7/12/2022

வாழ்வின் பயன்

 

ஒருநாள் மாலைப் பொழுது. பார்ப்பதற்காக நண்பர் வந்திருந்தார். மிகவும் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் பேசினார். பேசிக்கொண்ட தனிப்பட்ட தகவல்களையெல்லாம் பொதுவில் வைக்க முடியாது. ஆனால் பொதுப்படையாக எங்கள் உரையாடல் வளமானதாக இருந்தது. வினா விடையென்ற ரீதியில் அமைந்திருந்தது, இராம்நகர் தெருக்களில் அந்த இதமான காற்றை அனுபவித்துக் கொண்டேவும்.

வாழ்வின் பயன் என்பதென்ன? மகிழ்வாக இருத்தல் என்பதாகத்தானே இருக்க முடியும்? எல்லாமும் அமையப் பெற்றிருந்தால்தான் ஒருவரால் கூடுமான வரையிலும் மகிழ்வாக இருக்க முடியும். அல்லாவிடில், பதற்றம், வலி, அழுத்தம் என்பதாக அதன் இருப்புக்குப் பங்கம் ஏற்பட்டு விடும். அந்த மகிழ்வை எப்படி அடைவது?

காலையில் ஐந்து மணிக்கு எழுந்து இரவு பத்து மணி வரையிலும் உழைப்பது. உழைப்பில் ஈட்டிய பணத்தை நல்லவிதமாக முதலீடு செய்வது. அந்த முதலீட்டின்வழிக் கிடைத்த பணத்தை மறுமுதலீடு செய்வது. இப்படிச் செய்யும் போது, நமக்கான சொத்துகள் பெருகிக் கொண்டே இருப்பதை நம்மால் காண முடிகின்றது. இன்பம் கொள்கின்றோம். மகிழ்ச்சியாக இருக்கின்றது. அந்தப் பணத்தைக் கொண்டேவும் பிறருக்கு உதவவும் முடிகின்றது. இது போதும்தானே எனக்கு? இதற்கு மேல் வேறென்ன வேண்டிக் கிடக்கின்றது. நண்பர் வினவுகின்றார்.

அவரவர் வாழ்வின் பயனுக்கான வரையறையை அவரவர்தான் வகுத்துக் கொள்ள முடியும். பிறரின் வாழ்வை எடை போடுவதற்கு நான் யார்? ஆனாலும் அவர் நம் மீது வைத்திருக்கும் அன்பின் காரணமாகக் கேட்டுவிட்டார். சொல்லித்தானே ஆக வேண்டும்?

நான் சொன்னேன், “நாலும் கலந்ததுதான் வாழ்க்கை. ஏதோவொன்றின் பேரில் மிகையான நேரத்தைச் செலவிட்டு விடுகின்றோம். பின்னாளில் ஆசை பிறக்கின்றது. எடுத்துக்காட்டாக, காலார மலை ஏற வேண்டும் போல இருக்கின்றது. உடல் ஒத்துழைக்க வேண்டுமே? முடியாமற்போவதற்கான வாய்ப்புகள் கூடுதல். ஆகவே அந்தந்த வயதில் செய்ய வேண்டியதைச் செய்துவிடல் நன்று. எல்லாமுமே ஒரு பேலன்சிங் ஏக்ட்தாம்”. சரியெனச் செவிமடுத்துக் கொண்டு, அமெரிக்கா சுற்றிப் பார்க்க எவ்வளவு செலவாகுமென்றார். நான் ஏதோ பதில் உரைத்தேன்.

பொதுவாக, இந்திய, தமிழகப் பண்பாடென்பது பொருள்முதல்வாதத்தின் அடிப்படையில் அமைந்தது. ஆனால், அமெரிக்காவைப் பார்த்து முதலாளித்துவ ஏதேச்சதிகாரமெனக் கூவுவர். இந்தச் சிக்கல் பேசியவர்களில் பெரும்பாலானோர்க்கும் இருப்பதைக் காணமுடிகின்றது. பண்பாட்டின் இத்தகைய அடிப்படையைக் கட்டமைப்பதே, பண்பாட்டைப் பேண வேண்டிய சமயவாதிகள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் போன்றவர்கள்தாம். அவர்கள், ‘கல்ட்’ என்பதை எல்லாத்தளங்களிலும் கட்டமைத்துக் கொண்டே இருக்கின்றனர். சாமான்யர்கள் எல்லாம் தம் உழைப்பை, பணத்தை இந்த கல்ட் தலைவர்களுக்குக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர். கூடுதல் பணத்தைக் கொடுப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கின்றனர். நண்பர் பூபதி சொன்னார், “ரெடி கேஷுடன் வருபவனுக்கு வியாபாரம் முடியாது. ஆனால் பல கோடிகள் கடனில் மூழ்கிக் கொண்டிருப்பவனுக்கு இடம் விற்பனையாகும். காரணம், முன்னையவன் வந்திருப்பது சாதா கார், பின்னையவன் வந்திருப்பது உயர்ரக வெளிநாட்டுக் கார்!”. அமெரிக்காவில் இது சாத்தியமா? ஆட்களைப் பார்த்தோ, புறவுலகைப் பார்த்தோ வணிகம் இடம் பெறுவதில்லை. எல்லாமும் தரவுகளை வைத்துத்தான். தரவுக்கப்பாற்பட்டு வணிகம் இடம் பெற்றால், அது சட்டப்படிக் குற்றம். ஒரு வீடு விற்பனைக்கு வருகின்றது. யார் அதிகம் விலை வைத்திருக்கின்றனர் என்பதோடு கிரிடிட் ஹிஸ்டரி/அல்லது முன்பணம் என்பதுதான் தீர்மானிக்கும்.

அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள் இலார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு! இதை விடச் சுருக்கமாக சொல்லி விட முடியாது. பொருள் இல்லாவிடில் புறவாழ்க்கை இல்லை. ஆனால் அதைப் போன்றே அருள் இல்லாதவிடத்து அகமே இல்லாமற்போகும். நம்மையொத்த மனிதர்களிடத்திலே நேரம் செலவு செய்யவில்லை. அணுக்கம் போற்றவில்லை. பிறகெப்படி அகம்(மனநலம்) அமையும்? ஆகவே நாலும் கலந்ததுதான் வாழ்வின் பயனை நமக்கு ஈட்டித்தரும்.

பொருள், மெய்நலம், மனநலம், உறவுநலம், வினைநலம், தனிப்பட்ட அந்தரங்கம் என ஆறும் அமையப் பெற்றதுதான் சிறப்பாக இருக்க முடியும். ஏககாலத்தில்(concurrently), அதாவது, இவையனைத்திற்கும் ஒருங்கே கவனம் செலுத்தியாக வேண்டியது அவசியம். எடுத்துக்காட்டாக, அறுபது வயதுக்கப்புறம், சொத்துச் சேர்த்து பெரிய ஆள் ஆனதற்கப்புறம், உறவுக்காரர்களைப் பார்த்துக் கொள்ளலாமென இருந்துவிட முடியுமா? அந்தக் காலகட்டத்தில் பெரும்பாலானோர் போய்ச் சேர்ந்திருப்பர். இஃகிஃகி, எல்லாமும் அப்போதைக்கப்போது சமச்சீரோடு கொண்டு போக வேண்டும். அல்லாவிடில் நம் மனமே நம்மைப் பதம் பார்க்கத் துவங்கி விடும், குற்றவுணர்வின் பொருட்டு!

No comments: