4/30/2022

எண்ணங்களால் ஆனது வாழ்வு

மாந்தன் பகுத்தறிவு உள்ளவன். உறக்கம் கொள்ளும் நேரம் தவிர எஞ்சிய நேரமெல்லாம் ஏதோவொன்றைச் சிந்தையில் எண்ணிக் கொண்டே இருக்கின்றான். நினைத்துப் பாருங்கள். உறங்கிக் கொண்டிருக்கின்றீர்கள். ஏதோவொரு விநாடியில் உணர்கின்றீர்கள். அது வெளியிலிருக்கும் ஒரு குருவியின் கீரீச் சத்தமாக இருக்கலாம். அல்லது, மூக்கு அடைபட்டிருப்பது போன்ற உணர்வாக இருக்கலாம். அருகில் படுத்திருப்பவர் தம்மீது வந்து உரசுவது இடிப்பது போன்று இருக்கலாம். திடுமென வெளிச்சம் கண்களைக் கவ்வுவது போல இருக்கலாம். ஏதோவொன்று உங்கள் சிந்தையை முடுக்கிவிடுகின்றது. அந்த விநாடியிலிருந்து எண்ணங்கள் ஒவ்வொன்றாகப் பெருக்கெடுக்கத் துவங்குகின்றன. இன்னும் கொஞ்சம் படுத்திருக்கலாமென நினைப்பது ஓர் எண்ணம்,. ‘அய்யோ, போய்க் கடையைத் திறக்க வேண்டுமே?’, துணுக்குறுவது ஓர் எண்ணம். இப்படி, எண்ணங்கள் அடுத்து நித்திரையில் ஆழ்ந்து போகும் வரையிலும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

ஜமுனா அவர்கள் சொர்க்கத்தில் அந்த மரத்தின் கீழே அமர்ந்திருந்தார். ’முத்தான் எங்க போய்த் தொலைஞ்சான்னு தெரீல. பசிக்கிது’ எண்ணம் தோன்றியது. முத்து என்பவர் எங்கோ தொலைந்து போய் விட்டார். எதிரில் ஒரு மேசையின் மீது, பலதரப்பட்ட உணவுகளும் இருந்தன.

வியப்புக்குள்ளானார் ஜமுனா. ‘இதெல்லாம் போங்காட்டமாட்ட இருக்கூ?’ எண்ணினார். அவையெல்லாம் காணாமற்போய் விட்டன. ‘அடகெரகமே, நம்ம நெனச்சதல்லா ஒடனுக்குடனே நடக்குது. மெய்யாலுமே பசிக்குது. அதுக இருந்தா தேவலை’ எண்ணினார். மீண்டும் அவை வந்து சேர்ந்தன.

‘ஆகா. எல்லாம் எனக்கா? அருமை. எல்லாம் இருக்கூ. ஆனா சரக்கக்காணம்?’ எண்ணினார். நான்கு குவளைகளில் சோமபானம், சுராபானம், ஜெயந்திபானம், சாந்திபானம் தோன்றின. உள்ளேபோனதும், பாரிசில் தோழனுக்குக் கிடைத்த அனுபவத்தை எண்ணினார். அது போன்றேவும் மாதுவின் கவட்டைக்குள் அகப்பட்டுக் கொண்டார். ‘அடச்சீ, மரத்துக்குக்கீழயே இருந்திருக்கலாம்’ எண்ணினார். மீண்டும் மரத்துக்குக்கீழேயே வரலானார்.

குவளைகளை மாந்தோமாந்தென்று மாந்தி அடித்துக் காலி செய்தார். ’கொஞ்சம் தூங்குனா நல்லா இருக்கும்’ எண்ணினார். மஞ்சம் வந்தது. ஆனால் மங்கை வரவில்லை. ஏனென்றால் சரக்கு ஓவராகிப் போனதால் மட்டையாகி விட்டார், எண்ணியிருக்கவில்லை. நல்ல உறக்கம். எண்ணங்கள் தோன்றுவது நின்று போயிருந்தன. மப்பெல்லாம் மங்கிய அந்தப் பொழுதில் மணாளனுக்கு எண்ணம் தோன்றியது. ‘இதெல்லாம் யாரு வேலையா இருக்கும்? எதனா சூனியக்காரி நம்மள வெச்சிக்கிச்சி ஜோலி பண்றாளோ? ’. சூனியக்காரி எதிரில் வந்து, ’லக லக லக’வென்று ஆர்ப்பரித்தது. ‘அய்யோ, இவ என்னியப் புடிச்சுத் துன்னுபோடுவா போலிருக்கே?’ எண்ணிக்கூட முடியவில்லை. முடிஞ்ச்.

திடுமெனப் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தார் ஜமுனா. ‘ஓ, இதெல்லாம் கனவா? ஃப்பூ. ஆனா, கனவு சொல்ல வந்த மெசேஜ் கரக்ட்டு. எல்லாம் எண்ணங்களால் ஆனது. நாம என்ன நினைக்கிறமோ அதுதான் செயல்வடிவம் பெறும். நல்லதே நினைக்கணும். அப்ஜக்டிவா நினைக்கணும். எண்ணங்களால் ஆனதுதானே ஒவ்வொருவருடைய வாழ்வு! முத்தான்? அவனும் நல்லவந்தான், நாம நல்லதே எண்ணுவோம்!!’.


4/29/2022

மானம்

பாப்பநூத்துக் கவுண்டர் என்றால் அந்த சுற்று வட்டாரமும் அறியும். என்ன காரணம்? எந்தத் தோட்டத்தில் மோட்டார் காயில் கருகினாலும், அவர் போயித்தான் கம்பி கட்டி மோட்டார் எடுத்து விட்டாக வேண்டும். அல்லாவிடில் பண்ணையம் படுத்து விடும். அந்த அளவுக்கு வாகத்தொழுவு ஊராட்சி, மற்றும் அண்டிய கிராமங்கள் கிட்டத்தட்ட பத்து ஊர்களிலும் பிரபலம். பத்து ஊர்களிலும் தாய் புள்ளையாக அவருடன் பழகுவார்கள். தோட்டத்திலிருந்து தேங்காய், காய் கனிகள் எல்லாமும் அவர்களாகவே அவ்வப்போது பணமேதும் வாங்காமல் பாப்பநூத்துக் கவுண்டர் கடைக்குக் கொடுத்து விடுவார்கள். அவர்தாம் எத்தனை தோட்டத்துக் காய்கறிகளைத் தன் வீட்டில் புழங்குவார்? கொடுத்தனுப்புவதையும் திருப்பி அனுப்ப முடியாது. வாங்கிக் கொண்டு, எங்கள் வீட்டுக்கெல்லாம் கொடுத்தனுப்புவார். நான் வளர்ந்து படிப்புக்காக கோயமுத்தூர் வந்தாகிற்று. விடுமுறை நாளொன்றில் ஊருக்குப் போனேன். ஊரே கடுஞ்சோகத்தில். என்ன விசயமென்றால், பாப்பநூத்துக் கவுண்டரைக் காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லையாம். ஆங்காங்கே திண்ணைகளில் உட்கார்ந்து, மோவாய்க்குத் துண்டைக் கொடுத்து காவியபடி சோகத்தைப் பங்கு போட்டுக் கொண்டிருந்தனர். ஒருவர் சொன்னார், “மானத்துக்குக் கட்டுப்பட்டு மனுசன் இப்படிப் பண்ணிட்டாரே?”. நான் எங்கள் அம்மாவிடம் சென்று கேட்டேன். அவரது மகன் பணத்துக்கு ஆசைப்பட்டு ஏதோவொரு தோட்டத்துக் காயிலை ஆட்டையப் போட்டு அந்தப் பணத்தில் ஏதோ செலவு செய்திருக்கின்றார். இவரது கவனத்திற்குத் தெரிய வரவும், உடனே துண்டை உதறிக் கிளம்பியிருக்கின்றார். டாய்லட் இல்லாத காலமது. மந்தைக்குச் செல்கின்றாரென இருந்திருக்கின்ரனர் வீட்டில். போனவர் போனவர்தாம். ஆக, இங்கு மானம் என்பது என்ன? அது ஒரு உருவகம். மானசீகமான உணர்வு. ஆங்கிலத்தில் Integrity என்பதாகக் கொள்ளலாம்.

மேலைநாடுகளில், அலுவலகங்களில், அவரவர் மேலாளர் என்பவர், பணியாளரின் வேலை, அவுட்புட், பெர்ஃபாமன்ஸ் என்பதையுங்கடந்து, பேச்சு, நடத்தை முதலானவற்றையும் கவனித்து வருவார். நல்ல திறமையும், புரடிக்டிவிட்டியும் இருந்திருக்கும். ஆனாலும்? ஒருநாள் அழைத்துக் குழையக் குழையப் பேசுவார். கடந்தகாலப் பங்களிப்பைப் பற்றிப் பாராட்டுவார். பேசிக்கொண்டேவும் சொல்வார், ”உன்னுடைய வேலையிடம் தவிர்க்க இயலாத காரணத்தால் இல்லாமற்போகின்றது. நான் எவ்வளவோ போராடிப் பார்த்தேன். முடியவில்லை. சாரி” என்று சொல்லி பிங்க் ஸ்லிப்பைக் கொடுப்பார். என்ன காரணம்? low integrity என்பதுவும் ஒரு காரணமாயிருக்கலாம். ஏதோவொரு திறனாய்வு (analysis), வணிகத்திறனாய்வாளர்(business analyst) சொல்லப்படும் கருத்துக்கு ஏதுவாக ஒன்றைத் தருகின்றார். தரப்படுகின்ற தரவு நம்பகமானதாகவும் உகந்ததாகவும் இருந்திடல் வேண்டும். பெற்றுக் கொள்பவரும் அதனை ஆய்ந்துக் கற்றுக் கொள்ள முற்பட வேண்டும். நம்பகத்தன்மையற்றதாக இருந்தால் முன்னவரின் கிரிடிபிளிட்டி கேள்விக்குள்ளாக்கப்படும். பெற்றுக் கொள்பவரும் அதனைக் கற்றுக் கொள்ளாமல், மேலெழுந்தவாரியாக ஆய்வெனும் பேரில் உதாசீனப்படுத்தினால் இவரின் கிரிடிபிளிட்டி கேள்விக்குள்ளாக்கப்படும்.

இப்படியாகத் தொடரியக்கத்தில்(program), பல பணித்திட்டங்கள்(projects) இடம்பெறும். சில பல பிராஜக்டிகளிலும் இப்படியான மானக்கேடு (low integrity) புலப்படுமேயானால், கூட்டியக்கத்துக்கு(team work) ஒவ்வாதவர் என்பதாகப் பொருள் கொள்ளப்படுவார்.

பேசுபொருளின் மீது பார்வை செலுத்தப்படல் வேண்டும். கருத்து, மாற்றுக்கருத்து என்கின்ற அளவில் அது அலசப்படலாம். ஆனால், கருத்தினை முன்மொழிபவர் மீதான பார்வை இருந்திடல் ஆகாது. எடுத்துக்காட்டாக, ஏதோவொரு நாட்டில் மின்சாரப்பிரச்சினை இருக்கின்றதெனவும், அதற்கான சான்றாக ஏதோவொன்றையும் மேற்கோள் காண்பிக்கின்றார் ஒருவர். கொடுப்பவர் உண்மையான சான்றைக் கொடுக்க வேண்டும். கொடுத்துவிட்டார். அல்லாவிடில் அது அவருக்கான மானக்கேடு. பெறுபவர், அதனைத் தோற்றுவாயாகக் கொண்டு மேலும் கற்றுக் கொள்ள முனைய வேண்டும். மாறாக, கற்றுக் கொள்வதற்கான முனைப்பு ஏதுமின்றி, இது உற்பத்தி செய்யப்பட்டதாக இருக்கலாமெனத் தீர்ப்பெழுதுவது நலம்பயக்காது. மேலும், அமைதியாக கவனித்துக் கொண்டிருப்பர் மேலாளர்கள். கொடுத்தவர் அதனைத் தனக்கேற்பட்ட அவமானமாகக் கருதலாம். அப்படியானவர் சென்று முறையிடும் போது, பின்னவருக்கு அது பெரும் சிக்கலாகக் கூட முடியும். மேலைநாடுகளில், இத்தகைய நுண்ணுணர்வுகளுக்கு முக்கியப்பங்குண்டு.


4/27/2022

மெய்ப்பொருள்

ஆய்வுப்பணிகள்/ஆராய்ச்சி என்பது, இளம் மாணாக்கர்களுக்கு துவக்கப்பள்ளியிலேயே அறிமுகப்படுத்தப்படுகின்றன அமெரிக்காவில்.https://www.soinc.org/ ஆண்டுதோறும் எங்கள் வீட்டுப் பிள்ளைகள்கூட இதில் பங்கேற்று வருகின்றனர். அப்படித்தான் 1997ஆம் ஆண்டு, ஐடகோ மாநிலத்தைச் சார்ந்த 14 வய்து மாணவன் நேதன் ஷோனர் என்பவர் ஓர் ஆய்வுப் பணியை மேற்கொண்டு முதற்பரிசினைத் தட்டிச் சென்றார்.

அவர் எடுத்துக் கொண்ட பொருள் Dihydrogen monoxide என்பது பற்றியதாகும். கீழ்க்கண்ட தன் முன்மொழிவுகளுக்கு உரிய சான்று(evidences)களைக் கொடுத்து விரிவுரை நிகழ்த்தினார்.

---இந்த வேதிப்பொருளானது வாயு நிலையில் இருக்கும் போது புண்களை உண்டாக்கும்.

---உலோகங்களுடன் சேரும் போது அரிப்புக்கு வித்திடுகின்றது.

---ஆண்டுதோறும் எண்ணற்றவர்களின் மரணத்துக்குக் காரணமாக இருக்கின்றது.

---அமிலமழை, நம் உடலில் இருக்கும் கட்டிகள் முதலானவற்றில் இருக்கின்றது.

---அதிகமான சிறுநீர்கழிப்பு, வயிற்று உப்பல் போன்றவற்றுக்கும் வித்திடுகின்றது.

---மிகையாகிப் போகும் போது நம் உயிர்க்கும் கேடாகும்.

இப்படியான இந்த வேதிப்பொருள் பாவனையை நாம் ஏன் தடை செய்யக் கூடாது? தடை செய்வதன் மூலம், ஏற்படும் சேதாரங்களை, மரணங்களை முற்றிலுமாகத் தவிர்க்க முடியாவிட்டாலும் கூட ஓரளவுக்காவது மட்டுப்படுத்தலாம்தானே? சர்வே எடுக்கப்பட்டது.

86% வாக்குகள், இது டாக்சிக் கெமிக்கல்தாம், நச்சுப்பொருள்தாம், தடை செய்யப்படுவதற்கு ஆதரவாக வாக்குகள் பதிந்தன. மாணவன் ஆய்வு முடிவுகளை எடுத்துக் கொண்டு மேடையேறினான். ஆய்வு முடிவுகளைப் படிப்படியாக விளக்கி எடுத்துக் கூறினான். கடைசியில் சொன்னான், என் ஆய்வு என்பது Dihydrogen monoxide என்பது பற்றியல்ல. என் ஆய்வு என்பது, என் ஆய்வின் தன்மையைப் பற்றியது என்று சொல்லி,  Dihydrogen monoxide என்பது வேறொன்றுமல்ல, தண்ணீர்தான். நம் உடலே நீரால் ஆனதுதானே? அதைத் தடை செய்யலாகுமா?? அரங்கம் எழுந்துநின்று கரவொலி எழுப்பியது.

இதேபோலத்தான் நேற்று தம்பி ஒருவர் ஒரு நறுக்கினை(flyer) அனுப்பி இருந்தார். அதில், சில பல உணவுப் பொருட்கள் பட்டியல் இடப்பட்டு இருந்தன. அவையாவும், நம் உடலுக்குத் தேவையான சத்துகள் உறிஞ்சப்படுவதைத் தடுக்கவல்ல உணவுகள் என்பதாக அந்த ஃப்ளையர் சொல்கின்றது. உண்மைதாம். Phytates (phytic acid) in whole grains, seeds, legumes, some nuts—can decrease the absorption of iron, zinc, magnesium, and calcium. எதற்கு இப்படியான தகவலைச் சொல்கின்றனர்? ஓர் அதிர்ச்சி மதிப்பீட்டுக்காக, இப்படியான அதிர்ச்சிகரமான, அச்சுறுத்தக்கூடிய தகவலைச் சொல்வதன் வழி, தம்மை விளம்பரப்படுத்திக் கொள்வதும் பணம் பார்ப்பதுமாக கண்ட்டெட்டுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நான் ஒரு விநாடி கூடத் தயங்கவில்லை. “தண்ணீரில் ஊறவைத்தோ, வேகவைத்தோ தின்றால் அந்த பைட்டிக் ஆசிட் அடிபட்டுப் போகும், ஒரு தீங்குமில்லை” எனும் தகவலை அனுப்பி வைத்தேன்.

மாணவன் நேதன் ஷோனருக்கு வருவோம். In recognition of his experiment, journalist James K. Glassman coined the term "Zohnerism" to refer to "the use of a true fact to lead a scientifically and mathematically ignorant public to a false conclusion".

ஊடகங்களிலும், பிரச்சார மேடைகளிலும், தலைவர்கள் பேச்சிலும் வளைக்கப்பட்டதும் திரிக்கப்பட்டதும் மறைக்கப்பட்டதுமாகப் பலவும் இருக்கும். This occurs a lot more often than you think, especially when politicians, conspiracy theorists, etc., use proven facts to persuade people into believing false claims.நாடலையும் தேடலையும் நாம்தான் கட்டமைத்துக் கொள்ள வேண்டும்.  டாக்‌ஷோக்கள், பட்டிமண்டபங்கள், வெட்டி நறுக்கப்பட்ட வீடியோத் துண்டுகள், யுடியூப்காணொலிகள் என எங்கும் இப்படியான வேலைகள் நீக்கமற நிறைந்திருக்கின்றன. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. Be aware of Zohnerism.

https://en.wikipedia.org/wiki/Dihydrogen_monoxide_parody

4/25/2022

வாழ்தல்

பணிதல் என்பது வேறு; குனிதல் என்பது வேறு! அதைப் போலவே, வாழ்தல் என்பது வேறு; பிழைத்திருத்தல் என்பது வேறு. எப்படி?

பணி என்றால் என்ன? செய்கை. செய்பவரைத்தான் பணியாளர் என்கின்றோம். எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து. எல்லாருக்கு நல்லதாம் செய்து கொடுப்பது; எல்லாச் செல்வங்கள் இருப்பினும் இச்செல்வம் அதனைக் காட்டிலும் சிறப்பு. செயலன்றிப் பிறர் பொருட்டுக் குனிதல் வெறும் பாவனை என்பதினாலே அது வெற்றுக் குனிதல். கீழ்ப்படிதல் என்றாகின்றது.

மூச்சுக் கொண்டு, சிந்தை கொண்டு, ஒவ்வொரு பொழுதையும் நுகர்ந்து செழித்து உயிர்த்திருப்பது வாழ்தல். வாழ்க, வாழிய, வாழ்வு என்பதெல்லாம் இதன் நீட்சி. தவறவிடுதல், குற்றம்புரிதல், தீங்கிழைத்தல் இவையெல்லாம் பிழை. இவையெல்லாம் எப்போது நேரும்? ஏதோவொரு வேலையை, செயலைச் செய்யும் போது நேரும். அப்படியாக, வேலை செய்து கொண்டிருப்பது, செயலாற்றிக் கொண்டிருப்பது பிழைப்பு. பிழைப்புக்கு என்ன செய்து கொண்டிருக்கின்றாய்? தச்சு வேலை செய்து கொண்டிருக்கின்றேன். என்ன வாழ்வுமுறையைத் தழுவி இருக்கின்றாய்? நான் சைவமுறையைக் கடைபிடிக்கின்றேன்.

ஆக, பணிதல் என்பது வேறு; குனிதல் என்பது வேறு! வாழ்தல் என்பது வேறு; பிழைத்திருத்தல் என்பது வேறு. 

ஒருவர் வாழ்கின்றார். இன்னொருவர் பிழைத்துக் கொண்டிருக்கின்றார். எது சிறப்பு? வாழ்தல் சிறப்பு. ஏன்? முன்னவர் தேவைகளுக்கான பொருளுக்காகவும் சமூகநலத்துக்காகவும் பிழைத்துக்கொண்டேவும் தன் உயிர்த்திருத்தற்காலத்தை இலக்கியம், விளையாட்டு, கேளிக்கை, களிப்பு எனப்பலவாக அனுபவிக்கின்றார். அடுத்தவர் பொருளுக்காகவும் குடும்பத்துக்காகவும் பிழைப்பென்பதைமட்டுமே தன்னகத்தே கொண்டிருக்கின்றார். ஆகவே முன்னவர் சிறப்புக் கொள்கின்றார்.

30 ஆண்டுகால வாழ்வு, 20 ஆண்டுகாலப் பிழைப்பு என ஐம்பது ஆண்டுகால ஆயுள் முன்னவருக்கு. 60 ஆண்டுகாலப் பிழைப்பு அடுத்தவருக்கு. எது சிறப்பு? வாழ்வுடையவர் சிறப்பு, வாழ்வே அற்றவர் கூடுதல் ஆயுள் கொண்டவராயினும் பின்னடைவுதான்.

சரி, சிறப்பான வாழ்வு எப்படி அமைத்துக் கொள்வது? உயிர்த்திருத்தலின் தரம் குன்றாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒருவருக்குப் பல் ஈறு புண்பட்டிருக்கின்றது. மீச்சிறுவலிதான். அதற்காக மருத்துவமனைக்குப் போவதாயென நினைக்கும் அளவுக்கு அது சிறுவலிதான். ஆனால், நாளெல்லாம் நச் நச் நச்சென வலித்துக் கொண்டேயிருக்கின்றது. தரமான வாழ்வா அது? இருக்க முடியாது. சரி செய்து கொள்ளப்பட வேண்டும். அப்போதுதான் அவர், அவருக்கான பொழுதுகளை அனுபவிக்க முடியும்.

காலை பத்துமணிக்குத் துவங்கினால் நாளெல்லாம் சிறு ஏப்பம். அது ஏப்பம் என்று சொல்லக்கூட முடியாது. சின்னதாக, அவ்வப்போது இரைப்பையிலிருந்து சிறுகாற்று வெளிப்படுகின்றது. மார்புப்பகுதியில் ஏதோவொரு இடத்தில் சிறி எரிச்சல் ஓரிரு விநாடிகள்தாம், ஆனால் நாளெல்லாம் இருந்து கொண்டே இருக்கின்றது. சமகால ஜீவராசிகள் பரபரத்துக் கிடக்கின்றனர். வேலை, சமூகக் கொந்தளிப்பு இப்படியாக. அதில் நாமும் ஓர் அங்கம். அத்தகு பரபரப்பில் இதெல்லாம் ஒரு பிரச்சினையா? படுக்கும் போது, வலதுபக்கம் ஒருக்களித்துப் படுத்தால் பின்முதுகில் ஏதோ ஊர்வது போல இருக்கின்றது. இடப்பக்கம் திரும்பிப் படுத்துக் கொள்கின்றோம். தூங்கிப் போகின்றோம். அடுத்தநாள், அதே கதை. சிறப்பான, தரமான வாழ்வா?? இல்லை. No quality of life.

என்ன செய்யலாம்? உடலைக் கவனிக்க வேண்டும். வாய்க்குள் செல்லும் ஒவ்வொன்றையும் கவனிக்க வேண்டும். ஏதோவொன்று உங்களின் செரிமானத்துக்கு ஏதுவாக இல்லை. ஆமாம். ஒருவாரமாக பால் இல்லாத காஃபிதான். what a relief! Jai-Ho!!💪

4/19/2022

56ஆவது நாளில் உக்ரைன் போர்

 


இரஷ்யாவின் பார்வையில்:

1. எல்லாம் திட்டமிட்டபடி போய்க்கொண்டிருக்கின்றது. மேற்குலக நாடுகளின் பொருளாதாரத் தடையினால் இரஷ்யாவை ஒன்றும் செய்துவிட முடியவில்லை. மக்களின் இயல்பு வாழ்க்கை வழமைபோலவே இயங்கிக் கொண்டிருக்கின்றது.

2. கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளைப் பிடித்தாயிற்று. இன்னும் எஞ்சியிருக்கின்ற கிழக்குப் பகுதிகளையும், நாஜிக்களிடமிருந்து விடுவித்து விட்டால் முழுவெற்றி. மே 9ஆம் நாளுக்குள் அவையும் இரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்.

3. உக்ரைனின் 1200 இராணுவக் கட்டமைப்புத் தளங்களை முற்றிலுமாக அழித்தொழித்தாயிற்று.

4. இரஷ்யாவின் பெட்ரோல்/எரிவாயு இல்லாமல் ஐரோப்பிய நாடுகளால் இயங்க முடியாதென்பதையும் நிரூபித்தாயிற்று.

மேற்குலக நாடுகளின் பார்வையில்:

1. இரஷ்யாவால் உக்ரைனைக் குறிப்பிட்ட 4 நாட்களுக்குள் கைப்பற்ற முடியவில்லை.

2. 50 ஆயிரம் இராணுவத்தினர் உயிரிழப்பு மற்றும் காயங்களுக்கு ஆட்பட்டிருக்கின்றனர். கப்பல்கள் பறிபோனதில், இரஷ்யத் தரப்பின் நேவி முற்றிலுமாகப் போரில் இருந்து ஒதுங்கிக் கொண்டது.

3.முன்னேறவிட்டுப் பின் சுற்றி வளைப்பதன் மூலம் பல பகுதிகள் மீண்டும் உக்ரைன் வசம் வந்திருக்கின்றன. அதனால் இரஷ்யாவின் தளபாடங்கள் உக்ரைன் வசம் வந்து கொண்டிருக்கின்றன.

4.பொருளாதாரத் தடையினால் 5 இலட்சம் பேர் இரஷ்யாவை விட்டு வெளியேறி இருக்கின்றனர். மே மாதம் முதல்வாரத்தில் நாடு திவாலானதாக அறிவிக்கும் சூழல் ஏற்படலாம்.

5. இரஷ்யாவின் மீதான தடைகள் நீண்டகாலத்துக்கும் நீடிக்கும். அதனால் நாடு முன்னெப்போதுமில்லாத அளவுக்கு பின்னடைவுகளைச் சந்திக்கும். தன் வசமுள்ள இராணுவத் தளபாடங்களைச் சீர்திருத்தக் கூட வழியில்லாமல் போகும். எல்லாமும் தளபாடங்களின் இருப்பு இருக்கும் வரையிலும்தான்.


4/16/2022

உன்வினை vs ஊழ்வினை

“ஆட்சி படுகேவலம். எங்க பார்த்தாலும் டிராஃபிக்ஜாம், நகரமுடியலை”

“கொடுங்கோலாட்சி, விலைவாசி கொஞ்சநஞ்சம்னு இல்ல”

“அமெரிக்கான்றாங்க, ஆனா மருத்துவச் செலவுகள் எக்கச்சக்கம். நாடா அது? தூ!”

இப்ப, மேற்கண்ட கூற்றுகள் எல்லாம் ஒருவருடைய ஒப்பீனியன். அது அவருடைய கருத்துரிமை. தன்னோட மனத்தில் தோன்றும் உணர்வை இயல்பாக வெளிப்படுத்துகின்றார். அதற்கு யாரும் தடை போட முடியாது. அவருக்கு அப்படியான உணர்வுகள் இருப்பதைப் போலே, அதே தெருவில், ஏன் அதே வீட்டில் இருக்கும் இன்னொருவருக்கு நேர்மாறான உணர்வுகள் இருக்கலாம். அவர் அவருடைய உணர்வுகளை வெளிப்படுத்தும் போது, அது அவருடைய கருத்து அல்லது மாற்றுக்கருத்து ஆகின்றது. அதற்கும் யாரும் தடை போட முடியாது. ஏட்டிக்குப் போட்டியாகவே இருந்தாலும், இயல்பான கருத்தாகக் கட்டமைக்கப்பட்டிருப்பதால் அது அவருக்கான உரிமையாக ஆகிவிடுகின்றது. இப்ப, அவற்றையே கொஞ்சம் மாற்றி அமைச்சிப் பார்க்கலாம்.

“ஆட்சி படுகேவலம். எங்க பார்த்தாலும் டிராஃபிக்ஜாம், காந்திபுரம் பாலத்துமேல நகரமுடியலை”

“கொடுங்கோலாட்சி, விலைவாசி கொஞ்சநஞ்சம்னு இல்ல, கிலோ 4 ருபாய் கத்தரிக்கா 16 ருவாய்”

“அமெரிக்கான்றாங்க, ஆனா மருத்துவச் செலவுகள் எக்கச்சக்கம். கொரொனா ஊசி 22 ஆயிரம் ரூபாயாம். நாடா அது? தூ!”

காந்திபுரம் பாலத்தில் நெரிசலா? 4 ருபாய்க்கு கத்திரிக்காய் அண்மையில் விற்கப்பட்டதா? தற்போது 16 ரூபாயா? கொரொனா ஊசிக்கு பணம் வாங்கப்படுகின்றதா? இதற்கான சான்றுகள் கேட்டால் கொடுக்கப்பட வேண்டும். அல்லாவிடில், அவை ஃபேக்நியூஸ். அவதூறு.

முன்னதுக்கும் பின்னதுக்கும் என்ன வேறுபாடு? முன்னது பொத்தாம் பொதுவாகத் தன் உணர்வுகளைக் கடத்துவது. பின்னது, தன் மனத்தில் இருக்கும் சார்புத்தன்மை, ஒவ்வாமை, வெறுப்பு, காழ்ப்பு, வக்கிரம் போன்றவற்றால் போகின்ற போக்கில் அடித்து விடுவது. எதிர்த்தரப்பை மலினப்படுத்துவதற்காகச் செய்வது. ஆனால், அத்தகைய போக்கு தனக்குத்தானே வைத்துக் கொள்ளும் ஆப்பு.

4/14/2022

50ஆவது நாளில் உக்ரைன் போர்

உக்ரைன் மீதான போருக்கான இலக்குகளாகச் சொல்லப்பட்டவை கீழே வருமாறு:

1. உக்ரைன் நாட்டை இராணுவமில்லா நாடாக்குவது (டிமிலிட்டிரைசேசன்)

2. ஆட்சிமாற்றம் கொணர்வது (டிநாஜிபிகேசன்)

3. டான்பாஸ் & லுகான்ஸ்க் தனிநாடுகளாகக் கட்டமைப்பது

காரணமாகச் சொல்லப்பட்டவை கீழே வருமாறு:

1. நேட்டோவில் உக்ரைன் சேர்வதினால், நேட்டோ தன் எல்லைக்கே வருகின்றது

2.இரஷ்யச் சிறுபான்மையினர் பாதிக்கப்படுகின்றனர்

50 நாட்கள் கடந்த இன்று இவற்றின் நடப்பு நிலைமை என்ன?

உக்ரைன் நாட்டை இராணுவமில்லா நாடாக்குவது (டிமிலிட்டிரைசேசன்): முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இராணுவத்தளபாடங்கள் மேற்குலகில் இருந்து வந்து சேர்ந்திருக்கின்றன. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நெம்ப்டியூன் ஏவுகணைகளால், பலம்வாய்ந்த இரஷ்யப் போர்க்கப்பல் செயலிழப்புச் செய்யப்பட்டிருக்கின்றது. 3 நாட்களில் ஒட்டுமொத்த உக்ரைனும் கட்டுப்பாட்டுக்கு வருமெனச் சொன்னநிலையில், தலைநகர்ப் பகுதியில் இருந்து பின்வாங்கிக் கொண்டது இரஷ்யா. 40,000 போர் வீரர்கள் வரை(காயம்+மரணம்) படைக்குறைப்புக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றது.

ஆட்சிமாற்றம் கொணர்வது (டிநாஜிபிகேசன்): அண்டைய நாடான போலந்துக்குச் சென்று அங்கிருந்து நிர்வாகப்பணிகளைச் செய்யுமாறு அமெரிக்கா சொன்னது. ஆனாலும், தன்னம்பிக்கையோடு உக்ரைன் நிர்வாகம் தலைநகரிலேயே இருந்து கொண்டது. இன்று, உலகத் தலைவர்களெல்லாம் தலைநகரான கீய்வ் நகருக்குச் சென்று வந்து கொண்டிருக்கின்றனர்.

டான்பாஸ் & லுகான்ஸ்க் தனிநாடுகளாகக் கட்டமைப்பது: இரஷ்யாவுக்குக் கணிசமான வெற்றி கிடைத்திருக்கின்றது. ஆனாலும் எஞ்சி இருக்கும் நகர்ப்புறப் பகுதிகளைக் கைப்பற்றுவதில்தான் முழு வெற்றி அடங்கி இருக்கின்றது.

நேட்டோவில் உக்ரைன் சேர்வதினால், நேட்டோ தன் எல்லைக்கே வருகின்றது: இது அப்பட்டமான பொய். ஏனென்றால், உக்ரைனைக் காட்டிலும் இரஷ்யத் தலைநகருக்கு அருகில் உள்ள லாட்வியா, லித்துவேனியா, எஸ்டோனியா ஆகிய நாடுகள் ஏற்கனவே நேட்டோவில் உள்ளன. தற்போது, மிக அருகில் உள்ள ஃபின்லாந்து, ஸ்வீடன் இரண்டும் ஜூன் மாதத்தில் நேட்டோவில் சேர்வதாக அறிவித்து விட்டன. சொந்த செலவில் சூன்யம். அப்படிச் செய்தால், அந்தநாடுகளை நோக்கி அணு ஆயுதங்களை நிறுத்துவதாக மிரட்டுகின்றது இரஷ்யா.

இரஷ்யச் சிறுபான்மையினர் பாதிக்கப்படுகின்றனர்: சண்டை நடைபெறும் இடங்கள் எல்லாமுமே முற்றிலுமாக இரஷ்யமொழிச் சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகள்தாம். சண்டையினால்தான் அவர்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். மேலும், பிடிபட்ட பகுதியில் வசிக்கும் மக்களை வடதுருவத்தின் வட எல்லையான சைபீரியாவுக்கு வலுக்கட்டாயமாக நாடு கடத்தியும் வருகின்றது.

மே 9ஆம் நாளுக்குள், லுகான்ஸ்க்/டான்பாஸ் பிடிபட்டு, வெற்றிவிழாவாக இரஷ்யத் தலைமை கொண்டாடத்தான் போகின்றது. வெற்றிதான். அப்படியானால் தோல்வி அடைவது யார்? இரஷ்யமக்களே.


4/10/2022

47ஆவது நாளில் உக்ரைன் போர்

 




கடந்த வாரத்தில் பெரிதான நகர்வுகள் எதுவும் இடம் பெறவில்லை. அவரவர், அவரவர் எல்லைக்கோட்டில் நின்று கொண்டிருக்கின்றனர். வடக்குப் பகுதியில், உக்ரைன் தலைநகர் இருக்கும் திசையிலிருந்து முற்றுமாக வெளியேறிவிட்டது இரஷ்யா. தெற்கு, கிழக்குப் பகுதியில் முதலிரண்டு வாரங்களில் பிடிக்கப்பட்ட பகுதிகளைத் தக்கவைத்துக் கொண்டிருக்கின்றது.

மே 9ஆம் நாளுக்குள் எப்படியாவது, கிழக்கு உக்ரைன், டான்பாஸ், லுகான்ஸ்க் ஆகிய இருமாநிலங்களையும் கைப்பற்றியாக வேண்டுமெனத் திட்டமிட்டு புதுத்தளபதியை நியமித்திருக்கின்றார் புடின். மே 9ஆம் நாளென்பது, இரண்டாம் உலகப்போரில் சோவியத் ரஷ்யா வெற்றி பெற்ற நாளாகும். ஆண்டுதோறும் அந்த வெற்றிநாளைக் கொண்டாடுவது வழக்கம். இந்த மே 9ஆம் நாளை, இரட்டிப்பு வெற்றியாகக் கொண்டாட வேண்டுமென்பது இரஷ்யாவின் எண்ணம். மேலும், வடக்குப் பகுதியிலிருந்து பின்வாங்கிய படைகளும் தெற்கு, கிழக்குப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. அடுத்த வாரத்தில் தாக்குதல் தீவிரமடையலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

அரசியல் சூழலைப் பொறுத்த மட்டிலும், உக்ரைன் ம்ற்றும் மேற்குலக நாடுகளுக்குள் உக்ரைன் அதிபர் அமோக ஆதரவு பெற்றவராகக் கருதப்படுகின்றார். இரஷ்யாவுக்குள், மேலும் கூடுதலான மக்கள் ஆதரவைப் பெற்றவராக புடின் உயர்ந்திருக்கின்றார்.

உயிரிழப்பைப் பொறுத்த மட்டிலும், ஒப்பீட்டளவில் இரஷ்யத்தரப்பில் அதிகம். உக்ரைன் நாடென்பது 45% இரஷ்ய மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களை உள்ளடக்கியது. அவர்கள் செறிவாக வாழும் பகுதிகளில்தான் போர் நடைபெற்று வருகின்றது. உடைமைகள், உயிர் என எல்லாச் சேதங்களும் அவர்களுக்கே.  உள்ளூர் மக்களின் ஆதரவின்றி, படைகளால் அங்கு சிவில் நிர்வாகத்தைக் கட்டமைத்துவிட முடியாது. எனவே இன்சர்ஜன்சி, உட்கிளர்ச்சி என்பது இருந்து கொண்டேவும் இருக்கும். 

ஜியோபாலிடிக்ஸ் எனும் பார்வையில் பார்த்தோமேயானால், மேற்குலக நாடுகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஓரணியில் நிற்கத் துவங்கி விட்டன. இரஷ்யாவைக் கண்டு அஞ்சுகின்றன. நேட்டோவின் எதிரிகளாகக் கருதப்பட்ட ஸ்வீடன், ஃபின்லாந்து ஆகிய நாடுகள் கூட நோட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்து, இரஷ்யாவுக்கு எதிரான தடைகளை விதித்து வருகின்றன. மத்திய தரைக்கடல் நாடுகளும் சீனாவும் இரஷ்யாவின் பக்கம் முன்னைவிட நெருக்கம் காண்பிக்கின்றன.

இராணுவத் தளபாடச் சந்தையின் பார்வையில் பார்த்தோமேயானால், சீனாவுக்கு கிராக்கி ஏற்பட்டிருக்கின்றது. இரஷ்யத் தயாரிப்புகள் மேற்குலக நாட்டுத் தயாரிப்புகளுக்கு முன்னால் தாக்குபிடிக்க முடியவில்லை. விமானங்களைத் தாக்கக் கூடிய FIM-92 Stinger, பீரங்கிகளைத் தாக்கக்கூடிய FGM-148 Javelin ஆகியன இரஷ்யத் தரப்புத் தளபாடங்களைக் கணிசமாக தடுத்து வருகின்றன. மேலும் இரஷ்யத்தரப்பு போர்க்கப்பலையும் தாக்கி அழித்திருக்கின்றன. இதனால் இரஷ்யத் தயாரிப்புகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, சீனத்தயாரிப்புகள் முன்னுக்கு வரக் காத்திருக்கின்றன.

https://theweek.com/russo-ukrainian-war/1011761/up-to-60-percent-of-russian-missiles-in-ukraine-are-failing-us-assesses

4/03/2022

41ஆவது நாளில் உக்ரைன் போர்

 

மேற்குப் பகுதியிலிருந்து பின்வாங்குகின்றோமென சென்ற வாரத்தில் இரஷ்யா அறிவித்திருந்தது. அதற்கேற்ப, படிப்படியாக மேற்குப் பகுதியில் எல்லாப் பகுதிகளும் உக்ரைன் வசம் வந்துவிட்டன. பின் வாங்கியதற்கு என்ன காரணம்? இருவேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. முதலாவது, இது வரையிலும் இரஷ்யத் தரப்பில் காயம்பட்டோர், உயிரிழந்தோர், பிடிபட்டோரென 45 ஆயிரம் பேர் வரையிலும் இருக்குமெனச் சொல்லப்படுகின்றது. இவர்களுள் உயிரிழந்த முன்னணித் தளபதிகள் 15 பேர். ஆக அனுப்பப்பட்ட ஒரு இலட்சத்து 90 ஆயிரம் பேர்கள் என்பது ஒரு இலட்சத்து 45 ஆயிரம் என்றாகி விட்டது. அடுத்தது, கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிதான் இரஷ்யாவுக்குத் தேவையான நிலம், தன் கப்பற்போக்குவரத்துக்கான நிலம். ஆகவே, இங்கிருக்கும் படையினரையும் கிழக்கில் குவித்து அந்தப் பகுதியை மட்டும் பிடிப்பதென்பதான நோக்கமாக இருக்கலாம்.

பொதுவாக நிலத்தைப் பிடிப்பது எளிது. ஆனால் நிர்வகிப்பது கடினம் என்பது பொதுவழக்கு. வரலாற்றுப் பார்வையில், ஆப்கானிஸ்தான், வியட்நாம், ஈராக் எனப் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. insurgency: a condition of revolt against a government that is less than an organized revolution and that is not recognized as belligerency. 41 நாட்கள் ஆகியும் மேரியுபோல் எனும் நகரை வீழ்த்த முடியவில்லை. இன்னும் சொல்லப்போனால் ஒரு நகரும் முற்றாக வீழ்ந்துவிடவில்லை. காரணம், அங்கிருக்கும் பெருவாரியான பொதுமக்களும் எதிர்ப்பாக இருப்பதுதான். 

கிழக்குப் பகுதியைக் கைப்பற்றிக் கொண்டாலும் கூட, தொடர்ந்து நிர்வகிக்க முடியாதென்பதே மேற்குலகப் பார்வையாக இருக்கின்றது. எடுத்துக்காட்டாக, கஷ்மீரை எடுத்துக் கொள்வோம். 1947இல் இருந்தேவும் பிணக்குகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. 2021ஆம் ஆண்டினைப் பொறுத்த மட்டிலும், “This year total 355 people were killed, among them 49 were civilians, 178 armed rebels (militants), and 128 Indian occupying forces,” the APHC stated in its annual report, adding that 484 people were injured. இது பாகிஸ்தான் தரப்புச் செய்தி.  At least 182 militants, 43 security men and 34 civilians were killed in militancy violence in Jammu and Kashmir in 2021. இது அரசு தரப்பு. கஷ்மீரில் 9 இலட்சம் இராணுவ வீரர்கள் இருப்பதாகச் சொல்கின்றார் பாகிஷ்தான் பிரதமர்.  சீன எல்லையில் மட்டுமே 2 இலட்சம் வீரர்கள் இருப்பதாக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு செய்தபடியினாலே குறைந்தது ஆக மொத்தம் 3 இலட்சம் வீரர்கள் இருப்பதாக நாம் எண்ணிக் கொள்ளலாம். இதற்கெல்லாம் பெரும் செலவாகும். இந்தியா பெரிய நாடு, இத்தனை வீரர்களை ஒதுக்க முடியும். இரஷ்யாவால் முடியுமா?

உக்ரைனைச் சுற்றிலும் நேட்டோ நாடுகள். ஆயுத சப்ளை இருந்து கொண்டேவும் இருக்கும். அப்படியாகப்பட்ட இன்சர்ஜன்சியை இரஷ்யாவால் எதிர்கொள்வது சவாலாகவே இருக்கும் என்கின்றார் ஆய்வியலாளர் ஜெனிஃபர் காஃப்ரல்லா.

https://www.thedefensepost.com/2022/03/15/ukraine-insurgency-russia/

https://zeenews.india.com/india/with-eye-on-china-india-shifts-50000-additional-troops-to-border-in-historic-move-report-2372351.html

https://www.newindianexpress.com/nation/2022/jan/01/182-militants-killed-in-jammu--kashmir-in-2021-dgp-dilbagh-singh-2401887.html


4/02/2022

யான் கூம் vs பாவல் துரோவ்

யான் கூம் 1976ஆம் ஆண்டு உக்ரைன் நாட்டில் (அப்போதைய சோவியத் யூனியன்) பிறக்கின்றார். பாவல் துரோவ் 1984ஆம் ஆண்டு இரஷ்ய நாட்டில்(அப்போதைய சோவியத் யூனியன்) பிறக்கின்றார்.

1991ஆம் ஆண்டு சோவியத் யூனியன் கலைகின்றது. உக்ரைன் நாடு தனிநாடாக உருவெடுக்கின்றது. சோவியத் யூனியன் கலைந்ததற்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுவது வறுமை. பொருளாதாரச்சிக்கல். அதன்நிமித்தம், பாட்டி, அம்மாவுடன் அமெரிக்காவுக்குப் புலம் பெயர்கின்றார் யான் கூம். வயது 16. அம்மா, குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளும் தாதியாக வேலை பார்க்கின்றார். யான் கூம் பலசரக்குக் கடையில் துப்புரவுப் பணியாளராக வேலை பார்க்கின்றார். படிக்க வேண்டுமெனும் ஆவல். கல்லூரியில் புரொகிராமிங் கற்கச் செல்கின்றார். கூடவே கம்ப்யூட்டர் தொடர்பான வேலைக்கும் செல்கின்றார். ஓராண்டுக்குள்ளாகவே படிப்பை விட்டு விடுகின்றார். 1997ஆம் ஆண்டு யாகூ நிறுவனத்தில் வேலை கிடைக்கின்றது. அங்கே யான் கூம், உடன் வேலை பார்த்த பிரையன் ஆக்டன் என்பவருடன் நட்பு.  2007ஆம் ஆண்டு இருவரும் தத்தம் வேலையை விட்டு விட்டு, தென்னமரிக்காவைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பிவிட்டனர்.

இரஷ்ய நகரான செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் பிறந்த பாவல் துரோவ், அப்பா வேலைபார்த்து வந்த இத்தாலி நாட்டுக்குச் சென்று விடுகின்றார். பின்னர் குடும்பம் இரஷ்யாவுக்குத் திரும்பிவிடவே இவரும் அவர்களோடு திரும்பி, செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் மொழியியல் பட்டம் படித்து, 2006ஆம் ஆண்டு பட்டம் பெறுகின்றார். அப்போது ஃபேசுபுக் சமூக வலைதளத்தைப் பார்த்து, அது போலவே தம் மொழியில் தாமும் ஏன் ஒன்றை நிறுவக் கூடாதென ஆசைப்படுகின்றார்.

தென்னமரிக்கப் பயணத்தை முடித்துத் திரும்பிய நண்பர்கள் யான் கூம், பிரையன் ஆக்டன் இருவரும் பேசுபுக் நிறுவனத்தில் வேலைக்காக விண்ணப்பித்தனர். வேலை கிடைக்கவில்லை.

விகே எனும் பெயரில் சமூகவலைதளப் பக்கத்தைத் தன் சகோதரருடன் இணைந்து 2007ஆம் ஆண்டில் நிறுவிய பாவல் துரோவ், படிப்படியாக அதனை மூன்று பில்லியன் டாலர்கள் பெறுமானமுள்ள நிறுவனமாக வளர்த்தெடுத்தனர்.

2009ஆம் ஆண்டு தனக்காக வாங்கிய ஐபோனில் ஆப்பிள் ஸ்டோர் இருப்பதைக் கண்ட யான் கூம், தன் நண்பன் பிரையன் ஆக்டனுடன் சேர்ந்து இதில் வரும்படியாக நாமும் ஒரு புராடக்டை நிறுவ வேண்டுமென விரும்பி ஒன்றைக் கட்டமைத்தனர். கட்டமைத்து, தமக்குத் தெரிந்த இரஷ்யமொழி பேசும் நண்பர்களிடையே அறிமுகப்படுத்த, பலதரப்பட்ட மக்களிடையேயும் பிரபலமாகத் துவங்கியது அந்த யேப்.

விகே எனும் சமூக வலைதளம் இரஷ்ய மொழி பேசப்படும் நாடுகளெங்கும் பிரபலமாகத் துவங்கியது. மக்களுக்குத் தங்குதடையற்றதும் வெளிப்படையானதுமான தகவற்களஞ்சியமாக மாறத் துவங்கியதைக் கண்ட இரஷ்ய சர்வாதிகாரத்தின் கண்கள் கனன்றன. நிறுவனத்தைச் சர்வாதிகாரியின் நிழலாக்க மாற்றும் முயற்சிகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தலையெடுக்கத் துவங்கின. 2012/2013ஆம் ஆண்டுகளில், நிறுவனத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டன அல்லது மாற்றப்பட்டு விட்டன.

2014, பிப்ரவரி ஒன்பதாம் நாள், பேசுபுக் நிறுவனத்தின் உரிமையாளர் யான் கூம் அவர்களைச் சந்தித்துப் பேசி, யான் கூம், பிரையன் ஆக்டன் அவர்களுடைய ப்ராட்க்ட்டினை 19 பில்லியன் டாலர்களுக்கு கொள்வனவு செய்வதாக அறிவித்தார்.

2014, ஏபரல் 21ஆம் நாள் நிறுவனத்திலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இனியும் இங்கிருந்தால் தன் உயிருக்கே ஆபத்தெனக் கருதிய பாவல் துரோவ், பிரான்சு நாட்டுக்கு குடி பெயர்ந்து பிரஞ்ச் குடியுரிமை பெற்றவரானார். உக்ரைன் நாட்டில் பிறந்த யான் கூம் அவர்களுடைய ப்ராடக்டைப் போலவே இவரும் ஒன்றைக் கட்டமைக்க விரும்பி, அதனைக் கட்டமைத்து, இரஷ்ய மொழி பேசும் மக்களிடையே அறிமுகப்படுத்த, இதுவும் பிரபலமானது. இது துபாய் நகரின் நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டது.

உக்ரைன் நாட்டில் பிறந்தவரின் உயிர்ப்பு ”வாட்சாப்”. இரஷ்யநாட்டில் பிறந்தவரின் உயிர்ப்பு ”டெலிகிராம்”. இருவருமே பத்து பில்லியன் டாலர்களுக்கும் மேலான சொத்துகளுக்கு உரியவர்கள். முன்னவருக்கு களம் அமைத்துக் கொடுத்தது அமெரிக்கா. பின்னவரை வெளியேற்றிக் களம் அமைத்துக் கொண்டது இரஷ்யா.



4/01/2022

உக்ரைன் போர் 36ஆம் நாள்

 


தலைநகர் கீய்வ் பகுதிக்கு அருகில் இருந்த இரஷ்யப் படைகள் தற்போதைக்கு பின்வாங்கிக் கொண்டன. அப்படைகள் நாட்டின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்கு அனுப்பப்படலாம், அல்லது எரிபொருள் நிரப்பிக் கொண்டு மீண்டும் முற்படலாமென்கின்றன செய்திகள்.

சில நகரங்கள் தொடர் வான்வெளித் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன. தரைவழி நகர்தலில் இரு தரப்புக்கும் எந்தவொரு குறிப்பிடத்தகுந்த முன்னேற்றமும் இல்லை. இருவாரங்களுக்கு முன்பிருந்த நிலையேதான் தொடர்கின்றது.

போர் முடிவுக்கு வரும் அறிகுறி கண்ணுக்கெட்டிய தொலைவில் இல்லை. இரஷ்யாவுக்குக் கணிசமான வெற்றி, குறைந்தபட்சம் டான்பாஸ், லுகான்ஸ்க் மாநிலங்கள் பிடிபடும் வரையிலும் தொடருமென்றே எதிர்பார்க்கலாம். பிடிபட்ட பின்னர், கிழக்குப் பகுதிகளை(பெருவாரியாக இரஷ்யமக்கள் வாழும் பகுதிகள்) விடுவித்தது வெற்றியெனும் அளவில் பிரச்சினை முடிவுக்கு வரலாம்.

இரஷ்யாவின் நாணயம் போருக்கு முன்பிருந்த மதிப்பினைக் கிட்டத்தட்ட மீட்டெடுத்துக் கொண்டது. இரஷ்யாவின் 650 பில்லியன் டாலர் தங்கம் இருக்கும் வரையிலும் நாணய மதிப்புக்குப் பெரிதாகப் பாதிப்பு வராது என்பது பொதுப்பார்வையாக இருக்கின்றது. https://www.reuters.com/business/finance/sanctions-savaged-russia-teeters-brink-historic-default-2022-03-16/

எல்லைக்கருகில் இருக்கும் இரஷ்யநகர் ஒன்றில் இருக்கும் பெட்ரோல் கிடங்குகளை உக்ரைன் ஹெலிஹாப்டர்கள் தாக்கி அழித்ததாக இரஷ்யா சொல்கின்றது. உக்ரைன் மறுக்கவும் இல்லை; ஏற்கவும் இல்லை. உண்மையாக இருக்குமேயானால்,  உலகப்போருக்குப் பின்னர் இரஷ்யா தாக்கப்படுவது இதுவே முதன்முறை. https://www.aljazeera.com/news/2022/3/31/russian-troops-leave-chernobyl-nuclear-power-plant-ukraine-says-liveblog

உக்ரைன் அதிபரை இரஷ்யாவால் நெருங்க முடியவில்லையா அல்லது வேண்டுமென்றே விட்டு வைத்திருக்கின்றதா? பெரிய தலைவராகக் கட்டமைத்து, பின்னர் அவரை சரணடையச் செய்வதன் மூலம் தன் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்வதாக இருக்கலாமென்கின்றார் ஐநா முன்னாள் அலுவலர் ஸ்காட் ரிக்.