கடந்த வாரத்தில் பெரிதான நகர்வுகள் எதுவும் இடம் பெறவில்லை. அவரவர், அவரவர் எல்லைக்கோட்டில் நின்று கொண்டிருக்கின்றனர். வடக்குப் பகுதியில், உக்ரைன் தலைநகர் இருக்கும் திசையிலிருந்து முற்றுமாக வெளியேறிவிட்டது இரஷ்யா. தெற்கு, கிழக்குப் பகுதியில் முதலிரண்டு வாரங்களில் பிடிக்கப்பட்ட பகுதிகளைத் தக்கவைத்துக் கொண்டிருக்கின்றது.
மே 9ஆம் நாளுக்குள் எப்படியாவது, கிழக்கு உக்ரைன், டான்பாஸ், லுகான்ஸ்க் ஆகிய இருமாநிலங்களையும் கைப்பற்றியாக வேண்டுமெனத் திட்டமிட்டு புதுத்தளபதியை நியமித்திருக்கின்றார் புடின். மே 9ஆம் நாளென்பது, இரண்டாம் உலகப்போரில் சோவியத் ரஷ்யா வெற்றி பெற்ற நாளாகும். ஆண்டுதோறும் அந்த வெற்றிநாளைக் கொண்டாடுவது வழக்கம். இந்த மே 9ஆம் நாளை, இரட்டிப்பு வெற்றியாகக் கொண்டாட வேண்டுமென்பது இரஷ்யாவின் எண்ணம். மேலும், வடக்குப் பகுதியிலிருந்து பின்வாங்கிய படைகளும் தெற்கு, கிழக்குப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. அடுத்த வாரத்தில் தாக்குதல் தீவிரமடையலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
அரசியல் சூழலைப் பொறுத்த மட்டிலும், உக்ரைன் ம்ற்றும் மேற்குலக நாடுகளுக்குள் உக்ரைன் அதிபர் அமோக ஆதரவு பெற்றவராகக் கருதப்படுகின்றார். இரஷ்யாவுக்குள், மேலும் கூடுதலான மக்கள் ஆதரவைப் பெற்றவராக புடின் உயர்ந்திருக்கின்றார்.
உயிரிழப்பைப் பொறுத்த மட்டிலும், ஒப்பீட்டளவில் இரஷ்யத்தரப்பில் அதிகம். உக்ரைன் நாடென்பது 45% இரஷ்ய மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களை உள்ளடக்கியது. அவர்கள் செறிவாக வாழும் பகுதிகளில்தான் போர் நடைபெற்று வருகின்றது. உடைமைகள், உயிர் என எல்லாச் சேதங்களும் அவர்களுக்கே. உள்ளூர் மக்களின் ஆதரவின்றி, படைகளால் அங்கு சிவில் நிர்வாகத்தைக் கட்டமைத்துவிட முடியாது. எனவே இன்சர்ஜன்சி, உட்கிளர்ச்சி என்பது இருந்து கொண்டேவும் இருக்கும்.
ஜியோபாலிடிக்ஸ் எனும் பார்வையில் பார்த்தோமேயானால், மேற்குலக நாடுகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஓரணியில் நிற்கத் துவங்கி விட்டன. இரஷ்யாவைக் கண்டு அஞ்சுகின்றன. நேட்டோவின் எதிரிகளாகக் கருதப்பட்ட ஸ்வீடன், ஃபின்லாந்து ஆகிய நாடுகள் கூட நோட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்து, இரஷ்யாவுக்கு எதிரான தடைகளை விதித்து வருகின்றன. மத்திய தரைக்கடல் நாடுகளும் சீனாவும் இரஷ்யாவின் பக்கம் முன்னைவிட நெருக்கம் காண்பிக்கின்றன.
இராணுவத் தளபாடச் சந்தையின் பார்வையில் பார்த்தோமேயானால், சீனாவுக்கு கிராக்கி ஏற்பட்டிருக்கின்றது. இரஷ்யத் தயாரிப்புகள் மேற்குலக நாட்டுத் தயாரிப்புகளுக்கு முன்னால் தாக்குபிடிக்க முடியவில்லை. விமானங்களைத் தாக்கக் கூடிய FIM-92 Stinger, பீரங்கிகளைத் தாக்கக்கூடிய FGM-148 Javelin ஆகியன இரஷ்யத் தரப்புத் தளபாடங்களைக் கணிசமாக தடுத்து வருகின்றன. மேலும் இரஷ்யத்தரப்பு போர்க்கப்பலையும் தாக்கி அழித்திருக்கின்றன. இதனால் இரஷ்யத் தயாரிப்புகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, சீனத்தயாரிப்புகள் முன்னுக்கு வரக் காத்திருக்கின்றன.
https://theweek.com/russo-ukrainian-war/1011761/up-to-60-percent-of-russian-missiles-in-ukraine-are-failing-us-assesses
No comments:
Post a Comment