உலகெங்குமே, மாந்தநாகரிகம் என்பது ஆறுகளால் பண்பட்டது. வரலாறு நெடுகிலும், மாந்தசமூகம் போக்குவரத்துக்காகவும் பாசனத்துக்காகவும் வாழ்வாதாரத்துக்காகவும் வெள்ளக்கட்டுப்பாட்டுக்காகவும் ஆறுகளைப் பேணுவதும் அவற்றோடு பிணைந்திருப்பதாகவுமே இருந்து வந்திருக்கின்றது. அதற்கு மாற்றாக, எந்த அளவுக்கு அக்கறையும் அணுக்கமும் கொண்டிருக்கின்றார்களோ அதற்கொப்ப அவர்களுக்கான பண்பாட்டை வடித்துக் கொடுக்கின்றன ஆறுகள். ஆறுகள் போற்றப்படுகின்ற இடங்களெல்லாவற்றிலும் இலக்கியமும் கலையும் ஓங்கி வந்திருக்கின்றன.
ஆறுகள் வளமாக இருக்கின்ற போது அதையொட்டிய மனிதர்களின் பண்பாடும் வளமாக இருக்கின்றது. அவற்றுக்கு ஊறு நேர்கின்ற போதும் பாழ்படுகின்ற போதும், மனிதப்பண்பாடும் பின்தங்கிப் போய் பாழ்பட நேர்கின்றது. ஆறு செழித்தால் ஊர் செழிக்கும். முப்போகமும் விளைச்சலைத் தரக்கூடியனவாக இருந்தன நிலங்கள். ஆறுகளும் ஓடிக் கொண்டிருந்தன.
நினைவுக்குத் தெரிந்தவரையில், முதன்முதலில் ஷாம்ப்பூ, ரோஜாபாக்கு, நிஜாம்பாக்கு முதலானவை பிளாஸ்டிக் பொட்டணங்களாக வரத்துவங்கின. கொஞ்சநாளில் சீயக்காய்த் தூள் கூடப் பொட்டணத்தில் வந்தது. அவற்றைக் கொண்டு போய் ஆறுகளில் குளிக்கும் போது பாவித்து விட்டு, ஆற்றுத்தண்ணீரிலேயே ஓடவிட்டோம். கொஞ்சநாளில் துணிக்கடைகளில் பிளாஸ்டிக் பைகள் வரத் துவங்கின. எல்லாவீடுகளிலும் வீட்டுக்குப் பின்னால் குப்பைமேடு ஒன்றிருக்கும். அவற்றைப் பெற விவசாயிகள் தாவுகிடப்பார்கள். பணம் கொடுத்து அள்ளிக் கொண்டு போவது கூட உண்டு. எங்கள் வீட்டுக் குப்பை மேட்டை அள்ளிக் கொண்டு செல்பவர்கள் உறவினர்கள் என்றபடியினாலே, பணத்துக்கு மாற்றாக பருத்திமார் வண்டி வண்டியாகக் கொடுப்பார்கள் தண்ணி காயவைக்க. இப்படியான பிளாஸ்டிக் வஸ்துக்கள் வந்தபின் அவற்றுக்கான மவுசு படிப்படியாகக் குறைந்து போயின. எல்லாமும் காம்பளி நதியிலும் உப்பாற்றிலும் கொட்டப்பட்டன.
வரலாறு நெடுகிலும் ஆறுகளைப் பேணுவதும் அவற்றோடு பிணைந்திருப்பதாகவுமே மாந்தசமூகம் இருந்து வந்திருக்கின்றது. அதற்கு மாற்றாக, எந்த அளவுக்கு அக்கறையும் அணுக்கமும் கொண்டிருக்கின்றார்களோ அதற்கொப்ப அவர்களுக்கான பண்பாட்டை வடித்துக் கொடுக்கின்றன ஆறுகள். ஆறுகளின் வரத்துக்கான மழையும் படிப்படியாகக் குறையத் துவங்கியது. மாந்தநாகரிகத்திலும் சீர்கேடுகள் பெருகத் துவங்கின. நீள அகலம் என்பதோடு உயரமெனும் மூன்றாவது அலகுடனும் பயணித்துக் கொண்டிருந்த மனிதன், உயரத்தைக் கைவிடத் துவங்கினான். தொடர்ச்சியாக வீடுகள் இருக்கும். வாசலில் தேங்கும் மழைநீர் வடிந்து கடை போவதற்கான தொனியில் வீடுகளின் தரை உயரம் படிப்படியாக இறங்கிச் செல்லும். கடைநீர் வடிந்து சிறுபள்ளங்களுக்குச் செல்லும். சிறுபள்ளங்கள் ஓடைகளாகும். ஓடைகள் காம்பளியிலும் உப்பாற்றிலும் வந்து சங்கமிக்கும். தரைதளத்தின் உயரங்கள் ஒன்றுக்கொன்று ஏற்ற இறங்கங்களாகின. மதில்சுவர்களைக் கட்டினார்கள். ஆங்காங்கே தேங்கி நின்றது மழைநீர். வரவேண்டியது வீடுகளுக்குள்ளேயே நின்று போனது. வரக்கூடாதது கரைகளைத் தேடி வந்தன குப்பைகூளங்களாக. ஆறுகள் சபித்தன. வற்றின.
வற்றிய நதியின் போக்கை இடை மறித்தான் மனிதன். கரையில் இருக்கும் காட்டோடு சேர்த்தேவும் உழத் துவங்கினான். குறுகிப் போயின அவை. உப்பாற்றில் ஆறாமீன்களையும் கெழுத்திகளையும் ஓடியோடிப் பிடித்த காலங்கள் உண்டு. அரிப்பைத் தடுக்க ஆங்காங்கே சாரங்கட்டி இருப்பர். மேலிருந்து கீழாக அருவி வீழும். வீழ்கின்ற நீரில் இருந்து கொண்டேவும் கீழிருந்து மேல்நோக்கிப் பாயும் மீன்கள். அவற்றைப் பிடிக்க அருவிக்குப் பின்னால் சுவரோடு சுவராக ஒட்டிக் கிடக்கும் நீர்ப்பாம்புகள். பள்ளிக்குச் செல்லும் நாங்களெல்லாம் அதனைக் கண்டு இன்புற்ற பொழுதுகள் எத்தனை எத்தனையோ. நதிக்கரையில் உயிர்த்துக் கொண்டிருந்த கண்டங்கத்திரிகளும் குப்பைமேனிகளும் வல்லாரைகளும் கோரைகளும் நாணல்களும் அமுக்குரான்களும் தத்தம் உயிர்ப்பை நிறுத்திக் கொண்டன. அவை இருந்த இடத்தில் டில்லி முட்களும் பார்த்தீனியாக்களும் தனதாக்கிக் கொண்டன. முயல்களும் கவுதாரிகளும் காடைகளும் நீலகாந்தாக்களும் அடைக்கலாங்குருவிகளும் நீர் தேடி எங்கோ சென்றுவிட, பல்லிகளும் பாம்புகளும் ராஜராஜ்ஜியம் நடாத்தின. ஒருகட்டத்தில் அவையும் வெறுப்புக் கொண்டு எங்கோ போய்விடலாயின. சமூகத்தில் அக்கறை கொண்டோர் இருக்கவே செய்கின்றனர். ஆக்கிரமிப்புகளைச் சுட்டிக்காட்டப் போய் அவமானப்படலாயினர். ஆங்காங்கே தடுப்பணைகளுக்கு அச்சாரமிட்டனர். தடுப்பணைகள் பல பிறந்தன.
ஓடிய காம்பிளி நதிக்கும் வற்றிய காம்பிளி நதிக்கும் இடைப்பட்ட காலம்தான் நம் காலம். அதாவது ஓடியும் ஓடாமலும் இருக்கும். காலையில் எழுந்ததும் நானும் பாபுவும் சமவயதுள்ள இன்னபிற சில வாண்டுகளும் நதிக்கரை நோக்கிப் போவோம் பேசிக்கொண்டேவும். ஆற்றைக் கடந்து காடுகரைகளுக்குச் செல்வோர் சென்று கொண்டிருப்பர். பாறைகளின் மீது நின்று கொண்டு நீர்ப்பரப்பையும் கொக்குகளையும் நாரைகளையும் பராக்குப்பார்ப்பது நம் வேலை.
காம்பளி நதியை நினைக்கும் போதெல்லாம் பலநினைவுகள் நிழலாடும். அதில் மிக முக்கியமானது பெரியப்பா. முற்றிலும் தனித்துவமானவர். மாலையில் வருவார். குளிப்பார். எல்லாரும் திண்ணைகள், வீட்டுச் சேர்களென இருப்பார்கள். இவர்மட்டும் வித்தியாசமாய், வீட்டின் முன்புறம் பாய்விரித்து நடுநாயகமாய் உட்கார்ந்து கொள்வார். மற்ற சமவயதுள்ளவர்களோடு வீண் அரட்டை, அரசியல் என நான் பார்த்ததேயில்லை. பாயில் அமர்ந்து கொண்டு, தன்னந்தனியாக சீட்டு விளையாடிக் கொண்டிருப்பார், அமைதியோடு. மிக அமைதியாக. சீட்டுகள் எல்லாம் குத்துக்கிடையாக வரிசைவரிசையாக வைக்கப்பட்டிருக்கும். அதிலிருந்து ஒன்றை இதில் வைப்பார். பின்னர் இதிலிருந்து ஒன்றை பிறிதொரு வரிசையில் வைப்பார். கடைசியில் எல்லாவற்றையும் கலைத்து ஒன்றாக்கி மீண்டும் குத்துக்கிடை வரிசை வரிசையாகச் சில வரிசைகள் வைப்பார். எஞ்சோட்டுப் பையன்கள் எல்லாம் பலமுறை அவருக்கருகே அமர்ந்து கூர்ந்து கவனித்தது உண்டு. ஒரு கோதாரியும் விளங்கவில்லை. சிரித்துக் கொள்வார்.
பல ஆண்டுகளுக்குப் பின் சிங்கப்பூர் வந்தபின்னர், ஒருநாள் மாலையில், இந்தா உனக்கான கம்ப்யூட்டரெனச் சொல்லி ஒரு கம்ப்யூட்டரை கம்பெனி முதலாளி கொடுத்தார். அதுதான் நமக்கான முதல் கணினி. எல்லாரும் அலுவல் முடிந்து வீடுகளுக்குச் சென்றபின்னர், கணினியின் இதர வசதிகளை நோண்டிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் மலேசியச் சீனன், சியாவ் வந்து எலியைப் பிடுங்கி இப்படி விளையாடலாமெனச் சொன்னான். அப்போதுதான் விளங்கியது. பெரியப்பா அவர்கள் விளையாடிக் கொண்டிருந்தது Solitair Card Game.
(தொடரும்)
No comments:
Post a Comment