4/25/2022

வாழ்தல்

பணிதல் என்பது வேறு; குனிதல் என்பது வேறு! அதைப் போலவே, வாழ்தல் என்பது வேறு; பிழைத்திருத்தல் என்பது வேறு. எப்படி?

பணி என்றால் என்ன? செய்கை. செய்பவரைத்தான் பணியாளர் என்கின்றோம். எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து. எல்லாருக்கு நல்லதாம் செய்து கொடுப்பது; எல்லாச் செல்வங்கள் இருப்பினும் இச்செல்வம் அதனைக் காட்டிலும் சிறப்பு. செயலன்றிப் பிறர் பொருட்டுக் குனிதல் வெறும் பாவனை என்பதினாலே அது வெற்றுக் குனிதல். கீழ்ப்படிதல் என்றாகின்றது.

மூச்சுக் கொண்டு, சிந்தை கொண்டு, ஒவ்வொரு பொழுதையும் நுகர்ந்து செழித்து உயிர்த்திருப்பது வாழ்தல். வாழ்க, வாழிய, வாழ்வு என்பதெல்லாம் இதன் நீட்சி. தவறவிடுதல், குற்றம்புரிதல், தீங்கிழைத்தல் இவையெல்லாம் பிழை. இவையெல்லாம் எப்போது நேரும்? ஏதோவொரு வேலையை, செயலைச் செய்யும் போது நேரும். அப்படியாக, வேலை செய்து கொண்டிருப்பது, செயலாற்றிக் கொண்டிருப்பது பிழைப்பு. பிழைப்புக்கு என்ன செய்து கொண்டிருக்கின்றாய்? தச்சு வேலை செய்து கொண்டிருக்கின்றேன். என்ன வாழ்வுமுறையைத் தழுவி இருக்கின்றாய்? நான் சைவமுறையைக் கடைபிடிக்கின்றேன்.

ஆக, பணிதல் என்பது வேறு; குனிதல் என்பது வேறு! வாழ்தல் என்பது வேறு; பிழைத்திருத்தல் என்பது வேறு. 

ஒருவர் வாழ்கின்றார். இன்னொருவர் பிழைத்துக் கொண்டிருக்கின்றார். எது சிறப்பு? வாழ்தல் சிறப்பு. ஏன்? முன்னவர் தேவைகளுக்கான பொருளுக்காகவும் சமூகநலத்துக்காகவும் பிழைத்துக்கொண்டேவும் தன் உயிர்த்திருத்தற்காலத்தை இலக்கியம், விளையாட்டு, கேளிக்கை, களிப்பு எனப்பலவாக அனுபவிக்கின்றார். அடுத்தவர் பொருளுக்காகவும் குடும்பத்துக்காகவும் பிழைப்பென்பதைமட்டுமே தன்னகத்தே கொண்டிருக்கின்றார். ஆகவே முன்னவர் சிறப்புக் கொள்கின்றார்.

30 ஆண்டுகால வாழ்வு, 20 ஆண்டுகாலப் பிழைப்பு என ஐம்பது ஆண்டுகால ஆயுள் முன்னவருக்கு. 60 ஆண்டுகாலப் பிழைப்பு அடுத்தவருக்கு. எது சிறப்பு? வாழ்வுடையவர் சிறப்பு, வாழ்வே அற்றவர் கூடுதல் ஆயுள் கொண்டவராயினும் பின்னடைவுதான்.

சரி, சிறப்பான வாழ்வு எப்படி அமைத்துக் கொள்வது? உயிர்த்திருத்தலின் தரம் குன்றாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒருவருக்குப் பல் ஈறு புண்பட்டிருக்கின்றது. மீச்சிறுவலிதான். அதற்காக மருத்துவமனைக்குப் போவதாயென நினைக்கும் அளவுக்கு அது சிறுவலிதான். ஆனால், நாளெல்லாம் நச் நச் நச்சென வலித்துக் கொண்டேயிருக்கின்றது. தரமான வாழ்வா அது? இருக்க முடியாது. சரி செய்து கொள்ளப்பட வேண்டும். அப்போதுதான் அவர், அவருக்கான பொழுதுகளை அனுபவிக்க முடியும்.

காலை பத்துமணிக்குத் துவங்கினால் நாளெல்லாம் சிறு ஏப்பம். அது ஏப்பம் என்று சொல்லக்கூட முடியாது. சின்னதாக, அவ்வப்போது இரைப்பையிலிருந்து சிறுகாற்று வெளிப்படுகின்றது. மார்புப்பகுதியில் ஏதோவொரு இடத்தில் சிறி எரிச்சல் ஓரிரு விநாடிகள்தாம், ஆனால் நாளெல்லாம் இருந்து கொண்டே இருக்கின்றது. சமகால ஜீவராசிகள் பரபரத்துக் கிடக்கின்றனர். வேலை, சமூகக் கொந்தளிப்பு இப்படியாக. அதில் நாமும் ஓர் அங்கம். அத்தகு பரபரப்பில் இதெல்லாம் ஒரு பிரச்சினையா? படுக்கும் போது, வலதுபக்கம் ஒருக்களித்துப் படுத்தால் பின்முதுகில் ஏதோ ஊர்வது போல இருக்கின்றது. இடப்பக்கம் திரும்பிப் படுத்துக் கொள்கின்றோம். தூங்கிப் போகின்றோம். அடுத்தநாள், அதே கதை. சிறப்பான, தரமான வாழ்வா?? இல்லை. No quality of life.

என்ன செய்யலாம்? உடலைக் கவனிக்க வேண்டும். வாய்க்குள் செல்லும் ஒவ்வொன்றையும் கவனிக்க வேண்டும். ஏதோவொன்று உங்களின் செரிமானத்துக்கு ஏதுவாக இல்லை. ஆமாம். ஒருவாரமாக பால் இல்லாத காஃபிதான். what a relief! Jai-Ho!!💪

No comments: