4/16/2022

உன்வினை vs ஊழ்வினை

“ஆட்சி படுகேவலம். எங்க பார்த்தாலும் டிராஃபிக்ஜாம், நகரமுடியலை”

“கொடுங்கோலாட்சி, விலைவாசி கொஞ்சநஞ்சம்னு இல்ல”

“அமெரிக்கான்றாங்க, ஆனா மருத்துவச் செலவுகள் எக்கச்சக்கம். நாடா அது? தூ!”

இப்ப, மேற்கண்ட கூற்றுகள் எல்லாம் ஒருவருடைய ஒப்பீனியன். அது அவருடைய கருத்துரிமை. தன்னோட மனத்தில் தோன்றும் உணர்வை இயல்பாக வெளிப்படுத்துகின்றார். அதற்கு யாரும் தடை போட முடியாது. அவருக்கு அப்படியான உணர்வுகள் இருப்பதைப் போலே, அதே தெருவில், ஏன் அதே வீட்டில் இருக்கும் இன்னொருவருக்கு நேர்மாறான உணர்வுகள் இருக்கலாம். அவர் அவருடைய உணர்வுகளை வெளிப்படுத்தும் போது, அது அவருடைய கருத்து அல்லது மாற்றுக்கருத்து ஆகின்றது. அதற்கும் யாரும் தடை போட முடியாது. ஏட்டிக்குப் போட்டியாகவே இருந்தாலும், இயல்பான கருத்தாகக் கட்டமைக்கப்பட்டிருப்பதால் அது அவருக்கான உரிமையாக ஆகிவிடுகின்றது. இப்ப, அவற்றையே கொஞ்சம் மாற்றி அமைச்சிப் பார்க்கலாம்.

“ஆட்சி படுகேவலம். எங்க பார்த்தாலும் டிராஃபிக்ஜாம், காந்திபுரம் பாலத்துமேல நகரமுடியலை”

“கொடுங்கோலாட்சி, விலைவாசி கொஞ்சநஞ்சம்னு இல்ல, கிலோ 4 ருபாய் கத்தரிக்கா 16 ருவாய்”

“அமெரிக்கான்றாங்க, ஆனா மருத்துவச் செலவுகள் எக்கச்சக்கம். கொரொனா ஊசி 22 ஆயிரம் ரூபாயாம். நாடா அது? தூ!”

காந்திபுரம் பாலத்தில் நெரிசலா? 4 ருபாய்க்கு கத்திரிக்காய் அண்மையில் விற்கப்பட்டதா? தற்போது 16 ரூபாயா? கொரொனா ஊசிக்கு பணம் வாங்கப்படுகின்றதா? இதற்கான சான்றுகள் கேட்டால் கொடுக்கப்பட வேண்டும். அல்லாவிடில், அவை ஃபேக்நியூஸ். அவதூறு.

முன்னதுக்கும் பின்னதுக்கும் என்ன வேறுபாடு? முன்னது பொத்தாம் பொதுவாகத் தன் உணர்வுகளைக் கடத்துவது. பின்னது, தன் மனத்தில் இருக்கும் சார்புத்தன்மை, ஒவ்வாமை, வெறுப்பு, காழ்ப்பு, வக்கிரம் போன்றவற்றால் போகின்ற போக்கில் அடித்து விடுவது. எதிர்த்தரப்பை மலினப்படுத்துவதற்காகச் செய்வது. ஆனால், அத்தகைய போக்கு தனக்குத்தானே வைத்துக் கொள்ளும் ஆப்பு.

No comments: