1/07/2023

அமெரிக்க மக்களவைத் தலைவர் தேர்தலும் இழுபறியும்

கடந்த நவம்பர் மாதம் இடம் பெற்ற ஒன்றிய மன்றத் தேர்தல்களில், டெமாக்ரட் கட்சி படுதோல்வி அடையுமென எதிர்பார்க்கப்பட்டது. காரணம், விலைவாசி உயர்வு, பொருளாதாரப் பதற்றம், குடியரசுத்தலைவர் சார்ந்த கட்சிக்கு எதிராக ஒன்றிய மன்றத் தேர்தலில் வாக்களிக்கும் மரபு போன்றவை. ஆனால் கணிப்புகளுக்கு எதிராக முடிவுகள் அமைந்தன. மாகாண அவை(செனட்)யில் டெமாக்ரட் கட்சிக்குப் பெரும்பான்மை இடங்கள் அமைந்தன. மக்களவை(காங்கிரசு)யில் குடியரசுக்கட்சிக்கு 222 இடங்களும் டெமாக்ரட் கட்சிக்கு 213 இடங்களும் கிடைத்தன. அதாவது பெரும்பான்மைக்குத் தேவையானதையும் விட நான்கு இடங்களே குடியரசுக் கட்சியால் பெற முடிந்தது.

தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் குடியரசுக் கட்சியின் தோல்விக்குக் காரணங்களாகச் சொல்லப்படுவது, கருக்கலைப்பு குறித்தான குடியரசுக்கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராகப் பெண்களும் இளைஞர்களும் திரண்டு வாக்களித்தமையும். டிரம்ப்பின் தூக்கலான ஆர்ப்பாட்ட அரசியலுக்கு எதிராக குடியரசுக் கட்சியினரே கிளர்ந்ததும் என்பதுதான்.

ஒன்றிய மக்களவையின் ஆயுட்காலம் டிசம்பர் 31ஆம் நாளுடன் முடிவுக்கு வரும். அடுத்து வரும் அலுவலக நாளில் அவைகூடி, அவைத்தலைவரைத் தெரிவு செய்யும்; அதற்குப் பின்னர் மக்களவை உறுப்பினர்கள் பொறுப்பேற்றுக் கொள்வர். இதுதான் நடைமுறை. ஆனால், கடந்த 150+ ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இம்முறை இழுபறிகள் இடம் பிடித்தன. ஏன்? எப்படி??

குடியரசுக்கட்சி வசம் 222 இடங்கள் இருக்கின்றன. அவைத்தலைவர் தெரிவுக்குத் தேவையான வாக்குகள் 218. கூடுதலான இடங்கள் இருந்தும், குடியரசுக் கட்சியினரால் தலைவரைத் தெரிவு செய்ய இயலவில்லை. ஏனென்றால், கட்சி உறுப்பினர்களுக்கிடையேவும் சில பல குழுக்கள்(caucus) இருக்கும். அப்படியானதில், தீவிர வலதுசாரிக் குழுவைச் சார்ந்த 20 பேர், தலைவராக முன்மொழியப்பட்ட கெவின் மெக்கார்த்தி என்பாருக்கு எதிராக ஆர்ப்பரித்தனர்.

முதற்சுற்றில் எவரும் வாக்களித்தோரில் பெரும்பான்மையை எட்டமுடியவில்லையெனில், மறுசுற்றுக்கு போய் மறுதேர்தலை எதிர்கொள்ள வேண்டியதுதான். இப்படியாக கடந்த வாரம் முழுதும், அடுத்தடுத்து 15 சுற்றுத் தேர்தல்கள் இடம் பெற்றன. 125 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்படி இடம் பெறுவது இதுதான் முதன்முறை.

அமெரிக்கா பெரிய நாடு என்கின்றனர். வல்லரசு என்கின்றனர். ஒரு சபாநாயகரைத் தெரிவு செய்வதில் எப்படி அடித்துக் கொள்கின்றனர் பாருங்கள் என்றெல்லாம் மேலெழுந்தவாரியான பேச்சுகள் இடம் பெறுவதைப் பார்க்கின்றோம். மக்களாட்சியின் அருமை கருதித்தான் இப்படி நடக்கின்றது என்பது பலருக்கும் புலப்படுவதில்லை. ஏன், எப்படி?

அமெரிக்க மக்கள் சாசனம் என்பது ஒப்பீட்டளவில், உலகில் எங்குமில்லாதபடிக்கு உயரியதும் தனித்துவமானதுமாகும். அமெரிக்காவின் உயிர்நாடி என்பதே ஒவ்வொரு தனிமனிதனும் தனித்துவமானவன். அவனைப் பொதுமைச் சட்டகத்தில் இட்டு அடைக்கக் கூடாது என்பதும், அதிகாரம் எக்காரணம் கொண்டும் ஒரு புள்ளியில் குவிந்துவிடக் கூடாது என்பதும்தான்.

அவை இருக்கும். அதிலே சிலபல கட்சிகள் இருக்கும். ஒவ்வொரு கட்சிக் குழுவுக்கும் ஒரு கொறடா(whip) இருப்பார். அந்த கொறடா சொல்லும் ஆணைக்கொப்ப அந்த உறுப்பினர்கள் நடந்து கொள்ள வேண்டும். அந்தக் கொறடா கட்சித் தலைவரின் ஆணைக்கொப்ப செயற்படுவார். கொறடாவின் ஆணையை மீறிச் செயற்பட்டால், நடவடிக்கைக்கு உட்பட்டாக வேண்டுமென்பது சட்டம். இப்படி இருக்கும் போது, அந்த மனிதனின், உறுப்பினரின் தனித்துவம் காற்றில் பறக்க விடப்படுகின்றது. மேலும், மொத்த அதிகாரமும் கட்சியின் தலைவரின் பிடிக்குள் சிக்குண்டு போகின்றது. அடிமைத்தனம் கோலோச்ச வழிவகுக்கின்றது. அப்படியானதல்ல அமெரிக்கா. எப்படி?

ஒவ்வொரு மக்களவைத் தொகுதி உறுப்பினரும் அந்தத் தொகுதி மக்களின் விருப்பு வெறுப்புக்கு உட்பட்டவர். அந்தத் தொகுதி மக்கள் என்ன சொல்கின்றனரோ அதைத்தான் அவர் செய்ய வேண்டும். கொறடா அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. குடியரசுக் கட்சி உறுப்பினராக இருந்தாலும், தன்னிச்சையாக எப்படியும் ஓட்டுப் போடலாம். கட்சியிலிருந்தோ, மக்களவை உறுப்பினர் பொறுப்பிலிருந்தோ நீக்க முடியாது. பேச்சுவார்த்தை நடத்தி நடத்தி பரந்துபட்ட அளவில் சுமூகமான நிலை நிலவும் வரையிலும் முன்னெடுப்புகளை மேற்கொண்டுதான் ஆக வேண்டும். இப்படித்தான் அதிகாரக் குவிப்பு முறியடிக்கப்படுகின்றது.

அமெரிக்கக் குடியரசுத்தலைவர் நிர்வாகத்தலைவர் மட்டுமே. நிர்வாகத்தை நடத்தும் பொறுப்புமட்டும்தான் அவருடையது. அவர் மக்களவையிலோ மாகாண அவையிலோ உறுப்பினர் அல்லர். ஆகவே சட்டங்களை இயற்றும் வல்லமை மாகாண அவையிடமும் மக்களவையிடமும் மட்டுமே. நிர்வாகத்தில் குற்றச்செயல்கள் இடம் பெறுமேயானால், அவரைப் பொறுப்பில் இருந்து நீக்கும் வல்லமை மாகாண, மக்களவைக்கு உண்டு. இப்படியாக பிரசிடெண்ட்டின் அதிகாரக்குவிப்பும் முறியடிக்கப்படுகின்றது.

மக்களவை சட்ட வரைவுகளை முன்மொழியலாம். அவ்வளவுதான். அதை மாகாண அவை வழிமொழிந்தால்தான் சட்டநகர்வுகள் அடுத்த இடத்துக்கு நகரும். எனவே மக்களவையின்பால் அதிகாரம் குவிவதும் முறியடிக்கப்படுகின்றது. நடப்பு மக்களவை குடியரசுக்கட்சியின் வசம்.

மாகாண அவையினால் சட்டமுன்மொழிவுகளை வழிமொழியத்தான் முடியும். தாமாக ஒன்றைச் சட்டமாக்க முடியாது. இப்படியாக மாகாண அவையின்பால் அதிகாரம் குவிவதும் முறியடிக்கப்படுகின்றது. நடப்பு மாகாண அவை டெமாக்ரட் கட்சியின் வசம்.

இரு அவைகளும் முன்மொழிந்து வழிமொழிந்து அனுப்பும் சட்ட வரைவினை அதிபர் ஒப்புக்கொண்டால்தான் அது சட்டமாகும். செயற்படுத்துவதில் இன்னின்ன சிக்கல்களெனக் குறிப்புடன் நிராகரிக்கும் உரிமை அவருக்கு உண்டு. ஆனால் ஒன்றினை இருமுறை மட்டுமே அவரால் நிராகரிக்க முடியும். 

இப்படியாக, அவைக்குள் பொறுப்பென்பது ஒருவரிடத்தில் குவிந்திருக்க முடியாது.  அதிபர், மாகாண அவை, மக்களவை இவற்றுக்கு இடையேயும் அதிகாரம் குவிந்திருக்க முடியாது. பேசிப் பேசி, பேசிப் பேசி, மக்களிடையே பரந்துபட்ட அளவில் ஒப்புக் கொள்ளப்பட்டால் மட்டுமே அது செயலாக்கம் பெறும். 

15 சுற்றுகளென்ன, 150 சுற்றுகளே ஆயினும் அது மக்களின் அதிகாரக் கொண்டாட்டம்! அதுவே மக்களாட்சியின் மகத்துவம்!!


No comments: