1/14/2023

வாழ்த்து

ஆடுகளை மேய வைக்க வேண்டும். துணைக்கு ஒரு நாயை வைத்துக் கொண்டான் மனிதன். அந்த நாய் ஆடுகளைக் கட்டுப்படுத்தி வழிநடத்தியது. பார்த்த மனிதன், மனிதர்களையும் கட்டுப்படுத்த விழைந்தான். அதற்காக தகவற்பெருக்கிகளைப் பயன்படுத்தத் துவங்கினான்.

காரண விளைவு (cause and effect) எனும் கருதுகோளின்படி, இடம் பெறும் ஒவ்வொர் அசைவுக்கும் ஒரு விளைவு உண்டு.

போகிப்பண்டிகை வாழ்த்துகள் என்பதாக, கூந்தப்பனை எரிப்பு போன்ற ஒரு எரிப்புப் படத்தைப் பின்னணியாகக் கொண்ட வாழ்த்து மின்னட்டைகள் ஒவ்வொன்றாக வரத் துவங்கின. பார்த்த நான், இது நம்ம ஊர் வாடிக்கை இல்லையே என வருத்தமுற்று, இணையத்தில், வேம்பு, பீளை, ஆவரை கலந்த காப்புக்கட்டுப் படத்தைத் துழாவி, அப்படியான படத்தைக் கொண்டு ‘காப்புக்கட்டு நாள் வாழ்த்துகள்’ என்பதைப் பகிர்ந்தேன். கண்டவர்களுள் சிலரும் அதையே செய்தனர். நிற்க!

எரியூட்டும் படம் தமிழர் மரபென உலகம் யாவிலும் பயணிக்கின்றது. அப்படி எரியூட்டுவதால் சுற்றுச்சூழல் மாசு நேர்கின்றது. யாரோ சில இளைஞர்கள் கொண்டாட்ட மனநிலையில் இப்படியான செயலைச் செய்யக்கூடும். இதுதான் தமிழர் மரபென உண்மைக்குப் புறம்பானது வரலாற்றில் நிலைகொள்ளும். இப்படித்தான் தகவற்பெருக்கிகளை மனிதன், மற்ற மனிதர்களைக் கட்டுப்படுத்துவதில் கையாள்கின்றான்.

தம்பியானவர் ஒரு பன்மடிக்காணொலியை(viral video)ப் பகிர்ந்திருந்தார். நெஞ்சை நக்குவதான ஒரு பேச்சு. அதில் மடிந்த ஒருவர் மற்றவர்களுக்குப் பகிர, அந்த மற்றவர்கள் அவரவர் மற்றவர்களுக்குப் பகிர, பன்மடங்குப் பெருக்கமாக அது உலகில் உள்ள தமிழர்களுக்குச் சென்று சேர்கின்றது. அவருக்கு அது பணம்பண்ணும் தொழில். நமக்கு அப்படியல்லவே. உரத்துப் பேசுகின்றார். கேட்கும் நம்மை அது பதற்றத்துக்குள் அதிர்வூட்டி நெருக்கடிக்குள் இட்டுச் செல்லும். இதற்கும் அவர் அண்மையில்தாம் மூளைநரம்போ, நெஞ்சுநரம்போ பாதிக்கப்பட்டு மருத்துவம் பார்த்துக் கொண்டாரெனச் செய்திகள் வந்திருந்தன. உறவா நட்பா என்பதில், நட்பேயென கத்திக் கத்திப் பேசுகின்றார். உண்மையென்ன? மகனாக, மகளாக, பேரனாக, பெயர்த்தியாக, மருமகராக, அக்காள் பிள்ளையாக, தம்பி பிள்ளையாக ஏதோவொரு குடும்பத்தில்தான் பிறக்கின்றோம். பிழைத்துக் கிடக்கின்றோம். சாகின்றோம். எப்படி? பிறந்த போது என்னென்ன உறவுகள் இருந்தனவோ, அவற்றுடன் கூடுதலாக அப்பாவாக, அம்மாவாக,  பெரியம்மாவாக, பாட்டியாக, சித்தப்பாவாக, மாமனாக, மாப்பிள்ளையாக இப்படிப்பலவாக ஒரு குடும்பத்தில் ஒருவராகச் சாகின்றோம்.

“Family is not an important thing. It's everything.” – Michael J. Fox  பணம், புகழ், பாதுகாப்பு, அது எதுவானாலும் சரி, அதற்கும் முன்பாக அடிப்படையாகக் கொள்ளப்பட வேண்டியது குடும்பமும் உறவுகளுமே. அதுதான் சமூகத்தின் அச்சாணி. இண்ட்டர்னெட், மீடியா, சினிமா, லொட்டு, லொசக்குகளினின்று விடுபட்டு உறவுகளோடு தங்கள் பொங்கற் திருநாள்ப் பொழுதுகள் திளைத்திருக்க வாழ்த்துகளும் வணக்கமும்!No comments: