4/19/2022
56ஆவது நாளில் உக்ரைன் போர்
4/16/2022
உன்வினை vs ஊழ்வினை
“ஆட்சி படுகேவலம். எங்க பார்த்தாலும் டிராஃபிக்ஜாம், நகரமுடியலை”
“கொடுங்கோலாட்சி, விலைவாசி கொஞ்சநஞ்சம்னு இல்ல”
“அமெரிக்கான்றாங்க, ஆனா மருத்துவச் செலவுகள் எக்கச்சக்கம். நாடா அது? தூ!”
இப்ப, மேற்கண்ட கூற்றுகள் எல்லாம் ஒருவருடைய ஒப்பீனியன். அது அவருடைய கருத்துரிமை. தன்னோட மனத்தில் தோன்றும் உணர்வை இயல்பாக வெளிப்படுத்துகின்றார். அதற்கு யாரும் தடை போட முடியாது. அவருக்கு அப்படியான உணர்வுகள் இருப்பதைப் போலே, அதே தெருவில், ஏன் அதே வீட்டில் இருக்கும் இன்னொருவருக்கு நேர்மாறான உணர்வுகள் இருக்கலாம். அவர் அவருடைய உணர்வுகளை வெளிப்படுத்தும் போது, அது அவருடைய கருத்து அல்லது மாற்றுக்கருத்து ஆகின்றது. அதற்கும் யாரும் தடை போட முடியாது. ஏட்டிக்குப் போட்டியாகவே இருந்தாலும், இயல்பான கருத்தாகக் கட்டமைக்கப்பட்டிருப்பதால் அது அவருக்கான உரிமையாக ஆகிவிடுகின்றது. இப்ப, அவற்றையே கொஞ்சம் மாற்றி அமைச்சிப் பார்க்கலாம்.
“ஆட்சி படுகேவலம். எங்க பார்த்தாலும் டிராஃபிக்ஜாம், காந்திபுரம் பாலத்துமேல நகரமுடியலை”
“கொடுங்கோலாட்சி, விலைவாசி கொஞ்சநஞ்சம்னு இல்ல, கிலோ 4 ருபாய் கத்தரிக்கா 16 ருவாய்”
“அமெரிக்கான்றாங்க, ஆனா மருத்துவச் செலவுகள் எக்கச்சக்கம். கொரொனா ஊசி 22 ஆயிரம் ரூபாயாம். நாடா அது? தூ!”
காந்திபுரம் பாலத்தில் நெரிசலா? 4 ருபாய்க்கு கத்திரிக்காய் அண்மையில் விற்கப்பட்டதா? தற்போது 16 ரூபாயா? கொரொனா ஊசிக்கு பணம் வாங்கப்படுகின்றதா? இதற்கான சான்றுகள் கேட்டால் கொடுக்கப்பட வேண்டும். அல்லாவிடில், அவை ஃபேக்நியூஸ். அவதூறு.
முன்னதுக்கும் பின்னதுக்கும் என்ன வேறுபாடு? முன்னது பொத்தாம் பொதுவாகத் தன் உணர்வுகளைக் கடத்துவது. பின்னது, தன் மனத்தில் இருக்கும் சார்புத்தன்மை, ஒவ்வாமை, வெறுப்பு, காழ்ப்பு, வக்கிரம் போன்றவற்றால் போகின்ற போக்கில் அடித்து விடுவது. எதிர்த்தரப்பை மலினப்படுத்துவதற்காகச் செய்வது. ஆனால், அத்தகைய போக்கு தனக்குத்தானே வைத்துக் கொள்ளும் ஆப்பு.
4/14/2022
50ஆவது நாளில் உக்ரைன் போர்
உக்ரைன் மீதான போருக்கான இலக்குகளாகச் சொல்லப்பட்டவை கீழே வருமாறு:
1. உக்ரைன் நாட்டை இராணுவமில்லா நாடாக்குவது (டிமிலிட்டிரைசேசன்)
2. ஆட்சிமாற்றம் கொணர்வது (டிநாஜிபிகேசன்)
3. டான்பாஸ் & லுகான்ஸ்க் தனிநாடுகளாகக் கட்டமைப்பது
காரணமாகச் சொல்லப்பட்டவை கீழே வருமாறு:
1. நேட்டோவில் உக்ரைன் சேர்வதினால், நேட்டோ தன் எல்லைக்கே வருகின்றது
2.இரஷ்யச் சிறுபான்மையினர் பாதிக்கப்படுகின்றனர்
50 நாட்கள் கடந்த இன்று இவற்றின் நடப்பு நிலைமை என்ன?
உக்ரைன் நாட்டை இராணுவமில்லா நாடாக்குவது (டிமிலிட்டிரைசேசன்): முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இராணுவத்தளபாடங்கள் மேற்குலகில் இருந்து வந்து சேர்ந்திருக்கின்றன. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நெம்ப்டியூன் ஏவுகணைகளால், பலம்வாய்ந்த இரஷ்யப் போர்க்கப்பல் செயலிழப்புச் செய்யப்பட்டிருக்கின்றது. 3 நாட்களில் ஒட்டுமொத்த உக்ரைனும் கட்டுப்பாட்டுக்கு வருமெனச் சொன்னநிலையில், தலைநகர்ப் பகுதியில் இருந்து பின்வாங்கிக் கொண்டது இரஷ்யா. 40,000 போர் வீரர்கள் வரை(காயம்+மரணம்) படைக்குறைப்புக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றது.
ஆட்சிமாற்றம் கொணர்வது (டிநாஜிபிகேசன்): அண்டைய நாடான போலந்துக்குச் சென்று அங்கிருந்து நிர்வாகப்பணிகளைச் செய்யுமாறு அமெரிக்கா சொன்னது. ஆனாலும், தன்னம்பிக்கையோடு உக்ரைன் நிர்வாகம் தலைநகரிலேயே இருந்து கொண்டது. இன்று, உலகத் தலைவர்களெல்லாம் தலைநகரான கீய்வ் நகருக்குச் சென்று வந்து கொண்டிருக்கின்றனர்.
டான்பாஸ் & லுகான்ஸ்க் தனிநாடுகளாகக் கட்டமைப்பது: இரஷ்யாவுக்குக் கணிசமான வெற்றி கிடைத்திருக்கின்றது. ஆனாலும் எஞ்சி இருக்கும் நகர்ப்புறப் பகுதிகளைக் கைப்பற்றுவதில்தான் முழு வெற்றி அடங்கி இருக்கின்றது.
நேட்டோவில் உக்ரைன் சேர்வதினால், நேட்டோ தன் எல்லைக்கே வருகின்றது: இது அப்பட்டமான பொய். ஏனென்றால், உக்ரைனைக் காட்டிலும் இரஷ்யத் தலைநகருக்கு அருகில் உள்ள லாட்வியா, லித்துவேனியா, எஸ்டோனியா ஆகிய நாடுகள் ஏற்கனவே நேட்டோவில் உள்ளன. தற்போது, மிக அருகில் உள்ள ஃபின்லாந்து, ஸ்வீடன் இரண்டும் ஜூன் மாதத்தில் நேட்டோவில் சேர்வதாக அறிவித்து விட்டன. சொந்த செலவில் சூன்யம். அப்படிச் செய்தால், அந்தநாடுகளை நோக்கி அணு ஆயுதங்களை நிறுத்துவதாக மிரட்டுகின்றது இரஷ்யா.
இரஷ்யச் சிறுபான்மையினர் பாதிக்கப்படுகின்றனர்: சண்டை நடைபெறும் இடங்கள் எல்லாமுமே முற்றிலுமாக இரஷ்யமொழிச் சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகள்தாம். சண்டையினால்தான் அவர்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். மேலும், பிடிபட்ட பகுதியில் வசிக்கும் மக்களை வடதுருவத்தின் வட எல்லையான சைபீரியாவுக்கு வலுக்கட்டாயமாக நாடு கடத்தியும் வருகின்றது.
மே 9ஆம் நாளுக்குள், லுகான்ஸ்க்/டான்பாஸ் பிடிபட்டு, வெற்றிவிழாவாக இரஷ்யத் தலைமை கொண்டாடத்தான் போகின்றது. வெற்றிதான். அப்படியானால் தோல்வி அடைவது யார்? இரஷ்யமக்களே.
4/10/2022
47ஆவது நாளில் உக்ரைன் போர்
4/03/2022
41ஆவது நாளில் உக்ரைன் போர்
மேற்குப் பகுதியிலிருந்து பின்வாங்குகின்றோமென சென்ற வாரத்தில் இரஷ்யா அறிவித்திருந்தது. அதற்கேற்ப, படிப்படியாக மேற்குப் பகுதியில் எல்லாப் பகுதிகளும் உக்ரைன் வசம் வந்துவிட்டன. பின் வாங்கியதற்கு என்ன காரணம்? இருவேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. முதலாவது, இது வரையிலும் இரஷ்யத் தரப்பில் காயம்பட்டோர், உயிரிழந்தோர், பிடிபட்டோரென 45 ஆயிரம் பேர் வரையிலும் இருக்குமெனச் சொல்லப்படுகின்றது. இவர்களுள் உயிரிழந்த முன்னணித் தளபதிகள் 15 பேர். ஆக அனுப்பப்பட்ட ஒரு இலட்சத்து 90 ஆயிரம் பேர்கள் என்பது ஒரு இலட்சத்து 45 ஆயிரம் என்றாகி விட்டது. அடுத்தது, கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிதான் இரஷ்யாவுக்குத் தேவையான நிலம், தன் கப்பற்போக்குவரத்துக்கான நிலம். ஆகவே, இங்கிருக்கும் படையினரையும் கிழக்கில் குவித்து அந்தப் பகுதியை மட்டும் பிடிப்பதென்பதான நோக்கமாக இருக்கலாம்.
பொதுவாக நிலத்தைப் பிடிப்பது எளிது. ஆனால் நிர்வகிப்பது கடினம் என்பது பொதுவழக்கு. வரலாற்றுப் பார்வையில், ஆப்கானிஸ்தான், வியட்நாம், ஈராக் எனப் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. insurgency: a condition of revolt against a government that is less than an organized revolution and that is not recognized as belligerency. 41 நாட்கள் ஆகியும் மேரியுபோல் எனும் நகரை வீழ்த்த முடியவில்லை. இன்னும் சொல்லப்போனால் ஒரு நகரும் முற்றாக வீழ்ந்துவிடவில்லை. காரணம், அங்கிருக்கும் பெருவாரியான பொதுமக்களும் எதிர்ப்பாக இருப்பதுதான்.
கிழக்குப் பகுதியைக் கைப்பற்றிக் கொண்டாலும் கூட, தொடர்ந்து நிர்வகிக்க முடியாதென்பதே மேற்குலகப் பார்வையாக இருக்கின்றது. எடுத்துக்காட்டாக, கஷ்மீரை எடுத்துக் கொள்வோம். 1947இல் இருந்தேவும் பிணக்குகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. 2021ஆம் ஆண்டினைப் பொறுத்த மட்டிலும், “This year total 355 people were killed, among them 49 were civilians, 178 armed rebels (militants), and 128 Indian occupying forces,” the APHC stated in its annual report, adding that 484 people were injured. இது பாகிஸ்தான் தரப்புச் செய்தி. At least 182 militants, 43 security men and 34 civilians were killed in militancy violence in Jammu and Kashmir in 2021. இது அரசு தரப்பு. கஷ்மீரில் 9 இலட்சம் இராணுவ வீரர்கள் இருப்பதாகச் சொல்கின்றார் பாகிஷ்தான் பிரதமர். சீன எல்லையில் மட்டுமே 2 இலட்சம் வீரர்கள் இருப்பதாக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு செய்தபடியினாலே குறைந்தது ஆக மொத்தம் 3 இலட்சம் வீரர்கள் இருப்பதாக நாம் எண்ணிக் கொள்ளலாம். இதற்கெல்லாம் பெரும் செலவாகும். இந்தியா பெரிய நாடு, இத்தனை வீரர்களை ஒதுக்க முடியும். இரஷ்யாவால் முடியுமா?
உக்ரைனைச் சுற்றிலும் நேட்டோ நாடுகள். ஆயுத சப்ளை இருந்து கொண்டேவும் இருக்கும். அப்படியாகப்பட்ட இன்சர்ஜன்சியை இரஷ்யாவால் எதிர்கொள்வது சவாலாகவே இருக்கும் என்கின்றார் ஆய்வியலாளர் ஜெனிஃபர் காஃப்ரல்லா.
https://www.thedefensepost.com/2022/03/15/ukraine-insurgency-russia/
https://zeenews.india.com/india/with-eye-on-china-india-shifts-50000-additional-troops-to-border-in-historic-move-report-2372351.html
https://www.newindianexpress.com/nation/2022/jan/01/182-militants-killed-in-jammu--kashmir-in-2021-dgp-dilbagh-singh-2401887.html
4/02/2022
யான் கூம் vs பாவல் துரோவ்
யான் கூம் 1976ஆம் ஆண்டு உக்ரைன் நாட்டில் (அப்போதைய சோவியத் யூனியன்) பிறக்கின்றார். பாவல் துரோவ் 1984ஆம் ஆண்டு இரஷ்ய நாட்டில்(அப்போதைய சோவியத் யூனியன்) பிறக்கின்றார்.
1991ஆம் ஆண்டு சோவியத் யூனியன் கலைகின்றது. உக்ரைன் நாடு தனிநாடாக உருவெடுக்கின்றது. சோவியத் யூனியன் கலைந்ததற்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுவது வறுமை. பொருளாதாரச்சிக்கல். அதன்நிமித்தம், பாட்டி, அம்மாவுடன் அமெரிக்காவுக்குப் புலம் பெயர்கின்றார் யான் கூம். வயது 16. அம்மா, குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளும் தாதியாக வேலை பார்க்கின்றார். யான் கூம் பலசரக்குக் கடையில் துப்புரவுப் பணியாளராக வேலை பார்க்கின்றார். படிக்க வேண்டுமெனும் ஆவல். கல்லூரியில் புரொகிராமிங் கற்கச் செல்கின்றார். கூடவே கம்ப்யூட்டர் தொடர்பான வேலைக்கும் செல்கின்றார். ஓராண்டுக்குள்ளாகவே படிப்பை விட்டு விடுகின்றார். 1997ஆம் ஆண்டு யாகூ நிறுவனத்தில் வேலை கிடைக்கின்றது. அங்கே யான் கூம், உடன் வேலை பார்த்த பிரையன் ஆக்டன் என்பவருடன் நட்பு. 2007ஆம் ஆண்டு இருவரும் தத்தம் வேலையை விட்டு விட்டு, தென்னமரிக்காவைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பிவிட்டனர்.
இரஷ்ய நகரான செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் பிறந்த பாவல் துரோவ், அப்பா வேலைபார்த்து வந்த இத்தாலி நாட்டுக்குச் சென்று விடுகின்றார். பின்னர் குடும்பம் இரஷ்யாவுக்குத் திரும்பிவிடவே இவரும் அவர்களோடு திரும்பி, செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் மொழியியல் பட்டம் படித்து, 2006ஆம் ஆண்டு பட்டம் பெறுகின்றார். அப்போது ஃபேசுபுக் சமூக வலைதளத்தைப் பார்த்து, அது போலவே தம் மொழியில் தாமும் ஏன் ஒன்றை நிறுவக் கூடாதென ஆசைப்படுகின்றார்.
தென்னமரிக்கப் பயணத்தை முடித்துத் திரும்பிய நண்பர்கள் யான் கூம், பிரையன் ஆக்டன் இருவரும் பேசுபுக் நிறுவனத்தில் வேலைக்காக விண்ணப்பித்தனர். வேலை கிடைக்கவில்லை.
விகே எனும் பெயரில் சமூகவலைதளப் பக்கத்தைத் தன் சகோதரருடன் இணைந்து 2007ஆம் ஆண்டில் நிறுவிய பாவல் துரோவ், படிப்படியாக அதனை மூன்று பில்லியன் டாலர்கள் பெறுமானமுள்ள நிறுவனமாக வளர்த்தெடுத்தனர்.
2009ஆம் ஆண்டு தனக்காக வாங்கிய ஐபோனில் ஆப்பிள் ஸ்டோர் இருப்பதைக் கண்ட யான் கூம், தன் நண்பன் பிரையன் ஆக்டனுடன் சேர்ந்து இதில் வரும்படியாக நாமும் ஒரு புராடக்டை நிறுவ வேண்டுமென விரும்பி ஒன்றைக் கட்டமைத்தனர். கட்டமைத்து, தமக்குத் தெரிந்த இரஷ்யமொழி பேசும் நண்பர்களிடையே அறிமுகப்படுத்த, பலதரப்பட்ட மக்களிடையேயும் பிரபலமாகத் துவங்கியது அந்த யேப்.
விகே எனும் சமூக வலைதளம் இரஷ்ய மொழி பேசப்படும் நாடுகளெங்கும் பிரபலமாகத் துவங்கியது. மக்களுக்குத் தங்குதடையற்றதும் வெளிப்படையானதுமான தகவற்களஞ்சியமாக மாறத் துவங்கியதைக் கண்ட இரஷ்ய சர்வாதிகாரத்தின் கண்கள் கனன்றன. நிறுவனத்தைச் சர்வாதிகாரியின் நிழலாக்க மாற்றும் முயற்சிகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தலையெடுக்கத் துவங்கின. 2012/2013ஆம் ஆண்டுகளில், நிறுவனத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டன அல்லது மாற்றப்பட்டு விட்டன.
2014, பிப்ரவரி ஒன்பதாம் நாள், பேசுபுக் நிறுவனத்தின் உரிமையாளர் யான் கூம் அவர்களைச் சந்தித்துப் பேசி, யான் கூம், பிரையன் ஆக்டன் அவர்களுடைய ப்ராட்க்ட்டினை 19 பில்லியன் டாலர்களுக்கு கொள்வனவு செய்வதாக அறிவித்தார்.
2014, ஏபரல் 21ஆம் நாள் நிறுவனத்திலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இனியும் இங்கிருந்தால் தன் உயிருக்கே ஆபத்தெனக் கருதிய பாவல் துரோவ், பிரான்சு நாட்டுக்கு குடி பெயர்ந்து பிரஞ்ச் குடியுரிமை பெற்றவரானார். உக்ரைன் நாட்டில் பிறந்த யான் கூம் அவர்களுடைய ப்ராடக்டைப் போலவே இவரும் ஒன்றைக் கட்டமைக்க விரும்பி, அதனைக் கட்டமைத்து, இரஷ்ய மொழி பேசும் மக்களிடையே அறிமுகப்படுத்த, இதுவும் பிரபலமானது. இது துபாய் நகரின் நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டது.
உக்ரைன் நாட்டில் பிறந்தவரின் உயிர்ப்பு ”வாட்சாப்”. இரஷ்யநாட்டில் பிறந்தவரின் உயிர்ப்பு ”டெலிகிராம்”. இருவருமே பத்து பில்லியன் டாலர்களுக்கும் மேலான சொத்துகளுக்கு உரியவர்கள். முன்னவருக்கு களம் அமைத்துக் கொடுத்தது அமெரிக்கா. பின்னவரை வெளியேற்றிக் களம் அமைத்துக் கொண்டது இரஷ்யா.
4/01/2022
உக்ரைன் போர் 36ஆம் நாள்
தலைநகர் கீய்வ் பகுதிக்கு அருகில் இருந்த இரஷ்யப் படைகள் தற்போதைக்கு பின்வாங்கிக் கொண்டன. அப்படைகள் நாட்டின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்கு அனுப்பப்படலாம், அல்லது எரிபொருள் நிரப்பிக் கொண்டு மீண்டும் முற்படலாமென்கின்றன செய்திகள்.
சில நகரங்கள் தொடர் வான்வெளித் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன. தரைவழி நகர்தலில் இரு தரப்புக்கும் எந்தவொரு குறிப்பிடத்தகுந்த முன்னேற்றமும் இல்லை. இருவாரங்களுக்கு முன்பிருந்த நிலையேதான் தொடர்கின்றது.
போர் முடிவுக்கு வரும் அறிகுறி கண்ணுக்கெட்டிய தொலைவில் இல்லை. இரஷ்யாவுக்குக் கணிசமான வெற்றி, குறைந்தபட்சம் டான்பாஸ், லுகான்ஸ்க் மாநிலங்கள் பிடிபடும் வரையிலும் தொடருமென்றே எதிர்பார்க்கலாம். பிடிபட்ட பின்னர், கிழக்குப் பகுதிகளை(பெருவாரியாக இரஷ்யமக்கள் வாழும் பகுதிகள்) விடுவித்தது வெற்றியெனும் அளவில் பிரச்சினை முடிவுக்கு வரலாம்.
இரஷ்யாவின் நாணயம் போருக்கு முன்பிருந்த மதிப்பினைக் கிட்டத்தட்ட மீட்டெடுத்துக் கொண்டது. இரஷ்யாவின் 650 பில்லியன் டாலர் தங்கம் இருக்கும் வரையிலும் நாணய மதிப்புக்குப் பெரிதாகப் பாதிப்பு வராது என்பது பொதுப்பார்வையாக இருக்கின்றது. https://www.reuters.com/business/finance/sanctions-savaged-russia-teeters-brink-historic-default-2022-03-16/
எல்லைக்கருகில் இருக்கும் இரஷ்யநகர் ஒன்றில் இருக்கும் பெட்ரோல் கிடங்குகளை உக்ரைன் ஹெலிஹாப்டர்கள் தாக்கி அழித்ததாக இரஷ்யா சொல்கின்றது. உக்ரைன் மறுக்கவும் இல்லை; ஏற்கவும் இல்லை. உண்மையாக இருக்குமேயானால், உலகப்போருக்குப் பின்னர் இரஷ்யா தாக்கப்படுவது இதுவே முதன்முறை. https://www.aljazeera.com/news/2022/3/31/russian-troops-leave-chernobyl-nuclear-power-plant-ukraine-says-liveblog
உக்ரைன் அதிபரை இரஷ்யாவால் நெருங்க முடியவில்லையா அல்லது வேண்டுமென்றே விட்டு வைத்திருக்கின்றதா? பெரிய தலைவராகக் கட்டமைத்து, பின்னர் அவரை சரணடையச் செய்வதன் மூலம் தன் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்வதாக இருக்கலாமென்கின்றார் ஐநா முன்னாள் அலுவலர் ஸ்காட் ரிக்.




