உலகம் என்பது ஏராளமான விருப்பு வெறுப்புகளால் சூழப்பட்டது. ஆளுக்காள் நம்பிக்கைகள் மாறும். நோக்கங்கள் மாறுபட்டு இருக்கும். ஆசைகள் வேறுபட்டனவாக இருக்கும். அதன்பொருட்டு உணர்வுவயப்படுவதும் இயல்புதான். ஆனால், பொதுவெளியிலோ அல்லது அலுவலகங்களிலோ ஒன்றை முன்வைக்கும் போது, தகுந்த குறிப்பீடுகள் முன்வைக்கப்பட வேண்டும். அல்லாவிடில், முன் வைப்பவர் உணர்வுவயப்பட்டுச் செயற்படுகின்றாரென்றேவும் கருதப்படும். பகுத்தாய்வுப் பார்வையில் அப்படியான முன்வைப்புகளுக்கு ஒரு விழுமியமும் இல்லை; மாறாக முன்வைப்பவருக்குத்தான் நேரவிரயம், நற்பெயர்க்களங்கம் முதலானவை ஏற்படும். இதுவரையிலும் சொல்லப்பட்டவை எல்லாமும் ஒரு பொத்தாம் பொதுவான கருத்து. அந்தக் கருத்துக்கு உகந்த குறிப்பீடு(specifics) அல்லது எடுத்துக்காட்டு கொடுக்கப்படும் போது, வைக்கப்படும் கருத்து முழுமை கொள்ளும்.
குறிப்பீட்டுக்கும் எடுத்துக்காட்டுக்கும் என்ன வேறுபாடு. குறிப்பீடு என்பது மெய்யாலுமே இடம் பெற்ற ஒன்று. எடுத்துக்காட்டு என்பது, கருத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் புனைவாகவேனும் கட்டமைக்கப்படுகின்ற ஒரு நிகழ்வு.
தன் 14 வயது மகளுக்கு அரசு உறைவிடப் பள்ளியில் இடம் கேட்டுப் போகின்றார் ஒரு தாய். அரசு உறைவிடப் பள்ளியென்றால் எல்லாமும் கட்டணமின்றி அரசாங்கத்தால் கொடுக்கப்படும் சேவை. வறுமையைக் காரணம் காட்டி உதவி கோரலாம். அல்லது உகந்த காரணம் காட்டி உதவி கோரலாம். இவர், தன் குழந்தையின் நடத்தை, குடும்பத்துக்கு ஒவ்வாத பயங்கரவாதத்தன்மை கொண்டதாக் இருக்கின்றதென்பதைக் காரணம் காட்டுகின்றார்.
”சொல்லுங்கள், ஏன் உதவி தேவைப்படுகின்றது?”
”எங்கள் மகளுக்கு இடம் வேண்டும். எங்களால் வைத்துச் சமாளிக்க முடியவில்லை.”
“சமாளிக்க முடியவில்லை என்று சொன்னால்? எப்படி??”
“எங்கள் வீட்டில் எவராலும் அவரை வைத்துச் சமாளிக்க முடியவில்லை. பெரும் இரகளை”
“அப்படி என்ன செய்கின்றார்?”
“எப்போது பார்த்தாலும் எரிந்து எரிந்து விழுகின்றார்”
“இல்லை. குறிப்பிட்டுச் சொல்லுங்கள். யாரிடம், எப்போது, எப்படிச் செயற்பட்டார்?”
“அவருடைய அம்மாவிடம் இரகளை செய்தார். திட்டினார்”
“எப்போது? எதற்காக?”
“அது அவருடைய அம்மாவிற்குத்தான் தெரியும்”
“அம்மா எங்கே?”
“வீட்டில் இருக்கின்றார்”
“அப்பாவான உங்களிடம் ஏதும் தவறாக நடந்து கொள்ளவில்லையா? யாராலும் வைத்துச் சமாளிக்க முடியவில்லை என்று சொன்னீர்களே?”
இப்படியான உரையாடலில் குறிப்பீடு என்பது எதுவுமே இடம் பெறவில்லை. வந்தவருக்கு ஏமாற்றும் நோக்கம் இல்லாமல் இருக்கலாம். ஆனாலும், அது வேறேதோ காரணங்களால், ஒவ்வாமையினால் கூட ஏற்பட்டிருந்திருக்கலாம். அழுத்தம் திருத்தமான குறிப்பீடுகள் கொடுக்கப்படும் வரையிலும், அரசு அலுவலரால் அந்த உதவி கோரலை மேற்கொண்டு அடுத்த இடத்திற்கு எடுத்துச் செல்ல இயலாது.
பொத்தாம் பொதுவாகச் சொல்லப்படும் செய்திகள், கருத்துகள் புறந்தள்ளப்பட வேண்டியவை. அவை ஒருபோதும் மேம்பாட்டைக் கொண்டு வந்து சேர்க்காது. If you want to be interested, get a story, and if you want to be interesting, tell a story—just make sure to tell one that’s spontaneously relevant, and fairly brief, and keep the story moving along, and stop when you get to the end. Everyone is interesting when you get the specifics. ஒருவர் மீது குற்றம் சொல்கிறோமென்றால், ’இந்த இடத்தில் இன்னது’ என்பதைக் குறிப்பிட்டுச் சொன்னால்தான் அவரால் அதைத் திருத்தியமைத்துக் கொள்ள முடியும். அல்லாவிடில் அது வெற்றுப் பேச்சாகவே கடக்கப்பட்டு விடும்.
All my life, I always wanted to be somebody. Now I see that I should have been more specific. -Jane Wagner
No comments:
Post a Comment