4/14/2022

50ஆவது நாளில் உக்ரைன் போர்

உக்ரைன் மீதான போருக்கான இலக்குகளாகச் சொல்லப்பட்டவை கீழே வருமாறு:

1. உக்ரைன் நாட்டை இராணுவமில்லா நாடாக்குவது (டிமிலிட்டிரைசேசன்)

2. ஆட்சிமாற்றம் கொணர்வது (டிநாஜிபிகேசன்)

3. டான்பாஸ் & லுகான்ஸ்க் தனிநாடுகளாகக் கட்டமைப்பது

காரணமாகச் சொல்லப்பட்டவை கீழே வருமாறு:

1. நேட்டோவில் உக்ரைன் சேர்வதினால், நேட்டோ தன் எல்லைக்கே வருகின்றது

2.இரஷ்யச் சிறுபான்மையினர் பாதிக்கப்படுகின்றனர்

50 நாட்கள் கடந்த இன்று இவற்றின் நடப்பு நிலைமை என்ன?

உக்ரைன் நாட்டை இராணுவமில்லா நாடாக்குவது (டிமிலிட்டிரைசேசன்): முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இராணுவத்தளபாடங்கள் மேற்குலகில் இருந்து வந்து சேர்ந்திருக்கின்றன. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நெம்ப்டியூன் ஏவுகணைகளால், பலம்வாய்ந்த இரஷ்யப் போர்க்கப்பல் செயலிழப்புச் செய்யப்பட்டிருக்கின்றது. 3 நாட்களில் ஒட்டுமொத்த உக்ரைனும் கட்டுப்பாட்டுக்கு வருமெனச் சொன்னநிலையில், தலைநகர்ப் பகுதியில் இருந்து பின்வாங்கிக் கொண்டது இரஷ்யா. 40,000 போர் வீரர்கள் வரை(காயம்+மரணம்) படைக்குறைப்புக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றது.

ஆட்சிமாற்றம் கொணர்வது (டிநாஜிபிகேசன்): அண்டைய நாடான போலந்துக்குச் சென்று அங்கிருந்து நிர்வாகப்பணிகளைச் செய்யுமாறு அமெரிக்கா சொன்னது. ஆனாலும், தன்னம்பிக்கையோடு உக்ரைன் நிர்வாகம் தலைநகரிலேயே இருந்து கொண்டது. இன்று, உலகத் தலைவர்களெல்லாம் தலைநகரான கீய்வ் நகருக்குச் சென்று வந்து கொண்டிருக்கின்றனர்.

டான்பாஸ் & லுகான்ஸ்க் தனிநாடுகளாகக் கட்டமைப்பது: இரஷ்யாவுக்குக் கணிசமான வெற்றி கிடைத்திருக்கின்றது. ஆனாலும் எஞ்சி இருக்கும் நகர்ப்புறப் பகுதிகளைக் கைப்பற்றுவதில்தான் முழு வெற்றி அடங்கி இருக்கின்றது.

நேட்டோவில் உக்ரைன் சேர்வதினால், நேட்டோ தன் எல்லைக்கே வருகின்றது: இது அப்பட்டமான பொய். ஏனென்றால், உக்ரைனைக் காட்டிலும் இரஷ்யத் தலைநகருக்கு அருகில் உள்ள லாட்வியா, லித்துவேனியா, எஸ்டோனியா ஆகிய நாடுகள் ஏற்கனவே நேட்டோவில் உள்ளன. தற்போது, மிக அருகில் உள்ள ஃபின்லாந்து, ஸ்வீடன் இரண்டும் ஜூன் மாதத்தில் நேட்டோவில் சேர்வதாக அறிவித்து விட்டன. சொந்த செலவில் சூன்யம். அப்படிச் செய்தால், அந்தநாடுகளை நோக்கி அணு ஆயுதங்களை நிறுத்துவதாக மிரட்டுகின்றது இரஷ்யா.

இரஷ்யச் சிறுபான்மையினர் பாதிக்கப்படுகின்றனர்: சண்டை நடைபெறும் இடங்கள் எல்லாமுமே முற்றிலுமாக இரஷ்யமொழிச் சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகள்தாம். சண்டையினால்தான் அவர்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். மேலும், பிடிபட்ட பகுதியில் வசிக்கும் மக்களை வடதுருவத்தின் வட எல்லையான சைபீரியாவுக்கு வலுக்கட்டாயமாக நாடு கடத்தியும் வருகின்றது.

மே 9ஆம் நாளுக்குள், லுகான்ஸ்க்/டான்பாஸ் பிடிபட்டு, வெற்றிவிழாவாக இரஷ்யத் தலைமை கொண்டாடத்தான் போகின்றது. வெற்றிதான். அப்படியானால் தோல்வி அடைவது யார்? இரஷ்யமக்களே.


No comments: