பாப்பநூத்துக் கவுண்டர் என்றால் அந்த சுற்று வட்டாரமும் அறியும். என்ன காரணம்? எந்தத் தோட்டத்தில் மோட்டார் காயில் கருகினாலும், அவர் போயித்தான் கம்பி கட்டி மோட்டார் எடுத்து விட்டாக வேண்டும். அல்லாவிடில் பண்ணையம் படுத்து விடும். அந்த அளவுக்கு வாகத்தொழுவு ஊராட்சி, மற்றும் அண்டிய கிராமங்கள் கிட்டத்தட்ட பத்து ஊர்களிலும் பிரபலம். பத்து ஊர்களிலும் தாய் புள்ளையாக அவருடன் பழகுவார்கள். தோட்டத்திலிருந்து தேங்காய், காய் கனிகள் எல்லாமும் அவர்களாகவே அவ்வப்போது பணமேதும் வாங்காமல் பாப்பநூத்துக் கவுண்டர் கடைக்குக் கொடுத்து விடுவார்கள். அவர்தாம் எத்தனை தோட்டத்துக் காய்கறிகளைத் தன் வீட்டில் புழங்குவார்? கொடுத்தனுப்புவதையும் திருப்பி அனுப்ப முடியாது. வாங்கிக் கொண்டு, எங்கள் வீட்டுக்கெல்லாம் கொடுத்தனுப்புவார். நான் வளர்ந்து படிப்புக்காக கோயமுத்தூர் வந்தாகிற்று. விடுமுறை நாளொன்றில் ஊருக்குப் போனேன். ஊரே கடுஞ்சோகத்தில். என்ன விசயமென்றால், பாப்பநூத்துக் கவுண்டரைக் காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லையாம். ஆங்காங்கே திண்ணைகளில் உட்கார்ந்து, மோவாய்க்குத் துண்டைக் கொடுத்து காவியபடி சோகத்தைப் பங்கு போட்டுக் கொண்டிருந்தனர். ஒருவர் சொன்னார், “மானத்துக்குக் கட்டுப்பட்டு மனுசன் இப்படிப் பண்ணிட்டாரே?”. நான் எங்கள் அம்மாவிடம் சென்று கேட்டேன். அவரது மகன் பணத்துக்கு ஆசைப்பட்டு ஏதோவொரு தோட்டத்துக் காயிலை ஆட்டையப் போட்டு அந்தப் பணத்தில் ஏதோ செலவு செய்திருக்கின்றார். இவரது கவனத்திற்குத் தெரிய வரவும், உடனே துண்டை உதறிக் கிளம்பியிருக்கின்றார். டாய்லட் இல்லாத காலமது. மந்தைக்குச் செல்கின்றாரென இருந்திருக்கின்ரனர் வீட்டில். போனவர் போனவர்தாம். ஆக, இங்கு மானம் என்பது என்ன? அது ஒரு உருவகம். மானசீகமான உணர்வு. ஆங்கிலத்தில் Integrity என்பதாகக் கொள்ளலாம்.
மேலைநாடுகளில், அலுவலகங்களில், அவரவர் மேலாளர் என்பவர், பணியாளரின் வேலை, அவுட்புட், பெர்ஃபாமன்ஸ் என்பதையுங்கடந்து, பேச்சு, நடத்தை முதலானவற்றையும் கவனித்து வருவார். நல்ல திறமையும், புரடிக்டிவிட்டியும் இருந்திருக்கும். ஆனாலும்? ஒருநாள் அழைத்துக் குழையக் குழையப் பேசுவார். கடந்தகாலப் பங்களிப்பைப் பற்றிப் பாராட்டுவார். பேசிக்கொண்டேவும் சொல்வார், ”உன்னுடைய வேலையிடம் தவிர்க்க இயலாத காரணத்தால் இல்லாமற்போகின்றது. நான் எவ்வளவோ போராடிப் பார்த்தேன். முடியவில்லை. சாரி” என்று சொல்லி பிங்க் ஸ்லிப்பைக் கொடுப்பார். என்ன காரணம்? low integrity என்பதுவும் ஒரு காரணமாயிருக்கலாம். ஏதோவொரு திறனாய்வு (analysis), வணிகத்திறனாய்வாளர்(business analyst) சொல்லப்படும் கருத்துக்கு ஏதுவாக ஒன்றைத் தருகின்றார். தரப்படுகின்ற தரவு நம்பகமானதாகவும் உகந்ததாகவும் இருந்திடல் வேண்டும். பெற்றுக் கொள்பவரும் அதனை ஆய்ந்துக் கற்றுக் கொள்ள முற்பட வேண்டும். நம்பகத்தன்மையற்றதாக இருந்தால் முன்னவரின் கிரிடிபிளிட்டி கேள்விக்குள்ளாக்கப்படும். பெற்றுக் கொள்பவரும் அதனைக் கற்றுக் கொள்ளாமல், மேலெழுந்தவாரியாக ஆய்வெனும் பேரில் உதாசீனப்படுத்தினால் இவரின் கிரிடிபிளிட்டி கேள்விக்குள்ளாக்கப்படும்.
இப்படியாகத் தொடரியக்கத்தில்(program), பல பணித்திட்டங்கள்(projects) இடம்பெறும். சில பல பிராஜக்டிகளிலும் இப்படியான மானக்கேடு (low integrity) புலப்படுமேயானால், கூட்டியக்கத்துக்கு(team work) ஒவ்வாதவர் என்பதாகப் பொருள் கொள்ளப்படுவார்.
பேசுபொருளின் மீது பார்வை செலுத்தப்படல் வேண்டும். கருத்து, மாற்றுக்கருத்து என்கின்ற அளவில் அது அலசப்படலாம். ஆனால், கருத்தினை முன்மொழிபவர் மீதான பார்வை இருந்திடல் ஆகாது. எடுத்துக்காட்டாக, ஏதோவொரு நாட்டில் மின்சாரப்பிரச்சினை இருக்கின்றதெனவும், அதற்கான சான்றாக ஏதோவொன்றையும் மேற்கோள் காண்பிக்கின்றார் ஒருவர். கொடுப்பவர் உண்மையான சான்றைக் கொடுக்க வேண்டும். கொடுத்துவிட்டார். அல்லாவிடில் அது அவருக்கான மானக்கேடு. பெறுபவர், அதனைத் தோற்றுவாயாகக் கொண்டு மேலும் கற்றுக் கொள்ள முனைய வேண்டும். மாறாக, கற்றுக் கொள்வதற்கான முனைப்பு ஏதுமின்றி, இது உற்பத்தி செய்யப்பட்டதாக இருக்கலாமெனத் தீர்ப்பெழுதுவது நலம்பயக்காது. மேலும், அமைதியாக கவனித்துக் கொண்டிருப்பர் மேலாளர்கள். கொடுத்தவர் அதனைத் தனக்கேற்பட்ட அவமானமாகக் கருதலாம். அப்படியானவர் சென்று முறையிடும் போது, பின்னவருக்கு அது பெரும் சிக்கலாகக் கூட முடியும். மேலைநாடுகளில், இத்தகைய நுண்ணுணர்வுகளுக்கு முக்கியப்பங்குண்டு.
No comments:
Post a Comment