6/30/2022

ஆற்றின்மடியில்

 மெம்ஃபிஸ் நகரில் ரிவர்வாக்(மிசிசிப்பி ஆற்றங்கரை), செயிண்ட் லூயிஸ் நகரில் ரிவர்ஃபிரண்ட்(மிசிசிப்பி ஆற்றங்கரை), சார்லட் நகரில் ரிவர்பார்க்(கட்டாபா ஆற்றங்கரை), சட்டனூகா நகரில் ரிவர்பெண்ட், ரிவர்வாக்(டென்னசி ஆற்றங்கரை), லூயிவில் நகரில் வாட்டர்ஃபிரண்ட்(ஒஹாயோ ஆறு), இவையெல்லாம் ஆன்ம உலாவுக்கான இடங்களாகப் போற்றப்படுகின்றன அமெரிக்காவில். ஆற்றங்கரையோரத்தில் பூங்காக்கள் அமையப் பெற்றிருக்கும். காலை, மாலை வேளைகளிலும் வார ஈற்று நாட்களிலும் அங்கேதாம் மக்கள் தங்கள் நேரத்தைச் செலவழிப்பர். உடற்பயிற்சி, படிப்பு, விளையாட்டு, படகு ஓட்டுதல் எனப் பலவாக இருக்கும். அது ஒரு பண்பாடு. இயற்கையைத் தரிசித்துக் கொண்டேவும் இசை பயில்வார்கள். சும்மாவேனும் உட்கார்ந்திருப்பார்கள்.

நண்பகல் விருந்து என்பதே இரண்டரை மணிவாக்கில்தாம், தலைவாழை விருந்தாக மருத்துவர் சோமு ஐயா அவர்களின் வீட்டில் வெகுவிமரிசையாக இடம் பெற்றது. அதற்குப் பிறகு மாலைக்குளியலுடன் உண்டாட்டு நிகழ்வு தோட்டத்தில். நிரம்பிய வயிற்றுடன் என்னால் படுக்கையை நினைத்துப் பார்க்கவே இயலவில்லை. 'மாப்பு, கொஞ்சம் எங்காவது வாக்கிங் சென்று வரலாமா?' என்று கேட்டேன். இரவு 9 மணியைத் தாண்டியிருந்தது. 'வீட்டுக்கு மேலேயே சற்று நடக்கலாம் மாப்பு' என்றவர் என்ன நினைத்தாரோ, வாங்க போகலாமெனச் சொல்லி வெளியே அழைத்துப் போனார்.

தமிழ்நாட்டின் ஆகச்சிறந்த இடங்களில் இதுவுமொன்று. பவானியும் காவிரியும் சங்கமிக்கின்ற இடம். அதன் குறுக்கே நெடியதொரு பாலம். கும்மிருட்டு. மின்விளக்குகள் எதுவும் எரிந்திருக்கவில்லை. ஓரத்தில் நடந்து செல்லும்படியான குறுகற்தடம் ஒன்று உண்டு. அதன்வழியாக செல்ஃபோன் டார்ச் உதவியோடு மறுகோடி வரை நடந்து சென்றோம். இடப்புறம் இரு ஆறுகளும் அமைதியாக வந்து ஈருயிர்கள் ஓருயிரென ஆகிக் கொண்டிருந்தன. தொலைதூரத்தில் ஒரு மலைக்குன்று. அதோ அதுதான் குமாரபாளையம். இதுதான் பவானி. வலப்புறத்தில் பரந்து விரிந்த காவிரி, தென்னை மரங்கள், மரங்களுக்கு இடையே சாந்தமாக காளிங்கராயன் வாய்க்கால். கீழே பார்க்கின்றேன். விழுந்தால் மிஞ்சுவோமா? 'மாப்பு, இது நெம்ப ஆழமா?' என்றேன். 'ஆமாங், மாப்பு. சுழல்களோடுதான் சென்று கொண்டிருக்கின்றாள் காவிரி' என்றார். நுனியோரம் இருந்தவன் உள்பக்கமாக நடையை மாற்றிக் கொண்டேன். ஆகாசத்தில் நடந்து சென்று கொண்டிருப்பது போன்ற ஓர் உணர்வு.

திரும்பிவிட்டோம். ஒரே ஒருவர் சைக்கிளை நிறுத்திவிட்டு, தன்னந்தனியாக உட்கார்ந்து காவிரித் தென்றலை ஏகபோகமாக அனுபவித்துக் கொண்டிருந்தார். நாங்களும் பாலத்தின் கங்கில் அமர்ந்து கொண்டோம். கனரக வாகனங்கள் செல்லும் போதெல்லாம், ஊஞ்சலில் உட்கார்த்தித் தாலாட்டுவது போல இருந்தது. ஆமாம், அம்மாம்பெரிய பாலம் மேலும்கீழுமாக ஊசலாடியது. 'உள்ள ஸ்பிரிங் வெச்சி சட்டகங்களை கேக்போல வெச்சிக் கட்டியிருக்குங் மாப்பு' என்றார்.

இராவெல்லாம் உட்கார்ந்து கொண்டே இருக்கவேண்டும் போல இருந்தது. சுற்றுமுற்றும் பார்த்தேன். யாருமே இல்லை எங்களைத்தவிர. நீர்ப்பரப்பின் ஒளி பட்டு மரங்கள் மினுமினுப்பைக் காட்டிக் கொண்டு நின்றன. தொலைதூரத்தில் சங்கமேஸ்வரரின் கோபுரக் கலசங்கள் போல ஏதோவொன்று, அதுவும் மின்னியது. இதையெல்லாம் பார்க்காமல் என்னதான் செய்கின்றனர் மக்கள் என்பதாக ஒரு செருக்கு நமக்கு.

உண்டாட்டின் தீண்டல் நாவறட்சியாக உருவெடுத்தது. கையில் தண்ணீர் பாட்டிலோடு வந்திருக்க வேண்டுமென நினைத்துக் கொண்டேன். 'மாப்பு, தண்ணித் தாகமெடுக்குது' என்றேன். பிரிய மனமில்லாமல் பிரிந்து நடை போட்டோம் வீடு நோக்கி. 

தண்ணீர் குடித்தானதும் வீட்டு மேல்தளத்துக்குச் சென்றமர்ந்தோம். சிலுசிலு காற்று. காவிரித்தாய், அவளின் பவானி எழில்மகள், வாய்க்கால், மரங்கள், வீடுகள், கூடவே பெருஞ்சாலையில் சுடுகாற்றைக் கக்கியபடிக் கக்கியபடி தீப்பெட்டிகள் போல அங்குமிங்கும் சீறிக்கொண்டிருந்த கனரக வாகனங்கள்; இவற்றுக்கிடையே இரண்டு மனிதப்பயல்கள் மொட்டை மாடியில்! வானம் எல்லாவற்றையும் கேலிப்பார்வையுடனும் புன்சிரிப்புடனும் பார்த்துக் கொண்டு இருந்தது.

No comments: