1/10/2023

மனச்சோகை

ஆண்டுதோறும் புத்தாண்டு நாளன்று ஒரு குறிப்பிட்ட நண்பரின் வீட்டில் கூடுவது வழக்கம். எட்டு அல்லது ஒன்பது குடும்பங்கள் கூடுவது வாடிக்கை. இம்முறை ஓரிரு குடும்பத்தினரால் கலந்து கொள்ள இயலவில்லை. வழமையான ஆர்ப்பாட்டமின்றி எளிமையான சந்திப்பாக அமைந்தது. நண்பர் வினவினார், “பழமை, எப்படி இருக்கீங்க?”. “ரொம்ப நல்லா இருக்கன்”. “அதெப்படி? விலைவாசி உயர்வு, பங்குச்சந்தை வீழ்ச்சி, பொருளாதார மந்தத்தின் அறிகுறி இப்படின்னு எல்லாரும் பதற்றத்துல இருக்கும் போது நீங்க மட்டும்?”. “எதையுமே தெரிஞ்சிக்கிறது இல்லைங்க. ஆட்களைச் சந்திப்பதும் மிகக் குறைவு, அதுதான் காரணம்”. மிகவும் பாராட்டினார். “நானும் முயன்று பார்க்கிறன். முடியலை” என்றார். 

தகவல். அதை இருவிதமாகப் பகுக்கலாம். நாமாகத் தேடிச் சென்று ஒன்றைக் கொண்டாலோ, தெரிவு செய்து அறிந்து கொண்டாலோ அது கல்வி. அடுத்ததாக, எதிர்கொள்வதையெல்லாமும் உள்வாங்கிக் கொள்வது. எடுத்துக்காட்டாக, இந்தப் பதிவு. உங்கள் கண்களில் படுகின்றது. வணிகம், அரசியல், சமயம் இப்படி ஏதோவொன்றின் அடிப்படையிலான உள்நோக்கம் கொண்டதாக இருக்கலாமென நினைப்பீர்களேயானால், தவிர்த்து விட்டுத்தான் சென்றாக வேண்டும். எனக்கும் உங்கள் நேரத்தை வீணடிக்க யாதொரு தேவையுமில்லை. பிறகு எதற்காக எழுதுகின்றேன்? என் சிந்தனையைப் பகிர்கின்றேன். எழுத்தாற்றலைப் பயில்கின்றேன். தற்காலத்தில் வாழ முனைகின்றேன். தேவையின்றி கடந்த காலத்தில் மனம் ஒன்றியிருந்தாலோ, அல்லது அளவுக்கும் மிஞ்சிய வகையிலே எதிர்காலத்தை எண்ணிக் கொண்டிருந்தாலோ மனம் கவலை கொள்ளவே நேரிடும். விளையாட்டு, இசை, சமையல், உடற்பயிற்சி, ஓவியம், வேலை முதலானவற்றைப் போலவே சிந்தித்து எழுவதும் தற்காலத்துக்குள் நம்மைப் பணிக்கும். வருத்தங்கள், கவலைகள், துன்பவுணர்வுகள் மேலிடாது. மனம் சமநிலை கொள்ளும். ஆகவே எழுதுகின்றேன்.

தகவல் என்பதை நாம் ஏன் பகுத்துட்கொள்ள வேண்டும்? அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. உகந்த அளவுக்கும் மிகுதியாகும் போது உள்வாங்கப்படும் தகவலைச் செரிக்க முடியாதநிலை ஏற்படும். மாறாக, செரிபடாமல் உணர்வுகளை மேலும் கீழுமாகச் செலுத்திக் கொண்டே இருக்கும். உணர்வுகள் உயர்ந்து தணியும் போது மெய்யுறுப்புகளின் வேதிவினைகளும் பெருத்துச் சிறுக்கின்றன. அதனாலே உடல்நலத்தில் கோளாறுகள் தோன்றுகின்றன. கற்கை என்பதைக் கடந்து, உள்வாங்கப்படுகின்ற தகவல் எல்லாமுமே ஏதோவொரு உள்நோக்கத்தைக் கொண்ட நிலைப்பாடுகள்(ஒப்பீனியன்)தாம். தற்போது நான் எழுதிக் கொண்டிருப்பதுகூட நான் முன்வைக்கின்ற என் மனம்சார்ந்த நிலைப்பாடுகளின் தொகுப்புதான். உங்களை நாடி வரும் தருணத்தில், விலக்கிச் செல்வதற்கு எல்லா உரிமையும் உண்டுதானே?

விடுப்புக்காலத்தில் குழுமியிருந்த மூன்று பிள்ளைகளும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதை எட்ட நின்று வேடிக்கை பார்க்க முடிந்தது. 'in my opinion, doesn't make sense to me, to me it appears' போன்ற சொல்லாடல்களெல்லாம் தங்கு தடையின்றிப் புழங்கப்படுகின்றன. தமிழில் இவற்றுக்கு நிகரான சொல்லாடல்களே இல்லை. எப்படி இல்லாமற்போகும்? பண்பாட்டிலே அத்தகைய தன்மை தூக்கலாக இல்லாததினாலே அவற்றுக்கான தேவையும் இல்லாமற்போய் விட்டதென்றுதான் கருத வேண்டி இருக்கின்றது. இஃகிஃகி.

எண்ணிப்பாருங்கள். ஒருவர் ஒரு நிலைப்பதிவினை இடுகின்றார். அல்லது, ஏதோவொன்றைச் சொல்கின்றார். ‘இது எனக்கு விளங்கிக் கொள்ள முடியவில்லை, சரியாகப்படவில்லை’ என்றோ, அல்லது அதற்கு நிகராகவோ மறுமொழிகின்றோம். என்ன நடக்கும்? சொன்னவர் நல்லவிதமாய் எடுத்துக் கொண்டு, கூடுதல் விபரம் கொடுக்க முன்வரலாமாயிருக்கும். ஆனாலும் கூட, பார்க்கும் வாசகர்கள், பார்வையாளர்கள், இவன் எழவைக் கூட்டுகின்றானென்றே நினைப்பர். அவர்கள் நினைக்கின்றார்களோ இல்லையோ, நமக்குள் அப்படி ஒரு முன்முடிவு(prejudice) நிலைகொண்டிருக்கின்றது. இதனால்தாம் நம் பிள்ளைகள் தமிழிலே பேச முன்வருவதில்லை. மனத்தில் தோன்றியதைச் சொல்வது மேலைநாட்டிலே இயல்பாக்கப்பட்டவொன்று(normalized). நம்மிடத்திலே இல்லை. காரணம் என்ன? நிலைப்பாடுகள்(opinion) என்பது வேறு, உள்ளமை என்பது வேறு, தனக்கான அறம் என்பது வேறு, பொது அறம் என்பது வேறு என்பதெல்லாம் பண்பாட்டிலே நிலைகொள்ளாமலிருப்பதுதான் காரணம்.

தங்குதடையின்றிப் பேசக்கூடிய நிலை இல்லாதவிடத்திலே உரையாடல் நிகழ்வதற்கான வாய்ப்புகளே இல்லை. வெறுமனே தகவலை, உள்நோக்கமுள்ள தகவலை உள்வாங்கிக் கொண்டே இருக்க நேரிடுகின்றது. அது அகச்சிக்கலுக்கு வழி வகுக்கின்றது. மனச்சோகை மேலிடுகின்றது. வாழ்க்கைநலம் சீர்கெடுகின்றது.

No comments: