2/03/2019

அழுக்காறு களையுமாம் பீயும் பீநலமும்


மயில்களைப் பார்க்கும் போது மட்டுமின்றி
போய்ப் பார்க்கும் போதும்
சொல்லியாக வேண்டியிருக்கிறது,
மயிலே, மயிலே, நீ
எந்த மயிரானுக்கும்
இறகு போடாதே!!
(கவிஞர் ஜெயபாஸ்கரன்)

இலக்கியக் கூட்டமொன்றில் இக்கவிதையைப் பற்றிக் குறிப்பிடும் போது, மயிரான் போன்ற சொற்களுக்கு மாற்றாக இலைமறைகாயாக உணர்த்துகின்ற இடக்கரடக்கல் கையாளப்பட வேண்டுமெனவும், ’பகா ஈகாரம், பவ்வீ’ என்றெல்லாம் ஓரெழுத்துச் சொல்லைச் சொல்வது போன்று இலைமறை காயாகச் சொல்ல வேண்டுமெனவும் வலியுறுத்தப்படுகின்றது. தொன்றுதொட்டு வழக்கில் இருந்து வருகின்றது என்பதற்காகவே நாம் ஒன்றை காலாகாலத்துக்கும் கடைபிடித்துத்தான் ஆக வேண்டுமா? காலத்துக்கொப்ப மாற்றம் கண்டாக வேண்டியிருக்கின்றது. ’பகா ஈகாரம்’ ’பவ்வீ’ என்று சொன்னதும் நம்மில் எத்தனை பேருக்கு இது புரிந்து விடப் போகின்றது? ’பீ’ எனக் குறிப்பிட்ட மாத்திரத்தில் என்னதான் பின்னடைவு வந்து விடும்? இன்னும் சொல்லப் போனால், மயிர், பீ, முலை போன்ற சொற்களைத் துணிந்து சொல்லாமல் விட்டுவிடுவதுதான், அவற்றின்மீதான உரையாடலுக்கான இடத்தைச் சமூகத்தில் இல்லாமற் செய்கின்றது. இதன்நீட்சிதான், வீட்டுப் புறக்கொல்லைக்குச் சென்று துண்டு போட்டு மறைத்துக் கொண்டு திருட்டுத்தனமாகக் கள்ளோ சாராயமோ குடித்து விட்டு வருவது போன்றதாகும். மது அருந்துவது உடல்நலத்தை எப்படியாகப் பாதிக்கின்றது? மதுச்செரிமான அறிவியல் என்ன?, பயன்பாடு, உட்கொள்ளும் நாகரிகம் எப்படியானது?, முதலானவற்றைப் பேசியாக வேண்டியதன் தேவை நமக்கிருக்கின்றது. அதைப்போலவே, பீயும் பீநலமும் கூட உரையாடலுக்கு உட்படுத்த வேண்டியவொன்றாகும்.

பீ தணக்கன், பீக்கருவேலன், பீ நாறி, பீநாறிச் சங்கு, எருமுட்டைப் பீநாறி, பீய்யமரம், பீமரம் முதலானவையெல்லாம் தாவரங்களின் பெயர்கள். விட்டை, பிட்டை, பிழுக்கை, இலத்தி, இலண்டம், சாணம், எச்சம், எருவை முதலானவையெல்லாம் உயிரினக்கழிவான பீயின் வடிவு, உருவுக்கான வெவ்வேறு மரபுப்பெயர்கள்.

பீ என்பது தமிழின் ஒரு வேர்ச்சொல். தூம்பு(hollow tube)வினின்று வெளிப்படுதல் என்பதுதான் அதன் பொருள். அப்படிச் சினையாகு பெயராக ஆகிவந்திருப்பது பீ. பீச்சுதல், பீரங்கி, பீடி, பீடு, பீரிடுதல், பீத்தல் முதலானவையெல்லாம் இந்த பீ எனும் வேர்ச்சொல்லின் நீட்சி. ஆகவே, பீ என்றதுமே முகம், மனம் கோணுவது, நாணுவதெல்லாம் தேவையற்றது. தற்போது எதற்கு இந்தப் பீடிகை? பீ குறித்து விரிவாகப் பேச வேண்டியிருக்கின்றது. பீ குறித்த தெளிவு இருப்பின், வாழ்வு சுகப்படும்.

பீயினை இழிவுக்கு ஒப்பானதாகக் கருதப்பட்டதாலேயே அச்சொல்லுக்கு இடக்கரடக்கல் தேடுவதும், அச்சொல்லைச் சொன்னதும் மருள்வதும் வெகுள்வதும் ஏற்படுகின்றது. ஆனால் மாந்தவாழ்வின் வரலாற்றுப் போக்கில், சுகாதாரம் கருதி மிகக்கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருந்ததோடு, தேவையின் முக்கியத்துவம் கருதி அணுக்கமாகவும் கையாளப்பட்டு வந்திருக்கின்றது. நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு முன்னர், பண்டைய மருத்துவத்தில் பீயைக் கொண்டு செய்யப்பட்ட மருந்துகள் பயன்பாட்டில் இருந்திருக்கின்றன. கண்களுக்குத் திரை விழுந்து விட்டால், மாந்தனின் பீயைக் காய வைத்துப் பொடியாக்கி, பொடியைக் கண்களில் ஊதிவிடும் பழக்கம் இருந்திருக்கின்றது. இரண்டாம் உலகப் போரின் போது வட ஆப்பிரிக்க நாடுகளைக் கைப்பற்றிக் கொண்ட இட்லரது படைகள் கொத்துக் கொத்தாக வயிற்றுப் போக்குக்கு ஆளாகினர். உள்ளூர் ஆட்கள் எப்படியோ அத்தகைய பாதிப்பிலிருந்து மீண்டு வருவதைக் கண்டவர்கள், காடுகளுக்குள் செல்லும் உள்ளூர் ஆட்களைப் பின்தொடர்ந்து சென்று போய்ப் பார்த்தனர். ஒட்டகச் சாணத்தினை நிலத்தில் விழுவதற்கு முன்னாகக் கையிலேந்தித் தின்பதைக் கண்டனர். முகம் சுளித்தனர். உயிரா, சாணமாவென யோசித்த ஜெர்மன் படைகள் சாணத்தைத் தின்று உயிரைக் காப்பாற்றிக் கொண்டனர். சாணத்தில் இருந்து நோயெதிர்ப்பு பாக்டீரியாக்கள் மாந்த உயிர்களைக் காப்பாற்றியது வரலாறு.

மாந்தன் பீயை அழிவு சக்தியாகவும் பாவித்தான். கிமு ஆறாம் நூற்றாண்டுகளில் இடம் பெற்ற போர்களின் போது சித்தியப் படைகள், மனிதக்கழிவினைத் தோய்த்த அம்புகளை ஊரெங்கும் தொடுத்தனர். கிருமிகள் ஊரெங்கும் பரவி மக்கள் நோய்வாய்ப்பட்டு மடிந்தனர். பனிரெண்டாம் நூற்றாண்டுகளில், சீனப்படைகள் மனிதக்கழிவினால் ஆன குண்டுகளை வீசி எதிரிகளை நிலைகுலையச் செய்தனர். தொற்றுநோய்கள் வேகமாகப் பரவுவதில் மனிதக்கழிவுக்குப் பெரும் பங்குண்டு.

மனிதக்கழிவில் பொதுவாகக் கிட்டத்தட்ட 75 விழுக்காடு நீராகும். எஞ்சியிருக்கும் 25 விழுக்காட்டுத் திடமான உள்ளீட்டில், முப்பது விழுக்காடு நம் உடலில் இருந்து கழிக்கப்படும் செத்தையாகிப் போன செல்களும் கழிவுமாகும். அடுத்த முப்பது விழுக்காட்டுத் திண்மமானது செரிக்கமுடியாத நார், செல்லுலோசு உணவுப் பொருட்களாகும். எஞ்சிய நாற்பது விழுக்காட்டில் கனிமங்கள், கொழுப்பு, புரதம் ஆகியவற்றோடு வெளியேற்றப்படும் நுண்ணுயிரிகளும் அடங்கியிருக்கும். இந்த நுண்ணுயிரிகளில், மாந்தனுக்கு ஏதுவான நுண்ணுயிரிகளோடு தீங்கு விளைவிப்பனவும் இடம் பெற்றிருக்கும். இத்தகைய தீங்கானவையே தொற்று நோய்களுக்கு வழி வகுக்கின்றன.

பீ என்றவுடனே, அதுவோர் கழிவுப் பொருள், தீங்கை விளைவிக்கக் கூடியது, நாற்றமானது என்றெல்லாம் கருதி ஒட்டுமொத்தமாகப் பாராமுகம் கொள்வது தவிர்க்கப்பட வேண்டியதாகும். சுகாதாரத் தூய்மை கருதி கவனமாகக் கையாளப்பட வேண்டியது எவ்வளவு முக்கியமானதோ, அதேயளவு முக்கியமானது நாம் அதன் பின்னணி, அறிவியல், தன்மை முதலானவற்றை அறிந்து வைத்துக் கொண்டு கவனத்துக்கு உட்படுத்திக் கொள்வதுமாகும். எத்தனையோ வகையான வடிவில், பீ என்பது மாந்தனின் வாழ்வில் இடம் பெற்றே வந்திருக்கின்றது.

பழங்காலத்தில், குழந்தைகளுக்கு ஏட்டுகுணம், உடல்நலிவு ஏற்பட்டு விட்டால், கழுதை விட்டைகளை சாம்பிராணியுடன் கலந்து நெருப்பிலிட்டுப் புகை பிடிக்கச் செய்தனர். அதற்கும் சரியாக விட்டால், குழந்தையின் பீயையே காயவைத்துப் புகைபிடிக்கச் செய்தனர். கால்நோய் கண்டவர்கள், யானையின் இலண்டத்தில் கால்களைப் புதைத்து வைக்கும் பழக்கம் இருந்தது. சிறுமூக்கு உடைந்து இரத்தம் ஒழுகினால், மாட்டுச்சாணம் அல்லது ஆட்டுப் பிழுக்கையை வைத்து அடைப்பர். கண்கட்டிக்குக் குருவிப் பீயினைக் குழைத்துப் போடுவதும் வழக்கமாயிருந்தது. வைத்து புனுகு, சவ்வாது போன்ற வாசனைத் திரவியங்கள், குறிப்பிட்ட பூனையினத்தின் கழிவுப் பொருளேயாகும். மனிதனின் தோல்நலத்துக்குப் பாவிக்கும் பூச்சானது, நத்தையின் பீயில் இருந்து எடுக்கப்படுவதேயாகும். குடிக்கு அடிமையானவர்களுக்கு, புலியின் பீயானது மருந்தாகப் பாவிக்கப்படுகின்றது. தெரிவு செய்த மனிதப் பீயினை அதிமதுரத்துடன் கலந்து நாட்டு மருந்துகளைத் தயாரிக்கின்றனர் சீனப்பழங்குடிகள். ஊர் மொத்தத்திலிருந்தும் கிடைக்கப்பெறும் மனிதக்கழிவில் இருந்து தங்கம் உள்ளிட்ட இதர உலோகக்கனிமங்கள் இனம்காணப்பட்டுப் பிரித்தெடுக்கின்றனர் ஜப்பானியர்கள்.

கருப்பு ஐவரி காஃபியானது யானைக்குத் தின்னக் கொடுத்து அதன் இலண்டத்தில் இருந்து பெறப்படும் காப்பிக் கொட்டைகளில் இருந்து வடிக்கப்படுகின்றது. அமெரிக்காவில் சாதாரணக் காப்பித்தூள் விலை ஒரு கிலோ 12 டாலர்கள். ஆனால் இந்த Black Ivory coffee, காஃபியின் விலை கிலோ 1100 டாலர்கள் ஆகும். ஒருவிதமான காட்டுப்பூனைகளுக்கு உண்ணக் கொடுக்கப்பட்டு, அதன் விட்டைகளில் இருந்து எடுக்கப்பட்ட காப்பிக் கொட்டையின் விலை கிலோ 500 டாலர்கள். இப்படியான உயிரினங்களின் செரிமான மண்டலத்துக்குள் சென்று வரும் காப்பிக் கொட்டைகள் நுண்ணுயிரிகளினூடாக நொதித்தலுக்கு ஆட்பட்டு வருவதால் இத்தகைய பொருட்கள் சிறப்பைப் பெறுகின்றன. வானியற்பயணம் மேற்கொள்பவர்கள் கழிக்கும் சிறுநீர் மறுசுழற்சி செய்யப்பட்டு மீண்டும் குடிநீராகப் பயன்படுத்தப்படுகின்றது. அதைப் போலவே, பீயையும் உணவாகப் பாவிக்க முடியுமாவென்பதற்கான ஆய்வுகளும் நடந்து வருகின்றன.

உடல்நலிவுக்கு, தெரிவு செய்யப்பட்ட மற்றவருடைய பீயினை உடல்நலிவுற்றவரின் செரிமான மண்டலத்தில் மாற்றுப்பீயாக வைக்கும் மருத்துவ சிகிச்சைகளும் நடப்புப் பயன்பாட்டில் இருக்கின்றன. அதன் அடிப்படையை அறிந்து கொள்ள, நம் உடலின் செரிமானத்தை அறிந்து கொள்வது முதற்படியாகும்.

மெல்லப்படுவதனால் இயங்குதிறனுக்கும், உமிழ்நீருடன் கலப்பதன் வாயிலாக வேதித்திறனுக்கும் ஆட்பட்டுக் களிமமாக வாயிலிருந்து துவங்குகின்றது உணவின் செரிமானப் பயணம். செரிமானப் பயணத்தின் தொலைவு கிட்டத்தட்ட 30 அடிகள் நீளமாகும். வாயிலிருந்து உணவுக்குழாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், பீப்பை, பீப்புளை(ஆசனவாய்) வரையிலான தொலைவு என்பது ஒருவரது உயரத்தின் ஐந்து மடங்காக இருக்கும். வாயில் அரைக்கப்பட்ட உணவுக்கவளமானது உணவுக்குழாயின் தசைகளால் கடத்தப்பட்டு இரைப்பைக்கு வந்து சேர்ந்தவுடன், இரைப்பை வெளித்தசைகள் இங்குமங்குமாக தள்ளிவிட்டுத் தசைச்சுவரில் மோதவிடும். இத்தகைய இயங்குதிறன் மோதுதலுக்கு ஆட்பட்டுச் சிதைவடையும் அதே வேளையில், அமிலம் சுரந்து வேதிவினைச் சிதைத்தலுக்கும் உணவுக்கரைசல் ஆட்படும். நார், மாவுச்சத்துள்ள உணவுக்களிம்புகள் இரைப்பையிலிருந்து குறைவான நேரத்தில் சிறுகுடலுக்குச் சென்று சேரும். புரதம், கொழுப்பு மிகையாக உள்ள களிம்புகள் கூடுதலான நேரத்தை இரைப்பைச்சுவர் மோதுதலுக்கும் அமிலச் சிதைத்தலுக்கும் எடுத்துக் கொள்ளுமென்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சிறுகுடலுக்குள் நுழைந்ததும், கணைய நீர், பித்தப்பையின் பித்தநீர் போன்ற சுரப்புநீர்கள் வந்து சேர்ந்து கொள்ள, டிரில்லியன் கணக்கில் அங்கே குடிகொண்டிருக்கும் நுண்ணுயிரிகள் அடுத்தகட்ட செரித்தலை மேற்கொள்ளும். சிறுகுடலின் நீளம் மட்டுமே 20 – 25 அடிகள் கொண்டதாய் இருக்கும். ஆக, உண்ட உணவு என்பது 12 மணி நேரத்திலிருந்து ஒருவாரம் வரையிலும் கூட இப்பயணத்துக்கான நேரமாக எடுத்துக் கொள்ளும். செரித்தலின் போது வடித்தெடுக்கப்படுகின்ற புரத, கொழுப்பு, குளுகோசு, கனிமச்சத்துகள் உடனுக்குடனே கல்லீரலுக்குச் சென்று சேரும். எவ்வளவுக்கெவ்வளவு நார்ச்சத்து இருக்கின்றதோ, அவ்வளவுக்கவ்வளவு பயணத்தின் வேகம் அதிகமாக இருக்கும். சிறுகுடல் வெளிப்புறச் சுவர்களான வில்லியன்களின் கடத்து ஆற்றல் நார்ப்பொருட்களால் எளிமைப்படும். நார்ப்பொருள் குறைவாகவோ இல்லாமலோ இருப்பின், உணவுப்பொருளானது மாவுபோலக் கிடப்பிலேயே கிடந்து, நுண்ணுயிரிகள் கழிந்த கழிப்பினையே அவை மீண்டும் உண்டு நச்சுப் பொருட்களின் வீச்சு அதிகரிக்கும். நுண்ணுயிரிகளின் சுகாதாரம் பாதிப்படையும்.

பெருங்குடலை வந்தடையும் போது, இனிமேற்கொண்டு கொழுப்பு, புரதச்சத்துச் செரிமானத்துக்கு இடமில்லாத நிலை ஏற்பட்டு விடும். இருக்கும் குளுகோசு, நீர்ச்சத்தினை மட்டுமே பெருங்குடல் ஈர்க்க முடியும். பெருங்குடல் வந்தடைந்த உள்ளீட்டில், கழிக்கப்பட்ட செத்தை செல்கள், நச்சுப் பொருட்கள், தீங்கான நுண்ணுயிரிகளும் இருப்பதால், வெகுநேரம் பெருங்குடல் பயணத்தில் இல்லாமல் இருப்பது நல்லது. அல்லாவிடில், அவை பெருங்குடலுக்குத் தீங்காய் முடியும். நேரம் செல்லச் செல்ல, பீயில் இருக்கும் நீர் உறிஞ்சப்படுவதால் வறண்டு போய் விட்டையாக உருவெடுக்க நேரிடும். வெளியேற்றப்பட்ட நுண்ணுயிரிகள், தமக்குத் தேவையான சத்து கிடைக்காமையால் குடற்சுவர்களைத் தின்னத் தலைப்படலாம். எனவேதான் வேகத்தை உறுதி செய்யும் பொருட்டு, நார்ச்சத்து இன்றியமையாததாய் ஆகின்றது.

பெருங்குடல் பயணத்தை முடித்துக் கொண்ட திருவாளர் பீயார் அவர்கள், பீப்புளை(ஆசனவாய்)யின் இறுகுதசைக் கதவினை அன்போடு லேசாகத் தட்டுவார். சமிக்கையானது மூளைக்குச் சென்று சேரும். அவரது அன்பு வேண்டுகோளை ஏற்று உடனடியாக கழிப்பறைக்குச் செல்வது நல்லது. சில நேரங்களில் செல்ல வசதி இராது. அவருக்கும் அது தெரிந்தே இருக்கின்றது. ஆனால் அவரது பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு. எல்லை மீறப்படும் வேளையில், அடுத்த பீயாரும் பீப்பையை வந்தடைய, பீப்பை பெருத்துப் போகும். இருக்கும் நீர்ச்சத்தெல்லாம் உறிஞ்சப்பட்டுக் கொண்டே இருக்கும். விட்டை, இலண்டமாகும். கதவு தட்டப்படுவதும் நின்று போகும். கொடுக்கப்பட்ட வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளாதவர்கள், முக்கித்தானாக வேண்டும். நுண்ணுயிரிகளின் கழிவுகள் கூடுதல் இரசாயன வாயுவாகிக் காற்றுப் பிரியும். காற்று உடலுக்குள்ளே சென்று தீமைகளுக்கு வித்திடும். மீண்டும் மீண்டும் பீப்பைக்குள் வரவு இருந்ததினால், பீப்பையின் விட்டம் பீப்புளை, ஆசனவாயின் விட்டத்தைக் காட்டிலும் பெருத்துப் போக வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும். மேலும் நீர்த்தன்மையற்ற வறட்டுத்தனத்தால், உராய்ந்து உராய்ந்து, பெருங்குடற் சுவர்களிலும் பீப்பைச்சுவர்களிலும் புண்கள் ஏற்படும். இதற்கு நாம் சூட்டிக் கொண்ட பெயர் மலச்சிக்கல்.

பீயின் உரு வடிவைக் கொண்டு பிழுக்கை, இலத்தி, இலண்டம், சாணம், விட்டை, பிட்டை, பீ, எச்சம், எருவை எனப் பிரித்தார் தமிழ்ப் பெரியோர். அதைப் போலவே, மேற்கத்திய மருத்துவ ஆய்வுலகமும் ஏழு வகையாகப் பிரித்துக் கையாள்கின்றனர். பீநலம் பேணும் பொருட்டு நாமும் அவற்றை பொருட்படுத்துவது உசிதம்.

நார்ச்சத்து, நீர்ச்சத்து இன்றியோ குறைந்தோ இருந்து, மாவு, புரதம் மேலோங்கி இருக்கும் போது பிழுக்கைகளாகப்(#1) பீ வெளியேறும். அதாவது சிற்சிறு உருட்டுகள் கொண்ட தொகுதியாக வெளியேறும். கடத்துதிறன் இல்லாமையால் குடல்மண்டலத்தில் நெடுநேரம் பயணிக்க வேண்டி இருப்பதால், நச்சுக்கழிவுகளால் தீங்கு நேரிட வாய்ப்புண்டு. நீர்ச்சத்து கொஞ்சமாய் இருந்து, நார்ச்சத்து இல்லாமல் இருந்தால் இலத்திகளாக(#2) உருவெடுக்கும். நார்ச்சத்து போதுமானதாய் இருந்து, நீர்ச்சத்து போதுமானதாக இல்லாமல் இருக்கும் போது பிட்டைகளாய்(#3) வெளியேறும். இதற்கு அடுத்த கட்டமான விட்டைச்சாணம்தான் உகந்ததாகும். ஈரப்பசை மிகுந்த நீண்ட நெடிய சாணமானது மலப்புளை விட்டத்தின் அளவினாலான உருளைக்கோலாக(#4) வளைந்து வளைந்து கழியும். உண்ட உணவில் இருக்கும் ஏதோவொரு பொருள் ஒருவருக்கு ஒவ்வாததாக இருக்கக் கூடும். அப்படியான நேரத்திலோ, அல்லது கணையம், பித்தப்பை முதலான உள்ளுறுப்புகளின் இயலாமை காரணமாகவோ முழுமையாக செரிமானம் ஆகாமல் நீர்த்தன்மையான எருவைப்பிட்டுகளாக(#5) வெளியேறும். கொழுப்புச்சத்து செரிமானக் கோளாறு, ஒவ்வாமை, காரச்சத்து, வயிற்றுப்புண், நுண்ணுயிர்ப்போதாமை, மாவுச்சத்துக் குறைபாடு முதலான காரணங்களுக்காக எச்சமாக(#6), எருவியாக(#7) நீர் போலவும் வெளியேறும். பீப்பைக்கு வந்து சேர்ந்ததன் மீது, ஒன்றின் மீது ஒன்று, ஒன்றின் மீது ஒன்று எனப் பொதிந்து பொதிந்து பெருப்பதால் ஏற்படுவது இலண்டம்.

வெளியேறும் அளவு என்பது பெரிதாகப் பொருட்படுத்தத் தேவையில்லை. அவரவர் உண்ணும் அளவுக்கேற்ப, உண்ணும் முறைகளுக்கேற்ப அது மாறுபடலாம். ஆனால், மேற்கத்தியர்களை விட ஆசியர்கள் கழிக்கும் பீயின் அளவு மூன்று மடங்கு அதிகமாக இருக்கும் என்கின்றார் பீ ஆய்வாளர் மருத்துவர் அனீசு சேத். இதற்குக் காரணமாக அவர் சொல்வது, ஆசியர்களின் உணவில் வெகுவாக இடம் பெறும் தாவர உணவுகளேயாகும். மேற்கத்தியர்கள் பெரும்பாலும் புலால் உண்ணுபவர்கள். எனவேதான் அவர்களுக்கிடையே ஒப்பீட்டளவில் குடற்புற்றுநோயும் அதிகமென்கின்றார்.

பீயின் வண்ணத்தைப் பொறுத்தமட்டிலும், மஞ்சள், பழுப்பு வண்ணம் இயல்பானது. உணவுக்கூழ் சிறுகுடலுக்குள் சென்றதும், இளம்பச்சை வண்ணத்தினாலான பித்தநீர் வெளிப்பட்டுச் செரிமானத்தின் அடுத்த கட்டம் துவங்கும். செரிமானம் முழுமை பெறாமல் வெளியேறும் போது, பீயானது இளம்பச்சை வண்ணத்தில் இருக்கும். பச்சைவண்ணமிகு நார்ச்சத்து மிகுதியாக இருக்கும் போதும் பச்சைவண்ணத்தில் வெளியேறுவது இயல்பேயாகும். அல்லது, இயல்பான வேளைகளில் பித்தநீர் செரித்த பின் பழுப்புக் கழிவையே வெளியேற்றும். கருப்பு வண்ணத்தில் இருந்தால், உள்ளுறுப்புகள் கோளாறு அல்லது இரும்புச்சத்து சமமின்மை என்பது காரணமாயிருக்கலாம். சிவப்பு வண்ணமென்பது, உட்கொண்ட உணவு அல்லது இரத்தக்கசிவு, குடல்நோய் முதலானவற்றைக் குறிக்கும். வெளியேறியதும் நீரில் மிதத்தல் அவரவர் உட்கொண்ட உணவைப் பொறுத்தது. ஆனால் தொடர்ந்து மிதக்குமேயாயின், கொழுப்புச் செரிமானக் குறைபாடாகவும் இருக்கலாம்.

பீநலத்துக்கும் செரிமண்டல நுண்ணுயிர்த் தொகுதிகட்கும், நேரிடையானதும் நெருக்கமானதுமான தொடர்பு உண்டு. பீநலம் மேம்பட்டதாக இருந்தால், ஒருவரது மனநலமும் மெய்நலமும் மேம்பட்டதாகவே இருக்கக் கூடும். ஆக, ஒருவர் தம் பீநலத்திலிருந்து பின்னோக்கிச் சென்று அவரவர்க்கான உணவுப்பழக்கத்தைக் கட்டமைத்துக் கொள்ளலாம்.

மாற்றுப்பீ சிகிச்சை முறையின் அடிப்படையை நாம் இப்போது மீளாய்வு செய்யலாம். ஒருவர், ஒரேவிதமான உணவையோ அல்லது அதீதமான ஆண்டி-பயாடிக் (நுண்ணுயிர்க்கொல்லி) பாவிக்கும் போது, தமக்கான உணவு இல்லாமை, கொல்லப்படுதல் போன்ற காரணங்களினால் நுண்ணுயிர் பரவலாக்க அமைப்பினை இழக்க நேரிடுகின்றார். இதனால் செரிமானக் கட்டமைப்புச் சீர்குலைகின்றது. ஒவ்வா நுண்ணுயிர்களை எதிர்த்துத் துரத்தும் ஆற்றல் இல்லாமற் போய்விடுவதால் நோய், முறைகேடுகள் தோன்றுகின்றன. இப்படியான நிலையில், ஒவ்வா நுண்ணுயிர்களைக் கொல்ல கொடுக்கப்படும் மருந்துகளுக்கும் அவை சாவதில்லை. இந்த நேரத்தில்தான், மற்றவரின் பீயைக் கொணர்ந்து குடல்மண்டலத்தில் குடிகொள்ளச் செய்வதாகும். பட்டுப்போன நிலத்தில் என்னதான் உரங்களைக் கொட்டினாலும் பயனளிக்காமற் போகும் நிலையில், உழவர்கள் மற்ற காட்டு மண்ணைக் கொண்டு வந்து கொட்டுவதைப் பார்த்திருப்போம். அதைப் போன்றதுதான் இதுவும். மற்றவரின் நல்ல நுண்ணுயிர்த் தொகுதியுடைய வளமான பீயைத் தெரிவு செய்து, அவற்றில் இருக்கும் செத்தைகளை நீக்கிவிட்டு, அதனை பெருங்குடலில் இருக்கச் செய்வதன் வாயிலாக, இருபத்து நான்கு மணி நேரத்துக்குள்ளாக சிகிச்சை பெறுபவரின் செரிமண்டலத்தில் நல்ல நுண்ணுயிர் மண்டலம் தழைக்கத் துவங்குகின்றது. அதன் மூலமாக தீராத வயிற்றுப் போக்கு, முறைகேடுகள் நீங்குகின்றன.

சீருடைய பீநலத்துக்கு ஒருவர் என்னதான் செய்ய வேண்டும்? இயன்ற மட்டிலும், உண்ணுகின்ற எல்லா நேரமும் சிறிதளவேனும் நார்ச்சத்து உள்ளதாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒழுங்கு அமைத்துக் கொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும் தண்ணீர் குடித்ததும் வெளியேறுகின்றதா? மாலையில் வீடு வந்து சேர்ந்ததும் போகின்றதா? இப்படியாக அதில் தொடரமைவு, consistency பேணுதல் அவசியம். இதற்கு அடிப்படை பசித்து உண்ணுதல், அளவாக உண்ணுதல் போன்றவையாகும். நம் உடலானது, 50-60% நீரால் ஆனது. ஆக, தெப்பத்தைப் போல நீர் செலுத்தி நீர் வெளியேற்றுவது அவசியம். போதுமான தண்ணீர் குடிப்பதை கடைபிடிக்க வேண்டும். கொழுப்பும், இறைச்சியும் எவ்வளவு வேண்டுமானாலும் தின்னலாம் போன்றவை, சமச்சீருக்கு ஒழுங்குக்கு ஒவ்வாதன. மாறாக, அது அது, அதனதன் தேவைப்கொப்ப உட்கொள்ள வேண்டும். உகந்த அளவில் இறைச்சி/கொழுப்புடன் மிகுதியாகத் தாவரப்பொருட்கள் உட்கொள்ளப்பட்டு, உடற்பயிற்சி அல்லது உடலுழைப்பு இயைந்து வரும் போது வெளியேற்று ஒழுங்கு கூடிவரும். இப்படியாக அழுக்காற்றைக் களைய வல்லது பீயும் பீநலமும்!!

-பழமைபேசி, pazamaipesi@gmail.com

(எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களது, ‘அத்தை வீட்டுக் கோடை’ எனும் கதையின் விளைவாக எழுதத் தலைப்பட்டது இப்படைப்பு. மருத்துவ ஆலோசனை அன்று. பொதுப்புரிதலுக்கு மட்டுமே. கோளாறுகள் இருப்பின் நல்ல மருத்துவரை அணுகவும்.)


2/02/2019

தாவரங்களுண்டு வாழ்தலினிது

எல்லா உயிரினங்களிலும் தனிச்சிறப்பாக இப்புவியில் அமைந்திருப்பவை தாவரங்களேயாகும். அவற்றுக்குத்தான் கதிரவனின் ஒளிச்சக்தியை உள்வாங்கி, வேதிச்சத்தாக மாற்றுகின்ற ஆற்றல் உண்டு. மாந்தயினம், விலங்கினமென ஏனைய இனங்களெல்லாம் இத்தகு வேதிச்சத்திற்காக நேரிடையாகவோ, மறைமுகமாகவோ தாவரங்களைச் சார்ந்தேயிருக்கின்றன. இத்தகு தாவரங்களைப் பலவாறாகவும் பரவலாகவும் உண்டு வாழ்தலென்பது, மாந்தனின் மெய்நலத்தையும் மனநலத்தையும் கட்டமைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது.

வேதிச்சத்தைக் கட்டமைக்கும் தாவரங்களுக்கும், தாவரம் சார்ந்து இயங்குகின்ற பிறயினங்களுக்கும் அடிப்படையாக இருந்து செயலாற்றுபவை, இப்புவியெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் நுண்ணுயிரிகளேயாகும்.

மனிதனின் உடலெங்கும் நுண்ணுயிரிகள் இருந்தாலும், வயிற்றிலும் நம் குடல்மண்டலத்திலும்தான் பெருவாரியாக இடம் பெற்றிருக்கின்றன அவை. தோராயமாக ஒன்றுக்கு மூன்று என்கின்ற விகிதாச்சார அடிப்படையில், 37 டிரில்லியன் உயிரணுக்களோடு 100 டிரில்லியன் நுண்ணுயிரிகளும் நம் உடலில் இடம் பெற்றிருக்கலாமென்பது அண்மைய ஆய்வறிக்கையின் கணிப்பாக இருக்கின்றது. இவற்றின் கொள்ளளவு ஒன்றரை லிட்டராகவும், எடையளவு இரண்டு கிலோகிராம்கள் வரையிலும் இருக்கக் கூடும்.

உடலினுள் அமையப் பெற்றிருக்கின்ற நுண்ணுயிரிகளே நம்மைக் கட்டமைக்கின்றன என்பதைப் புரிந்து கொண்டு, நமக்கான உணவுப் பழக்கத்தைக் கட்டமைத்துக் கொள்ள வேண்டியது அவசியமென்கின்றார் பேராசிரியர் சிமோன் கார்டிங். வயிற்றின் கீழ்ப் பாகத்திலும் குடல்மண்டலத்திலுமாக இருக்கின்ற இந்த இரண்டு கிலோகிரோம் வரையிலான நுண்ணுயிர்த் தொகுதியை மாந்தனின் இரண்டாவது மூளையென வர்ணிக்கின்றார் மருத்துவப் பேராசிரியர் சிமோன் கார்டிங்.

ஒவ்வொருவருக்குள்ளும் குறைந்தது முந்நூறிலிருந்து ஆயிரம் வரையிலான நுண்ணுயிர்க் குடும்பங்கள் வசிக்கின்றன. பெருவாரியாகப் பார்க்கின் அவற்றை எட்டிலிருந்து பத்து விதமான பெருங்குடும்பங்களாக வகைப்படுத்தலாம். இவை ஏன் மனிதனின் ’இரண்டாவது மூளை’ என வர்ணிக்கப்படுகின்றது? மனிதனின் மகிழ்ச்சி, வருத்தம், சினம் போன்ற உணர்வுகளைக் கட்டமைப்பதிலும், எப்போது என்ன உண்ண வேண்டும், தின்ன வேண்டுமென்பதில் இவை பெரும்பங்கு வகிக்கின்றன. குடலுக்குள் வாழும் இவை, இரத்தத்திலிருக்கும் நியூட்ரான்கள் வாயிலாக மூளைக்குச் சமிக்கை அனுப்புகின்றன. அதற்கேற்றாற்போல மூளையானது செயற்படுகின்றது, ஆகையினால்தான் இவை இரண்டாவது மூளை எனப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, மாவுச்சத்து உண்டு வாழும் நுண்ணுயிரிகள் நமக்குள் வெகுவாக இருந்து, அவற்றுக்கான உணவுத் தட்டுப்பாடு நேரும் போது அவை மீண்டும் மீண்டும் மாவுப்பொருட்களையே உண்ணச் சமிக்கைகளை அனுப்பும்; மூளையும் திரும்பத் திரும்ப மாவுச்சத்துப் பொருட்கள் உண்ணுவதையே தூண்டிக் கொண்டிருக்கும்.

மனிதனின் செயலாக்கத்துக்கும் உடற்கட்டமைப்புக்கும் தேவையான எல்லாச் சத்துகளையும், அதனதன் தேவைக்கொப்ப உட்கொண்டு வாழ்தலென்பது சமச்சீர்த் தன்மையை(balance) நிலைநிறுத்தும். அப்படியான சமச்சீர்த் தன்மைக்கும் உடலில் குடிகொண்டிருக்கும் நுண்ணுயிரிகளுக்கும் நேரடித் தொடர்பு உண்டு. நாம் குறிப்பிட்ட உணவுகளையே மீண்டும் மீண்டும் உண்ணத் தலைப்படும் போது, மற்ற சத்துகளைச் சார்ந்து வாழும் நுண்ணுயிர்க் குடும்பங்கள் அருகிப் போய், எஞ்சியிருக்கும் நுண்ணுயிர்க் குடும்பங்களின் ஆதிக்கம் மேலோங்க, அவற்றுக்குப் பணிந்து அவற்றுக்கு ஏதுவான உணவுகளை உண்ணவே மூளை தூண்டும். இப்படித்தான், மனிதனுக்கு உணவின்பாற்பட்டு விருப்பு வெறுப்புகள் ஏற்பட்டு, சமச்சீரின்மையை உண்டாக்கி, நோய்க்கூறுகளாகவும் குறைபாடுகளாகவும் வடிவெடுக்கச் செய்கின்றது நம் உடலின் நுண்ணுயிர்க்குடும்ப அமைப்பு.

பலதரப்பட்ட நுண்ணுயிர்க் குடும்பங்களின் பரவலாக்கமும் நம்முள் குடிகொள்ள, நாம் என்ன செய்யலாம்? இலை, தழை, பூ, காய்கனிகள், விதைகள், கொட்டைகள், தண்டுகள் முதலான தாவரத்தின் நேரடி உள்ளீட்டினை யாதொரு வேதிவினைக்கும் ஆட்படா நிலையில்(unprocessed) வாங்கி, தழைதாம்பு(salad), பொரியல், அவியல் என அதன் சத்தினைச் சிதைக்காத வண்ணம் வெகுவாகச் சமைத்துத் தின்னலாம். அப்படி உட்கொள்ளும் போது, இல்லாத நுண்ணுயிர்க் குடும்பங்களும் நம்முள் குடிகொள்ள ஏதுவாகும். நம் மனத்திண்மையும் செயலாற்று திறனும் வலுப்படும். சத்தின்மை காரணமாக ஏற்பட்டிருக்கின்ற நோய்க்கூறுகளும் குறைபாட்டுக்கூறுகளும் படிப்படியாக இல்லாது போகும். ஒரேவிதமான காய்கனிகள் உட்கொள்ளப்படுவதும் தவிர்த்தல் நன்று. தாவரப் பொருட்களேயானாலும், அவற்றை மாற்றி மாற்றியும், பருவகாலக் காய்கனிகளாகவும், உள்ளூரில் விளைந்தவற்றுக்கு முதலிடமாகவும் அமைத்துக் கொள்தல் மேம்பட்ட பயனைக் கொடுக்கும்.

மாந்தனின் இரண்டாவது மூளையான நுண்ணுயிர்க் கட்டமைப்பு(human microbiota)க்கு ஏதுவாக, தாவரப்பொருட்களைக் கொண்டு விதவிதமாகச் செய்து தின்ன நமக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்புகள் எண்ணற்றவை. ஒருவருக்கு நுண்ணுயிரிகளின் அவசியமும் சமையற்கலை நாட்டமும் இருந்தாலே போதும், படைப்பூக்கம் தானாய் வந்து சேர்ந்து விடும். எடுத்துக்காட்டுக்கு, சோம்புச் செடி, கிளைக்கோசு குழம்பின் செய்முறையானது இங்கே இடம் பிடிக்கின்றது.

ஒரு தூர் சோம்பு (fennel plant), ஆறு அல்லது பத்து வரையிலான கிளைக்கோசு(brussels sprouts) எடுத்துக் கொண்டு, சோம்புத் தூரினை சிறுகச்சிறுகவும், கிளைக்கோசினை குறுக்கு வெட்டாக இரண்டாகவும் வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வாணலியைச் சூடாக்கி, தேவையான அளவு ஆலிவ் எண்ணெய் ஊற்றிச் சூடானதும், கடுகு, சீரகம், வெந்தயம், தேவையான அளவு வெங்காயம், பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை முதலானவற்றை இட்டு வதக்கிக் கொள்க. பின்னர் நறுக்கி வைத்திருந்த தக்காளியையும், சோம்புத் தூர் நறுக்குகளையும் இட்டு, பச்சை மணத்தை நாசியார்ந்து முகர்ந்து கொண்டே, பச்சைமணம் நீங்கும் வரையிலும் வதக்கிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு தேவையான அளவு நீர் ஊற்றிக் கொதி வந்தவுடன், மஞ்சத்தூள், கொத்துமல்லித் தூள், மசாலாத் தூள், கடலுப்பு ஆகியவற்றைத் தேவையான அளவு கலந்து கொதி விட வேண்டும். நீர் சற்றுக் கெட்டிப்படுவதற்காக, கொஞ்சம் வறுத்தகடலையை அரைத்து உலர்மாவாக்கிக் கலந்து கொள்ள வேண்டும். கடைசியாக குறுக்கு வெட்டில் வகிர்ந்து வைத்திருக்கும் கிளைக்கோசினையும் போட்டு அவை அரைவேக்காடு மட்டுமே காணுமளவுக்கு வைத்திருந்து, அடுப்பை அணைத்து விட வேண்டும். கொத்துமல்லித் தழைகளை மேலாக இட்டுச் சற்று மூடி வைத்திருக்க, சோம்பு கிளைக்கோசு குழம்பு புசிக்க நமக்கும் நேரம் வந்திருக்கும்.

நன்றி: தென்றல்முல்லை