7/25/2022

காம்பிளி நதிக்கரையில் 4

 

நினைவடுக்குகளில் புகுந்து புகுந்து பின்னோக்கிப் போகின்றேன். புலப்பட்டு விட்டது. முதன்முதலில் எப்போது காம்பிளி நதிக்கரையைக் கண்டேன்? அப்பா அவர்கள் ஆண்டுதோறும் சபரிமலை செல்வது வழக்கம். நான் பிறப்பதற்கு முன்பிருந்தேவும். இன்னமும் கூட, நான் பிறந்த ஊரான அந்தியூரில் என்னை மணிகண்டன் என அழைப்போர் உண்டு. அதன் தாக்கத்தில் அண்ணன் அவர்களும் மாலையிட்டுக் கொண்டார். போதிய சாலை வசதிகள் இல்லை. காலார நடந்துதான் மலையேற்றம். சென்று வந்தவர்கள் விவரிக்கும் போது கலக்கமாக இருக்கும். அப்போதெல்லாம் மலைப்பயணம் என்பது துணிவுப்பயணமாக, சாகசப்பயணமாகக் கருதப்பட்டது. இவர் பதினேழு பதினெட்டு வயதுடைய இளைஞர். துணிந்து களத்தில் இறங்கி விட்டார். தன் சொந்த ஊரான புள்ளியப்பம் பாளையத்தில் சிறிய அளவில் வழிபாடு நடத்தும் ஆசை அவருக்கு. உடன் அழைத்துக் கொண்டு போனார்.

ஆள் அத்துவானம் இல்லாத ஒரு மேட்டில் பேருந்து நிற்கின்றது. இறங்குகின்றேன். காற்று உய் உய்யென அடித்துக் கொண்டிருக்கின்றது. சாலையைக் கடந்து ஒரு சிறுக்கால் ஒத்தையடிப் பாதைக்குள் அழைத்துச் செல்கின்றார். சாராயம் காய்ச்சுவதை வேடிக்கை பார்க்க அணிக்கடவுக்கும் சலவநாயக்கன் பட்டிப் புதூருக்கும் இடையிலான உப்பள்ளத்துக்குச் சென்ற அனுபவத்தை ஒத்திருந்தது. எதிரே ஓரிருவர் வந்து கொண்டிருந்தனர். ’சின்னம்மா பையன்’ என அறிமுகப்படுத்தி வைத்தார். காம்பிளியில் கால் வைத்தேன்.

அடுத்தடுத்த நாள். உப்பாற்றங்கரையிலும் அண்டைய காடுகளிலும் ஐயப்பனுக்கு மாலை தொடுக்கத் துளசி பறிக்கச் செல்வதென்பது நமக்கு வழமையான ஒன்று. அதேபாணியில் சகோதரன் பாபுவும் நானும் ஒரு துணிப்பையை எடுத்துக் கொண்டு கிளம்பிச் சென்றோம். மீண்டும் காம்பிளி நதிக்கரை, காடுகள். எங்கெங்கோ நுழைந்து பார்த்தோம். துளசிப்புதர்கள் மட்டும் கண்களுக்கு அகப்படவே இல்லை. வெறும் பையோடு திரும்பிச் செல்ல முடியாது. நதிக்கரையில் ஏராளமான மஞ்சணத்திகள் (ஆவரம்பூக்கள்) தென்பட்டன. பறிக்கலாமாயென்றார் உடன்வந்த பாபு அவர்கள். அம்மாவுக்குத் தெரிந்தால் தோலை உரித்து விடுவாரென்றேன். உங்க அம்மா ஊரில் அல்லவா இருக்கின்றாரென்றார். இஃகிஃகி. அதாவது, மாலை தொடுக்க இந்தப் பூக்கள் சரிவராது என்பது கருத்து. பிறகு, அங்கிருந்த பொன்னரளி, செவ்வரளிகளுடன் வீடு திரும்பினோம்.

ஓடைகளும், ஆற்றங்கரைகளும், நீர்நிலைகளும்தான் பல்லுயிர் ஓம்புதலுக்கான அடிப்படை. டார்வின் சொல்கின்றார், பரிணாமத்தின் தோற்றுவாய் நீர்நிலைகள். அங்கிருந்துதான் ஓரணு உயிரிகளிலிருந்து படிப்படியாக ஒவ்வோர் உயிரும் பரிணாமம் பெற்றுத் தோன்றின என்பது அவரது கருதுகோள். அப்படியானதும் இப்படியானதுமான ஆறுகளை, ஆற்றங்கரைகளைக் காப்பது நம் கடமைதானே? அப்பாவின் தாய், பாட்டி அவர்கள் சொல்வார், ’ஊரிலே நிறைய அன்னக்காவடிகள் இருந்தார்கள். அவர்களின் முழுநேர வேலையே குளம், குட்டைகளைப் பராமரிப்பதுதானாம். பசித்த நேரத்துக்கு ஊருக்குள் அன்னக்காவடிகளோடு வருவர். அவர்கள் இறைவனின் நேரடித் தூதர்களாகக் கருதப்பட்டனர். இப்படியான மரபில் திளைத்தவர்கள் நாம். என்ன செய்யலாம்?

நீர்நிலைகளின் மீது நாட்டம் கொள்ள வேண்டும். அதன் தோற்றம், இருப்பு, வரலாறு குறித்தெல்லாம் உணர்வு கொள்ள வேண்டும். அமெரிக்காவில் எங்கு சென்றாலும், சிற்றோடை ஓடிக் கொண்டிருந்தாலும் கூட, அதைச் சுட்டும் பொருட்டு பெயர்ப்பலகையை வைத்திருப்பர். சில இடங்களில் அது குறித்த சுருக்கவுரையைக் கூட பார்வைக்கு வைத்திருப்பர்.

பொருள்முதல்வாத உலகில் வீட்டுப் பாவனைக்கென நிறைய திரவப்பொருட்கள் வந்துவிட்டன. அவையெல்லாமுமே வேதிப்பொருட்கள். அதன் எச்சத்தைக் கவனமாகக் கையாள வேண்டும். எடுத்துக்காட்டாக, வடை, போண்டா, பலகாரங்கள் சுட்டு  எஞ்சிய எண்ணெய் கூட தரையில், கழிவுக்குழாயில் ஊற்றக்கூடாத ஒன்றுதான். உரிய முறையில் அதைக் கட்டி அதற்கான கழிவுக் கிடங்கில் சேர்க்கப்பட வேண்டும்.

லேசுபாசாக உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் பாவிக்கலாம், தவிர்க்க முடியாது.  ஆனால் வீடுகளைச் சுற்றிலும் அவற்றைப் பாவிக்கும் போது, நேரிடையாக மழைநீர் வடிகாலில் அவை கலப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். மாற்றாக எரு, இரசாயனமற்றவற்றைப் பாவிக்கலாம்.

சோளத்தட்டுப் பொசிவுகள், மக்காச்சோளக் கூளங்கள் போன்ற சருகான மக்கும் பொருட்களை வெகுவாகப் பாவித்து, கட்டுத்தரை, புறவாசல் போன்ற இடங்களை உலர வைத்துக் கொண்டிருந்த சமூகம் நம் சமூகம். காலத்தின் போக்கில் மக்காப் பொருட்களின் வீச்சு அதிகரித்து விட்டது. அவை நிலத்தின் நீருறுஞ்சும் தன்மையைப் பாழாக்குகின்றன. நீரோடி வெள்ளத்துக்கு அடிகோலுகின்றது. மாறாக, நம் ஊரிலிருந்து பீட் மாஸ், தென்னை நார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றோம். அவர்கள் மண்ணைக் காப்பதற்கும் நீர்வளம் காப்பதற்கும் அவற்றைப் பாவிக்கின்றனர்.

உயிரினக்கழிவுகளைக் கொட்டுவது நீர்நிலைகளையும் அதனையொட்டிய பல்லுயிர் ஓம்புதலையும் கேடாக்கும். பல்லுயிர்கள் சூழலியல் பாழாகும் போது மண்வளம் கெட்டுப் போய், இறுகிப் போவதால் நீருறுஞ்சும் தன்மை இல்லாமற்போய் வெள்ளத்துக்கு வழிவகுக்கும்.

இப்படி எத்தனை எத்தனையோ நுண்ணியமான செயற்பாடுகளை, தத்தம் சமயம், பண்பாட்டில் இடம் பெறச் செய்துள்ளனர் மேலைநாட்டினர். இன்றில்லாவிட்டாலும், என்றாவது ஒருநாள் நாமும் அவற்றை நோக்கிச் சென்றுதான் ஆக வேண்டும். அது இந்தநாளாகவும் இருக்கலாம். காம்பிளிநதி மீண்டும் பொலிவுறுவாளாகட்டும்!

(முற்றும்)

No comments: