11/13/2008

சட்டக் கல்லூரி அவலம்: யோசிப்போம்!

அருவாவும் கம்புமா கதாநாயகனும் வில்லனும் வெறி பிடிச்சுத் திரியறதை கை கொட்டி இரசிக்குறோமே? அப்பிடிச் செய்யலாமா?? அந்தத் திரைப் படந்தானே வெள்ளி விழா, வைர விழாக் காணுது?!

இவன் நம்ம பயன்னு சொன்னவுடனே, மனசு நெகிழுதே? அப்ப மத்த பயலுவ??

சபைத் தொடர்ன்னா, உள்ளயோ அல்லது வெளிலயோ எதோ ஒரு அசம்பாவிதம் காலங் காலமா நடக்குதே? அதுக்கு யார் காரணம்??

மொழிக்கும், தமிழ் இனத்திற்கும், சமுதாயத்திற்குமான‌ ஒரு அறப் போராட்டம்ன்னு வந்தா, கிடைச்ச‌து வாய்ப்புன்னு நல்லா ஒக்காந்து வடை போண்டா சாப்ட்டுட்டு காணொளியில காலத்தை ஓட்டுற நாம, சங்கத் தலைவனுக்கு ஒன்னுன்னா கெடந்து தவிக்கறமே?

அந்த‌ நேர‌த்துக்கு உண‌ர்ச்சியில‌ ப‌ரிதாப‌த்தைக் கொட்டிட்டு, அப்புற‌மா எல்லாத்தையும் ம‌ற‌ந்து போற‌மே?

சிவ‌காசிக் க‌ல‌வ‌ர‌ம்ன்னா யாருக்காவ‌து தெரியுமா? அதில இருந்து நாம‌ க‌த்துகிட்ட‌து என்ன‌??

இந்த அவலத்தை மாஞ்சி மாஞ்சி காமிச்சுக் காசு பாக்குறானே ஊடக வியாபாரி? இவனுக்குத் தெரியாம ஒலகத்துல எதுவுமே நடக்காது. சுவாசிக்கிற காத்து இருக்குற பக்கம் எல்லாம் பத்திரிக்கைகாரன் இருப்பானாம். இதை தடுத்து நிறுத்த அவிங்க செஞ்சது என்ன? அப்பிடியே செஞ்சாலும் நாம அதக் கண்டுக்குவமா??

இல்ல, அவனுங்களை கூண்டுல அடைச்சி சித்திரவதை செஞ்சா மட்டும், இந்தப் பிரச்சினை தீந்திடுமா?

கொலைக் குற்றத்தை, முதல், இரண்டாவது, மூணாவதுன்னு வகைப் படுத்தினாங்களே? அது ஏன்?? இது அதுல எது???

சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு மட்டுந்தான் அந்த வெறி இருக்கா?மத்தவங்களுக்கு இல்லையா??

எய்த‌வ‌ன் இருக்க‌ அம்பை நொந்து ப‌ய‌னில்லை!

குற்ற‌ம் புரிந்த‌வ‌ர்க‌ள் த‌ண்டிக்க‌ப்ப‌ட‌ வேண்டிய‌வ‌ர்கள், அது யாராக‌ இருப்பினும்!!

அதற்கு முன்பாக, நாம் திருந்த வேண்டியவர்கள்!!!

இது எனக்கும் பொருந்தும். சுய பரிசோதனைக்கான‌ தருணம் இது!

27 comments:

நசரேயன் said...

/*நாம் திருந்த வேண்டியவர்கள்*/
ஆமா

Anonymous said...

//எய்த‌வ‌ன் இருக்க‌ அம்பை நொந்து ப‌ய‌னில்லை!//

இது சரி என் நான் நினைக்கின்றேன். யார் எய்தது என கண்டுபிடிக்க முடியுமா?

//சட்டசபைத் தொடர்ன்னா, உள்ளயோ அல்லது வெளிலயோ எதோ ஒரு அசம்பாவிதம் காலங் காலமா நடக்குதே? அதுக்கு யார் காரணம்??//

இதுவும் எனக்கு புரியவில்லை. சட்ட சபைக்கும், சட்ட கல்லூரிக்கும் என்ன சம்பந்தம்?

இராகவன், நைஜிரியா

Anonymous said...

டாய்., உங்களால பாருங்கடா அண்ணன் இன்னைக்கு பழைசை பேசுறத மறந்துட்டாரு.

இப்படித்தான்ன நானும் அப்படியே ஷாக்காயிட்டேன்....

பழமைபேசி said...

//
murugesan said...
டாய்., உங்களால பாருங்கடா அண்ணன் இன்னைக்கு பழைசை பேசுறத மறந்துட்டாரு.
//

சரியாச் சொன்னீங்க... நாம் பாட்டுக்கு எதோ அந்தப் பழசு, அறதப் பழசுன்னு எழுதிட்டு இருந்தேன். இப்பிடிச் செய்யுறாங்களே?! :-o(

பழமைபேசி said...

//நசரேயன் said...
நான் தான் முதல்ல
//
வாங்க நசரேயன்! யோசிச்சீங்களா? :-)

பழமைபேசி said...

வாங்க இராகவன் ஐயா!

//இது சரி என் நான் நினைக்கின்றேன். யார் எய்தது என கண்டுபிடிக்க முடியுமா?//

ஒன்னு இவிங்க, இல்லைனா அவிங்க. நாம ஏன் இடங் கொடுக்கணும்? நாம திருந்திட்டா, அதுக்கு வேலையே இல்ல பாருங்க. அடிப்படைக் காரணம் உணர்ச்சிவசப் படுறதுதான்.

//இதுவும் எனக்கு புரியவில்லை. சட்ட சபைக்கும், சட்ட கல்லூரிக்கும் என்ன சம்பந்தம்?
//

எளிதில் அணுகிக் காரியம் செய்யக் கூடிய இடம் அரசு சட்டக் கல்லூரியும், அரசு கலைக் கல்லூரியுந்தானே? இதுதான காலங் காலமா நடந்துட்டு இருக்கு.

கபீஷ் said...

//இவன் நம்ம பயன்னு சொன்னவுடனே, மனசு நெகிழுதே? அப்ப மத்த பயலுவ??//

சரியா சொன்னீங்க, இந்த குழு மனப்பான்மையும் ஒரு காரணம்.

இது தவிர ஜாதி அடிப்படையில் உயர்வு, தாழ்வு மனப்பான்மை மற்றும் பல காரணங்கள், இது பத்தி பதிவா போடற அளவுக்கு காரணங்கள் நிறய இருக்கு. அதுக்கான தீர்வுக்கு வழிகள் ? எதாவது செய்யணும் பாஸ்

பழமைபேசி said...

//
கபீஷ் said...
// அதுக்கான தீர்வுக்கு வழிகள் ? //

வாங்க கபீஷ்!
உணர்ச்சி வசப்படுறதக் கட்டுப் படுத்தனும். பெரியவிங்க நாலும் அலசி, மொழி வாரி மாநிலங்களைக் கொண்டு வந்தாங்க. அதுக்கு மட்டுமே கட்டுப்பட்டாப் போதுங்றது என்னோட தாழ்மையான கருத்து. வெறி பிடிச்சு அலையத் தேவை இல்ல. அது சமுதாயத்தை ஒரு கட்டுக்குள்ள கொண்டு வர்ற ஒரு கருவி. அவ்வளவுதான். அதே சமயத்துல அந்தக் கருவியும் பாதுகாக்கப்பட வேணும்.

மாயோன் ! said...

நேற்று நடந்த சம்பவம் வெறுமனே சம்பவம் அல்ல...

தமிழ் நாட்டின் ஒரு கோரமுகம் ....

யாரவது எதாவது சாதித்தால்.. தமிழுக்கே.. தமிழருக்கே பெருமை என்று சொல்லி கொள்கின்றோமே...

இந்த கேவலத்தை என்ன என்று சொல்வது...

மேம்போக்காக பார்த்தால், எதோ மாணவர்கள் வெறிபிடித்து சண்டை போட்டதாக தோன்றுகின்றது..

இதற்கு யார் காரணம்...?

ஜாதி யா?

தமிழ் நாட்டில் யாரும் ஜாதி பெயரை சொந்த பெயருக்கு பின்னால் போட்டுக்கொள்வதில்லை என்று பெருமையாக மற்ற மாநில நண்பர்களிடம் சொல்வதுண்டு..

பெயரில் இல்லை ... ஆனால்..

ஜாதி தமிழனின் குருதியில் கலந்து விட்டது..

வோட்டு பொறுக்கும் அரசியல்வாதிகளால்..

வேறு எந்த மாநிலத்தையும் விட நம்மிடம் தான் ஜாதி வெறி அதிகம்...

என்ன செய்வது...

௧.ஜாதி, மதம் வைத்து அரசியல் செய்வது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்..

௨.ஆள் பலம் காட்ட ஊர்வலம், பேரணி நடத்துவது தடுக்க பட வேண்டும்..

௩. ஜாதி கர்வம் பொதுவில் தெரியும் வண்ணம் செய்யப்படும் எதுவும் தவறு என்று உறுதியாக சொல்லப்படவேண்டும் ...

௪ . வெகு ஜன ஊடகங்களில் ஜாதி சார்பு முற்றிலும் தவிர்க்க பட வேண்டும்...

௫ . அவர் பிறந்த நாள், இவர் இறந்த நாள் என்று கூட்டம் சேர்த்து விஷ விதை விதைப்பது, "ஆண்ட சமுகமே அடங்கி கிடப்பது ஏன் " ... "அடங்க மறு " என்று எவனும் உளர இடம் கொடுக்க கூடாது..

௬ . கலவரம் ஏற்படுத்த பயன்படும் என்ற காரணதிர்க்க்காகவே முச்சந்திக்கு முச்சந்தி வைக்கப்படும் எல்லா சிலை களையும் பிடுங்கி ( காந்தி சிலையையும் கூட ) ஒரே இடத்தில் பாதுகாப்புடன் வைக்க வேண்டும் ...

--இதெல்ல்லாம் சீக்கிரம் நடக்க வேண்டும்...

ஆனால்...கண்டிப்பாக இவை எதுவும் நடக்க போவதில்லை ....

மூன்று வருடங்களுக்கு முன், ஒரு சமூகத்தின் தலைவரின் ஜெயந்தி விழாவை ஒட்டி, என் கல்லூரி மாணவர்கள் திடீர் என்று இரண்டு பட்டதை என் கண்களால் பார்த்தேன்..

பொறியியியல் படிக்கும் வசதி படைத்த நகரத்து மாணவர்களே உருட்டு கட்டைகளுடன் திரிந்தனர்..

அன்று நடந்தது பெரிதாக வில்லை / பெரிதாக வெளியில் தெரியவில்லை...

இன்று ஊடகங்களின் கண் முன் நடந்து விட்டது..

நேற்று நடந்த சம்பவம் வெறுமனே சம்பவம் அல்ல...

தமிழ் நாட்டின் ஒரு கோரமுகம் ....

பழமைபேசி said...

//
Maayoan said...
நேற்று நடந்த சம்பவம் வெறுமனே சம்பவம் அல்ல...

தமிழ் நாட்டின் ஒரு கோரமுகம் ....
//
வாங்க மாயோன்! அடிபடையில நாம எல்லாருமே விட்டில் பூச்சிகதான். நமக்கே தெரியாது, நாம எப்பிடி நாசகாரா வலையில விழறம்ன்னு. எதையும் யோசிக்காம, மலிவு அரசியல் மற்றும் வியாபாரக் கவர்ச்சிய புறந் தள்ளுங்க. எல்லாம் சரியாப் போய்டும்.

பழமைபேசி said...

//நசரேயன் said...
/*நாம் திருந்த வேண்டியவர்கள்*/
ஆமா
//

வீட்ல இருந்த தமிழ்த் தொலைக்காட்சிய நான் எப்பவோ துண்டிச்சாச்சு....அடுத்து தங்கமணி வாங்குற வார இதழை நிறுத்தணும். அந்தப் பயிற்சி, அது செய்வது எப்படி, இது செய்வது எப்படின்னு ஒரே தொல்லை. குடும்பத்தை வெளங்க வெக்கிற ஒன்னும் இல்ல அதுல. இதுல பீட்டர்த் தமிழ்?!

அது சரி said...

//
அருவாவும் கம்புமா கதாநாயகனும் வில்லனும் வெறி பிடிச்சுத் திரியறதை கை கொட்டி இரசிக்குறோமே? அப்பிடிச் செய்யலாமா?? அந்தத் திரைப் படந்தானே வெள்ளி விழா, வைர விழாக் காணுது?!
//

இதற்கும் திரைப்படத்திற்கும் என்ன சம்பந்தம்? அது வெறும் திரைப்படம்..நிழலுக்கும் நிஜத்திற்கும் வித்தியாசம் தெரியாத நபர்கள் இருந்தாலென்ன அழிந்தாலென்ன??

//
இவன் நம்ம பயன்னு சொன்னவுடனே, மனசு நெகிழுதே? அப்ப மத்த பயலுவ??
//

பொறுக்கிக‌ள், பொற‌ம்போக்குக‌ள், வேலைய‌ற்ற‌வ‌ர்க‌ள், ஊழ‌ல் வாதிக‌ள், வெட்டி பேச்சு பேசி பொழுது போக்கும் நாதாரிக‌ள் ம‌ன‌ம் தான் நெகிழும்..உருப்ப‌டியான‌ வேலை இருப்ப‌வ‌ர்க‌ளின் ம‌ன‌ம் நெகிழாது..

//
சட்டசபைத் தொடர்ன்னா, உள்ளயோ அல்லது வெளிலயோ எதோ ஒரு அசம்பாவிதம் காலங் காலமா நடக்குதே? அதுக்கு யார் காரணம்??
//

அத‌ற்கு கார‌ண‌ம், ஜாதி வெறி, இன‌வெறி, மொழி வெறி, ம‌த‌வெறி பிடித்த‌ ஒரு ச‌முதாய‌த்திலிருந்து அதே வெறிக‌ளுட‌ன் கூடிய‌ பிர‌திநிதிக‌ள் தான் வ‌ருவார்க‌ள்.

//
மொழிக்கும், தமிழ் இனத்திற்கும், சமுதாயத்திற்குமான‌ ஒரு அறப் போராட்டம்ன்னு வந்தா, கிடைச்ச‌து வாய்ப்புன்னு நல்லா ஒக்காந்து வடை போண்டா சாப்ட்டுட்டு காணொளியில காலத்தை ஓட்டுற நாம, சங்கத் தலைவனுக்கு ஒன்னுன்னா கெடந்து தவிக்கறமே?
//

மொழி, இன‌ம் என்ப‌த‌ன் மேலும் குறுகிய‌ பார்வையே என் ஜாதி, என் ம‌த‌ம், என் மாநில‌ம், என் ஊரு, என் தெரு, என் வீடு என்ப‌து என் க‌ருத்து. நீங்க‌ள் மொழிக்காக‌ போராடுவீர்க‌ள்..அதை மேலும் குறுக்கு சில‌ர் ஜாதிக்காக‌ போராடுகிறார்க‌ள்.

//
அந்த‌ நேர‌த்துக்கு உண‌ர்ச்சியில‌ ப‌ரிதாப‌த்தைக் கொட்டிட்டு, அப்புற‌மா எல்லாத்தையும் ம‌ற‌ந்து போற‌மே?
//

என்ன‌ செய்ய‌லாம் என்கிறீர்க‌ள்? அவ‌ர‌வ‌ருக்கு அவ‌ர‌வ‌ர் பிர‌ச்சினை..அடுத்த‌வ‌ருக்கு பிர‌ச்சினை செய்யாம‌லிருந்தால் அதுவே பெரிய‌ சேவை!

//
சிவ‌காசிக் க‌ல‌வ‌ர‌ம்ன்னா யாருக்காவ‌து தெரியுமா? அதில இருந்து நாம‌ க‌த்துகிட்ட‌து என்ன‌??
//

ச‌த்திய‌மா என‌க்கு தெரியாது..கேள்விப்ப‌ட்ட‌து கூட‌ இல்லை..என்ன‌ பிர‌ச்சினை?

//
இந்த அவலத்தை மாஞ்சி மாஞ்சி காமிச்சுக் காசு பாக்குறானே ஊடக வியாபாரி? இவனுக்குத் தெரியாம ஒலகத்துல எதுவுமே நடக்காது. சுவாசிக்கிற காத்து இருக்குற பக்கம் எல்லாம் பத்திரிக்கைகாரன் இருப்பானாம். இதை தடுத்து நிறுத்த அவிங்க செஞ்சது என்ன? அப்பிடியே செஞ்சாலும் நாம அதக் கண்டுக்குவமா??
//

மீண்டும், ஊட‌க‌ங்க‌ளை என்ன‌ செய்ய‌ சொல்கிறீர்க‌ள்? ச‌ம்ப‌வ‌ம் ந‌ட‌ந்த‌ இட‌த்தில் இருப்ப‌து சில‌ நிருப‌ர்க‌ளும், கேம‌ராக்கார‌ர்க‌ளும்.. போலீஸ்கார‌ர்க‌ள் வேடிக்கை பார்த்த் கொண்டு இருக்கும் போது ஊட‌க‌க்கார‌ர்க‌ள் என்ன‌ துப்பாக்கி சூடா ந‌ட‌த்த‌ முடியும்??

த‌டுத்து நிறுத்துவ‌தா?? எப்ப‌டி?? நிருப‌ரை குறுக்கே விழுந்து த‌டுக்க‌ சொல்ல‌லாமா??

ஊட‌க‌ங்க‌ள் ந‌ட‌ப்ப‌தை தான் காட்ட‌ முடியும்..இவ‌ர்க‌ள் குத்திக் கொண்டால் அத‌ற்கு ஊட‌க‌ம் என்ன‌ செய்ய‌ முடியும்? இதை தூண்டிவிட்டால் தான் த‌வ‌று என்று சொல்ல‌ முடியும்.

//
இல்ல, அவனுங்களை கூண்டுல அடைச்சி சித்திரவதை செஞ்சா மட்டும், இந்தப் பிரச்சினை தீந்திடுமா?
//

யாரை?? எத‌ற்கு??

//
கொலைக் குற்றத்தை, முதல், இரண்டாவது, மூணாவதுன்னு வகைப் படுத்தினாங்களே? அது ஏன்?? இது அதுல எது???
//

ஒண்ணும் புரிய‌லை..அது என்ன‌ முத‌ல் கொலை, இர‌ண்டாம் கொலை, மூன்றாம் கொலைன்னு எதுனா இருக்கா??

//
சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு மட்டுந்தான் அந்த வெறி இருக்கா?மத்தவங்களுக்கு இல்லையா??
//

ச‌ட்ட‌க் க‌ல்லூரி மாண‌வ‌ர்க‌ள் என்றில்லை..வாழ்க்கையில் எந்த‌ ஒரு உருப்ப‌டியான‌ குறிக்கோள்க‌ளும் இல்லாத‌ எல்லா ஜ‌ந்துக்க‌ளுக்கும் ஜாதி, ம‌த‌ வெறி உண்டு.

//
எய்த‌வ‌ன் இருக்க‌ அம்பை நொந்து ப‌ய‌னில்லை!
//

ஏதோ அம்பு அப்பாவி என்று சொல்வ‌து போலிருக்கிற‌து.. எய்த‌வ‌ன் தான் அம்பு..

//
அதற்கு முன்பாக, நாம் திருந்த வேண்டியவர்கள்..
//

நாம் என்றால் யார்? உல‌க‌ ம‌க்க‌ளா? இந்திய‌ர்க‌ளா? த‌மிழ‌ர்க‌ளா? இந்த‌ க‌ல‌வ‌ர‌த்தில் ஈடுப‌ட்ட‌ நாதாரிக‌ளா? இல்லை உங்க‌ள் ப‌திவை ப‌டிக்கும் என்னைப் போன்ற‌வ‌ர்க‌ளா??

நீங்க‌ள் த‌வ‌றாக‌ எடுத்துக் கொள்ளாவிட்டால் உங்க‌ளுக்கு ஒரு த‌னிப்ப‌ட்ட‌ கேள்வி..

"எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையனும்! வாழ்க தமிழினம்!!!"

இது உங்க‌ள் ப‌திவிலிருந்து எடுக்க‌ப்ப‌ட்ட‌து.. இத‌ற்கு என்ன‌ அர்த்த‌ம்?

பழமைபேசி said...

@@@அது சரி said...
//

வாங்க அது சரி அண்ணாச்சி! சிரிக்க வெச்சுட்டீங்களே! ஒன்னே ஒன்னுக்கு மட்டும் பதில் சொல்லிடுறேன். மத்ததுக்குத்தான் உங்களுக்கே தெரியுமே?!

//இது உங்க‌ள் ப‌திவிலிருந்து எடுக்க‌ப்ப‌ட்ட‌து.. இத‌ற்கு என்ன‌ அர்த்த‌ம்?//

இதுக்கு ஏற்கனவே கபீஷ் அவிங்களுக்கு சொன்னதுதான் பதில். கொஞ்சம் மேல பாருங்க.

அது சரி said...

//
பழமைபேசி said...
வாங்க அது சரி அண்ணாச்சி! சிரிக்க வெச்சுட்டீங்களே! ஒன்னே ஒன்னுக்கு மட்டும் பதில் சொல்லிடுறேன். மத்ததுக்குத்தான் உங்களுக்கே தெரியுமே?!

//

இல்லை..எனக்கு தெரியவில்லை. அதனால் தான் கேள்வியே...

குறிப்பாக,

1. சிவகாசி கலவரம் என்றால் என்ன?

2. ஊடகங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்றீங்க?

3. முதல், இரண்டாவது, மூன்றாவது கொலைக்குற்றம் என்றால் என்ன?

4. "எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையனும்.." ..இத‌ன் அர்த்த‌ம் என்ன‌?

Anonymous said...

திருந்தவேண்டும் என்று சொல்கிறீர்கள்.

சாதியை வைத்து வாணிகம் செய்யும் அரசியல்வாதிகள் உங்களைத் திருந்த விடுவார்களா?

இத்தகைய அரசியல்வாதிகளுக்கு வாக்கு அளிப்பதை முதலில் நிறுத்துங்கள்.

திருந்துவது பிறகு.

பழமைபேசி said...

//அது சரி said...

1. சிவகாசி கலவரம் என்றால் என்ன?

http://www.keetru.com/visai/apr07/manikumar.php

அதைப் பத்தி நான் சொல்லுறதை விட வலையில நிறைய இருக்கு. அதில இருந்து படிப்பினை வரலைங்றது தான் என்னோட ஆதங்கம்.

2. ஊடகங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்றீங்க?

ஏங்க முன்கூட்டியே தெரிஞ்சிதான அங்க போறோம். எச்சரிக்கைச் செய்தி போடலாம். இனியும் என்ன என்னவோ செய்யலாம். ஐயா, தூங்றவனை எழுப்பலாம். தூங்றவனை மாதிரி நடிக்குறவனை எழுப்ப முடியாது. ஆகவே, ஒரு வேளை இதுக்கு நீங்க மறுப்பு மொழி சொன்னீங்கன்னா, நான் அதுக்கு ஒன்னும் சொல்லுறதுக்கு இல்ல.

3. முதல் வகை, இரண்டாவது வகை, மூன்றாவது வகை கொலைக்குற்றம் என்றால் என்ன?

கொலைக் குற்றத்தின் தன்மையப் பொறுத்தது அது. First degree, second degree...

4. "எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையனும்.." ..இத‌ன் அர்த்த‌ம் என்ன‌?

நாங்க பதிவுலகத்துக்கு வர்றப்பவே, இதுக்கு ஒரு தனிப் பதிவு போட்டு வெச்சு இருக்கம்ல?!.

பழமைபேசி said...

//
அ. நம்பி said...
//
வணக்கம், வாங்க அ.நம்பி ஐயா! உங்க ஆதங்கம் புரியுது.

நையாண்டி நைனா said...

நானும் ஒரு பதிவு போட்டிருக்கேன்.... வந்து ஒரு கருத்தை சொல்றது......

ராஜ நடராஜன் said...

வ்ணக்கம்.சில சமயம் என்ன சொல்றதுன்னு தெரியாம மூச்சு முட்டிக்கும்.அந்த மாதிரி தருணங்களில் இதுவும் ஒன்று.

பழமைபேசி said...

//ராஜ நடராஜன் said...
வ்ணக்கம்.சில சமயம் என்ன சொல்றதுன்னு தெரியாம மூச்சு முட்டிக்கும்.அந்த மாதிரி தருணங்களில் இதுவும் ஒன்று.
//

அய்யா வாங்க! ஆசுவாசப் படுத்திட்டு யோசிங்க!! :-o)

நசரேயன் said...

/*
//ராஜ நடராஜன் said...
வ்ணக்கம்.சில சமயம் என்ன சொல்றதுன்னு தெரியாம மூச்சு முட்டிக்கும்.அந்த மாதிரி தருணங்களில் இதுவும் ஒன்று.
//

அய்யா வாங்க! ஆசுவாசப் படுத்திட்டு யோசிங்க!! :-o)

*/
ஐந்து நட்சத்திர ஹோட்டல்ல ரூம் போட்டு வையுங்க வாரேன்

http://urupudaathathu.blogspot.com/ said...

///////அப்பிடிச் செய்யலாமா?? அந்தத் திரைப் படந்தானே வெள்ளி விழா, வைர விழாக் காணுது?!/////

சரியான வாதம் ....

உண்மை தான்...

முகத்தில் அறைகின்றது

Anonymous said...

நேற்றைய ,இன்றைய ,நாளய ஜாதிய மோதல்கள்,அத்துமீறல்கள்,பெரியண்ணத் தனங்கள் இவைகளை ஒழிக்க வேண்டு மென்றால் மாவட்டங்களில்,போக்குவரத்துக் கழகங்களில் பேர்களை எல்லோரும் ஏற்கும் வகையில் எளிய மூறையில் மாற்றியது போல் கடுமையான சட்டங்களை எதிர் கால அரசியல் லாபம் கருதாமல் செயலாக்கினால் நல்லது.

தென் மாவட்டங்களில் இந்த மோதல் வாடிக்கை யான நிகழ்ச்சி.

அரசியல் தலைவர்களும்,பத்திரிக்கை யாளர்களும் நிகழ்ச்சியில் நடை பெற்ற முழு சம்பவத்தில் தான் சார்ந்த ஜாதியை காப்பாற்றும் முயற்சியே நடை பெற்றுவருவது சரியில்லா நிலை.

இன்றைய உண்மை நிலவரம் பற்றி யாரும் பேசத் தயராயில்லை.

ஆங்கிலேயர் நம்மை ஆண்ட காலத்திலும்,அதற்கு முன்னரும் ஜாதிகள் அவர்கள் பார்த்த தொழில் மூலம் ஏற்பட்டதாய் சரித்திரம் சொல்கிறது.

அது சமயம் முற்பட்ட் சமுகத்தினர் பிற ஜாதியினரை கொடுமைகள் செய்ததாகவும் ஒரு சில அரசியல் தலைவர்கள் ( இந்தப் சீரமைப்புப் பணியை தொடங்கி வைத்தது முன்னேறிய வகுப்புத் தலைவர்களும் உண்டு என்பர்)பிரச்சாரம் செய்து இன்றய சிறப்பு நிலக்கு காரணம் என்பது மறுக்க முடியா உண்மை.

அரசியல் கட்சிகளின் ஜாதிக் கணக்கீட்டு முறையில் தேர்தலை சந்திப்பது,வெற்றி பெற்ற பின்னர் ஜாதி விகிதாச்சார அடிப்படையில் அமைச்சர்களை நியமிப்பது, ஒட்டுக்களை பெறவேண்டும் என தேசியத் தலைவர்களாம் அருள் கடல் பசும்பொன் மு.ராமலிங்கம்,கல்விக் கண் கொடுத்த காமராஜ், விடுதலை விரர் வ.உ.சி,போன்ற யெல்லோருக்கும் பொதுவான பெரியவர்களை , ஒரு ஜாதி(அவரவரது) சங்குக்குள் அடைத்து நவீன அகத்தியானாய் மாற முயற்சிப்பது,
தேவையில்லா வன்முறை மோதல்களை தோற்றுவிக்கிறது

பேர்களில் ஜாதி எனும் வால் யில்லை
தெருக்களில் ஜாதி எனும் கொம்பு யில்லை
மாவட்டங்களில் ஜாதி எனும் முள்கிரீடம்
இல்லைஆனால் மக்கள் மனதில்,உள்ளத்தில்,சிந்தனையில்,எண்ணத்தில்,கருத்தில்,செயலில்,எழுத்தில்,படிப்பில்,படைப்பில்,உடல் முழுதும் ஒடும் குருதியில்,நாடி நரம்புகளில்.அனைத்து செல்களிலும்

ஒய்யாரச் சிம்மாசனம் போட்டு மனிதகுலத்தை ஆட்டிபடைக்கும்
ஜாதி எனும் அரக்க சுபாவத்தை முழுமையாய்
அகற்றிடும் நாள் வந்திடவேண்டும் எனும் புனித வேள்வி தொடங்கட்டுமே.

ஒன்றே குலம்
ஒருவனேதேவன்

உண்மையாய் மாறட்டுமே!

பழமைபேசி said...

அனாமதேய அனபருக்கு வணக்கம்! சாதி ஒழிய வேண்டுமென்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அது மற்றவரிடத்து இருந்து வர வேண்டும் என, ஒவ்வொருவரும் எண்ணுவத்தான் அதில் இருக்கும் பிரச்சினை. ஆகவே ஒருவர் உண்மையிலேயே சாதி ஒழிய வேண்டும் என்கிற உணர்வு இருப்பவராயின், இது ஆத்ம பரிசோதனைக்கான நேரம்!

Unknown said...

மணி நீங்க சொன்னது உங்களுக்கு மட்டும் அல்ல நாம எல்லாருக்கும் பொருந்தும்.
சமுதாயம் இப்படி இருக்குனு கவலைப்பட்டு என்ன பயன்.அந்த சமுதாயமே
நம்பத்தான் முதல்ல நினைக்ினும். நம்ப தப்ப நாம திருத்திகணும்.

நீங்க சொன்ன மாதிரி நம்ப திரைப்படங்கல வர வன்முறைகளும், ஆபாச காட்சிகளயும் நாம பார்த்து கொண்டுதான இருக்குறோம். சில வருடங்களுக்கு முன் "BOYS" னு ஒரு தமிழ்?!! படம் ,நான் தெரியா தனமா அரங்காத்துலெ போய் பார்த்தேன். என்னால பத்து நிமிடத்துக்கு மேல படம் பாக்க முடியலெ வெளிய வந்துட்டேன். இரட்டை அர்த்த வசனங்கள், பெண்கள் பற்றி இழிவான கருத்துக்கள் சே........
மறுநாள் இதை பற்றி மற்ற பெண்களிடம் புலம்பி விட்டு, நம்ம தமிழ் மன்றத்தில் சொல்லி இப் படத்தை தடை செய்யவேண்டும் என்று வலியுறுதினேன். உடனே என்னை பார்த்து அனைவரும் கேட்ட கேள்வி," இது வெறும் பொழுது போக்கு தானே. இதுக்கு போய் கோப படலாமா?"என்று.
பொழுது போக்குநா எதை வேண்டுமானாலும் காட்டுவதா?
தணிக்கை குழு என்ன செய்கிறது? - இந்த மாதிரி கேள்விகளை
நாம் கேட்க மறந்து விட்டோம்.இப்படங்கள் பார்ப்பதை தவிர்த்து
இவை நம் சமுதாயத்துக்கு தேவை இல்லை என்பதை அதன்
உரிமையாளர்களுக்கு உணர்த்த தவறி விட்டோம்.

நம்மை சுற்றி எதை பார்க்கிறோமோ,எதை கேட்கிறோமோ அதைத்தான நம்
மூளயும், மனதும், கிரகித்து கொள்கிறது. "வீர பாண்டிய காட்ட பொம்மன்" படத்தில், ஷிவாஜி வசனம் பேசும் போதும், படத்தை பார்க்கும் போதும் நமக்குள் ஒரு வீர
உணர்ச்சி தோன்றுவதுண்டு.அதை போலத்தானே எதிர் மறை விஷயங்களும்
நம்மை பாதிக்கும்.?
திரைப்டமோ,ஊடகமோ இவை எல்லாமே சக்திவாய்ந்த ஆயுதங்கள்.அதை சரியாக பயன்படுத்துவது
அவர்கள் பொறுப்பு மட்டுமல்ல நம்முடய பொறுப்பும்தான்!!!!!

chitravini said...

'எல்லா மதமும் சம்மதம்' என்ற நிலை மாறி இன்று 'என் மதம் மட்டுமே சம்மதம்' என்ற நிலைக்கு இன்றைய இளைய சமுதாயம் தள்ளப்பட்டுள்ளது. ஏன்? மதப் பொறுமை என்ற (religious tolerance) இல்லாததால்தான். நம் பெற்றோரிடம் நிறைய இருந்தது...நம்மிடம் கொஞ்சம் கம்மி. ஆனால், இன்றைய இளைய தலைமுறையிடம் கொஞ்சம் கூட இல்லை. எதனால்? யோசிக்க வேண்டும்....கடவுள் நம்பிக்கை குறைந்ததினாலா? இல்லை...மற்ற மதத்தைப் பற்றியும், இனத்தைப் பற்றியும் தரக் குறைவாகப் பேசுவதை அனுமதிப்பதால்தான். இதற்கு முக்கிய காரணம்...இன்றைய சினிமா. அதில் தரக் கட்டுப்பாடு அறவே இல்லாமல் போனதால் வந்த விளைவு...சட்டக் கல்லூரி அவலம், தமிழ் நாட்டின் இன்னொரு கேவலம்.இதுதான் அன்றைய சினிமாவுக்கும், இன்றைய சினிமாவுக்கும் உள்ள வித்தியாசம். எது நம் சமுதாயத்தையும், அது போகும் பாதையையும் மிகவும் பாதிக்கிறதோ, அதை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும், இல்லையேல், அறவே அழிக்க வேண்டும். அது நம் கையில் இல்லை. இன்னும் நிறைய சொல்லலாம். இப்படியே போனால், 'தமிழனென்று சொல்லடா, தலை குனிந்து நில்லடா' என்ற நிலைக்கு தள்ளப்படுவோம். அப்படிப்பட்ட நிலை வராமல் இருக்க, அடுத்த தலைமுறையான நம் குழந்தைகளை...மதம், இனம் என்னும் போர்வை கொண்டு மூடாமல்...மற்ற மதங்களையும், இனங்களையும் சமமாக பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை விதைக்க முயற்ச்சிக்க வேண்டும். ஒன்றுமே செய்யாமல் இருந்தால் எப்படி? வேறு ஏதாவது யோசனை தெரிந்தால் யாராவது சொல்லுங்களேன்.