அதைத்தணிக்க கருப்புத் தலை முடி ஒதவுது. வயசான காலத்துல தலையில் மயிரின் அடர்த்தி கொறயக் கொறய, ஒளி வீச்ச திருப்பி அனுப்புற மாதிரி வெள்ளை நெறமா நரைக்க ஆரம்பிக்கும், மண்டைல சூடு உள்ள போகக் கூடாதுன்னு. ஆனா, இந்த வயசுல உடல சுத்தி இருக்குற சூட்டை தணிக்க தலை முடி ஒதவறதது இல்ல. அதான் சூட்டை உறிஞ்சுற கருப்பு நெறம் இல்லையே?!

குறிப்பு: இது ஒரு மீள்பதிவு!

சல்லடங் கிழிஞ்சு போச்சு!

மாந்தநேய அன்பர்களே! வணக்கம்!! உங்கள் அன்போடும, ஆதரவோடும் தமிழ்மணம் நிர்வாகம் எம்மை நட்சத்திரப் பதிவராக்கி இருக்கிறார்கள். நானும் என்னால் இயன்ற அளவு பதிவுகளை இட்டு வருகிறேன். அவற்றுக்கு நீங்களும் ஆதரவு அளித்து வருகிறீர்கள். மிக்க நன்றி! நாளொன்றுக்கு இரு பதிவுகள் என்பது எம் இலக்கு, காலையில் ஒன்று, மாலையில் ஒன்று. ஆனால், இன்று எமக்கு இங்கு உள்ள நவசக்தி தமிழ பண்பாட்டுக் குழுமத்தில் கலந்து கொள்ள வேண்டியது அவசியம். ஆதலால் இது ஒரு முன் கூட்டிய பதிவு, அதாவ‌து காலையிலேயே இடும் இரண்டாவது பதிவு.

நாம் அவ்வப்போது காண்கின்ற சொற்களில் சிலவற்றையும், அவ‌ற்றுக்கான‌ கிராம‌, நாட்டுப்புற‌ ந‌டையையும் பார்க்க‌லாம்.

டிஸ்கி: பொறுப்பி (பொறுப்பு அறிவித்த‌ல், பொறுப்பி ஆகிவிட்ட‌து! இஃகி!ஃகி!!)
டவுசர்: ச‌ல்லட‌ம்
பாஸ்: மொத‌லாளி
ஈஸி: சுலுவு (சுல‌ப‌ம்)
ஸாரி: ம‌ன்னிக்க‌ணும்
ஃபேமஸா?: பிர‌ப‌லிய‌மா(பிர‌ப‌ல‌மா?)
த‌ம்ப்ஸ் அப்: மேல்ப் புடி
த‌ம்ப்ஸ் ட‌வுன்: கீழ்ப் புடி
ஃபுல்: முழு
ஆஃபீஸ்: வேலையெட‌ம்
ப்ளீஸ்: த‌ய‌வு செஞ்சி

சரிங்க, என்னோட‌ ச‌ல்லட‌ங் கிழிஞ்ச‌ க‌தைய‌ப் பாக்க‌லாங்க‌ இனி, எப்ப‌வும் போல‌ ந‌ம்ம‌ளோட‌ எழுத்து ந‌டையில‌.

நான் பள்ளிக்கூடம் படிச்சு முடிச்சுட்டு, மேல கோயமுத்தூரு போயிப் படிக்குறதா, இல்ல மேக்க பொள்ளாச்சீல போயிப் படிக்குறதான்னு ஒரெ கொழப்பரேசன். ஆமுங்க, அப்பிடி ஒரு கொழப்பரேசன்! மாக்கினாம்பட்டி அண்ணங் கிட்டப் போயி என்ன படிக்குறது, எங்க படிக்குறதுன்னு வெவரமாக் கேட்டுட்டு வாடான்னு சொல்லிச் சொன்னாரு எங்க அப்பா.

நானும் அந்தியூர்ல இருந்து கெளம்பி, மாக்கினாம்பட்டி நாச்சிமுத்து பல்தொழில்க் கல்லூரிகிட்ட எறங்கி, அவிங்க தோட்டத்துக்கு நடந்து போனன். அண்ணன், தேங்கா மஞ்சில இருந்து கவுறு, அது இதுன்னு பலதுஞ் செய்யுற தொழிலும் தோட்டத்துலயே செய்யுது.

நான் போன ஒடனே, அவிங்க வீட்ல வேலை செய்யுற ருக்மணி ஒரு தட்டத்துல உளுந்து வடை, அதானுங்க மெதுவடை ஒரு தட்டத்துல, சிறுசு சிறுசா நாலோ அஞ்சோ இருக்கும்னு நெனைக்குறேன், கொண்டு வந்து வெச்சது. அப்பொறம் லோட்டாவுல தண்ணியுமு. அண்ணனும் வந்துச்சு. வந்து பேசிட்டு, நீ கோயமுத்தூருக்கே போயர்றான்னு சொல்லுச்சு. எனக்கும் அதுல சந்தோசந்தேன்.

அப்பறம், எதுக்கு எல்லா வடையயும் காஞ்ச மாடு கம்புல பூந்த மாதர திங்கோணுமின்னு, தட்டத்துல இருந்த வடைல ரெண்டோ மூணோ தின்னு போட்டு, மிச்சத்தை வெச்சுட்டேன். அப்புறம் நங்கை(அண்ணி)யா காப்பி கொண்டாந்து குடுத்தாங்க. குடிச்சுப் போட்டு, நான் போய்ட்டு வாறேன்னு சொல்லிக் கெளம்பி தோட்டத்து வாசக் கதவுக்கே வந்துட்டேன். தோட்டத்துல வேலை செய்யுற சின்னான் ஓடி வந்து, உங்களப் பண்ணாடி கூப்புடுறாங்கன்னு சொன்னான்.

நானும் நங்கையாதான், காய்கறி எதனாச்சும் எங்கம்மாகிட்ட தரச் சொல்லிக் கூப்புடுதாக்கும்னு நம்பிப் போனேன். அண்ண‌ன் வந்து, "என்னடா, எங்கிருந்து வந்தது இந்த பழக்கம்? இப்பவே வெளிநாட்டுக் கனவோ?? உங்களுக்கு எல்லாம் இப்பவே நாகரிகங் கேக்குதோ?"ன்னு வெய்யு வெய்யுன்னு வெய்யுதுங்கோ. எனக்கு ஒன்னும் புரியலை!

அப்பறமாக் கடைசில சொல்லுறாரு, "ஏண்டா, ஒனக்கு அந்தத் தட்டுல இருக்குற அந்த ரெண்டு வடை எச்சாப் போச்சோ? ஏன்டா, தலைக்கு செருப்பு கேக்குறீங்க??"ன்னாரு. அது மட்டுமா? அந்தத் தட்டுல இன்னும் ரெண்டு வடை வெயுங்கோ, திங்றானா, இல்ல என்ன பன்றான்னு பாப்போம்ன்னு சொல்ல, அந்த ருக்கு வந்து மறுக்காவும் ரெண்டு வடை சேத்தி வெக்க, இருந்து தின்னு போட்டுத் தானுங்க வந்தன் நானு. இப்பிடி அன்னைக்கி என்னோட சல்லடங் கிழிஞ்சு போச்சுங்க! அந்த பயம் இனியும் என்னியவுட்டுப் போகுலைன்னா பாத்துகோங்க!!

மொழி தப்பினவன், வழி தப்பினவன்!

ஓர்சல் பண்ணலாம் வாங்க!

கண்ணுகளா, வணக்கம்! எங்க போய்ட்டீங அல்லாரும்? யாரையுமுங் காணம் நம்மூட்டுப் பக்கம்?? கண்ணு, என்ன ஒரே தடல் புடல் விருந்தாக்கூ? செரிச்செரிச்சேரி, இருந்து உண்ட்டு மொல்ல வா. அது பார் கண்ணு, நானு பல ஊர்கள்ல பல வேர்த்துகோட பேசறப்ப நம்மூர்ப் பழமயிகோ வந்துரும். அது நம்மள உட்டுப் போகுமா? அப்ப பாரு கண்ணு, அது அவிங்களுக்கு வெளங்காது சில சமியத்துல. அப்ப அவிங்க நம்மள செய்வாங்க பாரு கிணடலு?!

நாம சித்தங்கூரம் பேசாமிருந்தம்ன்னு வெச்சிக்கோ, அவிங்க அந்த சொல்லுக தமிழே இல்லைன்னும் சொல்லிப் போடுவாங்க கண்ணு. அப்பிடி, நானு அவிங்க செஞ்ச மொடக்கடில பாத்த சில சொல்லுகள இப்ப‌ப் பாப்பமா கண்ணு?! அந்த நேரத்துல கண்ணு, இந்தத் தமிழ் அகராதி நம்ம கையில இல்ல கண்ணு. இப்பத்தான் ஒரு பத்து நாளைக்கி முன்னாடி VSK ஐயாவிங்க குடுத்தாங்கோ. அதுக்கு அவிங்களுக்கு நன்றி சொல்லிக்கிறன்.


அறமாலும்: கண்ணு, நான் சிங்கப்பூர்ல இருந்தப்ப அங்கிருந்தவிங்களோட‌ நம்மூர்ல போயி விமானத்துல எறங்கின ஒடனே நடக்குற கலால் வரி அதிகாரிக பண்ணுற அட்டகாசத்தைப் பத்தி பேசிட்டு இருந்தோம். அப்ப பாரு கண்ணு, "இவிங்க பண்றது அறமாலும் அநியாயம்!"ன்னு நாஞ்சொல்ல ஒரே சிரிப்பு. ஏன்டப்பா, சிரிக்குறீங்கன்னு கேட்டேன். அதென்னடா அநியாயத்துல அறம், அது எங்க இருந்து வந்ததுன்னு கேட்டு ஒரே கிண்டலு. டேய், அறமாலும்ன்னா எங்க ஊர்ல, ஒன்னை அழுத்திச் சொல்றதுக்கும், முழுமைப் படுத்திச் சொல்லுறதுக்கும் சொல்லுவம்டான்னு சொன்னேன். நம்பலையே?

அற aṟa , adv. < அறு¹-. 1. Wholly, entirely, quite; முழுதும்.

உப்புசம்: ஐயோ கண்ணு, இதைச் சொல்லுறப் எல்லாம் சுத்தி இருக்குறவிங்களுக்கு ஒரே சிரிப்புத்தேன். அட, எங்க ஊர்ப் பக்கம் அப்பிடிதான் சொல்லி என்ன வளத்தி ஆள் ஆக்கியிருக்காங்கன்னும் சொல்லி பாத்தேன். ம்ம், கேக்காமச் சிரியோ சிரின்னு சிரிச்சுப் போட்டாங்க. இந்தக் கோடையில கூட என்னோட சோட்டாலிக, இங்க என்னைக் கிண்டலு செஞ்சி போட்டாங்க கண்ணு. ஆனா, அகராதி சொல்லுது இது ஒரு நல்ல தமிழ் வார்த்தைன்னு. அசாதரணமா இருக்குறத உப்புசம்ன்னு சொல்லுலாமாக்கூ.

உப்பசம் [ uppacam ] சவாசகாசம்.


ஓர்சல்: நான் எதோ ஒரு நாளு, "ஊட்டுல போயி எல்லாம் ஓர்சல் பண்ணோனும், நேரமாச்சு!"ன்னு சொல்ல, அதென்ன ஓர்சல்ன்னு கேள்வி. ஆனா, இதுக்கு யாருங் கிண்டல் செய்யலை. ஊர்ல, ஊட்டுல அல்லாத்தையும் ஒழுங்கு படுத்துறதுக்கும், பிரச்சினைகளை செரி பண்ணுறதுக்கும் பொழங்குற ஒரு வார்த்தை. அகராதியும் அதேதாஞ் சொல்லுது கண்ணு.

ஓர்சல்ஆக்க, --பண்ண, to settle or decide a quarrel or other matters, to bring to conclusion.

அஃக!ஃக!! எப்பிடியோ, நொம்ப நாளா மனசுக்குள்ளயே இருந்து அரிச்சிகிட்டு இருந்த விசியத்தை, இன்னைக்கு ஒரு ஓர்சலுக்கு கொண்டுவன்ட்டன்! நொம்ப சந்தோசமாயிருக்கு!! இஃகி!ஃகி!! என்ன, உங்களுக்கும் ஓர்சல் பண்ண வேண்டிய வேலைக நெறய இருக்குதாக்கூ? போங்க கண்ணுகளா, போயி நல்ல படியா ஓர்சல் பண்ணுங்க, சந்தோசமாயிருங்க!!

கண்ணிலே குத்தின விரலைக் கண்டிப்பார் உண்டோ?

12/05/2008

மாப்ள, எந்துண்டைக் கேவ‌ல‌மாப் பேசாத‌டா!

வணக்கம்! பாருங்க, நாம ஊர் வழியில, நம்ம பாட்டன், பூட்டன், முப்பாட்டன், நாப்பாட்டன், பூம்பாட்டன்ன்னு பெரியவிங்க சொல்லி வெச்சதுல எதோ நமக்குத் தெரிஞ்சதைப் பாத்தோம், அதுல ஒரு திருப்தி. ஆனாப் பாருங்க, தங்கமணிக்கு ஒரே கோவம். ஏன்னு கேளுங்க சித்த?

அது ஒன்னுமில்லீங், அல்லாரும் பழமைபேசி ஒரு வயசு போன பெருசுன்னு நினைக்குறீங்ளாம். ஏன்னா, கெராமத்துல பேசுற மாதர சுத்தத் தமிழ்ல பேசுறதாலயும், அமெரிக்காவுல இருக்குற மாதரயும் நடந்துக்குலயாம். போதாக் குறைக்கு என்னோட புனைபேரும் அதுக்குத் தொணை போகுது. பழமைபேசின்னா அளவளாவின்னு அர்த்தமுங்கோ! வேற நான் என்ன சொல்ல? துண்டு போட்டு வேணாலும் தாண்டுறேன், நான் நீங்க நினைக்குற மாதிரி பெருசு இல்ல! இல்ல!! இஃகி!ஃகி!!

துண்டுன்ன ஒடனே ஞாவகத்துக்கு வருது, சமீபத்துல முத்தமிழ் குழுமத்துல நடந்த ஒரு சம்பாசனை! செல்வன் ஐயா எதுக்கோ சொன்னாரு, "நான் துண்டு போட்டுத் தாண்டிச் சொல்லுறேன்"ன்னு. நமக்குத்தான் திருமூர்த்தி மலைத் தண்ணியும், சிறுவாணித் தண்ணியும் ஒடம்புல ஓடுதே?! "ஏன், கைக் குட்டையப் போட்டுத் தாண்ட மாட்டீகளோ?"ன்னு திரியக் கொழுத்துனன். அப்புறம் அவரும், வேந்தன் ஐயாவும் போட்டாங்க பட்டியலு.

அதுக்கு முன்னாடி, துண்டு போட்டுத் தாண்டுறதோட அர்த்தம் பாப்போம். அது ஒன்னுமில்லீங், துண்டுங்றது ஒரு மானம், மரியாதை, கெளரவத்தைப் பிரதிபலிக்குற ஒன்னு. ஆகவே, அந்த மானம், மரியாதை மேல ஆணையிட்டுச் சொல்லுறது தானுங்க, அதனோட அடையாளம். இதுவும் அவிங்க குடுத்த விளக்கந்தேன். அப்புறஞ் சொன்னாங்க, கைக்குட்டைனால துண்டு அளவுக்கு பெருசா ஒன்னுஞ் சாதிக்க முடியாதுன்னு சொல்லிட்டு, துண்டோட அருமை பெருமைகளச் சொன்னாங்க. அது போக, வடக்கு கரோலைனா, சார்லட்ல இருக்குற நவசக்தி தமிழ் பண்பாட்டுக் குழுவிலயும் இது பத்திப் பேசினோம். அதுல வந்த வரிசைய மேல படிங்க:

தலைப் பாகையாக் கட்டலாம்.

பெருமைக்குரிய பரிவட்டம் கட்டலாம்.

எங்கயும் கோவணங் கட்டலாம்.

முண்டாசு கட்டலாம்.

மழைக்கு முக்காடு போடலாம்.

முகத்தை மூடி மறைக்கலாம்.

சோத்துல கஞ்சி வடிக்கலாம்.

மொளகா, அது இது காயப் போடலாம்.

வ‌ண்டியில‌ இட‌ம் போட‌லாம்.

இடுப்புக்கு கட்டி பணிவைக் காமிக்கலாம்.

த‌லைக்கு சும்மாடு க‌ட்ட‌லாம்.

த‌லைக்கு சுருட்டி வெச்சி ப‌டுக்க‌லாம்.

ஆத்துல ரெண்டு கங்குலயும் புடிச்சு மீன் பிடிக்கலாம்.

க‌ண்ண‌க் க‌ட்டி க‌ண்ணா மூச்சி வெளையாட‌லாம்.

தொழில்ல‌ ந‌லிஞ்சு போனா, த‌லையில‌ துண்டு போடலாம்.

த‌லைய‌க் கொத்த‌ வ‌ர்ற‌ காக்கா, குருவிய‌ துண்டைச் சுத்தி வெர‌ட்ட‌லாம்.

எலுமிச்ச‌ம் ப‌ழ‌ங்க‌ளை ஆட்டைய‌ப் போட்டு, துண்டுல‌ முடிஞ்சு எடுத்துட்டு வ‌ர‌லாம்.

அசையாச் சொத்துகளை ஒப்படைக்குறதுக்கு அடையாளமா, துண்டை ஒப்படைக்கலாம்.

கல்யாண நிச்சயம் நிறைவு செய்யுறதைக் குறிக்க, துண்டை மாத்திகிடலாம்.

க‌தாநாய‌க‌ன் துண்டுல‌ கூழாங்க‌ல்லுக‌ள‌ப் போட்டு வில்ல‌னைப் பின்னலாம்.

விரிச்சுப் போட்டு பிச்சை எடுக்க‌லாம் (த‌ள‌ப‌தி ந‌ச‌ரேய‌ன் க‌வ‌னிக்க‌வும்).

பண்டங் கன்னு யாவரத்துல வெரல் புடிச்சு விலை பேசலாம்.

மாட்டு வண்டிப் பந்தயத்துல வீசி வீசி வெரட்டலாம்.

சல்லிக் கட்டுல பணமுடிப்புக் கட்டலாம்.

இப்பிடித் துண்டோட பெருமைகள அடுக்கிட்டே போலாமுங்க. இவ்வளவு பேசிப் போட்டு, ஒரு பாட்டு பாடாமப் போக முடியுமா? காளைகளோட அலங்காரத்தைக் கேளுங்க!

மின்னேரு எருதுக்கெல்லாம்
என்ன என்ன அடையாளம்?
நெத்திக்குச் சிட்டிகளாம்,
நெலம் பாக்கும் கண்ணாடி!
வாலுக்குச் சல்லடமாம்,
வாகுக்கை பொன்னாலே!
கொம்புக்குக் குப்பிகளாம்,
கொணவாலு சல்லடமாம்!
தூக்கி வைக்கும் கால்களுக்கு,
துத்திப்பூ ச‌ல்ல‌ட‌மாம்!
எடுத்து வைக்கும் கால்க‌ளுக்கு,
எருக்கம்பூ சல்லடமாம்! (சல்லடம் = துணியால் உறை)
ம‌ண்டியிடும் கால்க‌ளுக்கு,
மாதுள‌ம்பூ ச‌ல்ல‌ட‌மாம்!
க‌ட்ட‌க் காட்டு கொல்லையில‌,
நிக்குமெங்க‌ காரிக்காளைக‌!
செங்காட்டுக் கொல்லையில‌,
மேயுதுங்க‌ எங்க செவ‌லைக‌!
மாமாங்க‌ம் மூணு சோடி,
வ‌ருமுங்க‌ ம‌யில‌க் காளைக‌!!!

குதிரை இருப்பு அறியும்! கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்!!

(சல்லடம் = உறை)

தடல் புடல் விருந்து! வாங்க கண்ணுகளா!!

கண்ணுகளா, அல்லார்த்துக்கும் வணக்கம்! எங்கிருந்தாலும் நல்லா இருங்க!! நல்லா இல்லியின்னா, நீ வந்து செரி செஞ்சி தருவியா? அப்பிடீன்ல்லாம் கேக்கப் படாது. அப்பிடியே கேட்டிங்கன்னாலும், எங்கிட்ட சொல்லுறதுக்கு ஒன்னும் இல்லை. அய்ய, அதுக்கோசரம் ஊட்டை உட்டுப் போட்டு போயிராதீங்க கண்ணுகளா, பேசுறதுக்கு விசியம் இருக்கு!

நம்ம ஊட்டுத் திண்ணைக்கி ஆட்காட்டி அண்ணன் அடிக்கொருக்கா வரும், வந்து நல்ல நல்ல பழமயிகளப் பத்திக் கேக்கும், அண்ணனுக்கு தெரிஞ்சதை சொல்லும். அப்பிடித்தான் நேத்தும் ரெண்டொரு கேள்வி கேட்டுப் போட்டு, "என்னடா மணியா, படத்த மாத்தி ஒரே தடல் புடல் பண்ணுறே?"ன்னு கேட்டுச்சு. அப்பத்தாங் கண்ணு மண்டையில ஒறச்சது, "அட, தடல் புடல் பத்திக் கூட நாம, நம்ம கண்ணுகளோட பேசுலாம்"ன்னு.

நம்ம ஊர்கள்ல சொல்லுறது கண்ணு, தடல் புடல் விருந்துன்னு. சனத்தப் பாத்தாக் கேக்குறது, "என்ன விருந்தெல்லாம் தடல் புடலா இருந்ததாமா?. அப்புறம் அதையே பலதுக்கும் பொழங்க ஆரம்பிச்சுட்டம் போல இருக்கு. அவசரத்துல செய்யுறதைச் சொல்லுறதுக்கும் இதைப் பொழங்க ஆரம்பிச்சுட்டம். "என்ன, தடால் புடால்னு ஏற்பாடு பண்ணிட்டீங்க?". அவன் வந்தான், தட புடன்னு எதையோ செஞ்சான், போய்ட்டான். அப்புறம், யாருனா எதுனா விமரிசையாப் பண்ணுனா, அதைப் பொறுக்காத சனஞ் சொல்லுறது, "எதுக்கு இந்த தடல் புடல்?". இப்பிடிப் பல விதமாப் பொழக்கத்துல இருக்கு இந்த தடல் புடல்.

கண்ணூ கண்ணு, இந்த தடல்ன்னா மெலிசாவோ, மொறு மொறுப்பாவோ இருக்குற தினபண்டங் கண்ணு!! வாழை மரத்தண்டுல வாற சிறு சிறு உள்தண்டுச் செதில், வெங்காயத்துல இருக்குற உள் செதில், இப்பிடி வறுவலுக்கு வாய்க்கிற செதிலுக எல்லாத்தையும் பரும்படியாச் சொல்லுறது தடல் கண்ணு.

ஒட‌னே நீங்க‌ கேககுற‌து, புட‌லுன்னா என்ன‌? க‌ண்ணு, புட‌ல்ன்னா புட‌ல‌ங்காய். அந்த‌க் கால‌த்துல‌ புட‌ல‌ங்காய்ல‌ எக்க‌ச்ச‌க்க‌மான‌ புட‌லை வ‌கை இருந்துச்சாம‌. பேய்ப் புட‌லை, சிறு புட‌லை, நீட்டுப் புட‌லை, கைப் புட‌லை இப்பிடியாமாங் க‌ண்ணு. உருளைக் கெழ‌ங்குல‌ கூட‌ ஐயாயிர‌ம் வ‌கை உருளைக் கெழ‌ங்கு இருந்துச்சாங் க‌ண்ணு. ம‌க‌சூலு நெற‌ய‌க் கெடைக்கோனுமுன்னு, ம‌ர‌ப‌ணு மாத்த‌ஞ் செஞ்ச‌ வெதைக‌ள‌ வெதைக்க‌ப் போயி, க‌ழுதை தேஞ்சி க‌ட்டெறும்பு ஆன‌ க‌தையா, 5000 இப்ப‌ வெறும் நாலோ, அஞ்சோல‌ வ‌ந்து நிக்குதாம‌ க‌ண்ணு. காய் க‌றிக‌ள்ல‌ நெற‌ய‌ப் போயே போச்சு போ!

இப்பிடித் த‌ட‌லையும் புட‌லையும் போட்டு, செற‌ப்பாக் குடுக்குற‌ விருந்து த‌ட‌ல் புட‌ல் விருந்து க‌ண்ணு. த‌ட‌ல் புட‌லா விருந்து, த‌ட‌ல் புட‌லா விருந்துன்னு பொழ‌ங்க‌ப் போயி, அது அந்த‌ விருந்தோட‌ வேக‌த்த‌ச் சொல்லுற‌ மாத‌ர‌ அர்த்தங் குடுக்க‌, வேக‌த்துக்குன்னே இந்த‌ சொல‌வ‌டைங்ற‌து ஆயிப் போச்சு போல‌. செரி க‌ண்ணுக‌ளா, ப‌டிச்சிட்டீங்க‌ல்லோ? இன்னைக்கி வெள்ளிக் கெழ‌மை, வார‌க் க‌டைசி, போயித் த‌ட‌ல் புட‌ல் விருந்துக்கு இப்ப‌வே ஏற்பாடு செய்யுங்க‌. செஞ்சி, உங்க‌ சோட்டாளிக‌ளைத் த‌ட‌ல் புட‌ல் விருந்து குடுத்து அச‌த்துங்க‌!!


நொறுங்கத் தின்றால், நூறு வயது!

12/04/2008

மாப்ள, உழுத்திட்டண்டா! ஓடியாடா!!

வணக்கங்க! பரவாயில்லை, இன்னைக்கு கொஞ்சம் குளுரு கம்மி!! இஃகி! இஃகி!! அல்லார்த்துக்கும் நேத்து ஒரே சிரிப்பு! நான் ஏமாந்து போனதுல உங்களுக் கெல்லாம் ஒரு சந்தோசம். இஃகி!ஃகி!! ஊரு முக்குல நாமெல்லாம் எப்பிடியெல்லாம் பகலுன்னும் ராத்திரியின்னும் பாக்காம ஊர்ப் பழமைகளப் பேசி சிரிச்சிருப்போம். பையங்கள்லாமு நின்னு நாயம் பேசறதப் பாத்துப் போட்டு, அம்மினிகெல்லாம், சேந்து கெணத்துல தண்ணி சேந்தி எடுத்துட்டுப் போற மாதிரி வாரது, அல்லக் கண்ணுல நோட்டம் பாக்குறதுன்னு, நாலும் நடக்கும்.

அப்ப ஒருத்தன் இன்னொருத்தங் கிட்டக் கேக்குறது, "என்னடா பட்சிய மடிச்சுட்ட போல இருக்கு?". பொன்னானுக்கு ஒரு குறுஞ் சிரிப்பு வரும் பாருங்கோ, அய்யோ அப்பிடி ஒரு சிரிப்பு. அம்மினி காதுல உழுந்துருச்சுன்னா, அம்மினி இக்கும்னு ஒரு திருப்பி திருப்பீட்டு போகும். நெமை தப்புனா கொடத்துல இடிச்சும் போடும்ங்கோ, சாக்கிரதையா இருக்கோனும் அவிங்ககிட்ட.

இதே, சின்ன பாப்பாத்தியோ, பெரிய பாப்பாத்தியோ (அன்பர்களே, கொங்கு மண்டலத்தில் பெண் பிள்ளைகளை அன்பாக பெரிய பாப்பாத்தி, சின்ன பாப்பாத்தி என்று விளிப்பது வாடிக்கை! ஆமுங்க, நெலையில‌ நிக்குற தேரை, யாருன்னா தெருவுல இழுத்துவுட்டா என்ன பன்றது? அதான், சொல்லி வெச்சிர்லாம்!!) பொன்னானை செரி பன்னீற்ச்சுன்னு வெயுங்கோ, பசங்க சொல்லுறது, "என்னடா உழுந்திட்ட போல இருக்கு?". இராசு, ஒரு சிணுங்கு சிணுங்குவான். சில நேரங்கள்ல மூக்கும் மொகரையும் செவக்குமுங்கோ. என்ன பன்றது, உழுந்தது உழுந்ததுதானுங்ளே!

இந்த கணக்குப் பன்றது, தள்ளிட்டு வாறது எல்லாம் ஊர்ப் பசங்க கிட்டக் கெடையாது. பெரும்பாலும், எல்லாம் நல்ல சகவாசந்தான். எப்பனா ஒருக்கா, நொம்ப செரமப் பட்டு கை கூடி வந்தாச் சொல்றது, "உழுத்திட்டியா? சொன்னதச் செஞ்சி காமிச்சிட்டடா! கவலப்படாத, ஏர்த்தோட்டம் மூர்த்தி அண்ணங்கிட்ட சொல்லிப் பேசச் சொல்லுலாம்!!".

அதே மாதர, புளியா மரத்துல இருந்து புளியங்கா அடிச்சி விழுத்தினாலும், "டேய் நாந்தான்டா நெறய உழுத்தி இருக்குறேன்!"ன்னு சொல்லுவோம். அதே மாதர, மாங்காய் உழுத்துவோம், சீனிப் புளியங்கா உழுத்துவோம், இப்பிடி நெறயங்க. பள்ளிக்கூடம் போகும்போதும் வரும்போதும் இட்டேரீல‌ இதான வேலையே! இப்ப எதுக்கு இந்த பழம எல்லாம் வருதுன்னு கேக்குறீங்ளா? விசியம் இருக்குதுங்கோ! ஆமுங்கோ, நானும் இன்னைக்கு ஒன்னை உழுத்தீட்டனுங்கோய். ஆமுங்க, இப்ப நான் உங்ககூடப் பேசிட்டு இருக்கறது இரநூறாவதுங்க! ஆமங், 200வது பதிவுங்க. இஃகி!ஃகி!!

நான் நெனச்சே பாக்குலீங், இப்பிடி தமிழ்மணம் மீனாவேன்னும், அப்பிடி மீனா இருக்கும் போது இப்பிடி இரநூறாவது பதிவு எழுதுவன்னும். கூடாக் கூடா, எசப் பாட்டு பாடி என்னை கெளரதையா இவ்வளவு தூரத்துக்கு கொண்டு வந்ததுக்கு உங்களுக்கெல்லாம் நான் நொம்ப நன்னி சொல்லோனும். இல்லன்னா, நன்னி கெட்டவன் ஆயிருவனல்லங்.


உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின் கொடி, மென்கடிக் குங்கும தோயம் -என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி, என்றன் விழுத்துணையே!

தொழிலதிபர் ஒருத்தர், தன்னோட‌ தொழில்சாலைய நடத்த முடியலன்னு விக்கிறதுக்காக கிளம்பிட்டு இருந்தாராம். அப்ப அவரோட சொகுசு வண்டி பழுது ஆயிட்டதுனால, அந்த வண்டிய ஓட்டுறவர்கிட்ட சொன்னாராம், "எப்பா, உன்னால சரி செய்ய முடியாது. போயி கடையில உட்டுட்டு, வேற வண்டி எடுத்துட்டு வா!"ன்னு. அந்த வேலையாள் சொன்னாராம், "என்னால திருத்த முடியாதுங்றது, என்க்கு முன்னாடியே தெரியாமப் போச்சுங்க. அதனால வண்டியச் சரி பண்ணிப் போட்டனுங்க!"ன்னு. அதைக் கேட்ட அந்த மொதலாளி, தொழிற் சாலைய விக்கிற முடிவையே கை விட்டுட்டாராம். அப்புறம் அது பல தொழிற்சாலைகள உண்டு பண்ணுச்சுங்ளாம்.


ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடல்!

கூட்டாஞ்சோறு!

வணக்கமுங்க! ரெண்டு நாட்களா, வாசகர்களோட நொம்பத்தான் பேசிப்புட்டேன். அப்ப பாருங்க நெறைய விசயங்களுக்கு விளக்கம் கேக்குறாங்க. அதான், இந்த கூட்டாஞ்சோறு. கூட்டாஞ்சோறுக்கும் வெளக்கம் வேணுமா? குடுத்துர்றேஞ் சாமி! கோவிக்கக் கூடாதுன்னு அய்யன் நேத்துதான சொல்லுச்சு?!

நான் நெறய இடத்துல சிரிக்கப் போயி, சனங்க அந்த சிரிப்புகளுக்கும் வெளக்கம் கேக்குறாங்க. அதான், கொஞ்ச சிரிப்புகளுக்கு இன்னைக்கி வெளக்கம். இன்னும் நெறய சிரிப்பு இருக்கு, அதுகளை எல்லாம் மொத்தமா வேற ஒரு நாளைக்குத் தாறேன்ஞ் சரியா?!

அசடு வழிய சிரிப்பு: இஃகி! க்ஃகி!!
அடுத்தவன் துன்பத்துல சிரிப்பு: அஃக!ஃக!!ஃக!!!
கேனச் சிரிப்பு: இஃ!இஃகி!இஃகி!!!
ஆனந்தச் சிரிப்பு: அஃகஃகாஃஃஃஃஃஃ! அஃகஃகாஃஃஃஃஃஃ!
குழந்தைச் சிரிப்பு: கிஃகி!கிஃஃஃ!கிஃஃஃஃஃஃஃஃஃஃ!!!
மீசை இல்லாத புன்முறுவல்: :-)
மீசை இருக்குற புன்முறுவல்: :-{)
எகத்தாளச் சிரிப்பு: ஒகொஃகொஃஃகொஃ....!
இரசிச்சுச் சிரிக்குறது: இஃகிஃகிஃ...ஏஃ! இஃகிஃகிஃ...ஏஃ!!


அடுத்து தளபதி நசரேயன், "காண்டுல இருக்காரு!"ங்றது தமிழா, இல்லை ஆங்கிலமான்னு கேட்டு இருந்தாரு. காண்டுங்றது தமிழ் அகராதியில இருக்குற சொல்தான். காண்டுன்னா கோபம் இல்லை. ஆனா, கிட்டத்தட்ட அந்த உணர்வுதான். இப்ப புலி ஒரு சீற்றத்துல உறுமுது. அதுக்கு யார் மேல கோபம்? இல்லீங்ளே! ஆனா, மனசு தகிச்சுப் போயி ஒரு மார்க்கத்துல இருக்கு. அதுதாங்க காண்டு. இதை கதம்ன்னும் சொல்லுறதாம். ஆக, மனுசன் எதோ ஒன்னைப் பாத்து, அதை சகிச்சுக்க முடியாம காண்டு நிலைக்கு வந்துருவான். இந்த வெளக்கத்தைப் பாத்து, இனி எத்தினி பேருக்கு காண்டு வருதோ தெரியலை?! இஃகி!ஃகி!ஃகி!!!

பாருங்க சின்ன வயசுல நாங்க சின்னப் பசங்க எல்லாம் தனியா வெளையாடிட்டு இருப்போம். திடீல்ன்னு ஒரு நாள் எதிர் அணியில இருந்து, அதாங்க பொம்பளைப் புள்ளைக தரப்புல இருந்து ரெண்டு பேர் வந்தாங்க. வந்து, நாங்க வழுக்காம் பாறைக்கு கூட்டாஞ் சோறு எடுத்துட்டுப் போறோம், நீங்களும் எங்ககூட வரோணும்னு சொன்னாங்க. அய்யோ, எங்க அம்மா அடிக்கும்னு நான் பதற, அந்த அம்மினி சொல்லுச்சு, "இல்ல, நாங்க அத்தையவிங்க கிட்ட கேட்டுட்டுத்தான் வந்தோம்!"னு. என்னா சந்தோசம்? சொல்லி மாளாது போங்க! அப்புறம் எல்லாரும் வழுக்காம் பாறையில போயி, நல்லா கால்சட்டை பொறவால‌ கிழியற அளவுக்கு வழுக்கி, ஓடியாடின்னு நெறய வெளையாடிட்டு ஒரு மரத்து நெழல்ல ஒக்காந்தோம். எல்லாரும் அவிங்க அவிங்க ஊட்டுச் சோத்துப் போசி(தூக்குப் பாத்திரம்)ய எடுத்து, எல்லார்த்துக்கும் பங்கு போட்டுக் குடுத்தாங்க. அப்பத்தான் ஒரு அம்மினி சொல்லுச்சு, இப்பிடி நாலு ஊட்டுச் சோத்தையும் ஒன்னு கூடி பங்கு போட்டுத் திங்கிறதுதான் கூட்டாஞ் சோறுன்னு. அதுக்கப்புறந்தான் தெரிஞ்சது, இதுக அத்தை, சொத்தைன்னு எல்லாம் சொல்லி ஆசைகாட்டி, ஆம்பளைப் பசங்களை காவக்கார நாய்களாட்டம் காவலுக்கு கூட்டிட்டு வந்திருக்குன்னும், எங்க மேல அதுக மனசுல ஒரு இது இல்லைன்னும்! இஃ!இஃகி!இஃகி!!!


பெண்டு வாய்க்கும் புண்ணியவானுக்கு! பண்டம் வாய்க்கும் பாக்கியவானுக்கு!!

12/03/2008

சொம்புத் தண்ணி!

வாங்க கண்ணுகளா, எல்லாம் நல்ல சொகந்தான?! நீங்க இருக்குற பக்கமும் குளுரா சாமி? இங்க நாங்க இருக்குற பக்கம் செரியான குளுரு... நாள் முச்சூடும் ஊட்டுக்கு உள்ளயேதேன்! கெரகம், வெளில போயி நடுங்கி சாகுறதுக்கு நான் என்ன கேனயனாக்கும்?! இப்பத்திக்கி எனக்கு ஒரு அம்மினிதேன், நாலு வயிசு ஆகுது. அது மட்டும் பள்ளிக்கூடம் போயிட்டு வரும். அவிங்க அம்மாக்காரி பாத்துகுவா, எனக்கு வெளில போக வேண்டிய சோலியே இல்ல.

ஆமாங் கண்ணு, எனக்கு வீட்ல இருந்துதேன் வேலை. பாரு கண்ணு, ரெண்டு நாளா ஊர்ப் பழமைகளுக்கெல்லாம் விளக்கஞ் சொல்லிட்டு வந்தமல்லோ, அதுல ஒரு மாத்தம். வித்தியாசமா இருக்கட்டுமுன்னு, நம்மூர்ப் பெரியவரு சொன்ன விளக்கத்தைப் பாக்கலாஞ் செரியா? சரி, மேல படிங்க அப்ப.

கண்ணு, பொள்ளாச்சிக்கு பக்கத்துல, புரவி பாளையம் தெரியுமல்லோ? பெரிய ஊரு. ஜமீன் இருந்த ஊரு. அங்க ஜமீனுக்கு அரண்மனை எல்லாம் இருக்கு. காடு கரைகளுக்குப் போயிட்டு சனங்க நெம்ப சந்தோசமா இருப்பாங்க அந்த ஊர்ல. எங்க பாத்தாலும் பச்சைப் பசேல்னு ஒரே செழிப்புதேன். அங்க பாரு கண்ணு, சென்னியப்பன் சென்னியப்பன்னு ஒரு குடியானவன் இருந்தான். அட, ஒரு சென்னியப்பந்தேன். இப்பிடி எல்லாம் குறுக்கு கேள்வி கேட்டா, நாங் கதை எப்பிடி சொல்லுறது?

சரி, குறுக்க பேசாம வெவரமா கதையக் கேளு. சென்னியப்பனுக்கு எட்டு ஏக்கரா செங்காடும், ஒரு வள்ளம் எரங்காடும் இருக்கு. நல்லா, "ஊம்" போட்டுக் கேக்கோனும். அவனுக்கு நல்ல வெள்ளாமை, அவனும் சும்மா சொல்லக் கூடாது, நல்லாப் பாடு படுவான். ஆனா, அவன் பொஞ்சாதிக்கும் அவனுக்குந்தான் சேர்றதே இல்லெ. எப்பப் பாத்தாலும் அவ இவனை வெய்யுறதும், இவன் அவளுக்கு ஈடு குடுக்கறதும், ஒரே அக்கப்போரு. சொல்ல மறந்துட்டம்பாரு, அவன் பொண்டாட்டி பேரு தெய்வாத்தா!


புரவி பாளையத்துக்கு மேக்கால, நாட்ராயன் கோயிலுக்குப் பின்னாடி இருக்குறது ரெட்டைப் புளியாமரம். அதைத் தொட்டா மாதரயே இருக்குறதுதான் கோனத் தோட்டம். அந்த தோட்டத்துல இருக்குது கண்ணு, பன்னெண்டு அங்கணச் சாலை. அதுலதான் அப்பார் அய்யன் இருக்குறது. ஊர்ல இருக்குறவிங்க எல்லாம் கல்யாணம் காச்சின்னா ஏடு பாக்குறதுக்கும், நல்ல விசேசத்துக்கு குறிப்பு பாக்குறதுக்கும்னு பலதுக்கும் அப்பார் அய்யங் கிட்டத்தான் போறது. அப்பப்ப அய்யன் மந்திரிச்சு துண்ணூறு அல்லாங்கூட வெச்சு விடும். எந்த பிரச்சினை இருந்தாலும், ஒருக்கா அய்யன் கிட்டப் போய்ட்டு வந்தா, இருக்குற செரமம் ஒடனே நீங்கீரும். ஊரு சனங்களுக்கும் அய்யன் மேல அப்பிடி ஒரு நம்பிக்கை.

செரின்ட்டு, சென்னியப்பன் பொஞ்சாதி தெய்வாத்தாவும் அய்யன்கிட்ட ஒரு எட்டு போய்ட்டு வரலாம்ன்னு போகுது. போயி அய்யன் கிட்ட, இந்த மாதர ஊட்ல பொழுதன்னைக்கும் நாயமாவே கெடக்குதுன்னு சொல்லி அழுவுது. அய்யனும் பொறுமையாக் கேட்டுட்டு, "சரி தெய்வாத்தா, ஒன்னும் ஆவாது புள்ள!. சென்னியப்பன் எப்ப உங்கூட ஓரியாட்டத்துக்கு வந்தாலும், இந்த செம்புல இருக்குற தண்ணியில ஒரு மொடக்கு, வாயில ஊத்தி வெச்சிட்டு, அவன் கோவந் தீந்த பொறகு முழுங்கீரு!" ன்னு சொல்லி ஒரு சொம்பு தண்ணிய மந்திரிச்சு குடுத்தாரு.

தெய்வாத்தாவும், சென்னியப்பன் கோவத்துல ரெண்டு பேச்சு பேசுறப்ப வெல்லாம், அப்பிடியே அய்யஞ் சொன்ன மாதரயே செய்யுது. இப்பிடியே போச்சு மாசம் மூணு. ஊட்ல ஒரு பிரச்சனையும் இல்ல. தெய்வாத்தா இப்ப ரெண்டு மாசம் முழுகாம இருக்கா. இப்பப் பாருங்க, அய்யன் குடுத்த சொம்புத் தண்ணி தீந்து போச்சு. இவளுக்கா ஒரே பயம். மறுக்கா, கோனத்தோட்டத்துக்கு அய்யனப் பாக்கப் போறா புள்ளத்தாச்சி, மறுபடியும் ஒரு சொம்பு தண்ணி வாங்க.

ஆனா, அய்யன் இந்தத் தடவை தண்ணி தரலை. ஏன்னு கேக்க அய்யஞ் சொன்னாரு, "அடிப் போடீ இவளே! அவன் கோவம் வரும்போது நீ கூடா கூடாப் பேசுவ போல இருக்கு. இத்தினி நாளும் வாயில தண்ணி இருக்குறதனால, நீ அந்த நேரத்துல பேச முடியலை! ஊட்ல சண்டையும் இல்ல!! ச்சும்மா சொன்னா நீ கேட்டு நடக்க மாட்ட, அதான் தண்ணிச் சொம்பு குடுத்தேன். ஒருத்தருக்கு கோவம் வரும்போது, அடுத்த ஆள் அமைதியா இருக்கோனும், கூடக் கூடப் பேசுனா, ஓரியாட்டந்தான! போ, போயி சென்னியப்பனையும் வரச் சொல்லு! அவனுக்கும் சொல்லி அனுப்பறேன்!!". அதுக்கப்புறம் பாருங்க‌ அவிங்களுக்குள்ள ஓரியாட்டமே இல்லியாமுங்க. ஒன்னும் ஒன்னுமா நொம்ப சந்தோசமா இருக்காங்க.


இதுல இருந்து நாம தெரிஞ்சுகிட்டது என்ன? நீங்க தங்கமணியா, அப்ப ரங்கமணிக்கு கோவம் வரும்போது பொறுமையா இருங்க. நீங்க ரங்கமணியா? அப்ப‌, தங்கமணிக்கு கோவம் வரும் போது பொறுமையா இருங்க. என்ன கண்ணு, உனக்கு இன்னமும் கண்ணாலமே ஆகலையா? அப்ப இப்பவே, பேசுறதெல்லாம் பேசிக்கோ! என்னயக் கேக்குறீங்களா? எனக்கு பேச்சுப் போயி, இப்ப நாலு வயசுல‌ குழந்தை ஒன்னுங்க. போனது போனதுதான்! தங்கமணிகோட கோவப்படுறதுக்கு, போன பேச்சு இனி திரும்பி வரவா போகுது??

யாரால் கேடு? வாயால் கேடு!


கொங்கு தமிழ் அகராதி
முச்சூடும்: முழுதும்
அம்மணி( அம்மினி): இளம் பெண்
சோலி: காரிய‌ம்
பழமை: பேச்சு, அர‌ட்டை
மாத்தம்: மாற்ற‌ம்
வள்ளம்: நான்கு அல‌குக‌ள்
வெய்யுறது: ஏசுத‌ல்
ஈடு குடுக்கறது: அடிப்ப‌து
அங்கணம்: ப‌ண்டைய‌ அள‌வீடு
ஏடு பாக்குறது: ஜோசியம் பார்ப்பது
துண்ணூறு: திருநீறு
ஓரியாட்டம்: ச‌ண்டை/ச‌ச்ச‌ர‌வு

பின்னிப் ப‌(பெ)ட‌ல் எடுங்க‌!

வாங்க அன்பர்களே, வணக்கம்! போன பதிவுல நம்ப சனங்க மத்தியில, தமிழின்பாலும் ஊரின்மேலும் இருந்த தீராத வேட்கையப் பாத்து இருப்பீங்க. பல மடல்களும் வந்து இருக்கு, இனியும் படிக்கலை. எப்பிடியோ, அவிங்க மனசக் கிளரி விட்டதுல நமக்கு ஒரு சந்தோசம்!

ரெண்டு மூணு நாட்களுக்கு முன்னால, இங்க இருக்குற குளிரப் பத்தி நான் புலம்ப, பதிவர் அது சரி அண்ணாச்சி இங்கயுந்தான் குளிரு பின்னிப் பெடல் அடிக்குதுன்னு சொன்னாரு. உடனே நானும் பின்னூட்டத்துலயே அதைப் பத்தி மேற்கொண்டு பேசலாம்னு இருந்தேன். மறுபடியும் பதிவாப் போட்டா, பாடு பழமய அல்லாரும் படிச்சுத் தெரிஞ்சுக்குவாங்க பாருங்க, அதான் இந்த பதிவு!

பாருங்க, நம்ப ஊர்ல படல்(portable wall) அப்பிடிங்றது, தெனமும் கெழமையும் வீடு, தோட்டங் காடு, மேடு பள்ளம், வனாந்தரம்னு எங்கயும் பொழங்குற ஒன்னுங்க. கண்ணாலமா, தென்னை ஓலைல படல் கட்டிப் பந்தல் போட்டு, ஊரு கூடி பாடு பழமயோட அப்பிடியொரு குதூகலமா நடக்கும். இந்தப் படல்ங்றது ஒரு தற்காலிக தடுப்புச் சுவர்ங்க.

புள்ளை பெரிய மனுசி ஆயிட்டாளா? மாமங்காரங்க வந்து, பச்சையோலைல படல் கட்டி, குடிசை போட்டு அம்மினிய அதுல ஒக்கார வெச்சி, சீரு, தெரட்டின்னு என்னா அமர்க்களம்?! என்ன, அன்னையோட அம்மினியோட சேந்து வெளையாடுற பாக்கியம் பொன்னானுக்கு இனி இல்லை.

ஆடு மாடுக‌ அடைச்சு வெக்கிற‌ ப‌ட்டியா? ப‌ட‌லுக‌ வெச்சி நாலா புற‌மும் த‌டுப்புப் போட்டு, ந‌டுப்புல‌ ப‌ண்டங் க‌ன்னுக‌ளை நிறுத்தி வெச்சுருவோம். தென‌மும் சாய‌ங்கால‌ம் அந்த‌ப் ப‌ட‌லுக‌ளை ந‌க‌ர்த்திட்டே போவாங்க‌. அப்ப‌த்தான‌, எருவு காடு தோட்ட‌ம் பூரா விழுகும். ஆனா, இந்த‌ ப‌ட‌லை மூங்கில்க் குச்சிக‌ளை வெச்சி செய்திருப்பாங்க‌. ப‌ட்டிக்கு, ப‌க்க‌த்துல‌ கூட்டு வ‌ண்டியோட‌ கூடு ஒன்னும் இருக்கும். அதுல‌தான் காவ‌லுக்கு ப‌டுத்துக்க‌ற‌து. ம‌ழை வ‌ந்தாலும் உள்ள‌ பொட்டுக் கூட‌ ந‌னையாதுங்க‌!

குடிசை, வீடு, மாட்டு சாலை, பொட‌க்காளின்னு எங்க‌யும் ஒரு ப‌ட‌லைக் க‌த‌வா வெச்சிடுவோம். ஊட்டுல‌, ச‌ன‌ங்க‌ குளிக்க‌க் கொள்ள‌ ஒரு ஒதுக்குப் பொற‌ம் வேணுமா? இந்த‌ ப‌ட‌லுக‌ளை வெச்சா முடிஞ்ச‌து சோலி! இப்பிடி, இதுக‌ளோட‌ தேவை எங்க‌யும் இருக்கும். ப‌ட‌லுக‌ளை ப‌ல‌தும் வெச்சி செய்வாங்க‌. தென்னை ஓலை, ப‌னை ஓலை, மூங்கில் குச்சி, சிறு சிறு செடிக‌ன்னும் ப‌ல‌ வித‌மான‌ ப‌ட‌லுக‌ பொழ‌க்க‌த்துல‌ இருக்கு.

நானும் தென்னையோலை ந‌ல்லாப் பின்னுவேன். எங்க‌ அப்பிச்சிய‌விங்க‌ ஊரு, குண்ட‌ல‌ப் ப‌ட்டி லெட்சுமாபுர‌ம். அங்க‌ ஊர் எல்லைல‌ இருக்குற‌ தோப்பு எங்க‌ அப்பிச்சி அவிங்ள‌துதேன்! அப்பிடிப் பாருங்க‌, விசேச‌ வீடுக‌ள்ல‌ தெனை யோலை, ப‌னை யோலைல‌ த‌டுக்கு பின்னிப் ப‌ட‌ல‌ செய்யுற‌தும், அதுல‌ போட்டி போடுற‌தும் பொன்னானுக‌ளுக்குள்ள‌ ஒரு கெள‌ர‌வ‌ப் போட்டியா இருக்கும். அப்பிடி யாரு மொத‌ல்ல‌ பின்னிப் ப‌ட‌ல் எடுக்குறாங்க‌ளோ, அப்ப‌ச் சொல்லுற‌து, "ம‌வ‌னே, பின்னிப் ப‌ட‌ல் எடுத்துட்டானே?" அப்பிடின்னு.

அதுவே, பாடு ப‌ழ‌ம‌க‌ள்ல‌யும் யாரு விசுக்குன்னு செஞ்சாலும் இந்த‌ப் ப‌ழ‌ம‌ய‌ சொல்லுற‌து வாடிக்கையாமுங்க‌. தீவிர‌த்தைக் குறிச்சு சொல்லுற‌ ஒரு சொல்வ‌டையாவும் ஆச்சு. அதானுங்க‌ இந்த‌ "பின்னிப் ப‌ட‌ல் எடுக்குற‌து!". ஆனா, யாரு பின்னிப் பெட‌ல் ஆக்கினாங்க‌ன்னுதான் தெரிய‌லை. தோட்ட‌ங் காடுக‌ள்ல‌ பெட‌லும் இல்ல‌, க‌ட‌லும் இல்லீங்கோ! எல்லாம் இந்த‌ப் ப‌ட்ட‌ண‌த்து ச‌ன‌ங்க‌ செய்யுற‌ வேலை! இஃகி!! இஃகி!!! ச்சும்மா சொன்னேன், கோவிச்சுக்காதீங்க‌! ப‌ழ‌ம‌ய‌க் கேட்டாச்சு இல்ல‌?! போயி, உங்க‌ சோலி என்ன‌வோ அதுல‌ பின்னிப் ப‌ட‌ல் எடுங்க‌!!


கொங்கு தமிழ் அகராதி
பழமை: பேச்சு , வெட்டிப் பேச்சு
படல்: மூங்கிலால் அல்லது ஓலையால் வேயப்பட்ட ஒரு பக்க கதவு அல்லது அடைப்பு
அம்மணி( அம்மினி): இளம் பெண்
திரட்டி: பூப்புனித நீராட்டுவிழா
பண்டம்: ( இடத்திற்கு தகுந்தாற்போல் மாறுபடும் ) -- இக் கட்டுரையின் பொருளில் -- மாடு , எருமை போன்ற கால்ந‌டைகள்
பொடக்காளி ( புறக்காணி): கொல்லைப்புறம்
அப்பச்சி: அம்மாவின் அப்பா
விசுக்கென்று: எதிர்பாராமல், திடீரென , உடனடியாக

சாளை(சாலை): ஓலையால் வேயப்பட்ட ஒரு சிறு குடில்
தடுக்கு: தென்னை ஓலையால் வேயப்பட்ட கீற்று

12/02/2008

அடங் கொன்னியா......

வணக்கம்! இத்தோட ஏச்சு பேச்சுகளுக்கு விளக்கம் போடுறது இல்லைன்னு சொல்லிப் பதிவும் போட்டுப் பாத்தேன். அன்பர்கள் விட மாட்டேங்றாங்க! போட்டா, எதுக்கு இந்த மாதிரி எல்லாம் எழுதறேன்னும் சொல்லுறாங்க. என்ன செய்யறதுன்னே புரியலை. கோயம்பத்தூர் பொன்னான் ஒருத்தர் வந்து கேட்டதுக்கு மட்டும், இன்னைக்கு பாப்போம். ஏன்னா, மத்ததுக்கு எல்லாம் பதிவுல விளக்கம் போட முடியாது இராசா! தங்கமணி எல்லாம் வந்து, நாம எழுதறதப் படிக்குதல்லோ?!

விளக்கங் கேட்ட பொன்னான் பேரப் பாத்த ஒடனே எனக்கு எங்க ஊர் ஞாபகம் வந்திருச்சு, ஆமுங்க, உடலைப்பேட்டை (உடுமலைப் பேட்டை)தானுங்க நம்ம ஊரு. நம்ம சோட்டாளிக பேரப் பாருங்கோ சித்த:

தங்சு: தங்கவேல்/தங்கராசு
பொன்சு: பொன்னுச்சாமி
ராம்சு: இராமசாமி
கந்சு: கந்தசாமி
ரங்சு: ரங்கநாதன்/ரங்கராசு
ச்சின்சு: சின்னதுரை
பால்சு: பாலவிநாயகன்
திர்றான்: திருமூர்த்தி
செலுவான்: செல்வராசு
கிட்டான்: கிருட்டிணசாமி
பீபிச்சி: பிரபாகரன்
சந்து: சந்திர சேகரன்
மக்கான்: மகேந்திரன்
கோக்சு: கோகுல கிருஷ்ணன்
பெருசு: பெரியசாமி
நட்டு: நடராசு
சுச்சான்: சுரேஷ்
கிச்சு: கிருஷ்ண்ன்
கோந்து: கோயிந்தன்
ஆரான்: ‍‍ஆறுமுகம்
மயில்ஸ்: மயில்சாமி (மயிரான்)
நடயன்: நடராஜ்
ரவியான்: ரவி
சின்னு: சின்னராசு/சின்னச்சாமி

கனகான்: கனகராசு
கீச்மூச்: கிருஷ்ண மூர்த்தி
புச்சான்: புருஷோத்தமன்
நண்டு: நந்த குமார்
ப்ராசு: ப்ரகாஷ
ராக்கி: ராமகிருஷ்ணன்
பத்து பத்மநாபன்


இப்பிடி நெறயங்க! "சுப்பிர மணியா! கொப்பரை வாயா!!"ன்னு ஒரு பாட்டு கூட இருக்கு, இப்ப மறந்து போச்சு! உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க!! இப்ப எதுக்கு, இந்த ஞாயம் வந்ததுங்ன்னா, அடங் கொன்னியான்னா என்னன்னு கேட்டது ரங்சுங்ற நம்ம பதிவர்தானுங்க. அதான் இந்தப் பேருகள்லா ஞாபகத்துக்கு வந்திச்சு. சரி இப்ப இதுக்கான அர்த்தத்தைப் பாப்போம்.

கொன்னின்னா வந்து குழந்தை பேசுற குளரல். அதான் வாய் திக்கி திக்கிப் பேசுறதை கொன்னிப் பேசுறதுன்னும் சொல்வாங்க. கொன்னை வாயன்னும் சொல்வாங்க. ஆக, தாறுமாறாப் பேசுறவனை கொன்னியான்னு விளிக்கிறது வாடிக்கையாச்சு. அப்புறம் அதுவே, சாதாரணமாவும் பொழங்கற மாதிரி ஆயிடுச்சு. அடங் கொன்னியா, அங்க பாரு கொட்டாய்ல எவ்வளவு கூட்டமுன்னு.



உண்ணாச் சொத்து, மண்ணாய்ப் போகும்!

12/01/2008

தங்களின் மேலான கவனத்திற்கு!

சமுதாயம் என்பது என்ன? அதன் அங்கத்தினர் யாவர்? நானும் நீங்களுமா? நம்மைச் சுற்றியுள்ள நாலு பேரா? உயிருள்ளவர்கள் மட்டும்தானா அல்லது உயிரற்றவைகளுமா? கண்ணுக்குத் தெரிபவைதானா? இன்னும் என்ன வெல்லாம் இருக்கின்றன? இது போல் ஒரு பட்டியலில் சமுதாயத்தின் அங்கங்களை அடக்கிவிட முடியுமா? இந்த எல்லாக் கேள்விகளுக்கும், ஒரே விடைதான் இருக்கிறது. நம்மீது பாதிப்பை ஏற்படுத்தும் எல்லாக் காரணிகளுமே சமுதாயத்தின் அங்கங்கள்தான். இதற்கு மொழியும் இலக்கண இலக்கியங்களும் கூட விதிவிலக்கல்ல.

மொழி வேறுபடும் போது, சமுதாயங்களும் பிளவுபட ஆரம்பிக்கின்றன. மொழிக் கலப்புக்கு ஆளான ஒரு பேரினம், எப்படி அல்லலுறும் என்பதை அயலார்கள் தமிழர்களைப் பார்த்துக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழர்களாகிய நாம் அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டோமா? நமக்குத்தான் பழமை, வரலாறெல்லாம் வயிற்றுப் பிழைப்புக்கு உதவாத பொருளாயிற்றே?!

ஒரு மொழியை அழித்தால், அந்த இனம் தானாக அழியும் என்பது வரலாறு நமக்குக் கற்றுத்தந்த பாடம். இலங்கையில் சிங்களப்படைகள் செய்வது மட்டுமல்ல. தமிழகத்தில் ஊடகங்கள் செய்வதும் இனப் படுகொலைதான். தொலைக் காட்சிகள் மானையும் மயிலையும் ஆட விட்டுக் கொண்டிருக்கும் போது, தமிழ்ப் பேசுவதற்குத் தங்கக் காசு தர வேண்டிய அவலத்தை உணர்த்திக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் குட்டு நமக்கு யாருக்காவது வலித்திருக்கிறதா?

அதையும் ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சியாகத்தானே பார்த்துக் கொண்டிருக்கிறோம்? அதில் அறிமுகப் படுத்தப்படும் இனிய தமிழ்ச் சொற்களை யாராவது அன்றாட வாழ்க்கையில் பயன் படுத்திப் பார்க்கிறோமா? தமிழ் நாட்டில், தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட தமிழார்வம் மிக்க இரண்டு நண்பர்கள் தனித் தமிழில் உரையாட விரும்பினால் கூட, அதையும் கள்ளக் காதல் போலத் தானே செய்ய வேண்டி இருக்கிறது? அவர்களைப் புரிந்து கொள்கிறதா இச் சமுதாயம்?? கிண்டல் செய்வோர் ஏராளம்! ஏராளம்!!

தமிழில் சொன்னாலே புரியக் கூடிய சொற்களுக்கு பதிலாக, பிறமொழிச் சொற்களைப் பயன் படுத்துவதைத் தவிர்த்து விட்டு, மொழியைத் தூய்மைப் படுத்தி வளமாக்கும் பணியை நாம்தான் செய்ய வேண்டும். எழுத்து நடையில் எழுதச் சிரமமா?! பேச்சுத் தமிழில் எழுதத் துவங்குங்கள், நாளடைவில் செந்தமிழில் எழுதுவதும் சாத்தியமே! நாம் செய்யா விட்டால், வேறு யாரும் செய்ய மாட்டார்கள்! இன்று செய்யா விட்டால், என்றுமே செய்ய முடியாது!!

நன்றியும், மேலதிகத் தகவலும்: இயன்றவரை இனிய தமிழில்!

பொறுப்பு அறிவித்தல்(Disclaimer): அன்பர்களே, இந்தக் கட்டுரை இன்னைக்குக் காலைல மின்னஞ்சல் மூலமாக் கிடைச்சது. அதான் உங்க பார்வைக்கு கொண்டு வரலாம்னு, அதுல இருந்த ஒரு பகுதிய மட்டும் இங்க குடுத்து இருக்கேன். அறிவுரை சொல்ல வந்துட்டான்னு மட்டும் நினைச்சுடாதீங்க, படிச்சதைக் குடுத்து இருக்கேன்! அவ்வளவுதான்!!

ஆமுங்க! நானும் எளிய தமிழ்ல இதையும் சேர்த்து ஒரு, நூற்று தொன்னூத்தி நாலு(194) பதிவு பதிஞ்சு இருக்கேன். மொதலாளி வேலைல சுளுக்கு எடுக்கலைன்னா, இந்த வாரம் பூரா, பதிவாப் போட்டு இர‌நூறு ஆக்கிட வேண்டியதுதான். அய்ய, மொகம் மாறுதே? இல்லங்க, உபயோகமாவும் சுவராசியமாவும் தர முயற்சி செய்யுறேன்!

கொசுறு: "விலாவாரியாக் கேட்டுட்டு வா!" ன்னு வீட்ல சொல்லி அனுப்புவாங்க. அவிங்க அப்பிடிச் சொல்லி அனுப்புறப்பத்தான், நாம ஒன்னு ரெண்டை மறந்துட்டு வருவோம். அப்புறம் என்ன, தெள்ளவாரி நாய் உருப்பட்ட மாதரதான்னு பூசை கிடைக்கும். கிட்டடியில இந்த விலாவாரின்னா என்னன்னு தெரிஞ்சுக்க ஆசைப்பட்டதுல‌ தெரிஞ்சது, அது விலாவாரி இல்லீங்ளாம். விலேவாரின்னு சொல்லுறதாமுங்க. விலேவாரின்னா கணக்கியல்ள‌, பிசிரு விடமா ஒன்னு ஒன்னையும் கணக்குல கொண்டு வர்றதாமுங்க!

கொடிக்கு காய் கனமா?

சிரிப்பில், எத்தனை வகைச் சிரிப்பு?

அன்பர்களே, வணக்கம்! நாம மொல்லமாறின்னு சொல்லி ஒரு பதிவு போட்டாலும் போட்டோம், வாசகர்கள், நிறைய வழக்கத்துல இருக்குற சொல்லுகளை நம்ம பக்கம் தள்ளி விட்டுட்டாங்க. அவைகளுக்கு வர்ற காலங்கள்ல பதில் பதிவு போடணும். இடையில ஒருத்தர், timely jokeக்கு தமிழ்ல என்னன்னு கேட்டு வந்தாரு.

நாம காலத்துக்கு ஏற்ற சொல்நகைன்னு ஆரம்பிச்சு, அப்புறம் வலையில மேயப் போய் பல விசயங்களைத் தெரிஞ்சுக்க முடிஞ்சது. காலத்துக்கேற்ற சொன்னகை, காலத்தே சொல் நகை, நேரம் தழுவிய நகை, சமயம் பார்த்து பகடின்னு வேந்தன் அரசு ஐயாவும் எடுத்துக் குடுத்தாங்க. கடைசில, நேரந் தழுவிய நகைங்றது எழுத, பேச வாட்டமா இருக்குங்றதுல முடிஞ்சது நம்ம அலசல்.

இந்த சிரிப்புல பாருங்க, எத்தனை வகை சிரிப்பு இருக்குன்னு. நமக்கு அதை நெனச்சாலெ சிரிப்பு வருது. :-o)

புன்சிரிப்பு

நமட்டுச் சிரிப்பு
வெடிச் சிரிப்பு
கால்வாரிச் சிரிப்பு
ஓகோன்னு சிரிக்கிறது
'களுக்'ன்னு சிரிக்கிறது
பயங்கரமா சிரிக்கிறது

குபீர்ன்னு சிரிக்கிறது
வாய்விட்டு சிரிக்கிறது
வாய் மூடிட்டு சிரிக்கிறது
வயிறு வலிக்கச் சிரிக்கிறது
விழுந்து விழுந்து சிரிக்கிறது

குலுங்க குலுங்கக் சிரிக்குறது
மனசுக்குள்ளேயே சிரிக்கிறது
உதட்டளவில சிரிக்கிறது
வெறியாச் சிரிக்கிறது
கலகலன்னு சிரிக்கிறது
'பக்'ன்னு சிரிக்கிறது
சங்கீதமாச் சிரிக்குறது
வஞ்சகச் சிரிப்பு
கபட சிரிப்பு.

சரி, அப்பிடியே நம்ம கலைவாணர் ஐயா பாடின பாட்டையும் கேட்டுப் பாருங்க. அந்தப் பாட்டுல மேல சொன்னது போல, நிறைய வகைச் சிரிப்பு இருக்குங்க.







வாய் விட்டு சிரிச்சா, நோய் விட்டுப் போகும்!

இனிய‌ இந்தியா!



உலகமே வந்தாலும் கடலத்தான‌,
உலர வெக்க முடியுமா?
கள்ளத்தனமா வாரயிவன் அதை,
காய வெக்க முடியுமா??

ஊருகூடி, சுத்துற பூமியதை,
நிறுத்தத் தான முடியுமா?
ஒளிஞ்சு வந்து இவனுகதை,
ஒழிச்சு விட முடியுமா??

எட்டி நாலு பூப்பறிச்சா
பட்டி ஆலமரம் சாஞ்சிடுமா?
உப்பை நனச்சி விட்டா
உப்புப் ப‌ள்ள‌ம் காஞ்சிடுமா??

எங்க ஒத்துமை பாரறியும்!
துங்க மது நாங்கறிவோம்!!
ஊரு ச‌ன‌ம் ஓயாது!
காந்தி தேச‌ம் சாயாது!!


11/09/2008

"ஏழஞ்சு மை" யன்னான்னா என்ன?

வணக்கம். வாரக் கடைசி நாளுங்றபடியால் கணனியில யிருந்து எட்ட இருப்பமெண்டு, காணொளியில முதல் மரியாதை படம் பாத்துக் கொண்டு இருந்தன். நான் இந்தப் படத்தைக் கணதடவை கண்டு இருக்குறன். ஆனாலும் நீர் எத்தினி தரங்கண்டாலும் அலுப்பு அடிக்காதென்ன, அப்பிடி ஒரு படமென்ன.

படத்தக் காணைக்குள்ள மனசு சரியான விசர் பிடிச்சதென்ன. நான் படத்தோட கதையச் சொல்லலே. இந்த இளைய ராசாவும், வைர முத்துவும், பாரதி ராசாவும், செலுவ ராசும் ஏன் பிரிஞ்சிட்டினம்? அவங்கள்டப்பா ஒன்டா இருந்திருந்தா கண படங்கள், நல்ல படங்கள் வந்திருக்குமென்ன. அவிங்கள் இதுக்கும் அடி மட்டத்துல இருந்து வந்தவிங்க என்ன. ஏன் காசு வந்த பொறகு, இப்பிடி ஆனவிகளெண்டு தெரியலை. தமிழண்ட பிரச்சினையே இதுதானென்ன. அவிகளுக்கு பொறுப்பு இருக்கு. இனியெண்டாலாவது ஒன்டு சேந்து படமெடுக்க வேணும். நல்லூர்க் கந்தன் அதுக்கு வழி செய்ய வேணும். என்ன‌ நாஞ்சொல்லுறது சரிதானே?

அந்தப் படம் பாக்கைக்குள்ள எனக்கு ஊர் ஞாபகம் வந்திட்டு என்ன. அந்த வடிவுக்கரசி கதைக்க றெதெல்லாம்டப்பா, ஒரே பேய்க் கதையென்ன. நம்பட ஊர்ல எல்லாம் அப்படித்தான கதைக்குறது. அதுவும் பொம்பளைப் புள்ளைக கொழுவல் எண்டால், நமக்கு ஒரேப் பகிடிதான். பொடியங்க ஏசுறது எப்பிடி யெண்டு தெரியுமே உமக்கு? ஏழஞ்சு மையன்னா எண்டு சொல்லுவினம். ஒன்னே முக்காத் தையன்னா எண்டு சொல்லுவினம். இதெல்லாம் உமக்கு விளங்குதே?! இல்லியே?! சொல்லுறன், கேளுங்கோ!


123456789101001000

ஏழுக்கு தமிழ் எண் வந்து . அஞ்சுக்கு ரு. அதத்தான், எருமையண்டு ஏசுறதுக்கு பதிலா ஏழஞ்சு மையன்னா. ஒண்டாம் எண்ணுக்கு தமிழ் எழுத்தெண் . முக்கால் 3/4 பின்னத்த தமிழ் எழுத்தில ழு மாதிரி இருக்குற எழுத்தில எழுதிவினம். ஆக, கழுதையிண்டு ஏசுறதை ஒன்னே முக்காத் தையன்னா எண்டு ஏசுவினம். இப்ப விளங்கிட்டே?!


குத்து வயித்துக்காரன் தூங்கினாலும்,
குறை வயித்துக்காரன் தூங்க மாட்டான்!


காணொளி: ‍‍ Television
காணைக்குள்ள: ‍ காண்கையில்
விசர்: ‍‍கவலை/வெறி
ஒன்டா: ‍‍ ஒன்றாக‌
கொழுவ‌ல்: ச‌ண்டை/ஊட‌ல்
ப‌கிடி: வேடிக்கை


வாக்களியுங்க மக்களே, வாக்களியுங்க!