கொண்டாட்டம்
சற்றேறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இதேகாலகட்டம். தேர்தல் முடிவுகள் வெளியாகி, பத்து பதினைந்து மணித்துளிகள் கடந்திருக்கும். அழைப்பில் கலந்து கொண்டேன். நிறையப் பேர் அழைப்பில் இருந்தனர். வெற்றிக் களிப்புடன் நண்பரொருவர் பேசிக் கொண்டிருந்தார். நாம் சொன்னோம், “அன்புகூர்ந்து நாம் இதை ஒரு வெற்றியாகக் கொள்ள வேண்டாம். இரண்டு ஆண்டுகள் நம் பணிகள் நிறைவடைந்த பின் கொண்டாடுவதே சரியாக இருக்கும்!”.
நமக்கான வாய்ப்புக்கு ஆதரவளிக்காதவரின் மனத்தையும், தணிந்த மனத்தோடு வென்றெடுத்து முடிப்பதுதான் வெற்றியாக இருக்க முடியுமென்பது நம் கணக்கு. கணக்குப் பிழைத்து விட்டது. தோல்வி அடைந்து விட்டதாக, நான் என்னளவில் தோற்றுவிட்டதாக, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகான இந்தக் காலகட்டத்தில் உணர்கின்றேன்.
நேரிடையாகக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. ஆறு மணி நேரப் பயணம், வீடு வந்து சேரவே காலத்தாழ்ச்சி ஆகியிருந்தது. குடும்பத்தார் ஊரில். அவர்களுடன் பேசிவிட்டு வரும்போது முக்கால்வாசிக் கூட்டம் முடிந்திருந்தது. பிற்பாடு, கூட்டத்தின் ஒலிப்பதிவு கிடைக்கப் பெற்றுக் கேட்டு முடித்தேன்.
2022 தேர்தலில் வெளியிட்ட காணொலியில் சொல்லி இருப்பேன், மேலாதிக்கமும் மேட்டிமைத்தனமும் களையப்பட தேர்தலில் இன்னாருக்கு வாக்களியுங்களென. குழுவில், பெரும்பான்மை வலு இருந்துவிட்டால், எதுவும் செய்து கொள்ளலாமென்பதுதான் பெரும்பான்மைவாதம், மேட்டிமைத்தனம், மேலாதிக்கமென்பதாகும்.
காலமெல்லாம் எதிர்க்குரலாக இருந்து, இருந்து, சமர்புரிவதே எழுத்தாளனின் அறமாக இருக்கின்றது. அப்படித்தான் இருந்தாக வேண்டும்.
முன்னாள் தலைவர் அவர்கள், 2012ஆம் ஆண்டுக்கால கட்டத்தில் நிகழ்ந்த ஒரு பிணக்கினைக் குறிப்பிட்டுப் பேசி இருந்தார்கள். அதில் நானும் தொடர்புடையவன். 2012-2014 செயற்குழுவில் இடம் பெற்றிருந்தேன். எங்கள் செயற்குழு பொறுப்பேற்கு முன்பேவும், இணையதளத்தில், ”Beware of இன்னார்” எனும் தலைப்பில் ஒரு சுற்றறிக்கை இணையதளத்தில் இடம் பெற்றிருந்தது. அதனை எதிர்த்து, தமக்கு அது மானபங்கத்தை ஏற்படுத்துகின்றதெனச் சொல்லி, ஒட்டுமொத்த செயற்குழுவின் மீதும் 100 மில்லியன் டாலர்கள் ஈடு கேட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாகச் சொல்லி, எங்கள் பெயர்களையெல்லாம் தனித்தனியாகக் குறிப்பிட்டு, தாக்கீது அனுப்பப்பட்டிருந்தது. எண்ணிப்பாருங்கள், தன்னார்வத் தொண்டு புரிய வந்த நாங்கள் மன உளைச்சலை எதிர்கொண்டதோடு, பணமும் செலவு செய்து கொள்ள வேண்டுமா? இல்லை, இல்லவே இல்லை. இல்லினாய் மாகாண அரசின் சட்டம் சொல்கின்றது, நிறுவனமே பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்படி இடம் பெற்ற சுற்றறிக்கையென்பது, பழங்குடி ஃபட்வாதான். அப்படிச் செய்வது அமெரிக்க வாழ்வியலன்று!
சிறப்புக்கூட்டத்துக்கான அடிப்படை குறித்து ஏற்கனவே நாம் பேசிவிட்டோம். கூட்டம் நடத்தப்பட்ட விதத்தைத்தான் நாம் தற்போது பேச வேண்டியுள்ளது. நிகழ்ச்சி நிரலில் பேசுவதற்கு வாய்ப்பு இருக்கின்றதென்பதற்காக, 45 மணித்துளிகள் பேச வேண்டியதையெல்லாம் பேசிவிட்டு, இப்படியானவர்கள் பொறுப்புகளுக்கு வர வேண்டுமா, வேண்டாமா என்பதையெல்லாம் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் எனும் பாணியில் பேசிவிட்டு, ஆவணங்களைப் பகிர்வதற்கென முன்கூட்டியே சொல்லவில்லையென்பதல்லாம் கொடூர நகைச்சுவை. கேள்வி/பதில் நேரமென்பது கூட நிரலில் இல்லைதாம். ஆனால் கேள்வி பதில் நேரம் கடைபிடிக்கப்படுகின்றது. உறுப்பினர் பேசுவது தொடரும் போது, சட்டக்கோப்பில் இல்லையெனச் சொல்லப்படுகின்றது. பெரும்பான்மை இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாமெனும் போக்கு மிகவும் ஆபத்தானது.
கூட்டம் நடத்தப்பட்ட விதமென்பது மிகவும் வருத்தத்தையும் கவலையையும் அளிக்கக் கூடியதாகும். தீர்மானமெனும் சொல்லே, பெரும்பான்மை உறுப்பினர்கள் வாக்கு அளித்தபின்புதான் உச்சரிக்கப்படவே வேண்டும். செயற்குழுவில் நிறைவேறி இருந்தால், செயற்குழுக் கூட்டக்குறிப்பில் இடம் பெற்றிருந்திருக்க வேண்டும். பொதுக்குழுத் தீர்மானமென்றால், பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதலளித்திருக்க வேண்டும். இப்படி, ஒவ்வொன்றைப் பற்றியும் பேச முற்படுவோமேயானால், அன்பும் அறமும் பெருந்தோல்வி அடைந்திருக்கின்றது. ஒழுங்கில் பெருவீழ்ச்சியென்பதே காலத்தின் கணங்களில் இடம் பெறும் நம் பதிவாக இருக்க முடியும்.
எதுவும் நிரந்தரமில்லை. இதுவும் கடந்து போகும்!
No comments:
Post a Comment