7/12/2022

திமிர்

luxury: the state of great comfort and extravagant living.

ஆடம்பரம்னா என்ன? விலை உயர்ந்த கார், ஆடை, ஆபரணங்கள் சூழ் வாழ்வு. அப்படின்னு நினைச்சிருந்தா, அது தவறு. வசதிகளுடனும் பொது எல்லைக்கோடுகளுக்கு அப்பாற்பட்ட வாழ்வுமுறையும் என்பதுதான் ஆடம்பரம்னு ஆக்சுஃபோர்ட் அகரமுதலி சொல்லுது. உண்மைதானே? எப்ப ஊருக்கு வந்தாலும் கோத்தகிரி மலைக்குச் செல்வது வாடிக்கை. அது நண்பர்களால் நமக்கு வாய்த்த கொடை. ஏதோவொரு காரணத்தால் பேருந்தில் பயணிப்பதும் அதுவாகவே நிகழ்ந்து விடுகின்றது. இம்முறையும் அப்படியே. கீழிறங்கும் தருணத்தில்தான் நண்பரின் அண்டைவீட்டுக்காரர் ஒருவர் இறந்து விட்ட தகவல். ஆகவே அவர் அந்த இழவுவீட்டுக்குச் சென்றாக வேண்டிய கட்டாயம். தன்னுடன் வருமாறும், பதினைந்தே நிமிடங்கள் இருந்து விட்டு வந்துவிடலாமென்றும் சொன்னார். நான், இல்லை, பஸ்ஸில் சென்று விடுகின்றேனெனச் சொல்ல, அவருக்கு வருத்தம். அங்கிருந்த வந்திருப்பவனைப் பஸ்ஸில் செல்ல அனுமதிப்பதா? நான் சொன்னேன், ஏற்கனவே பலமுறை பஸ்ஸில் சென்றாகிற்று. இதுவொன்றும் எனக்குப் புதிதல்லவென.

காரமடை to காந்திபுரம் மத்தியப் பேருந்து நிலையம். காரமடையில் ஏறினேன். ஆகாசத்தில் பயணிப்பது போலவும், சாலையில் உடன் பயணிப்பவர்களெல்லாம் வறிய பிச்சைக்காரர்கள் போலவும் உணர்ந்தேன். ஆமாம், BMW,பென்ஸ், ஸ்கோடா என எல்லா வண்டிளும் சின்னஞ்சிறுசுகளாகத் தெரிந்தன. காரணம், காரில் உட்கார்ந்து பயணிக்கும் போது உயரம் குறைவான நிலையில், சம உயரத்தில் ஏராளமான மோட்டார் பைக்குகள், இதரக் கார்கள், குண்டுகள் குழிகள் என எல்லாவற்றோடும் பயணிப்பதுதான் காரணம். பஸ்ஸில் பயணிக்கும் போது, அவை எதுவும் தெரிவதில்லை. மேற்குப்புறமாகத் தெரியும் மலைகளை ஏகாந்தமாகத் தரிசிக்கலாம். முன்னே பார்க்கின் சில பல மைல்கள் தொலைவுக்கும் பார்வை கிட்டும், தனிப்பட்ட பயணம். எட்டப்பார்வையில் ஒரு செருக்கு. இஃகிஃகி, 21 ருவா டிக்கட். முப்பது ரூபாய் கொடுத்தேன், பத்து ருவா நோட்டைத் திருப்பிக் கொடுத்துச் செருப்பால் அடித்தான் அந்தப் பையன். ஆகமொத்தம் இரவது ருவா டிக்கெட்ல என்னாவொரு திமிர்த்தனமான பயணம்?! பப்ளிக் பஸ்ல போங்கடே!



No comments: