யான் கூம் 1976ஆம் ஆண்டு உக்ரைன் நாட்டில் (அப்போதைய சோவியத் யூனியன்) பிறக்கின்றார். பாவல் துரோவ் 1984ஆம் ஆண்டு இரஷ்ய நாட்டில்(அப்போதைய சோவியத் யூனியன்) பிறக்கின்றார்.
1991ஆம் ஆண்டு சோவியத் யூனியன் கலைகின்றது. உக்ரைன் நாடு தனிநாடாக உருவெடுக்கின்றது. சோவியத் யூனியன் கலைந்ததற்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுவது வறுமை. பொருளாதாரச்சிக்கல். அதன்நிமித்தம், பாட்டி, அம்மாவுடன் அமெரிக்காவுக்குப் புலம் பெயர்கின்றார் யான் கூம். வயது 16. அம்மா, குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளும் தாதியாக வேலை பார்க்கின்றார். யான் கூம் பலசரக்குக் கடையில் துப்புரவுப் பணியாளராக வேலை பார்க்கின்றார். படிக்க வேண்டுமெனும் ஆவல். கல்லூரியில் புரொகிராமிங் கற்கச் செல்கின்றார். கூடவே கம்ப்யூட்டர் தொடர்பான வேலைக்கும் செல்கின்றார். ஓராண்டுக்குள்ளாகவே படிப்பை விட்டு விடுகின்றார். 1997ஆம் ஆண்டு யாகூ நிறுவனத்தில் வேலை கிடைக்கின்றது. அங்கே யான் கூம், உடன் வேலை பார்த்த பிரையன் ஆக்டன் என்பவருடன் நட்பு. 2007ஆம் ஆண்டு இருவரும் தத்தம் வேலையை விட்டு விட்டு, தென்னமரிக்காவைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பிவிட்டனர்.
இரஷ்ய நகரான செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் பிறந்த பாவல் துரோவ், அப்பா வேலைபார்த்து வந்த இத்தாலி நாட்டுக்குச் சென்று விடுகின்றார். பின்னர் குடும்பம் இரஷ்யாவுக்குத் திரும்பிவிடவே இவரும் அவர்களோடு திரும்பி, செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் மொழியியல் பட்டம் படித்து, 2006ஆம் ஆண்டு பட்டம் பெறுகின்றார். அப்போது ஃபேசுபுக் சமூக வலைதளத்தைப் பார்த்து, அது போலவே தம் மொழியில் தாமும் ஏன் ஒன்றை நிறுவக் கூடாதென ஆசைப்படுகின்றார்.
தென்னமரிக்கப் பயணத்தை முடித்துத் திரும்பிய நண்பர்கள் யான் கூம், பிரையன் ஆக்டன் இருவரும் பேசுபுக் நிறுவனத்தில் வேலைக்காக விண்ணப்பித்தனர். வேலை கிடைக்கவில்லை.
விகே எனும் பெயரில் சமூகவலைதளப் பக்கத்தைத் தன் சகோதரருடன் இணைந்து 2007ஆம் ஆண்டில் நிறுவிய பாவல் துரோவ், படிப்படியாக அதனை மூன்று பில்லியன் டாலர்கள் பெறுமானமுள்ள நிறுவனமாக வளர்த்தெடுத்தனர்.
2009ஆம் ஆண்டு தனக்காக வாங்கிய ஐபோனில் ஆப்பிள் ஸ்டோர் இருப்பதைக் கண்ட யான் கூம், தன் நண்பன் பிரையன் ஆக்டனுடன் சேர்ந்து இதில் வரும்படியாக நாமும் ஒரு புராடக்டை நிறுவ வேண்டுமென விரும்பி ஒன்றைக் கட்டமைத்தனர். கட்டமைத்து, தமக்குத் தெரிந்த இரஷ்யமொழி பேசும் நண்பர்களிடையே அறிமுகப்படுத்த, பலதரப்பட்ட மக்களிடையேயும் பிரபலமாகத் துவங்கியது அந்த யேப்.
விகே எனும் சமூக வலைதளம் இரஷ்ய மொழி பேசப்படும் நாடுகளெங்கும் பிரபலமாகத் துவங்கியது. மக்களுக்குத் தங்குதடையற்றதும் வெளிப்படையானதுமான தகவற்களஞ்சியமாக மாறத் துவங்கியதைக் கண்ட இரஷ்ய சர்வாதிகாரத்தின் கண்கள் கனன்றன. நிறுவனத்தைச் சர்வாதிகாரியின் நிழலாக்க மாற்றும் முயற்சிகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தலையெடுக்கத் துவங்கின. 2012/2013ஆம் ஆண்டுகளில், நிறுவனத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டன அல்லது மாற்றப்பட்டு விட்டன.
2014, பிப்ரவரி ஒன்பதாம் நாள், பேசுபுக் நிறுவனத்தின் உரிமையாளர் யான் கூம் அவர்களைச் சந்தித்துப் பேசி, யான் கூம், பிரையன் ஆக்டன் அவர்களுடைய ப்ராட்க்ட்டினை 19 பில்லியன் டாலர்களுக்கு கொள்வனவு செய்வதாக அறிவித்தார்.
2014, ஏபரல் 21ஆம் நாள் நிறுவனத்திலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இனியும் இங்கிருந்தால் தன் உயிருக்கே ஆபத்தெனக் கருதிய பாவல் துரோவ், பிரான்சு நாட்டுக்கு குடி பெயர்ந்து பிரஞ்ச் குடியுரிமை பெற்றவரானார். உக்ரைன் நாட்டில் பிறந்த யான் கூம் அவர்களுடைய ப்ராடக்டைப் போலவே இவரும் ஒன்றைக் கட்டமைக்க விரும்பி, அதனைக் கட்டமைத்து, இரஷ்ய மொழி பேசும் மக்களிடையே அறிமுகப்படுத்த, இதுவும் பிரபலமானது. இது துபாய் நகரின் நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டது.
உக்ரைன் நாட்டில் பிறந்தவரின் உயிர்ப்பு ”வாட்சாப்”. இரஷ்யநாட்டில் பிறந்தவரின் உயிர்ப்பு ”டெலிகிராம்”. இருவருமே பத்து பில்லியன் டாலர்களுக்கும் மேலான சொத்துகளுக்கு உரியவர்கள். முன்னவருக்கு களம் அமைத்துக் கொடுத்தது அமெரிக்கா. பின்னவரை வெளியேற்றிக் களம் அமைத்துக் கொண்டது இரஷ்யா.
No comments:
Post a Comment