1/18/2023

விடைநாள்

தத்துவஞானி அரிஸ்டாட்டில் சொன்னதாகப் படிக்கின்றோம். அதையே திரும்பத் திரும்ப பலரும் பலவிதமாய்ச் சொல்லிக் கொண்டேதானிருக்கின்றனர்; இப்போது நானும் அந்தவரிசையில் ஒருவன். Man is a social animal. He can't survive in isolation. மாந்தன் ஒரு சமூகவிலங்கு. அதாவது கூட்டம் கூட்டமாக இருந்து வாழத்தலைப்பட்டவன். அதன்பின்னாலே பரிணாமவியல், சூழலியற்காரணங்களும் உண்டு. முதலாவது இன்னபிற உயிரினங்களிடமிருந்து பாதுகாப்பு. அடுத்தது உட்கிடைப் போர். சகமாந்தனின் ஆதிக்கவெறிக்கு ஆளாகிவிடாமல் இருக்க வேண்டுமேயானால் ஏதோவொரு கூட்டத்தில் இருந்து கொண்டால் வசதி. 

நடப்புக்காலத்தில், பொருள்முதல்வாத உலகின் வணிகத்துக்காக புத்தாக்கப் பொருட்கள் தேவைக்கும் மிகுதியாக வந்து கொண்டே இருக்கின்றன. அவற்றைப் பாவிக்கவே அவனுக்கு நேரமில்லை. அதையுங்கடந்து, சக மனிதர்களுடன் கூட்டுறவாகக் கொண்டாட்டத்தைக் கடைபிடிக்க அவனுக்குத் தேவையில்லாமற்போய் விட்டது. ஒருகட்டத்தில், சலிப்பும் அலுப்பும் தோன்றுகின்றது. உடனிருந்த கொண்டாட ஆட்களில்லை. பொங்கல்விழா என்பது அப்படியானது அன்று.

சில பல வாரங்களுக்கு முன்பே மட்பாண்டங்கள் வனையப்படுகின்றன. கூடைகள் பின்னப்படுகின்றன. கயிறுகள் திரிக்கப்படுகின்றன. பொங்கலுக்குத் தேவையான அரிசி, பருப்பு, மஞ்சள், வெல்லம் என எல்லாமும் பார்த்துப் பார்த்து கொள்வனவு செய்யப்படுகின்றன. உற்றார் உறவினரெல்லாம் ஊருக்குள்ளே ஒன்று சேர்கின்றனர். பட்டிகளெல்லாம் ஆர்ப்பரிக்கின்றன. படல்களெல்லாம் பிரித்து வேயப்படுகின்றன. கட்டுத்தாரைகள் புனரமைக்கப்படுகின்றன. சகமனிதர்கள் ஒருவருக்கொருவர் இல்லாததைக் கேட்பதும் இருப்பதைக் கொடுப்பதுமாய் இருக்கின்றனர்.

காப்புக்கட்டி, அவரவர் வீடு, அவரவர் குடும்பம், அவரவர் பட்டி, அவரவர் பொங்கல் என முதல் மூன்று நாட்களும் ஆனபின்னர், கூட்டுவிழாக்கள் கோலோச்சத் துவங்குகின்றன. பட்டி ஆவுடையாருக்குப் பொங்கல் வைத்து வழிபட்ட கட்டாந்தரையிலே கூட்டமாகக் கூடி அமர்ந்திருக்க துவரைமார் கொழுந்து விட்டெரிந்து கொண்டிருக்கும். அந்த வெளிச்சத்தின் கதகதப்பிலே திட்டமிடல்களும் ஆலோசனைகளும் பரபரக்கும்.

கரட்டுமடத்துக் கரடுகளுக்குப் பின்னாலே கோச்சைகள் நடக்கும். வெட்டாப்புச்சேவல், கட்டுச்சேவலென இரண்டு இரகம். வெட்டாப்புச்சேவலென்றால் எப்போது தண்ணிகாட்ட வேண்டும், முகைச்சலுக்கு என்ன செய்ய வேண்டும், யார் நடவுபோடுவது, நடவுபோடுகையில் எதிராளியிடம் என்னவெல்லாம் கவனிக்க வேண்டும், கட்டுச்சேவலென்றால் கத்தியைக் கட்டும்பகுமானமென்ன, கத்தியிலே மொளகாய் பூசியுடலாமா? இப்படியெல்லாம் பேச்சுகளில் அனலடிக்கும்.

தகர் சண்டையென்றால் சும்மாயில்லை. தகர் என்றால் ஆடு. ஆட்டுக்குக் கொம்புமுளைத்ததுமே பட்டும்படாமல் மேலாக உடைத்து விட வேண்டும். உடைத்துவிட்டதும் அது ஊதிப் பெருக்கும். மீண்டும் மேலாக உடைத்து விட வேண்டும். அது மீண்டும் பருத்துப் பெருக்கும். பொங்கல் வருவதற்குள்ளே இப்படியாக நான்கைந்து முறையாவது செய்து விட்டால்தான் அது கெட்டிப்படும். ஆடு பெருத்தும் போய்விடக் கூடாது; இளைத்தும் போய்விடக் கூடாது. மந்திராலோசனைகள் கொடிகட்டிப் பறக்கும்.

ரேக்ளாரேஸ் என்றால் வெறுமனே காளைகளைக் கட்டிப் பரிபாலனம் செய்வது மட்டுமேயன்று. வண்டியையும் பராமரிக்க வேண்டும். ஓட்டுகின்ற மனுசனும் வாகாய் உடம்பை வைத்துக் கொள்ள வேண்டும். வாலை எப்போது பிடிக்க வேண்டும், கயிற்றை எப்போது விட வேண்டும், சுண்ட வேண்டுமென்பதில் இருக்கின்றது ஓட்டுதாரியின் நுட்பம்.  இதெல்லாமுமே கூட்டுப்பணிதாம், கூட்டுறவுதாம். தனியாட்களால் ஒன்றும் செய்துவிட முடியாது. இப்படித்தான் சமூகத்திலே பிடிப்பும் கூட்டுறவும் நட்பும், தகைசால் மாண்பும் நிலைபெற்றது.

பாரி வேட்டை (முயல், காடை, கவுதாரி, முள்ளெலி, வெள்ளெலி) நடக்கும். எந்த மண்ணிலே, எந்த வங்கில் முயல் இருக்குமென்பது வேட்டையாளிக்குத்தான் தெரியும். அவனோடு இருந்துதான் மற்றவர் நுட்பம் பழகியாக வேண்டும். எந்தப் புதரில் எது இருக்குமென்பதும் அப்படியே. இவையெல்லாமுமே வழிவழியாய் அமையப்பெற்ற அறிவுக்கொடை, அனுபவக்கொடை. கூட்டியக்கமாய் செயற்பட்டால்தான் சாத்தியம்.

கூட்டியக்கத்துக்கு அவ்வப்போது புத்துணர்வும் ஊக்கமும் ஊட்டியாக வேண்டும். ஆங்காங்கே அதற்கேயான தந்தனத்தான்கள் உண்டு. அவர்களின் வாய் வருசம் முன்னூத்தி அறுவத்தி ஐந்து நாட்களும் தந்தனத்தன, தந்தனத்தனவென்று முணுமுணுத்துக் கொண்டே ஏதோவொரு பாடலைப் பாடிக்கொண்டேதான் இருப்பர். அவர்களுக்கு வேறுவேலை வெட்டி இருக்காது. அதனாலே அவர்கள் எள்ளிநகையாடப்பட்டனர். ஆனாலும் தைமாதம் வந்துவிட்டாலோ அவர்களின் இராஜ்ஜியத்தில் உய்யலாலா. அவர்களுக்கு வெகுகிராக்கியாய் இருக்கும். அவனைப் பார்க்கப் பார்க்க மற்றவர்காதுகளில் புகை. இப்படியாகப் பாடி தங்கள் ஆற்றாமையைத் தணித்துக் கொள்வர்:


எல்லாரும் கட்டும் வேட்டி
ஏழைக்கேத்த சாய வேட்டி! ஆனா,
தந்தனத்தான் கட்டும் வேட்டி
சரியான சரிகை வேட்டி!!

எல்லாரும் போடும் சட்டை
ஏழைக்கேத்த நாட்டுச்சட்டை! ஆனா,
தந்தனத்தான் போடும் சட்டை
சரியான பட்டுச் சட்டை!!

எல்லோரும் கட்டும் பொண்ணு
ஏழைக்கேத்த கருத்த பொண்ணு! ஆனா
தந்தனத்தான் கட்டும் பொண்ணு
சரியான செவத்த பொண்ணு!!

தந்தனத்தானுக்கு எல்லாமும் எளிதில் கிட்டும். இப்படியும் ஒரு பாட்டு உண்டு.

தந்தனத்தான் தோப்புல
தயிர் விக்கிற பொம்பள
தயிர்போனா மயிர்போச்சு
தங்கமடி நீயுங்கிட்ட வாடி!

இப்படியெல்லாம் தை நான்காவது, ஐந்தாவது நாட்கள் கூட்டுறவிலும் பல்விதமான செயற்பாட்டுப் பணிகளிலும் கரைபுரண்டு கிடக்கும் சமூகம். ஆவுடையப்பனுக்கு விளக்கேற்ற மாவிளக்குகள். அந்த மாவிளக்குகளுக்காகச் செய்யப்படுவதுதான் பச்சமாவும் தினைமாவும். அதையே விளக்குமாவு என்றுஞ்சொல்வர். நெல்லரிசி அல்லது தினையரிசியை நன்றாக இடித்து வெல்லஞ்சேர்த்து, தேன்சேர்த்துச் செய்யப்படும் மாவு. கூடவே அரிசி முறுக்கு, இராகி வடை. இதெல்லாம் தின்று ஆனதும், கரிநாள். கிடாவெட்டுகளும் வேட்டையாடிக் கொண்டு வந்ததுமாய் உண்டாட்டுகளில் ஊரும் ஊர்சார்ந்தகாடும் பரபரத்துக் கிடக்கும்.

எதற்கும் ஒரு முடிவு என்பது உண்டுதானே? உற்றார் உறவினரெல்லாம் மிஞ்சியதைக் கட்டத் துவங்குவர். மனம் கனத்துப் போகும். விடைநாள்! அதாவது விடை பெற்றுக் கொள்ளும் நாள்!!

காரிமயிலக்காளை பொன்னுப்பூங்குயிலே
கட்டினேண்டி வண்டியிலே பொன்னுப்பூங்குயிலே
பாதை கிடுங்ககிடுங்க பொன்னுப்பூங்குயிலே
போயிவாரேன் புங்கமுத்தூரு பொன்னுப்பூங்குயிலே

பண்ணையம் பார்க்க விடைபெற்றுப் புறப்படுகின்றான் கந்தசாமி! நாமும் பொங்கற்திருவிழாவினின்று விடைபெற்றுக் கொள்கின்றோம்!! 💓🌷🌷🌹


No comments: