4/30/2022

எண்ணங்களால் ஆனது வாழ்வு

மாந்தன் பகுத்தறிவு உள்ளவன். உறக்கம் கொள்ளும் நேரம் தவிர எஞ்சிய நேரமெல்லாம் ஏதோவொன்றைச் சிந்தையில் எண்ணிக் கொண்டே இருக்கின்றான். நினைத்துப் பாருங்கள். உறங்கிக் கொண்டிருக்கின்றீர்கள். ஏதோவொரு விநாடியில் உணர்கின்றீர்கள். அது வெளியிலிருக்கும் ஒரு குருவியின் கீரீச் சத்தமாக இருக்கலாம். அல்லது, மூக்கு அடைபட்டிருப்பது போன்ற உணர்வாக இருக்கலாம். அருகில் படுத்திருப்பவர் தம்மீது வந்து உரசுவது இடிப்பது போன்று இருக்கலாம். திடுமென வெளிச்சம் கண்களைக் கவ்வுவது போல இருக்கலாம். ஏதோவொன்று உங்கள் சிந்தையை முடுக்கிவிடுகின்றது. அந்த விநாடியிலிருந்து எண்ணங்கள் ஒவ்வொன்றாகப் பெருக்கெடுக்கத் துவங்குகின்றன. இன்னும் கொஞ்சம் படுத்திருக்கலாமென நினைப்பது ஓர் எண்ணம்,. ‘அய்யோ, போய்க் கடையைத் திறக்க வேண்டுமே?’, துணுக்குறுவது ஓர் எண்ணம். இப்படி, எண்ணங்கள் அடுத்து நித்திரையில் ஆழ்ந்து போகும் வரையிலும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

ஜமுனா அவர்கள் சொர்க்கத்தில் அந்த மரத்தின் கீழே அமர்ந்திருந்தார். ’முத்தான் எங்க போய்த் தொலைஞ்சான்னு தெரீல. பசிக்கிது’ எண்ணம் தோன்றியது. முத்து என்பவர் எங்கோ தொலைந்து போய் விட்டார். எதிரில் ஒரு மேசையின் மீது, பலதரப்பட்ட உணவுகளும் இருந்தன.

வியப்புக்குள்ளானார் ஜமுனா. ‘இதெல்லாம் போங்காட்டமாட்ட இருக்கூ?’ எண்ணினார். அவையெல்லாம் காணாமற்போய் விட்டன. ‘அடகெரகமே, நம்ம நெனச்சதல்லா ஒடனுக்குடனே நடக்குது. மெய்யாலுமே பசிக்குது. அதுக இருந்தா தேவலை’ எண்ணினார். மீண்டும் அவை வந்து சேர்ந்தன.

‘ஆகா. எல்லாம் எனக்கா? அருமை. எல்லாம் இருக்கூ. ஆனா சரக்கக்காணம்?’ எண்ணினார். நான்கு குவளைகளில் சோமபானம், சுராபானம், ஜெயந்திபானம், சாந்திபானம் தோன்றின. உள்ளேபோனதும், பாரிசில் தோழனுக்குக் கிடைத்த அனுபவத்தை எண்ணினார். அது போன்றேவும் மாதுவின் கவட்டைக்குள் அகப்பட்டுக் கொண்டார். ‘அடச்சீ, மரத்துக்குக்கீழயே இருந்திருக்கலாம்’ எண்ணினார். மீண்டும் மரத்துக்குக்கீழேயே வரலானார்.

குவளைகளை மாந்தோமாந்தென்று மாந்தி அடித்துக் காலி செய்தார். ’கொஞ்சம் தூங்குனா நல்லா இருக்கும்’ எண்ணினார். மஞ்சம் வந்தது. ஆனால் மங்கை வரவில்லை. ஏனென்றால் சரக்கு ஓவராகிப் போனதால் மட்டையாகி விட்டார், எண்ணியிருக்கவில்லை. நல்ல உறக்கம். எண்ணங்கள் தோன்றுவது நின்று போயிருந்தன. மப்பெல்லாம் மங்கிய அந்தப் பொழுதில் மணாளனுக்கு எண்ணம் தோன்றியது. ‘இதெல்லாம் யாரு வேலையா இருக்கும்? எதனா சூனியக்காரி நம்மள வெச்சிக்கிச்சி ஜோலி பண்றாளோ? ’. சூனியக்காரி எதிரில் வந்து, ’லக லக லக’வென்று ஆர்ப்பரித்தது. ‘அய்யோ, இவ என்னியப் புடிச்சுத் துன்னுபோடுவா போலிருக்கே?’ எண்ணிக்கூட முடியவில்லை. முடிஞ்ச்.

திடுமெனப் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தார் ஜமுனா. ‘ஓ, இதெல்லாம் கனவா? ஃப்பூ. ஆனா, கனவு சொல்ல வந்த மெசேஜ் கரக்ட்டு. எல்லாம் எண்ணங்களால் ஆனது. நாம என்ன நினைக்கிறமோ அதுதான் செயல்வடிவம் பெறும். நல்லதே நினைக்கணும். அப்ஜக்டிவா நினைக்கணும். எண்ணங்களால் ஆனதுதானே ஒவ்வொருவருடைய வாழ்வு! முத்தான்? அவனும் நல்லவந்தான், நாம நல்லதே எண்ணுவோம்!!’.


No comments: