7/17/2022

வாய்மொழிக் கதைகள்

வாய்மொழிக் கதைகள் நீக்கமற நிறைந்திருந்த காலமென்பது உண்டு. சற்றேறக்குறைய 1990கள் வரையிலும் அவை இருந்தன. காரைவாசல், கோவில் மேடைகள், மரத்தடிகள், குளத்தேரிகள், கிணத்துமேடுகள் முதலான இடங்களிலும், ஆடு மாடு மேய்க்கும் போதான தரிசு நிலங்களிலும் வாய்மொழிக்கதைகள் புழங்குவதும் உயிர்ப்பதுமாக இருந்தன.

வயது ஐம்பதைக் கடந்தோர் தன் அனுபவங்களைச் சாதனைகளாக வெளிப்படுத்துவதாகவும் அவை இருந்தன. இளையோருக்கு அவை சுவாரசியம் ஊட்டக் கூடியதாகவும் கேளிக்கையாகவும் இருக்கும். வின் - வின் என்பதான அடிப்படையில் இருதரப்புக்குமே இலாபம்.

நிறையப் பேருக்குத் தாம் பேச வேண்டும். மற்றவர் கேட்க வேண்டுமென்கின்ற ஆவல் உண்டு. அது மனித இயல்பு. அவ்வாறான வேட்கையைத் தணிப்பவையாக இருந்தன வாய்மொழிக் கதைகள்.

ஊரில் சித்தப்பா ஒருவர் இருக்கின்றார். பேசித் தீர்க்க வேண்டுமென்கின்ற தணியாத ஆசை உள்ளவர். பேசுங்களெனச் சொல்லி உட்கார்ந்து விட்டேன். ஓரிரு நாட்கள் கழித்துக் கிளம்பும் வேளை வந்து விட்டது. மீண்டும் எப்போது வருவாய்? அடுத்த வாரம் வர முடியுமா என்கின்றார் குழந்தையைப் போலே! எதொ அமெரிக்கா என்பது ஆட்டையாம்பாளையத்துக்கு அருகில் இருப்பதைப் போலே!!

நண்பர் அலெக்ஸ் இருக்கும் வரையிலும் மாதமொருமுறையாவது ஃபோன் செய்து விடுவேன். அவர்பாட்டுக்குப் பேசிக் கொண்டிருப்பார். ஸ்பீக்கர் ஃபோனில் போட்டுவிட்டு மற்ற மற்ற வேலைகள் கூடச் செய்து கொண்டிருப்பேன். அடிக்கடி அழையுங்கள் என்பார்.

அம்மாவிடம் ஊரைப் பற்றியும் ஊர் மக்களைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தேன். இடைக்கிடையே பேசிக் கொண்டிருப்பதினின்று கிளைத்து மற்றொரு விசியத்துக்கு மாறிவிடுவார். சிலமுறை வெட்டி, பேசுபொருளுக்குள் இழுத்து வருவேன். சிலமுறை போக்கில் விட்டுவிடுவதும் உண்டு. அப்படி விட்டுவிட்டால்தாம் அவர்களுக்கான மனநிறைவு கிட்டும்.

எதிர்பாராத விதமாக அந்தப் பெண்மணியைச் சந்தித்தேன். நான் பாலகனாக இருந்த போது எப்படியெல்லாம் குறும்புகள் செய்தேன், என் பெற்றோர் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டார்களென்றெல்லாம் என்னென்னவோ சொல்லிக் கொண்டிருந்தார். கடைசியில் என் முகவாய்க்கட்டையைத் தொட்டுத் தடவினார்.

கவனிப்பாரற்ற மக்களுக்கானவை வாய்மொழிக் கதைகள். அப்படியான ஒரு கதையைக் கேட்கின்றோமென்றால், சொல்பவரின் வாழ்வின் பயனை நீட்டிக்கின்றோமென்பதே பொருள்.


No comments: