எடுபட்ட பய: நாம அடிக்கடி சொல்லுறதும், சொல்லக் கேட்டதுந்தான் இது. எடுபட்ட நாதாரின்னுவோம், எடுபட்ட சிறுக்கின்னுவோம், எடுபட்ட பயலைக் காணோம்னு சொல்லுவோம். எடுபட்டன்னா என்ன? நீங்க சொன்னா அது எடுபடும்ன்னு சொல்லுறோம். அதாவது, நீங்க சொன்னா அந்த சொல்லை சபையினர் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வாங்கங்றதுதான் அது. நான் சொன்னா எடுபடாதுன்னா, என்னோட பேச்சை கூட்டத்துல கேக்க மாட்டாங்க, எடுத்துக்க மாட்டாங்கன்னு அர்த்தம் வருதுங்ளா? அந்த மாதிரிதாங்க, இந்த எடுபட்ட பயலும். சமுதாயத்துல இருந்து விலக்கி விடப்பட்ட, ஊராரால் தீய செயல்களின் காரணம் கருதி ஊரில் இருந்து எடுக்கப்பட்ட பயல்ங்றதுதான் எடுபட்ட பய ஆயிடுச்சு.
பொறம்போக்கு: புறம்போக்கு நிலம்ன்னா, யாருக்கும் சொந்தமில்லாத, எவரும் சொந்தம் கொண்டாடுகிற, எல்லாருக்கும் பொதுவான நிலம். அதுக்கு ஒப்பிட்டு, இழிவா சொல்லுற சொல்லுதாங்க இது. இது வரைக்கும் பாத்ததுல இது தாங்க ரொம்ப இழிவான சொல், எந்த சமயத்துலயும் இதைப் பாவிக்காதீங்க.
பொறுக்கி: இதை நாம நொம்ப சுலபமா யூகிச்சுகிடலாம், ஆமுங்க, இங்கயும் அங்கயும் பொறுக்கித் தின்னுகிறவன்ங்ற அர்த்தத்துல பொழங்குற ஒரு சொல்லு. பலான, பலான மேலதிக (டங்குவார், தாராந்துடுவே, சாவுகிராக்கி, பாடு, ....) சொல்லுகளுக்கு உண்டான விளக்கத்துக்கு, இந்தத் தொடுப்பை சொடுக்குங்க! மேலும் பல சொற்கள்!!
இதுக்கு மேலயும் இதுகளைப் பத்தி எழுத வேணாம்ங்ற ஒரு முடிவுக்கு வந்துட்டேன். அதான், பதிவோட தலைப்பே சொல்லுதே! ஆமுங்க, ஏச்சுப் பேச்சுகளுக்கு விளக்கம் எழுதறதை, இந்த பதிவோட நிறைவு செஞ்சுகிடுறேன்! பதிவுலகத்தை விட்டே ஒழிஞ்சான் இவன், இனி நமக்கு நிம்மதின்னு நினைச்சு வந்தீங்ளா?! இஃகி! இஃகி!!