1/02/2023

உக்ரைன் போர் - 314

உக்ரைன் போரின் இன்றைய வயது 314 நாட்கள். யார் வெற்றி பெறுகின்றார்கள்? அறுதியிட்டுச் சொல்ல முடியாத இழுபறி நிலைதான் நீடிக்கின்றது. எப்படி?

உக்ரைன் நாட்டில் இருக்கும் ஆட்சியாளரகளை மாற்றவும்(டிநாஜிபிகேசன்), இராணுவமில்லா நாடாக்கவும் (டிமிலிட்டிரைசேசன்) முன்னெடுக்கப்படுகின்ற சிறப்பு இராணுவ நடவடிக்கையெனச் சொல்லி, இரண்டு இலட்சம் படை வீரர்களுடன் 2022 பிப் 20ஆம் நாளன்று களமிறங்கியது இரஷ்யா. ஒருவாரத்துக்குள்ளாக ஒட்டுமொத்த நாடும் இரஷ்யாவின் பிடிக்குள் வந்துவிடும்; ஆகவே ஆட்சியாளர்களைப் போலந்து நாட்டில் இருந்து கொண்டு கொரில்லாப் படைகளை வைத்துப் போர் புரியுமாறு ஆலோசனை கூறின மேற்கத்திய நாடுகள். தலைநகரை விட்டு வெளியேற மாட்டோமெனச் சொன்னார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி.

உக்ரைநாட்டின் கிரைமியா தீபகற்பத்தை 2014ஆம் ஆண்டே எவ்வித எதிர்ப்புக்குமிடமின்றித் தன் வசமாக்கி இருந்தது இரஷ்யா. அதே காலகட்டத்தில், உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் இருக்கின்ற டான்யெஸ்க், லுகான்ஸ்க் வட்டாரத்தின் கணிசமான பகுதிகள் இரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சிப் படையினரின் வசம் இருந்து வருகின்றன. இதையொட்டி இருக்கின்ற தெற்கு, கிழக்கு, வடகிழக்குப் பகுதிகளில் இருந்து மளமளவென முன்னேறி, டிநிப்ரோ ஆற்றுக்கு வலப்புறமாகப் பெரும்பகுதிகளை ஓரிரு நாட்களுக்குள்ளாகவே கைப்பற்றிக் கொண்டது இரஷ்யா. ஆனால் தலைநகர் கீய்வ் நகரை நெருங்க முடியவில்லை. உக்ரைனின் எதிர்ப்பு என்பது அல்ல. இரஷ்யப் படைகளின் நகர்வுப் பணிகளில் உணவின்மை, தளபாடங்கள் பழையனவாக இருந்து அடிக்கடி பழுதானமை, பல பகுதிகளிலும் இருக்கும் படைகளுக்கிடையே தகவற்தொடர்பில் ஒருங்கிணைப்பின்மை போன்றவற்றால் செய்வதறியாது திணறியது இரஷ்யா. 

வான்வெளிப் படையை மட்டுமே முழுதாக நம்பி இருந்தது இரஷ்யா. சோவியத் ரஷ்யாவின் அதே தளபாடங்கள் உக்ரைன் வசமும் இருந்தன. அவற்றைக் கொண்டு இரஷ்யவசம் வான்வெளி சென்று விடாதபடிக்குப் பார்த்துக் கொண்டது உக்ரைன். மேலும், உக்ரைன் மக்களும் சிதறுண்டு போகாதபடிக்கு அதிபர் ஜெலன்ஸ்கியின் பின்னால் ஒன்றுபட்டு நின்றனர். இதைக் கண்ட நேட்டோ நாடுகள், கொஞ்சம் கொஞ்சமாக ஆயுதங்களை அனுப்பத் துவங்கின. ஏப்ரல் மாதக் கடைசிவரை கிடைத்த ஆயுதங்களைக் கொண்டு, தற்காப்பில் இருந்து எதிர்த்தாக்குதல் எனும் முறைக்கு மாறின உக்ரைன் படைகள். அதன்நிமித்தம், தலைநகர் கீய்வ், இரண்டாவது பெரிய நகரமும் இரஷ்ய எல்லைக்கு அருகில் இருப்பதுமான கார்கிய்வ் எனும் பகுதியிலிருந்து பின்வாங்கிக் கிழக்குப் பகுதியில் மட்டும் கவனம் செலுத்தப் போவதாக அறிவித்தது இரஷ்யா. இதற்கிடையில், கடல் மார்க்கத்திலும் தன் சொந்தத் தயாரிப்பான நெப்டியூன் ஏவுகணைகளை வீசியது உக்ரைன். அதன் நிமித்தம் இரஷ்யாவின் அடையாளமான மாஸ்க்வா போர்க்கப்பல் மூழ்கிப் போனது.

இரஷ்யாவின் பீரங்கிகளைத் தாக்கவல்ல அமெரிக்காவின் ஸ்டிங்கர், ஜாவலின் ஏவுகணைகளைக் கொண்டு, மேலும் முனைப்புடன் துரத்தியடிக்கும் தாக்குதலுக்கு முன்னேறியது உக்ரைன். அதன்விளைவாக இன்ஸ்யூம், லீமான் போன்ற பகுதிகளையும் களத்தில் இருந்த படைவீரர்களில் மூன்றில் ஒருவரையும் இழந்தது இரஷ்யா. மேலும் மூன்று இலட்சம் தற்காலிகப் படைவீரர்களைக் களத்தில் இறக்கப்போவதாக அறிவித்தார் புடின். மேலும் மூன்று இலட்சமென்றால், உக்ரைனால் தாக்குப் பிடிக்க முடியாது; எனவே துல்லியமாகத் தாக்கவல்ல நவீன பீரங்கிகள் வேண்டுமெனக் கேட்டார் ஜெலன்ஸ்கி. அதன்காரணம், ஹைமார்ஸ் எனும் நவீனரக பீரங்கிகளை அனுப்பியது அமெரிக்கா. இவற்றைக் கொண்டு உக்ரைன் மேலும் முனைப்பாகத் தாக்கத் துவங்கியது. கிரைமியாவையும் இரஷ்யாவையும் இணைக்கின்ற பாலம், கீர்சான் நகருக்கும் அக்கரைக்கும் இடையேயான பாலம் முதலானவற்றை ஹைமார்சுகள் தாக்கிச் சேதாரத்தை உண்டு செய்தன. இதன்விளைவாக, இரஷ்யா பிடித்து வைத்திருந்த ஒரே மாகாணத்தலைநகரான கீர்சான் நகரில் இருந்தும் பின்வாங்க நேரிட்டது.

இரஷ்யாவின் இருப்பில் இருக்கும் ஏவுகணைகள் பெருமளவு தீர்ந்து போயிருந்தன. சுதாரித்துக் கொண்ட இரஷ்யா, ஈரானின் உதவியை நாடியது. ஈரானின் ஷஹெத் டிரோன்களைக் கொள்வனவு செய்து, உக்ரைன் நாடெங்கும் தாக்குதலைத் தொடுத்தது. உக்ரைன் திணறிக் கொண்டிருக்கின்றது. என்ன காரணம்? ஒரு ஷஹெத்தின் விலை இருபதினாயிரம் டாலர். இதனை எதிர்த்தொழிக்கும் தடுப்பு ஏவுகணையின் விலை நான்கு இலட்சம் டாலர் முதற்கொண்டு ஒரு இலட்சம் டாலர் வரையிலும். பெருமளவு டிரோன்களை உக்ரைன் தடுத்தழித்து வந்தாலும், இலக்கின் மதிப்பு தடுப்புக்கான செலவைக் காட்டிலும் குறைவாக இருக்கும் போது விட்டுவிடுவதான முறையைக் கையாண்டு வருகின்றது. இதன்காரணம், நாடெங்கும் இருக்கிற மின்விநியோகங்கள் அடிக்கடி தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன. டிரோன்களுக்கு இடையே ஏவுகணைகளையும் கலந்தடித்து வருகின்றது இரஷ்யா. பதிலுக்கு, உக்ரைனும் துருக்கியிடம் கொள்வனவு செய்த TB2 டிரோன்களை இரஷ்யாவுக்கு அனுப்பி வருகின்றது. இதனால், தாம் அனுப்பும் டிரோன்களைத் தமது நாட்டு தானியங்கி எதிர்ப்புக்கலங்களே தாக்குவதைப் பார்ப்பதற்கும் ஆளாகின்றது இரஷ்யா.

இருநாடுகளும் கிட்டத்தட்ட தலா ஒரு இலட்சம் படைவீரர்களை இழந்திருக்கலாமென்கின்றது அமெரிக்கா. எண்ணிக்கையில் சமமாக இருந்தாலும், நாட்டின் அளவோடு ஒப்பிடுகையில் உக்ரைனுக்குப் பெரும் சேதம். ஆகவே இழுபறியாகவே இருக்கட்டும். உக்ரைன் அடுத்த நாட்டின் ஆயுதங்களை வைத்துக் கொண்டு எத்தனை நாட்களுக்குத்தான் தாக்குப்பிடிக்கும்? எத்தனை வீரர்களைத்தான் இழக்குமென்பது இரஷ்யாவின் கணக்காக இருக்கின்றது.

2023. இரஷ்யாவின் பொருளாதாரம் வீழ்ச்சிக்கு உள்ளாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஐரோப்பிய நாடுகளில் எரிபொருள் விலை, போருக்கு முந்தைய நிலை என்னவோ அந்தநிலைக்கு வந்திருக்கின்றது. இதற்கிடையே இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் முட்டல்கள் அதிகரித்து உள்ளன. இதன்விளைவாக இஸ்ரேலின் ஏவுகணை வீச்சுக்காளான சிரியாவின் டமாஸ்கஸ் விமானநிலையம் தன் சேவையை நிறுத்தி வைத்துள்ளது. ஈரான் இரஷ்யாவை நெருங்கி இருப்பதால், ஈரானின் பரமவைரியான சவூதி இரஷ்யாவினின்று எட்டத்தான் நின்றாக வேண்டும். ஆகவே பெட்ரோலிய நாடுகளான ஓபெக்நாடுகளும் இரஷ்யாவுக்கு ஏதுவாக இருக்கப் போவதில்லை என்பது கணிப்பாக இருக்கின்றது. ஆனாலும் ஈரான், இரஷ்யா, சீனா கூட்டாக இயங்கினால், இந்தப் போர் மேலும் முனைப்பாக நடைபெறுவதற்கும் வாய்ப்பிருப்பதாகக் கருதப்படுகின்றது.

No comments: