7/23/2022

காம்பிளி நதிக்கரையில் - 2

காம்பிளி நதியும் சரி, உப்பாறும் சரி, உயிரோட்டமாக இருந்தன. ஆற்றின் குறுக்கே செல்லக்கூடிய வழித்தடங்கள் நிறைய இருந்தன. மாதம் மும்மாரி எனும் சொலவடைக்கொப்ப, எப்போது வேண்டுமானாலும் மழை பெய்யக் கூடிய காலமும் இருந்தது. அன்றைய ஒருங்கிணைந்த கோயமுத்தூர் மாவட்டத்தில் வறட்சி என்பதே இல்லாமல் இருந்தது. அன்றைய ஒருங்கிணைந்த கோயமுத்தூர் மாவட்டம் என்பது, கொள்ளேகாலம், பவானி, கோபிசெட்டிபாளையம், அவிநாசி, ஈரோடு, தாராபுரம், பல்லடம், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கோயமுத்தூர் வட்டங்களைக் கொண்டதாக இருந்தது. பல்லடம் தாலுக்காவில் திருப்பூர் என்பது ஒரு பேரூராட்சியாக, நகரமாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

எங்கோ ஒரு ஊரில் மழை பெய்தால், காம்பிளியும் உப்பாறும் பெருக்கெடுத்துக் கொள்ளக் கூடியதாக இருந்தது. இவற்றுக்குக் குறுக்கே நிறைய வண்டித்தடங்களும் இருந்தன. மாட்டு வண்டிகளெல்லாம் ஆற்றுக்குள் இறங்கி மறுகரையிலேறி அக்கம்பக்கத்து ஊர்களுக்குச் சென்று கொண்டிருந்தன. காடுகரைகளில் வேலை செய்வோர், கால்நடைகள் மேய்ப்போரெல்லாம் ஆற்றில் இறங்கித்தான் மறுகரைக்குச் சென்றாக வேண்டும். குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் தரைப்பாலங்கள் இருந்தன. எடுத்துக்காட்டாக, சிந்திலுப்பு, புள்ளியப்பம்பாளையம், நாதகவுண்டன் பாளையம், சலவநாயக்கன்பட்டி முதலான ஊர்களில் இவ்வகையான தரைப்பாலங்கள் இருந்தன. ஒருபாட்டம் மழை பெய்தாலே போதும், தரைப்பாலங்களுக்கு மேலேவும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, ஊர்கள் துண்டிக்கப்பட்டு விடும். அந்த அளவுக்கு மழையின் ஆதிக்கமும் வீச்சும் அமைந்திருந்தன.

அப்பா ஒரு தானிய வணிகர். அறுவடைக் களத்துமேடுகளுக்கே சென்று தானியங்களையும் பருத்தியையும் கொள்முதல் செய்து, மாட்டுவண்டிகளினூடாகப் பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, திருப்பூர் சந்தைகளுக்குக் கொண்டு செல்வார். அப்படியான நிலையில், இப்படியான மேல்வெள்ளத்தில் வண்டிகள் அகப்பட்டுக் கொண்டதும் உண்டு. குறிப்பாக சிந்திலுப்புப் பாலத்தில் மேல்வெள்ளம் ஏற்பட்டு விட்டால், வேலூர், வாகத்தொழுவு, சலவநாயக்கன்பட்டி, சிக்கநூத்து போன்ற ஊர்களெல்லாம் உடுமலைப் பேட்டையிலிருந்து துண்டிக்கப்பட்டு விடும். அண்மையில் ஓரிரு ஆண்டுகளில்கூட, உப்பாற்று வெள்ளத்தின் காரணமாக சலவநாயக்கன்பட்டி தரைப்பாலத்தில் வண்டி அடித்துச் செல்லப்பட்டு உயிர்ச்சேதம் ஏற்பட்டதாகச் செய்திகள் உண்டு.

காம்பிளி நதியை நம்பியும் உப்பாற்றை நம்பியும் நிறையத் தொழில்கள் ஆண்டுமுழுமைக்கும் நடந்து கொண்டிருந்தன. இருகரையிலும் இருக்கும் ஊர்களிலிருந்து கழுதைகள் பொதிகளைச் சுமந்து கொண்டு கரைகளுக்கு வரும். சலவை செய்து துணிகள் காயப் போட்டிருப்பதை ஆங்காங்கே காணலாம். மட்பாண்டக் கலைஞர்கள் ஒற்றைமாட்டு வண்டிகளைக் கொண்டு வந்து நீர் அள்ளிச் சென்று மட்பாண்டங்கள் வனையப்படுவதைப் பார்க்கக் கண்கள் போதாது. வீடுகளின் புறவாசலைப் பெருக்க தென்னையோலை ஈர்க்குச்சிகளாலான விளக்குமார் பயன்படுத்துவர். வீட்டு உட்புறத்தைப் பெருக்க, ஈச்சம்புற்களையும் நாணற்புற்களையும் கொய்து கொண்டு வந்து ஆற்றுப்படுகையில் வைத்து நனைத்து நனைத்துச் சீமாறுகளைக் கட்டிக் கொண்டிருப்பர். கால்நடைகளுக்குத் தண்ணீர் புகட்டுவதும் கழுவிவிடுதலுமாக இவை விளங்கிக் கொண்டிருந்தன. ஆற்றுப் பொருளாதாரம் என்பது இப்படித்தான் உள்ளோங்கிய கிராமங்களில் இருந்தன.

ஆற்றின் கரைகளில் ஆற்றின் பெயராலே கோயில்களும் அமைந்திருந்தன. எடுத்துக்காட்டாக, காம்பிலி அம்மன் கோயிலைச் சொல்லலாம். காம்பிளி நதிக்கும் வடப்புறத்தில் இது அமைந்திருக்கின்றது. இங்கும் மேல்வெள்ளம் ஏற்படுகின்ற தருணங்களில் ஊர்கள் துண்டிப்புக்காட்பட்டுவிடும். இந்தக் கோயில் அமைந்திருக்கின்ற நாதகவுண்டன் பாளையத்திலும், உப்பாற்றுத் தரைப்பாலம் இருந்த சிந்திலுப்பிலும் தற்போது உயர்நிலைப் பாலங்கள் கட்டுப்பட்டுவிட்டன என்பது கூடுதல் செய்தி. காம்பிளி நதிக்கரையில் புள்ளியப்பம் பாளையத்து விநாயகர் கோயிலும் அமைந்துள்ளது. நானறிந்த வரையிலும், அந்த விநாயகர் கோயிலுக்கு இருமுறை குடமுழுக்கு(கும்பாபிசேக) விழாக்கள் நடந்திருக்கின்றன. 1980+களில் இடம்பெற்ற முதல் குடமுழுக்கு விழாவின் போது கிட்டத்தட்ட 10 நாட்கள் நானும் அங்கிருந்து வாழ்வின் பயனை அனுபவித்தேன். ஊர்முழுக்க இளைஞர்கள். கோயில். காம்பிளி நதி, நதிக்கரையை ஒட்டிக் கிழக்காகச் செல்லும் மண்தடம், தடத்துக்கும் கோயிலுக்கும் இடையே ஓர் அரசமரத்து மேடை, மேடையை ஒட்டிக் கோயில். அந்த அரசமரத்தடியில் எப்போதும் ’சோ’வெனக் காற்றடித்துக் கொண்டேயிருக்கும். அந்த இடத்திலொரு பஞ்சாயத்து டியூப்லைட் மின்கம்பத்தில். மாலை ஆறுமணியிலிருந்து இரவு எந்நேரம் வரையிலும் இளைஞர் செட் செட்டாக வந்து அமர்ந்து கதைபேசிச் சென்றவண்ணம் இருப்பர்.  மாலைக்கருக்கலுக்குப் பின்னர், ஊருக்குள் செல்பவர்கள் அந்தவழியாகத்தான் சென்றாக வேண்டும். அங்கே உட்கார்ந்து கொண்டு வருவோர் போவோரைக் கவனிப்பதும் அலாதியாக இருக்கும். எந்த வீட்டுக்குப் பலாப்பழம் போகின்றது, மாம்பழம் போகின்றது உட்பட எல்லாமும் இளைஞர்களுக்கு அத்துபடி.

அப்படியான கோயிலுக்குத்தான் குடமுழுக்கு விழா. எங்களுக்கெல்லாம் பரவசமாக இருந்தது. கோயில் மேல்மாடத்தில் அழகிய வேலைப்பாடுகள், வண்ணம் பூசுதலென பலவேலைகள் நடந்து கொண்டிருக்கும். பலரும் வந்து வேடிக்கை பார்ப்பது, பேசுவதென இருப்பார்கள். கொடுமுடியில் இருந்து தீர்த்தம் கொண்டு வர வேண்டுமெனப் பேசுவார்கள். விழாநாள் நெருங்க நெருங்க குதூகலம் கொப்பளித்துக் கொண்டிருந்தது. ஊர்மக்கள் எல்லாம் உற்சாகத்தில் இருந்தனர். கோயிலுக்குக் கிழபுறம் பள்ளிக்கூட வளாகம். திடலெங்கும் புங்கை மரங்களும் பூவரசன்களும் பொன்னரளிகளும் செவ்வரளிகளும் பச்சைப்பசேலக் காட்சியளித்தன. நதிக்கரையில் தென்றல். ஒயிலாட்டக் குழுவினர், பம்பை அடிக்கும் குழுவினர் எனச் சகலவிதமான கலைநிகழ்ச்சிகளும் இடம் பெற்றுக் கொண்டிருந்தன. புள்ளியப்பம் பாளையத்து காம்பிளி நதிக்கரை அப்படியானதொரு நாளை அதற்குப் பிறகு கண்டிருக்குமாயெனச் சந்தேகிக்கக் கூடிய வகையில் இருந்தன கொண்டாட்டமும் ஊர்மக்களின் உவப்பும்.

(தொடரும்)



 

No comments: