7/22/2022

காம்பிளி நதிக்கரையில்

அண்மையில் ஊருக்குச் சென்று திரும்பியதில் ஏற்பட்ட அனுபவங்களை மூத்த மகரிடம் சொல்லிக் கொண்டிருந்த வேளையில், திடீரெனக் கூச்சலிட்டார். ‘அய்யே, இது அப்பட்டமான கிரைம். அப்படி, இப்படி..’யென பதறத் துவங்கினார் மகர்.

என் பாட்டனார், அவர்தம் மாமா மகளைத் திருமணம் செய்து கொண்டதாக நானும் அம்மாவும் உரையாடிக் கொண்டிருந்தமை குறித்துப் பேசிய போதுதான் இது நடந்தது. யாரெல்லாம் ஒரே தம்பதியினரைப் பாட்டன்/பாட்டியாகக் கொண்டுள்ளனரோ அவர்களெல்லாம் ஆள்வியர், கசின் என்பது ஆங்கிலமொழியில். அப்படியான உறவுமுறையினர் திருமணம் செய்து கொள்வது அமெரிக்காவிலுள்ள 50 மாகாணங்களுள் கிட்டத்தட்ட 24 மாகாணங்களில் சட்டப்படிக் குற்றம். ஏழு மாகாணங்களில் நிபந்தனைக்குட்பட்டது. எஞ்சியவற்றுள் பண்பாட்டுத் தளத்தில் பிற்போக்கானது, ஆனால் சட்டத்தில் இடமுண்டு. இதுதான் மகரின் பதற்றத்திற்கான காரணம்.

தாயகத்துப் பண்பாடு, மாமா, சின்னம்மா, பெரியம்மா, சித்தப்பா, பெரியப்பா, அத்தை போன்றோர் குறித்தெல்லாம் பேசி, அவர்களுடைய பிள்ளைகளில் எவையெல்லாம் திருமணம் செய்யக்கூடிய முறைகள் என்பது பற்றியும் பேசிக் கொண்டிருந்த வேளையில்தாம், உற்றார் உறவினரெல்லாம் எப்படிப் பின்னிப் பிணைந்த சமூகமாக இருந்தது, என் தனிப்பட்ட அனுபவம் என்ன என்பதைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம். அப்பாவுக்கும் மகளுக்கும் இடையேயான பேச்சு தங்குதடையின்றிச் சென்று கொண்டிருந்ததற்கு வேறொரு முக்கியமான காரணமும் உண்டு. ஆமாம், அம்மா என்னும் பெருங்கேரக்டர் தாயகம் சென்றிருப்பதுதான் அந்தப் பரிபூரணச் சலுகையை எங்களுக்கு அளித்திருக்கின்றது. இஃகிஃகி.

1980களில் பள்ளிகள் பெரும்பாலும் விடுமுறையில்தான் இருக்கும். ஈழப்போராட்டம் முனைப்பாக நிகழ்ந்து கொண்டிருந்தகாலமது. பாட்டி வீடு, சின்னம்மா வீடு, பெரியம்மா வீடுகளில்தான் எப்போதும். அப்படியான காலகட்டத்தில் காம்பளிநதிக்கரையில் ஓடித்திரிந்திருந்தோம். எப்படியெல்லாம் திளைத்திருந்தோமென்பதையும் மகளார் விரும்பிக் கேட்டுக் கொண்டிருந்தார்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகருக்கு தென்மேற்கே இருப்பதுதான் அனுப்பபட்டி எனும் சிற்றூர். வேளாண்மை என்பதுதாம் பிரதானம். மாதம் மும்மாரி எனச் சொல்லப்பட்ட பூமியதுவல்லவா? மானாவாரியாகக் கூட பருத்தி விளைவித்து, நூற்பாலைகளுக்கு அனுப்புவார்கள். அப்படியான காடுகளில் இருந்துதான் புறப்படுகின்றாள் காம்பிளி. அனுப்பபட்டியில் உயிர்த்து, வெங்கட்டாபுரம் வழியாக பல்லடம் உடுமலை சாலையை இடைமறித்துக் கொண்டு புள்ளியப்பம் பாளையம், கரிசல்மடை, எலவந்தி, புத்தரச்சல், நிழலி ஆகிய ஊர்களில் வழியாகக் கிழக்கி நோக்கி ஓடி, வட்டமலைக் கரை அணையை அடைகின்றாள் காம்பிளி. அந்த அணையை நிரப்பிய பின்னாக, மீண்டும் கிழக்கு நோக்கிப் புறப்பட்டு  ஈரோடு மாவட்டம் மயில்ரங்கம் எனும் இடத்தில் அமராவதி ஆற்றோடு ஐக்கியமாகி விடுகின்றாள் காம்பிளி. 

உப்பாறும் காம்பிளியும் கசின்முறையினர்தாம். உப்பாறு என்பதும் கோவை மாவட்டம் செஞ்சேரிமலைக்கு மேற்கான அரசூர்க் காடுகளில் இருந்து புறப்பட்டு, சலவநாயக்கன்பட்டி, சிந்திலுப்பு, அம்மாபட்டி, பெரியபட்டி, பூளவாடி வழியாக உப்பாறு அணையைச் சென்று சேரும். பின்னர் அணையை நிரப்பியான பிறகு, மீண்டும் காடுகளினூடாக ஓடி தாராபுரத்தின் புறநகர்ப்பகுதியில் ஓடும் அமராவதியில் ஐக்கியமாகிவிடும். வாகத்தொழுவு வேலூர் உயர்நிலைப் பள்ளி விழாவில் ஆசிரியர் திருமிகு இந்திராணி அவர்கள் குறிப்பிட்டார், “பழமைபேசி உப்பாற்றங்கரைக் கள்ளிப்பழத்தைத் தின்று வளர்ந்த பிள்ளை, என் மாணவன்”. அந்த அளவுக்கு உப்பாற்றங்கரையோடும் நமக்குத் தொடர்புண்டு.

உப்பாற்றங்கரையிலிருந்து காம்பிளியாற்றங்கரைக்கு நேரிடையாகச் செல்லும் பேருந்து கூட இருந்தது அந்தக் காலகட்டத்தில். முதலில் ’கல்யாணி’ எனும் பெயரில் வா.வேலூர், மூங்கத்தொழுவுப் பிரிவு, செஞ்சேரிமலை, கம்மாளபட்டி, ஜல்லிபட்டி, பல்லடம், திருப்பூர் வழித்தடத்தில் ஓடிக் கொண்டிருந்தது. பின்னர், ’ஸ்ரீபதி’ எனும் பெயரில் நெகமம், வீதம்பட்டி, வேலூர், மூங்கத்தொழுவுப் பிரிவு, செஞ்சேரிமலை, கம்மாளபட்டி, ஜல்லிபட்டி, பல்லடம், திருப்பூர் வழித்தடத்தில் ஓடிக் கொண்டிருந்தது. தற்போதைய நிலை நாமறியோம் பராபரமே.

வாழ்ந்திருந்த சலவநாயக்கன்பட்டிப் புதூர் உப்பாற்றங்கரையில் நின்று இந்தப் பேருந்தில் ஏறி, ஒரு ரூபாய் எண்பது காசுகள் கொடுத்தால் இரம்யமான பயணம் தொடரும். மனம் குதூகலத்தில் பரபரத்துக் கிடக்கும். உள்ளார்ந்த கிராமங்கள், மிளகாய்க் காடுகள், மக்காச்சோளக்காடுகள், நூலுக்காகப் பாவுணர்த்தும் கம்மாளபட்டி என எல்லாவற்றையும் மெதுவாய்க் கடந்து வந்து பின்னர், உடுமலை - பல்லடம் சாலை வந்தானதும் வண்டி பெருவேகம் எடுக்கும். நம் மனமும்தான். கேத்தனூர் தாண்டியானதுமே எழுந்து படிக்கருகே வந்து நின்று கொள்வோம். நாம் அடிக்கடி செல்வதாலேயும், திருப்பூர் பருத்தி மார்க்கெட்டுக்கு அடிக்கடி செல்பவர் அப்பா என்பதாலேயும் நமக்கான விசேட கவனிப்புகளும் உண்டு. மிகச்சரியாக காம்பிளி நதிக்கரையில் வண்டி நிற்கும். ஆமாம், அப்போதெல்லாம் புள்ளியப்பம் பாளையத்துக்கான பேருந்து நிற்குமிடம் அதுவாகத்தான் இருந்தது. பின்னாளில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாகப் பிரிவுச் சாலைக்கு இடம் மாற்றப்பட்டு விட்டதாகச் சொன்னார்கள். 

கரையில் இறக்கிவிடப்பட்டால், டில்லிமுள் மரங்கள் நெருக்கமாக மண்டிக் கிடக்கும். அதனூடாக உட்புகுந்து ஆற்றில் கால்பதித்து, சிலுசிலுவென நீரோடும் அந்தப் பாறைகளின் மீதாகச் சற்று நடந்து போய் மேடேறினால் ஊருக்குச் செல்லும் பாதை வந்து விடும். யார் எதிர்ப்பட்டாலும், ’இப்போதுதான் வருகின்றாயா? ஊரில் எல்லாரும் நலமா? மழையா?’ என்று விசாரிப்பார்கள். அந்த அளவுக்கு ஊரில் இருப்போர் எல்லாருக்கும் தெரிந்திருக்கும். ஊரில் இருக்கும் எந்த வீட்டிற்கு யார் வந்தாலும், அவர்கள் ஊரின் விருந்திநர் என்றே பார்க்கப்பட்ட காலமது. சாலையை அடைந்ததும், சாலை வழியாகச் சென்று ஊர்த்தலைவாசலான விநாயகர் கோயிலடி வழியாகவும் செல்லலாம். அல்லது சாலையை ஒட்டியே உட்புகுந்து குறுக்காகச் சென்றாலும் பெரியம்மா வீடு வந்து விடும். பேரானந்தமாக இருக்கும்.

ஊருக்குள் இருக்கும் எல்லா வீடுகளும் நம் வீடுகளே. எந்த வீட்டுக்கும் போகலாம். எல்லா வீடுகளிலும், வீட்டுக்கு மூன்று முதல் எட்டுப் பேர் வரையிலும் பிள்ளைகள் இருப்பார்கள். ஒரு கணக்குக்காக, 25 வீடுகள், வீட்டுக்கு மூன்று பிள்ளைகள் என வைத்துக் கொண்டாலும், குறைந்தது 75 பிள்ளைகள் கூடக்குறைய சம வயதில் இருந்தனர். எப்படி இருந்திருக்குமென நினைத்துப் பாருங்கள். ஜெகஜோதியாக இருக்கும். எந்நேரமும் விளையாட்டு, வம்புகள், அளவளாவலென ஆர்ப்பரிக்கும் காம்பிளிநதிக்கரையில்.

(தொடரும்)


No comments: