7/31/2022

உறவுச்சிறகுகளால் பறந்திருப்போம்

 


கோவை விமானநிலையத்தில் விமானம் தரையிலிருந்து எழும்பும் அந்த விநாடியில்தான் பகிர்ந்தேன். சரியாக இருபது நாட்களுக்கு முன்பாக ஒரு கவிதைத் துணுக்கினை எழுதிப் பகிர்ந்திருந்தேன். அது இப்படியாக முடியும், 

சென்றமுறை வந்திருந்தேன்

சிலபலரை இழந்திருந்தேன்

இம்முறையும் வந்திருக்கின்றேன்

சிலபலரை இழந்திருக்கின்றேன்

அடுத்தமுறை?

வருவேனே தெரியாது

உதிரும் சிறகுகள்

இருக்கும்வரையிலும்

பறந்திருப்போம் உறவுச்சிறகுகளால்!

இன்று சரியாக இருபதாவது நாள். பலரை இழந்திருக்கின்றேன். இழப்புகளின் வேகம் கூடிக்கொண்டே இருப்பதாய் உணர்கின்றேன். ஆண்டுக்கொருமுறை ஊருக்குச் செல்பவன், இனி ஆறுமாதங்களுக்கொருமுறை சென்று வந்தாலென்ன என யோசிக்கத் தலைப்படுகின்றேன். தேடித்தேடி மக்களைச் சந்திக்க விரும்புகின்றேன்.

இந்திராணி அக்கா. நண்பர் ஆரூரன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கத்தான் ‘ஊர்ப்பழமை’ எனும் நூல் வெளியிடப்பட்டது. பலரது பாராட்டுதலுக்கும் ஆட்பட்ட நூல். வெளியீட்டு விழாவுக்கு யாரை அழைக்க வேண்டுமெனக் கேட்டார்கள். சட்டென நினைவுக்கு வந்தவர்கள் மணிவாத்தியாரும் இந்திராணி அக்காவும்தான். முதன்முதலின் என் பெயரை எழுதிப் பழக்கியவர் மணி வாத்தியார். முதலாம் வகுப்பில் சேர்த்துப் பதிந்தவரும் வா.வேலூர்ப் பள்ளியின் தலைமை ஆசிரியரான அவர்தாம். இரண்டாம் வகுப்பிலேயே ஆங்கிலப்பாடம். அப்போதெல்லாம் ஆங்கிலம் என்பது மூன்றாம் வகுப்புக்குப் பின்னர்தாம் பாடத்திட்டத்திலேயே வரும். ஆனால் இவர் இரண்டாம் வகுப்பிலேயே எங்களுக்கு ஆங்கில ஆசிரியர். அதற்கும் மேற்பட்டு ஊரார் அனைவருக்கும் குடும்ப நண்பர். இளைஞர். திருமணமாகாதவர். இவர்மேல் மோகம் கொள்ளாத இளம்பெண்கள் இருந்திருக்க முடியாது. இப்படி எழுதுவதற்கு மன்னிக்கவும். ஆனால் அதுதான் அன்றைய நாட்டுப்புற மனநிலை. காரணம், புற அழகு மட்டுமேயல்ல. கலகலவெனப் பேசுவார். சிரிப்பார். யாரும் அணுகக்கூடிய வகையிலே இருப்பார். ஆறாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும் போது இவருக்குத் திருமணம். யார் மணமகள்? அவர் எப்படி இருப்பார்? சக மாணவர்களுக்குள் பரபரப்பு. என்ன ஆச்சர்யம்? அவரே எங்களுக்கு அறிவியல் ஆசிரியராகவும் வந்தார். தோழியாக, அக்காவாகப் பழகினார். அதற்குப் பின் பல ஊர்கள், இடங்கள், நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து வந்திருந்தாலும் கூட, அதே மாறாப்பற்றுடன் வாழ்வில் இடம் பெற்றிருந்தார். இன்று இழந்திருக்கின்றேன். பலமுறை அவரை வீட்டுக்குச் சென்று சந்தித்திருக்கின்றேன். விழாக்களுக்கு வந்திருக்கின்றார். இழப்புத்தான். ஆனாலும் கொண்டாடுகின்றேன். நினைவுகளை!

அலெக்ஸ். நண்பர். அன்றாடமும் இணையத்தினூடாக அளவளாவுவோம். மாதமொருமுறையாவது அழைத்துப் பேசிக் கொள்வோம். பத்து நிமிடங்களாவது பேசிவிடுங்கள். அந்த நினைவிலேயே நான் அடுத்த ஒரு மாதம் முழுதும் ஓட்டிவிடுவேனென்று மனம் திறந்து சொல்வார். மருத்துவமனைக்குச் சென்று பார்த்தேன். வியப்பில் மகிழ்ந்து வரவேற்றார், ‘இவன் எப்படி நேரில் இங்கே வந்திருக்கின்றான்?’ என நினைத்திருக்க வேண்டும். பரபரத்துக் கிடந்தார். அருகில் இருப்பவர்களிடம், ‘பழமைபேசிக்கு உடனே காஃபி வாங்கி வந்து கொடுங்கள்’ என்றார். எல்லாமுமே சைகை மொழியில்தாம். பார்க்க வந்த மருமகளிடம், ‘நீங்கள் யார்? என் மருமகளைப் பார்த்தால் வரச் சொல்லுங்கள்’ எனச் சொல்லி இருக்கின்றார். அந்த அளவுக்கு நினைவு தப்பி இருந்தவர், அழைத்துச் சென்ற மருத்துவர் சோமு அவர்களையும் என்னையும் கண்டு, முழு உணர்வும் பெற்று நடந்து செல்ல வேண்டுமென்கின்றார். புத்துயிர் பெற்றவரானார். அடுத்த வாரத்திலேயே விடை பெற்றுக் கொண்டார். இழப்புத்தான். ஆனாலும் கொண்டாடுகின்றேன். நினைவுகளை!

லெட்சுமண வாத்தியார். வா.வேலூர்த் தலைவாசல் பரபரத்துக் கிடக்கும். பெரிய ஊர். அண்மையில் இருக்கும் வாகத்தொழுவு, சங்கமநாயக்கன்பாளையம், மொகானூர், சலவநாயக்கன்பட்டி, சலவநாயக்கன்பட்டிப் புதூர், வீதம்பட்டி, பொம்மநாயக்கன்பட்டி எனப் பல ஊர்களுக்கும் இதுதான் பிரதானம். கரண்ட்பில் கட்ட, பள்ளிகளுக்கு வர, சந்தைக்கு வர, ஓட்டுப் போட, பஞ்சாயத்து ஆபிசுக்கு வர, மாட்டாஸ்பத்திருக்கு வர என எல்லாவற்றுக்கும் இங்குதான் வந்தாக வேண்டும். அப்படியான தலைவாசலில் ஓங்கி வளர்ந்த அரசமரங்கள் பல உண்டு. அவற்றின் நிழலிலே, நிழல்படிந்த திடலிலே எப்போதும் குறைந்தது ஐம்பது சிறார்களாவது திடலிலே விளையாடிக் கொண்டிருப்போம். குடிதண்ணீருக்கு சங்கமநாயக்கன் பாளையத்துக்கருகே இருக்கின்ற அய்யர் தோட்டத்துக்குத்தான் போயாக வேண்டும். மூத்த அண்ணன், வயது 13, 14 இருக்கும். சைக்கிளில் சென்று சைடுக்கு ஒன்றாக இருகுடங்களிலும் தண்ணீரோடு வந்து கொண்டிருந்தார். எதிர்ப்பட்ட லெட்சுமண வாத்தியார் அவர்கள் அண்ணனை நிறுத்தி, ‘பிரபாகர், எங்கிருந்து தண்ணி கொண்ட்டு வந்திருக்கிற?’. அண்ணனுக்கு பதில் சொல்ல நா வரவில்லை. பிதற்றிக் கொண்டிருக்கின்றார். அருகில் விளையாடிக் கொண்டிருந்த நாங்களெல்லாம் அருகில் ஓடிப் போகின்றோம். லெட்சுமண வாத்தியார் அண்ணனுக்கு ஆசிரியர். அதாவது எங்களுக்கெல்லாம் தமிழாசிரியர். ‘என்னடா? தண்ணி எங்கிருந்து கொண்ட்டு வர்றன்னுதான கேக்குறன்?’. அண்ணன் வெலவெலத்துப் போய் சொன்னார். ‘சார், நம்ம தோட்டத்துல இருந்துதான் சார் கொண்ட்டு வர்றன்’. ‘நம்ம தோட்டம்னா? எனக்கேதுடா தோட்டம்?’ என்கின்றார் ஆசிரியர். இஃகிஃகி. விசியமென்னவென்றால், லெட்சுமண வாத்தியார், தலைவாசலிலே இருக்கும் இராமய்யர் வீட்டு மருமகனும் கூட. ஆனால் அய்யர் தோட்டம் என்பது பெயர் மட்டுமே. தோட்டம் யாருக்கோ சொந்தமானது. அவரிடமே அய்யர் என உச்சரிக்க அண்ணனுக்குப் பயம். எனக்கும் உடன் விளையாடிக் கொண்டிருந்த பையன்களுக்கும் விளங்கி விட்டது பிரச்சினை. நான் சொன்னேன், ‘சார், எங்கண்ணன் உங்களப் பாத்து பயப்பட்றான் சார். நல்ல தண்ணிக் கெணத்து மோட்டார் காயல் கருகிப் போச்சி சார். அதான் அவன் அய்யர் தோட்டத்துக்குப் போயி தண்ணி எடுத்துட்டு வந்துருக்கான் சார்’. சொல்லி முடிக்கும் முன்பாகவே சைக்கிளை எடுத்துக் கொண்டு சிட்டெனப் பறந்து விட்டிருந்தார் அண்ணன். தமிழாசிரியரும் நேற்று மறைந்து விட்டார். இழப்புத்தான். ஆனாலும் கொண்டாடுகின்றேன். நினைவுகளை!

நண்பர் ஆறு. அமெரிக்கத் தமிழ் வானொலி நிலைய நிறுவனர். நேரில் சந்தித்திருக்கின்றோம். பலமுறை உரையாடி இருக்கின்றோம். என்றாலும் கூட அந்த நாளை என்னால் மறக்க இயலவில்லை. வானொலி நிலைய நிகழ்ச்சி. பொங்கல் குறித்த கிராமிய நினைவுகளை நான் பகிர்ந்து கொண்டேன். ஒருமணி நேர நிகழ்ச்சி. நிகழ்ச்சி முடிவுற்றதும் இவரும் நானும் உரையாடியது இரண்டு மணி நேரங்கள். எப்படி பழமைபேசி, இவற்றையெல்லாம் துல்லியமாக நினைவிற்கொண்டு சொல்ல முடிகின்றது? அப்படி இப்படியென மனமார்ந்து பாராட்டியதோடு, பல்வேறு வினாக்களையும் தொடுத்து அறிதலைத் தீட்டிக் கொண்டே இருந்தார். பலமுறை மகளாரின் வயலின் நிகழ்ச்சிக்காகத் தொடர்பு கொண்டவர், ஒருமுறையேனும் அவரிடம் நேரம் வாங்கிக் கொடுங்கள் என வேண்டிக் கொண்டார். அவரது ஆசையை நான் நிறைவேற்றிக் கொடுக்காமலே இருந்து விட்டேன். குற்றவுணர்வில் தவிக்கின்றேன். கடந்தவாரம் மறைந்து விட்டார். ஆனாலும் கொண்டாடுகின்றேன். நினைவுகளை!

நிலையாமை என்பது நிரந்தரம். நாம்தாம் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். குறிப்பாக சம வயதுடைய, மேற்பட்ட வயதுடைய மாந்தர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வாழ்தல் அவசியமானது. விடைபெற்றுக் கொண்டோருக்கு மலர்வணக்கங்கள். Life is too short not to celebrate nice moments!


No comments: