9/05/2022

வாழ்வது எதற்காக?

1. உறங்கிக் கொண்டிருக்கும் போது, நினைவுக்கண் விழித்துக் கொண்டது. சென்ற இடத்தில் அம்மாவுக்கான கவனிப்பு கிடைத்ததா? உறங்கினாரா? இப்படிப் பல யோசனைகள். திடுக்கென விழித்து, எழுந்து உட்கார்ந்து கொண்டேன். மணியென்னவெனப் பார்த்தேன். காலை 7.30. அப்படியானால் ஊரில், மாலை ஐந்து மணி. ஃபோன் செய்து அம்மாவுடன் பேசினேன்.

2. கழிப்பறைக்குச் சென்றேன். வாட்சாப்கள் பார்த்தேன். ஒன்றிரண்டுக்குப் பதில் கொடுத்தேன்.

3. தம்பி ஒருவருடன் சேர்ந்து ஓட்டப்பயிற்சிக்கு 8.30 மணிக்குச் செல்லலாமென அவருடன் நேற்றே சொல்லி இருந்தேன். அவரும் அதே நேரம்தானாயெனக் கேட்டு மெசேஜ் அனுப்பி இருந்தார். வீட்டுக்கு வந்து பிக் செய்வதா எனக் கேட்டிருந்தார். ஆமாமென்றேன்.

4. காஃபி போட்டுக் கொடுத்தார். மதியம் சமையல் செய்து கொள்வீர்கள்தானேயென்றார் மனைவியார். ஆமாமென்றேன்.

5. சரியாக எட்டரை மணிக்கு தம்பியானவர் வந்து பிக் செய்ய, அருகிலிருக்கும் காட்டுப்பூங்காவுக்குச் சென்றோம்.

6. முக்கால் மைல் சென்றதும் ’சோ’வெனும் ஓசை கேட்டது. நாங்கள் நின்றிருந்த இடத்தில் மழை இல்லை. ஆனால் மறுகோடியிலிருந்து எங்களை நோக்கி அந்த ஓசை துரத்திக் கொண்டு வருவதை உணர்ந்தோம். நுழைவாயிலை நோக்கித் திரும்பி ஓட்டம் பிடித்தோம். எதிரே மூதாட்டி ஒருவர் அனயாசமாகச் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார் அந்தக் காட்டுக்குள்.

7. எடுத்த படங்களை வாட்சாப்பில் தரவேற்றிக் கொண்டேன். நண்பர்கள் குதூகலத்துடன் மறுமொழி இட்டனர். இசைவுமொழி அளித்தேன்.

8. வீடு வந்து சேர்ந்தேன். மகர்கள் மூவருமே எழுந்திருந்தனர். ஒருவர் குடிக்கத் தண்ணீர் கொடுத்தார். சற்றே உடற்பயிற்சிக்குப் பின் குளிக்கப் போனேன். எங்களுக்கு இன்று விடுமுறை. ஆனால், மனைவியார் வேலைக்குக் கிளம்பிச் சென்று விட்டார்.

9. தகவல் கேட்டு நண்பர் அழைத்திருந்தார். வழமையாக முன்னெடுக்கும் ’குரூப் கால்’ ஒன்றினைத் துவக்கி வைத்தேன். நண்பர்கள் இணைந்தனர். ’பக்கத்து  வீட்டு நண்பர், 52 வயதுதான், வாழ்விலிருந்து விடைபெற்றுக் கொண்டதன் காரணம் கடந்த சில நாட்களாகத் தம்மால் இணையவில்லை’ எனக் குறிப்பிட்டார். மன அழுத்தம், உரையாடலின்மையும் ஒரு காரணமென்றார். அடுத்தடுத்த நண்பர்கள் பேசினர்.

10. சமைக்கத் துவங்கினேன். இடைக்கிடையே குழுமிக் கூத்தடித்துக் கொண்டிருந்த மகர்களிடமும் சென்று வந்து கொண்டிருந்தேன். வாட்சாப்பில் ஓரிரு மெசெஜ்களுக்குப் பதிலுரைத்தேன்.

11. எல்லாரும் ஒருசேர நண்பகல் உணவு உண்டோம். இடையில் ஊரிலிருக்கும் தங்கையார் ஒருவர், ஊர்ப்படங்களை அனுப்பி இருந்தார். பேசிக் கொண்டிருந்தேன்.

12. எட்டாம் வகுப்பு மாணவர்கள் எழுதிய கதைகளைப் படித்துக் கொண்டிருந்தேன்.

13. உறக்கம் வந்தது. உறங்கிப் போனேன்.

14. விழிப்பு வந்தது. வெளியே மழை பெய்து கொண்டிருந்தது. எழுந்து வந்தேன். மனைவியாரும் வந்திருந்தார். காஃபி போட்டுக் கொடுத்தார்.

15. கட்டுரை எழுதிக் கொடுப்பதை நினைவு கூர்ந்து, இந்த மாதத்திற்கானதை அறிவுறுத்தித் தகவல் அனுப்பி இருந்தார் தோழர் ஒருவர்.

16. அலுவலக மின்னஞ்சல்களை வாசித்துப் பதில் அனுப்பினேன்.

17. துணிகளைத் தேய்த்து இருத்தி மடித்து வைத்தேன். இணையச் செய்திகளை வாசித்தேன். வீட்டைச் சுற்றிலும் இருக்கும் மரங்களைச் சென்று பார்வையிட்டேன். பெய்த மழைக்கு, தடத்தை மறிப்பது போல் நரன் இருப்பதாக மனைவியார் சொன்னதன் பொருட்டு. மரங்கள் மரங்களாகவே அழகாக இருந்தன.

18. வாட்சாப்பில், அமெரிக்க விழுமியம் என்பது குறித்து தகவல் அனுப்பினேன். கிடைக்கப்பெற்ற மறுமொழிகளுக்குப் பதில் அளித்தேன்.

19. வாழ்வது எதற்காக? சிந்தனைவயப்பட்டேன்.

20. காலையிலிருந்து நான் செயலாற்றியதை வரிசையாக எழுதிக் கொண்டிருக்கின்றேன். எல்லாருக்கும் சில பல பணிகள் இருக்கின்றன. ஏதோ ஒருநாள், ஒரே ஒருநாள்தான் முடிவு என்பது. மற்ற நாட்கள் எல்லாவற்றிலும் செய்யக் கொள்ள ஆயிரமாயிரம் உண்டு. நமக்கும் பிறருக்குமாக! சியர்ஸ்!!

-பழமைபேசி, செப்டம்பர் 5, 2022. மாலை ஏழு மணி

No comments: