10/04/2012

அம்மணி

தலைக்கோழி கூப்பிட்ட சித்த நேரத்துக்கெல்லாம் பழநி போகும் அஞ்சு மணி ரயில் கூகூவென சங்கூதியபடி, அக்கம்பக்கத்து கிராமங்களை எழுப்பிக் கொண்டே போனது. இயற்கை வளம் வாசு அய்யா வீட்டிலிருந்து கேட்கிறது உலக்கை போடும் சத்தம். இந்த நவீன காலத்திலும் கைக்குத்தல் அரிசிதான் வாசு அய்யா வீட்டில். ஒவ்வொரு வீட்டுப் புறக்கொல்லையிலும் ஏதாகிலும் வீட்டுவளர்ப்புச் செடிகள் பயிரிட வேண்டுமென்பதைச் செயல்படுத்துவதில் ஊரே அவருக்கு ஒத்தாசை செய்கிறது.

கிழபுறத் தாழ்வாரத்தின் கீழ் எல்லுசாமி இன்னும் படுத்திருக்க, அம்மணி எழுந்து போய் விட்டிருந்தாள். அவள் இந்நேரம் கொல்லையிலிருக்கும் மாடுகளுக்குத் தீவனம் போட்டுக் கொண்டிருக்கலாம்; கட்டுத்தறியைத் துப்புரவாக்கிய கையோடு, சாணம் கரைத்து சாணவாயுத் தொட்டியில் ஊற்றிக் கொண்டுமிருக்கலாம். விலகியிருந்த சத்திரப்பட்டி துப்பட்டியை நன்கு போர்த்தியபடி புரண்டு ஒருக்களித்துப் படுத்தார் எல்லுசாமி. வாசல் தெளிக்கும் ஓசை கேட்டது.

மாடு கன்னுகளுக்குத் தீவனம் போட வேண்டுமென்றால், கொல்லைக்குப் போய் வெளியில் நறுக்கி வைத்திருக்கும் தட்டுக் கத்தைகளைக் கொஞ்சம் அள்ளிப் போட வேண்டும். இதெல்லாம் எதுவும் எல்லுசாமி செய்ய மாட்டார். தட்டுப்போரிலிருந்து நான்கு கத்தைகளை உருவி, ஒவ்வொன்றையும் மூன்றாகக் கத்தரித்து மூலையில் அடுக்கி வைப்பதோடு முடிந்தது அவரது வேலை. இராத்திரிக்கு ரெண்டு தரம் எழுந்து தீவனம் போடுவது என்னவோ அம்மணிதான்!

ரெண்டாங்கோழி கூப்பிட்டு வெகுநேரமாயிற்று. தமயந்தியம்மா வீட்டுக்குப் பால் கறக்க வரும் பால்காரன் சைக்கிள் மணியடித்துக் கொண்டு போகிறான். இன்னும் தூங்கிக் கொண்டிருந்தால் அம்மணி வந்து சத்தம் போட்டு ஊரைக் கூட்டுவாள். ‘விருக்’கென்று எழுந்து பால்கும்பாவோடு பால் கறக்கப் போனார் எல்லுசாமி.

தவுட்டுத் தொட்டியிலிருக்கும் எஞ்சிய புழுதண்ணியை இறைத்துக் கீழே கொட்டிய பிறகு, ரெண்டு குடம் தண்ணீரைத் தவுட்டுத் தொட்டியில் ஊற்றினாள் அம்மணி. அதனுள் சாமைத் தவிட்டோடு எள்ளுப் புண்ணாக்கு கொஞ்சமும் போட்டுக் கரைத்து விட்டு, கறந்த பாலை எடுத்துக் கொண்டு சமையற்க் கொட்டத்திற்குப் போனாள். எல்லுசாமியும் பின்னாடியே போய் அடுப்படியின் அருகே உட்கார்ந்து கொண்டார். அடுப்புச்சூட்டின் கதகதப்பு இதமாக இருந்தது. பால்கும்பாவை அப்படியே பெரிய அடுப்பில் வைத்து விறகு தள்ளியபின், பால் இருந்த சுண்டாச்சட்டியை கண்ணடுப்பில் இருக்கும் காப்பிச்சட்டியின் மேல் வைத்தாள். ஓரிரு மணித்துளிகளில் கண்ணடுப்புப்பால் சட்டிக்குள்ளேயே பொங்கிக் கொதித்தது.

கண்ணடுப்புக் காப்பியுடன் சற்றுப் பாலையும் சீனியையும் கலந்து ஆத்தி நல்ல பெரிய லோட்டா ஒன்றில் ஊற்றிக் கொடுத்தாள். குத்திட்டு உட்கார்ந்திருந்த எல்லுசாமி காப்பியை அனுபவித்துக் குடித்தார். ஒவ்வொரு வாய் குடித்துக் கொண்டே அதை எடுப்பதும் இதை எடுப்பதுமாக இருந்தாள் அம்மணி. ஏரித்தோட்டத்து மராமத்து வேலைகளைப் பற்றிச் சொல்லி, என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்பது குறித்து அம்மணியிடம் யோசனை கேட்டார் எல்லுசாமி.

கொட்டாவி விட்டபடியே உள்கொட்டத்திலிருந்து எழுந்து வந்தான் பெரியவன் துரைசாமி. “அம்மா காப்பி ஆச்சா?!” “பெரிய தங்கம்! ஊர் சோலியெதுக்கும் போகாம நாலு வண்டி மண்ணாச்சும் இன்னிக்கு அடிச்சிப் போடோணும். வேசை இருக்குறப்பவே இந்த குப்பை மேட்டு மண்ணு முச்சூடும் தோட்டத்துக்குக் கடத்திப் போடோணுஞ் சரியா கண்ணூ?”

 “சரிம்மா! எத்தினிவாட்டிதான் இதையே சொல்லுவ? கொண்டா காப்பிய!”

 தோளில் இருந்த துண்டையெடுத்து உதறிய பின், தலைக்கு உருமாலையாகக் கட்டிக் கொண்டு கிளம்பினார் எல்லுசாமி. தூக்குப் போசியில் முதல் நாள் சோத்துடன் மோர் ஊற்றிக் கரைத்து, அதையே தோட்டத்து நாய் பேச்சிக்குக் கொடுத்தனுப்பினாள் அம்மணி. 

 அடுப்படியில் விறகு தள்ளிவிட்டுக் கொண்டிருந்தவள், வேகமாகத் தண்ணிக் கொட்டத்துக்குப் போனாள். அங்கிருந்த தண்ணியடுப்பில் தென்னை மட்டை ரெண்டினை வைத்துப் பற்ற வைத்தாள். பெரியவன் குளிக்காமல் சாப்பிடமாட்டான். பெரியடுப்பில் உலை காய்ந்து விட்டிருந்தது. கழுவி அரித்த அரிசியை உலையில் போட்டு, அதன் மேல் தட்டத்தை வைத்து மூடினாள். கண்ணடுப்பில் இன்னும் காப்பிச்சட்டி சுண்டிக் கொண்டிருந்தது. பருப்புச்சட்டியைக் கண்ணடுப்பில் வைத்து, அதற்கு மேல் காப்பிச்சட்டியை இடம் மாற்றிக் கொண்டாள்.

 “நேராப் போயி ஒரு வண்டி மண்ணடிச்சுட்டு வந்துரு. அதுக்குள்ள சோறாக்கி, தெவரைப் பருப்பு கடைஞ்சி கத்தரிக்காக் குழம்பும் செய்து போடுறன் நானு!”

 “செரீம்மா”, கிளம்பிப் போனான் பெரிய மகன் துரைசாமி. 

போடிபட்டியில் இருக்கும் தன்னுடைய அண்ணன் வீட்டுக்குப் போன சின்னவன் மணியன் இன்னைக்காவது வருவானா மாட்டானா? யோசித்துக் கொண்டே தயிர் மொடாவைச் சிலுப்பு கொக்கிகளுக்குக் கீழே வைத்தாள் அம்மணி. 

 கழுவிக் கொண்டு வந்த ஆளுயர தயிர்மத்தினை மொடாவில் நிறுத்தி, மேல்க்கொக்கிக்கும் கீழ்க்கொக்கிக்கும் உண்டான பனம்பட்டைகளைப் பூட்டினாள். பட்டைகளுக்கு இடையில் நின்று சுழலத் தயாரானது மத்துக்கோல். மத்துக்கோலில் சுருட்டிக் கட்டப்பட்டிருந்த கயிறினை அவிழ்த்து முன்னும் பின்னுமாக மத்தினை இழுத்தாடியபடி தயிர் சிலுப்பினாள். இடையிடையே அடுப்படியில் நடந்து கொண்டிருந்த சமையல் வேலைகளும் கவனிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. 

 வெண்ணெய் திரண்டு மிதக்கத் துவங்கியது. மத்துக்கீற்றிலும் நிறைய வெண்ணெய் திரண்டு அப்பிக்கொண்டிருந்தது. வெண்ணெய் திரண்டிருந்த மொடாவிலும், மத்துக் கீற்றிலும் இருந்த வெண்ணெய் முழுவதையும் ஒன்று திரட்டிப் பெரிய உருண்டையாக்கினாள். திருப்பதி இலட்டு அளவுக்குத் திரண்டு இருந்தது. மோர் வித்த காசும், வெண்ணெய் வித்த காசும் போதும் அவளுக்கு, வீட்டு செலவுகளைச் சரிக்கட்ட. 

 பாத்திரங்கழுவுதல், மோர் சிலுப்புதல், பண்டங்கன்னுக்கு தீவனம் போடுதல், கொல்லையில் இருக்கும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுதல், பால் மோர் கேட்டு வருபவர்களுக்கு ஊற்றிக் காசு வாங்குதல், துணி துவைத்தல், சில்வானங்கேட்டு வந்தவர்களுக்கு நோட்டு முறித்துக் கொடுத்தல், குறியாப்புக் கேட்டு வந்தவர்களிடம் குறியீடாக ஒன்றை வாங்கி வைத்துக் கொண்டு மற்றொன்றைக் கொடுத்தல் என பதினாறு கவனக வேலையாகப் பலதையும் ஒரே நேரத்தில் செய்து, காலைநேரப் பணிகளை முடித்தாள் அம்மணி. 

 பெரியவன் துரைசாமி முதல் வண்டி மண்ணடித்து விட்டு வந்திருந்தான். 

“கைகால் மூஞ்சி கழுவீட்டு வந்து உக்காரு கண்ணு!”, அவனுக்கு வட்டல் வைத்து சோத்தைப் போட்டுவிட்டு, கூடையில் அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டாள். 

 ”செரி கண்ணூ. நான் பொடக்காளிக்குப் போயி பண்டங்கன்னுக்குத் தண்ணி காமிச்சிர்றேன். அப்படியே தோட்டத்துக்குப் போயி அப்பங்கூடவே உக்காந்து சோறுண்டுக்குறேன். நீ ஊட்டைப் பூட்டி தொறப்புக்குச்சியை எறவாரத்து மேப்படி மேல வெச்சிட்டு, மாடு கன்னுகளையும் ஓட்டிட்டு வந்துரு! செரியா?”

 லட்சுமாபுரத்திலிருந்து குண்டலப்பட்டி எல்லையில் இருக்கும் ஏரித்தோட்டத்துக்கு ஒன்னரை மைல் தூரம். அந்த ஒன்பது ஏக்கர் ஏரித்தோட்டம்தான் எல்லுசாமி அம்மணி தம்பதியினருக்குக் கிடைத்த பூர்வீகச் சொத்து. 

 சும்மாட்டுத் தலையில் இருந்த கூடையில் காலைச்சோறு, மத்தியானச் சோறு எல்லாமும் இருந்தது. வலது கை கூடையைப் பிடித்திருக்க, இடது கையில் காப்பி இருந்த திருகணிச் சொம்பினைத் தொங்கவிட்டபடி புறப்பட்டுப் போனாள். ஊர் எல்லை தாண்டும் வரையிலும், மாறி மாறி யாராவது ஒருவர் எதிரில் வந்து கொண்டே இருந்தனர். அவர்களிடம் ஞாயம் பேசுவதும் நலம் விசாரிப்பதுமாகப் பேசிக்கொண்டே தன் வழியில் போய்க் கொண்டிருந்தாள்.

 தோட்டத்து இட்டேரிக்கு இவள் போனதுமே தோட்டத்து நாய் பேச்சி ஓடோடி வந்து இவளை முகர்ந்து பார்த்து நக்கியபடியே வளைய வந்தது.

 “அடியே பேச்சி, சும்மா போ! எதோ காணாதவளைக் கண்டவளாட்ட? என்ன நீயி?! உங்க அப்பன் உனக்கு சோறு ஊத்துனாரா, ஊத்தாமயே உட்டுட்டாரா? செரி வா, சாளைக்கு வந்ததும் நான் ஊத்தறேன்!”, வாஞ்சையாகத் தன் மகளைச் செல்லம் கொண்டாடினாள். 

அம்மணி வருவதைக் கவனித்த எல்லுசாமி கிணற்றடியில் இருந்து வேப்பங்குச்சிப் பல்துலக்கோடு சாளையை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

 சாளைத் திண்ணையில் கூடையையும், திருகணிச்சொம்பினை சாளைக்குள் இருந்த மரப்பொட்டி ஒன்றின் மேலுமாகத் தன் சுமையை இறக்கி வைத்தாள்.

 “டே பேச்சி, வாடா கண்ணு!! கூழ் குடிப்பியாமா!!” எறவாரத்தில் தொங்கிக் கொண்டிருந்த தூக்குப் போசியில் இருந்த கூழை பேச்சியின் தட்டில் ஊற்றிவிட்டு, தண்ணித்தொட்டிக்குப் போய் தூக்குப் போசியைக் கழுவினாள். அது நிரம்ப தண்ணீர் கொண்டு வந்து எல்லுசாமியின் அருகே வைத்தாள். ஏற்கனவே கூடையை எல்லுசாமி இறக்கி வைத்திருந்தார். அதில் இருந்தவற்றை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ள, காலை வேளைச் சாப்பாடு ஆனது. 

 உண்ட மசமசப்பு தீரக் கையில் பீடியோடு உலாத்தப் போனார் எல்லுசாமி. தான் கொண்டு வந்திருந்த கொத்தினைக் கையில் எடுத்துக் கொண்டு, பருத்திக்காடு களையெடுக்கப் போனவள் மத்தியானம் ரெண்டுமணி நெகமத்து வண்டியின் சத்தம் கேட்டுத்தான் சாளைக்குத் திரும்பினாள். களையெடுப்பதில் மற்றவரை விட எப்போதும் ரெண்டு மூணு பாத்தி முன்னாடிதான் இருப்பாள். ஒரு களை தப்பாது; பயிருக்கும் சேதாரம் ஆகாது. பண்ணையத்து வேலைகளில் அம்மணியோடு போட்டியிடுவதற்கு சிஞ்சுவாடி கிராமத்தில் இருப்பவர் எவரும் யோசிக்கவே செய்வர். 

 சொல்லி வைத்தாற்போல பெரியவன் துரைசாமியும் மத்தியானச் சாப்பாட்டுக்கு வந்து சேர்ந்து கொண்டான். எல்லுசாமி மேவரத்துக்குழியில் இருந்த பட்டுப் போன மரமொன்றை வெட்டிச் சாய்த்துக் கொண்டிருந்தார்.

 “ஏனுங்! உங்களைத்தானுங்.. வாங்க. உச்சி மேக்க சாஞ்சு வெகுநேரமாயிருச்சு பாருங்க. வாங்க, வந்து சோறுண்ட்டு பார்ப்பீங்களாமா!!”, தண்ணித்தொட்டி மேல் ஏறி நின்று குரல் கொடுத்தாள். 

 அருகே இருந்த வாழை மரத்தில் மூன்று கீற்று இலையைக் கொய்துவந்து, கடை பரப்பிச் சோறு பரிமாறினாள். தன் வாலைக் குழைத்தபடி பேச்சியும் அருகில் வந்து நின்று கொண்டது. அம்மணியின் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தது அது. அதற்கும் வட்டல் கொண்டுவரப்பட்டு சோறு போடப்பட்டது. ஊர் நாயத்தோடு பண்ணையத்து நடப்பு வேலைகள் குறித்தும் பேசியபடி மத்தியான வேளை உண்டியை முடித்துக் கொண்டனர். 

 உண்ட மயக்கம் தொண்டனுக்கும்! இட்டேரியிலிருக்கும் பூவரச மரத்தின்கீழ் இருக்கும் வண்டியின் மீது ஏறிப்படுத்துக் கொண்டார் எல்லுசாமி. ஆனைமலைக் காற்று சில்லென்று அடிக்க, தென்னை மரத்தோப்பிலிருந்து செம்போத்தும் குயிலும் அதனதன் சுதியில் பாடிக் கொண்டிருந்தன. பெரியவன் பக்கத்துச் சாளையில் இருக்கும் சோடிக்காரப் பையன் தங்கவேலுவிடம் போனான். சோத்துப் போசியை கழுவிக் கமுத்திவிட்டு, சாளை முழுவதையும் கூட்டிப் பெருக்கினாள் அம்மணி. 

 தெற்கே எரிசனம்பட்டி வரை போய்த் திரும்பிய நெகமத்து வண்டி, வடதிசையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது. அதைக்கவனித்த அம்மணி, “ஏனுங், நாம்போயி மிச்சமிருக்குற கொஞ்சநஞ்ச பாத்திகளையும் செதுக்கிட்டு வந்துர்றேன்”. மறுபேச்சுக்குக் காத்திராமல் பருத்திக்காட்டுப் போய்த் தன் வேலையைத் தொடர்ந்தாள். 

 குண்டலப்பட்டியில் யாருக்கோ தெரட்டிச்சீர் போலிருக்கிறது. பாட்டுப்பொட்டி கொண்டு வந்து பாட்டெல்லாம் போட்டிருந்தார்கள். அதையும் மீறி எதோ சிலுசிலுவென்ற சத்தம் கேட்டது. தலையைத் தூக்கிப் பார்த்தால் கஞ்சம்பட்டி மூலையிலிருந்து படைக்குருவிகள் ரெண்டு படைகளாக ஆகாயத்தில் வந்து கொண்டிருந்தன. படை ஒன்றுக்கு ரெண்டாயிரத்திலிருந்து ஐயாயிரம் குருவிகள் வரை கூட இருக்குமாம். பெரிய நாவற்பழம் போன்ற வடிவில் ஒரு படையும், ஆலிலை வடிவில் ஒரு படையும் தோற்றமளித்தது. இலாகவமாய் ஒரு சேர வளைந்து நெளிந்து பறக்கும் படைக்குருவிகளின் சாகசக் காட்சியைச் சொக்குண்டு பார்த்துச் சிரித்தாள் அம்மணி. 

 பெரியவன் மாய்ந்து மாய்ந்து வேலை பார்க்கிறான். எப்போதும் நாலு வண்டி மண்ணடிப்பவன் இன்றைக்கு ஆறாவது நடை போய்க் கொண்டிருந்தான்.

 “செரி நீ கிளம்பு! பொழுது வுழுகுறதுக்கு முன்னாலயே ஊடு போய்ச்சேரு. சின்னவன் மேக்க இருந்து வந்தாலும் வருவான்!!” 

 ஊரெல்லாம் நிழல் படர்ந்திருந்தது. நேராக புறக்கொல்லைக்குப் போய், எல்லாம் இருந்தது இருந்தபடி இருக்கிறதா எனச்சரி பார்த்ததும் அவளுக்கு மனம் நிறைந்தது. தண்ணித்தொட்டியில் இருந்து தண்ணீர் மொண்டு, கை கால் முகம் கழுவித் தன் முந்தானையாலேயே துடைத்துக் கொண்டாள்.

 அவ்வளவுதான், வீட்டுக்கு வந்தாயிற்று! பத்துப் பதினாறு கவனத்துடன் பல வேலைகளை ஒருசேர ஒருங்கே பார்க்கத் துவங்கினாள். துணிகளை அலசிப் போட்டாள். நல்லதண்ணிக் கிணத்துக்கு ஒரு நடை போய் தலையில் ஒரு குடம், இடுப்பில் ஒரு குடமாக இரண்டு குடந்தண்ணி கொண்டு வரப்பட்டது. கரியூட்டுச் சேந்து கிணத்திலிருந்து நாற்பது குடம் சப்பைத் தண்ணி கொண்டு வரப்பட்டு பண்டங்கன்னுகளுக்கெல்லாம் தண்ணி காண்பிக்கப்பட்டது. வீடெல்லாம் பெருக்கித் துப்புரவு செய்யப்பட்டது. 

 முதலில் அம்மணி குளித்து முடித்தாள். அதே கையோடு வாசல் தெளிக்கப்பட்டு வீட்டில் விளக்கேற்றப்பட்டது. தோட்டத்தில் இருந்து வந்த எல்லுசாமியும் பெரியவனும் குளிக்கப் போகுமுன்னர், ஒருவர் பால் கறந்து கொடுக்க மற்றவர் வைக்கோற் போரிலிருந்து வக்கிப்புல் அரிந்து வந்தார்கள். கறந்த பாலில் மணக்க மணக்க காப்பி தரப்பட்டது. அம்மணியும் ஒரு லோட்டா குடித்துக் கொண்டாள். 

 விநாயகங்கோயில் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு ஊர்ப்பெரியவர்களும் எல்லுசாமியும் ஊர்ப்பழமை பேசிக் கொண்டிருந்தனர். பெரியவன் அவஞ்சோட்டுப் பையன்களோடு தலைவாசலில் நின்றுகொண்டு, கரட்டுமடம் சுகந்தி கொட்டாயில் என்ன படம் ஓடிக்கொண்டிருக்கிறது என்பது பற்றிப் பேசிக்கொண்டிருந்தான். 

 அரிசிபருப்புக் கூட்டாஞ்சோறு ஆக்கி ’பயித்தம்பயிறு அடை’யும் சுட்டு வைத்திருக்க, எல்லாருமாகச் சேர்ந்து சாப்பிட்டார்கள். திண்ணையில் மற்றவர்களோடு என்ன பேசிக்கொண்டிருந்தோம் என்பதை எல்லுசாமி சொல்லச் சொல்ல, அம்மணியும் கிணத்தடியில் தான் அறிய நேர்ந்தவற்றைப் பகிர்ந்து கொண்டாள். பேச்சு நெடுகிலும், பெரியவன் தன் அம்மாவைக் கிண்டலடித்துக் கொண்டே இருந்தான். 

 சாப்பாட்டு வேளை முடிந்ததும், எல்லுசாமி புறக்கொல்லைக்குப் போனார் பீடி இழுக்க. பழுதான மருந்துத் தெளிப்பானை நோண்டிக் கொண்டிருந்தான் பெரியவன் துரைசாமி. 

 காற்று பதமாய் வீசியது. மதுரைவீரன் கோயில் பாட்டுச் சத்தம் விட்டுக் விட்டுக் கேட்டது. நான்கு வீடு தள்ளி இருக்கும் சுசீலா டீச்சர் வீட்டில் ஒரே சிரிப்பும் கும்மாளமுமாய் இருந்தது. யாரோ அவர்களுடைய உறவினர்கள் வந்திருக்கிறார்கள் போலத் தெரிகிறது. காரவாசலில் உட்கார்ந்து, அம்மணியும் பக்கத்து வீட்டு ருக்மணியும் புளியம்பழம் தட்டிக் கொட்டைகளைத் தனியாகவும் புளியைத்தனியாகவும் பிரித்தெடுத்துக் கொண்டே ஊர் ஞாயம் பேசிக் கொண்டிருந்தனர். 

 முதலில் எல்லுசாமி வந்து படுக்கையைப் போட்டார். சித்த நேரத்திலெல்லாம் பெரியவன் போய்ப் படுத்துக் கொண்டான். ருக்மணி அக்காவை அனுப்பி வைத்த கையோடு, பண்டங்கன்னுக்கெல்லாம் தீவனம் போட்டு வந்தாள் அம்மணி. முன்வாசக்கதவு, பின்வாசக்கதவு எல்லாம் நாதாங்கி பூட்டப்பட்டு இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொண்டாள். 

 கீழ்த்தாழ்வாரத்தில் எல்லுசாமி கட்டிலில் படுத்திருக்க, அதனருகே தரையில் பாயை விரித்து தலையணை இடப்பட்டது. கம்மாளபட்டி போர்வை ஒன்றும் தலையணை மேல் கிடத்தப்பட்டது. 

 பித்தளைச் சொம்பு நிறையத் தண்ணீரும் அதை மூடிய வாக்கில் டம்ளர் ஒன்றுமாகக் குடிதண்ணீரைக் கட்டிலின் கீழ் கைக்கெட்டும் தூரத்தில் வைத்துக் கொண்டாளவள். 

 தூங்குவதாய் இருந்தாலும் அது ஒரு வேலையாக இருக்க வேண்டும். அல்லாவிடில் அம்மணிக்குத் தூக்கம் வராது. மின்விளக்கெல்லாம் அணைக்கப்பட்டு, ஒளிரும் குறுஞ்சிமினி விளக்கொன்றைத் தலைமாட்டில் வைத்துப் படுத்துக் கொண்டாள். 

 முதலாவது வேலையாகப் பெரியவன் எப்படி ஒன்பது ஏக்கர் நிலத்தை பதினெட்டு ஏக்கராக்கப் போகிறான் எனும் யோசனை; அடுத்து, சின்னவனை எப்படிப் படிக்க வைத்து வெளிநாட்டுக்கு அனுப்பலாமென்கிற யோசனை; குடிக்கத் தண்ணீர் கேட்பது போன்ற உதவிகளைத் தன் மணவாளன் கேட்டால் உடனே அதைச் செய்ய வேண்டும் என்கிற ஆவல்; புறக்கொல்லையில் மாடு கன்றுகள் இருக்குமிடத்திலிருந்து ஏதாவது சலசலப்புக் கேட்டால், உடனே போய் எட்டிப் பார்க்க வேண்டும் என்கிற எச்சரிக்கையுணர்வு. இப்படியான பலவற்றுடன்தான் இரவு கழியப் போகிறது அவளுக்கு. 

தூக்கத்தில் திடீரென எதையோ நினைத்துத் தனக்குத்தானே பேசிச் சிரித்துக் கொண்டாள். சிரிப்பொலி கேட்ட எல்லுசாமி தன் தலையைச் சற்றுத் தூக்கித் தன்னருகே தரையில் படுத்திருக்கும் அம்மணியை ஏறிட, இன்று பூத்த பூப்போலக் கொள்ளை அழகாய் இருந்தாள் அவள்!

நன்றி: வல்லமை

5 comments:

ப.கந்தசாமி said...

அம்மாடி, எத்தச்சோட்டு கதை, படிச்சு முடிக்க நாலு நாளு வேணும்போல இருக்கு.

சரி, இந்த தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை சரி செஞ்சா என்ன கொறஞ்சிடும்?

பழமைபேசி said...

அண்ணா, பட்டை எனக்கு சரியாத்தானுங்க இருக்கு!!

ஆடுமாடு said...

எப்போதும் கொசுக்கள் அலையும் என் வீட்டுத் தொழுவமும் எங்கள் முக்குறுணி விதைப்பாட்டில் நானே விழுந்து முளைத்ததும், வெண்ணையாக திரண்டு வருகிறது உங்கள் கதையை வாசிக்கும்போது. என் அம்மாவாகவே இருக்கிறாள் இந்த அம்மணியும். வாழ்த்துகள்.

பழமைபேசி said...

@@ஆடுமாடு

நன்றிங்க! அவர்களுடைய ஈகஞ்செறிந்த உழைப்பினைப் போற்றுவோம்!!

தனியனின் கிறுக்கல்கள் ! said...

anna setharalumnga na idhai padikaradhukku

enakku idhai padikkumbodhu ore vesanama irukkudhu, oorla illayenu

oru ettu poi ammala pathuttu varonumnu irukkudhung.

nalla irukkudhungna

neraya ezhudhungna