1/29/2023

கஞ்சாப்பித்து

ஒருவருடைய வாழ்க்கைத் தரத்தை எது கொண்டு மதிப்பிடலாம்? அவருடைய மனநிலையைக் கொண்டு, அவரால் மட்டுமே மதிப்பிட முடியும். எப்படி?

ஒருவரைப் பார்த்து, ’அவருக்குக் கார்கூட இல்லை; அவர் இன்ன வேலைதான் செய்கின்றார்.  அப்படி, இப்படி...’ எனப் பலவாறாக எடைபோடுவது, எடைபோடுபவரின் கண்ணோட்டம்தானேவொழிய, அவரின் வாழ்க்கைத்தரமாக இருந்துவிடாது.

மருத்துவர் அவரைப் பரிசோதித்து, நல அளவீடுகள் எல்லாமும் வரையறைக்குள் இருக்கின்றன. இவரின் வாழ்க்கைத்தரம் நன்று எனச் சான்றிதழ் அளித்துவிட முடியுமா? முடியாது. அவருடைய மனத்துக்குள் என்னமாதிரியான சூழல்நிலவு என்பது மருத்துவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

தொடர்புடையவரேயாகிலும், அக்குறிப்பிட்ட வேளையில் மற்றவர்கள், சமூகம் எப்படி அவரைக் கருதுகின்றதென்பதை வைத்து மகிழ்வோ, வருத்தமோ கொண்டு, அதற்கொப்ப தம்நிலைப்பாட்டைச் சொல்வாரேயெனில் அது தற்காலிகமானதாகவே இருக்க முடியும். அடுத்த சிலமணி நேரங்களில் அவரின் இயல்பான நிலை அவரைப் பீடித்துக் கொள்ளும்.

சரி, எப்படித்தான் ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை அளவிடுவது?

அவருக்கு மெய்நலம் நன்றாக இருத்தல் வேண்டும். மெய்நலம் நன்றாக இருந்தால்தான் உளநிலை சமநிலை கொள்ளும். வருத்தங்கள், கவலைகள் இல்லாத நிலை ஏற்படும்.

மெய்நலம் நன்றாக இருக்க, மெய்நலத்தைத் தொடர்ந்து அவர் பேணிக்கொண்டு இருக்க வேண்டும். அப்படிப் பேணுவதற்கான தொடர் ஊக்கம் அவரிடத்திலே இருந்தாக வேண்டும். அத்தகு தொடர் ஊக்கத்திற்கு மனநலம் நன்றாக இருத்தல் வேண்டும். 

இஃகிஃகி, இது கோழியிலிருந்து முட்டையா முட்டையிலிருந்து கோழியா என்பதைப் போன்றது. ஆமாம். உளநலம் மெய்ப்பட மெய்நலம் வாய்க்க வேண்டும். மெய்நலம் வாய்க்க உளநலம் வாய்க்க வேண்டும். 

ஒருவர் தன்னிச்சையாக மனம் திறக்கும் போது, அவர் அவரைப் பற்றியே யோசித்து, மனநிறைவில் எப்படி இருப்பதாக உணர்கின்றாரோ அதுதான் அவரின் வாழ்க்கைத் தரமாக இருக்க முடியும்.

சரி, ஒருவர், தம் வாழ்க்கைத்தரம் ஐம்பது விழுக்காடு என்பதாக உணர்ந்து, அதை மேம்படுத்திக் கொள்ள விரும்புகின்றார். எந்தப் புள்ளியிலிருந்து துவங்குவது?

இந்த என் எண்ணவோட்டத்தை மீண்டும் மீண்டும் படிப்பதில் இருந்து துவங்கலாம். எப்படி? மேற்கொண்டு படிக்கத் தெரியவரும். உடல்நலம், உளநலம், சைக்கிளிக் ரெஃப்ரன்ஸ் (ஒன்றிலிருந்து இன்னொன்று) எனப் பார்த்தோம். ஆனாலும் ஏதோவொரு புள்ளியிலிருந்து மேம்பாட்டைத் துவக்கித்தானே ஆக வேண்டும். ஆக, நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி, விளையாட்டு, ஏதோவொரு உடற்பயிற்சி, சேர்ந்திசை(பஜனை), கும்மி போன்ற கலைப்பயிற்சியிலிருந்து துவங்கலாம். எடுத்துக்காட்டாக நடைப்பயிற்சி/ஓட்டப்பயிற்சி என வைத்துக் கொள்வோம்.

உடற்பயிற்சி மேற்கொள்வதாலேயே மரணத்தை வென்று விடலாமா? முடியாது. அவர் ஃபிட்னஸ், ஆனாலும் செத்து விட்டாரேயென்கின்றனர் பலர். சாவுக்கான காரணங்கள், மரபணு, சூழல், விபத்து எனப் பலவாகவும் இருக்கலாம். அறிந்தது சிட்டிகையளவு; அறியாதது பெரும் கடலளவு. அவற்றுள் நாம் அறிய முற்படுவது, வாழ்ந்திருக்கும் காலத்தில் மனநிறைவாக, தரத்துடன் இருக்க என்ன செய்யலாமென்பதே!

இயல்பான உங்களின் ஆற்றல் எல்லைக்கு அப்பாற்பட்டு அதில் ஈடுபடும் போது, உடலில் ஆங்காங்கே மெல்லிய வலி தோன்றும். அதுகண்டதும் உடலின் சிலபல இயக்குநீர்கள்(ஹார்மோன்கள்) சுரக்கத் துவங்கும். அதாவது உடல்வலியை மனக்களிப்பால் ஈடுகட்டுவதற்காக. அத்தகைய இயக்குநீரில் முக்கியமானது எண்டோர்ஃபின். உடல் எனும் வேதிக்கூடத்தில் இயக்குநீர்கள் எல்லாமே ஒரு தகவற்சமிக்கைதாம். ஆற்றில் செந்நீர் வந்தவுடன் நாம் மேல்நாட்டில் எங்கோ மழை பெய்திருக்கின்றதெனப் புரிந்து கொள்கின்றோமல்லவா அது போலே. இந்த எண்டோர்ஃபின் வேதிப்பொருளை குருதியாற்றில் கண்டதும், கீழுறுப்புகள் வலியறு நிலை, களிப்புறுநிலை முதலானவற்றுக்கான செயலிகளுக்குத் தகவற்சமிக்கைகளை மேற்கொள்ளும். அவற்றுள்,  எண்டோக்கானபினாய்ட் endocannabinoid எனும் தகவற்சமிக்கையானது மூளையில் களிப்பூக்கப் பித்துநிலையைக் கட்டமைக்கும். இரண்டு மைல்கள் ஓடிவந்து, இளைப்பாரும் நிலையில் உட்கார்ந்து கொண்டிருக்கின்றீர்கள். மிக இலேசாக உணர்வீர்கள்; சிரிப்பு வரும். எதிர்காலம் ஒளிமிகுந்ததாகக் கருதுவீர்கள். இப்படிப் பல உணர்வுகள்.  நடுவே கஞ்சாப்பூ வைத்திருக்க, தேன்கலந்த திணையுருண்டையைத் தின்றால் எழும் களிப்புநிலை ஏற்படும். அந்த மெல்லிய நுண்ணர்வே அடுத்தடுத்த செயற்பாடுகளைச் செய்வதற்கான ஊக்கநிலையையும் மேற்கொள்ளும்.

கடந்தகாலம், எதிர்காலம் சார்ந்த கவலைகள், வருத்தங்கள், ஏமாற்றங்கள் போன்ற உணர்வுகளிலிருந்து விடுபட்டுத் தற்காலத்தில் வாழத் தலைப்படுவீர்கள். அடுத்தநாளும் ஓட்டப்பயிற்சிக்கு அது நம்மை இழுத்துச் செல்லும். சிலருக்கு அது போதையாக மாறிவிடுவதும் உண்டு. மனத்தளவில் பெரும்பாலும் துள்ளலாக இருப்பீர்கள். இப்படியாக, வாழ்க்கைத்தரத்திலும் மேம்பாடு நிலைகொள்ளும்.

No comments: