நண்பர்கள் எங்கிருந்தும் அழைப்பார்கள். எந்த நேரத்திலும் அழைப்பார்கள். தோராயமாகச் சொல்லின், எண்பது விழுக்காட்டுக்கும் மேலாக எனச் சொல்லலாம்; அழைப்புக்குச் செவிமடுத்து விடுவேன். வேலைநிமித்தமாக இருந்தாலும் கூட, அழைப்புக்குச் செவிமடுத்து, வேலையாக இருக்கின்றேனெனச் சொல்வதுதான் வாடிக்கை.
பெரும்பாலான நேரங்களில் வேலைபார்த்துக் கொண்டேவும் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருப்பேன். இப்படியான பின்னணியில்தாம், அண்மையில் ஓர் அனுபவம்.
நண்பருடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதுதான். சில நாட்களில் அழைக்காமல் விட்டுவிட்டாலும், நான் அழைத்து விடுவேன். பல நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்பவர் அவர். சென்றிருக்கின்ற இடத்திலே நலமாக இருக்கின்றாரா என்பதைத் தெரிந்து கொண்டுவிட்டால் மனம் சமநிலை கொள்ளும். அவ்வளவுதான்.
தனிப்பட்ட அழைப்பாக இருந்திருந்தால் அவர் அப்படிச் சொல்லியிருக்க வாய்ப்பில்லை. அது ஒரு கூட்டழைப்பு; பலரும் அழைப்பில் இருந்தனர். இப்படிச் சொல்லிவிட்டார், “பழமைபேசி நம்முடன் பேசித் தம் பொழுதைப் போக்கிக் கொள்கின்றார்”. அப்போதைக்கு நான் சிரித்துக் கொண்டேன். ஆனாலும் கூட, நம் மன அகந்தை நம்மை விட்டபாடில்லை. அவர் வெறுமனே நையாண்டிக்குக்கூடச் சொல்லி இருக்கலாம். அறிவுக்குத் தெரிகின்றது. ஆனால் அகந்தை அடங்க மாட்டேனென்கின்றது.
பெரும்பாலான நேரங்களில், கூட்டு அழைப்புகளில் நாம் பேசுவதில்லை. மற்றவர்கள் பேசக் கேட்டுக் கொண்டிருப்பதுதாம் நம் வாடிக்கை. அழைப்பு தொய்வடைகின்ற நேரத்திலே அல்லது சுவாரசியம் இழக்கின்ற நேரத்திலே எதையாவது கிள்ளிப் போட்டுவிட்டு மீண்டும் அடங்கிவிடுவது. நாம் நம் வேலையைப் பார்க்கவும் வசதியாக இருக்கும். இப்படியான சூழலிலே, மனம் அடங்க மாட்டேனென்கின்றது.
உண்மையில் சொல்லப் போனால் நமக்கு 24 மணி நேரம் என்பது போதுமானதாக இல்லை. பிழைத்திருப்பதற்கான வேலையில், அதாவது வருமானம் கொடுக்கின்ற வேலையில், உடன் பணி செய்வோர் அயல்நாடுகளில் இருந்து பணி செய்வோரும் உண்டு. ஆகவே இன்ன நேரமென்று இல்லை. பணிநிமித்தம் தகவல் கேட்பார்கள். பேச விரும்புவார்கள். உடனுக்குடனே பேசிவிட்டால், வேலையில் தொய்வு ஏற்படாது.
நமக்கான சமையலை நாமே பார்த்துக் கொள்வதென்பது இன்பகரமாக ஆகிவிட்டது. விருப்பமானதை, விரும்பிய அளவில், விருப்பமான முறையில் உண்டு கொள்ளலாம். கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலான பழக்கவழக்கமது. அதனாலே, கடைகளுக்கும் நாமே சென்று நமக்கானதை வாங்கியாக வேண்டும். அதன்நிமித்தம், புதிது புதிதாக பன்னாட்டுத் தாவரப்பொருட்களை வாங்கி முயல்வதிலே ஒரு நாட்டம். எடுத்துக்காட்டாக, சிக்கரிப்பூ என்பது ஆண்டுமுழுமைக்கும் கிடைக்காது. அந்தப் பருவத்தில்மட்டும்தான் கிடைக்கும். இப்படி அந்தத்தந்தப் பருவத்தில் மட்டுமே கிடைப்பவற்றை வாங்கிச் சமைப்பதில் ஒரு சுவை. அம்மா அவர்கள் ஊரிலிருந்து கொடுத்தனுப்பும் நாட்டுக்காய்களில் வற்றல் முதலானவற்றைக் கொண்டு எதையாவது செய்வது, இப்படியாக அதற்கும் நேரம் ஒதுக்கியாக வேண்டும்.
உடற்பயிற்சி என்கின்ற பேரிலே எதையாவது செய்வது. அருகிலே தம்பி ஒருவர் இருக்கின்றார். அவருடன் சேர்ந்து கொண்டு ஊர்நாயம் பேசிக் கொண்டு வீதிகளில் திரிவது. அல்லது நாமகவே ஓடித்திரிவது, சைக்கிள் ஓட்டுவது, பூங்காக்களில் திரிவது, இப்படியாகப் பொழுதுகள் ஒதுக்கியாக வேண்டும்.
அமெரிக்கத் தமிழ் அமைப்புகளிலே எப்போதும் ஏதாகிலும் ஓர் அக்கப்போர் இருந்து கொண்டிருக்கும். அதைப்பற்றிப் பேசியாக வேண்டுமே? இஃகிஃகி. சிரிப்பும் நக்கலும் நையாண்டியுமாக அதற்கும் சில பொழுதுகள் ஒதுக்கப்பட்டாக வேண்டும். உரையாடல் என்பது இடம் பெற்றால்தான், நாம் நம்மை திருத்திக் கொள்ள முடியும். அல்லது திருத்த முடியும். குழந்தைகளிடமிருந்தே அமெரிக்க வாழ்வுமுறை, பண்பாடு போன்றவற்றைக் கற்றுக் கொள்கின்றோம். ஆனால் இந்தத் தமிழ் அமைப்புகள் அவற்றைக் கிஞ்சிற்றும் தத்தம் செயற்பாடுகளிலே இடம்பெறச் செய்வதில்லை. ஆகவே தொடர்ந்து சக நண்பர்களிடத்திலே பேசுவதன் மூலம் கற்றுக் கொள்ளவும் சுட்டிக்காண்பிக்கவும் முடிகின்றது.
அன்றாடம் குறைந்தது ஒருபக்கமாவது நம் எண்ணவோட்டங்களை எழுதிப் பார்க்க வேண்டியதாய் இருக்கின்றது. சிந்தையைக் கசக்கி எழுதத்தலைப்படும் போது, நம்முள்ளே இருக்கின்ற கசடுகள் புலனாகின்றது. அதற்காகவேனும் எழுத வேண்டி இருக்கின்றது. எழுதுகின்ற நேரத்திலே நீரில்லாக் கொடியைப் போலே மனம் அறியாமையின் பொருட்டுத் தத்தளிக்க நேரிடுகின்றது. நாடலுக்கும் தேடலுக்கும் அது வித்திடுகின்றது. நூல்கள், காணொலிகள், ஆவணங்கள் போன்றவற்றுக்காக நேரம் செலவிட்டாக வேண்டும்.
ஊரில் இருப்பவர்களுடன் பேச வேண்டும். பேசி நிலைமையைத் தெரிந்து கொண்டால் அன்றைய நாள் இனிதாய்க் கழியும். அல்லாவிடில் மூளையின் ஏதோ ஓர் ஓரத்தில் அந்த ஓர் நரம்பியலணு குத்திக் கொண்டே இருக்கும். மற்ற மற்ற வேலைகளின் போக்கினைப் பாழ்படுத்தும்.
முன்பெல்லாம் இப்படி இல்லை. வீடு கட்டிக் குடியேறிவிட்டால் இன்பம். காலாகாலத்துக்கும் வீடு நமக்குத் தொண்டாற்றிக் கொண்டு இருக்கும். அஞ்சாது அரவணைப்புடன் உறங்கிக் கிடக்கலாம். தற்காலத்தில் அப்படியன்று. வீட்டுக்கு நாம் தொண்டு செய்தாக வேண்டும். துப்புரவாக வைத்திருப்பதினின்று, வீட்டிலே பூட்டப்பட்டிருக்கின்ற கருவிகளைப் பழுது பார்ப்பது, மாற்றுவது, பேணுவது எனப் பல பணிகளும் இடையறாது இருந்து கொண்டுதான் இருக்கும். அவற்றைப் பங்கு போட்டுக் கொண்டாக வேண்டும். வீட்டுப்பணிகளென்றால் வீட்டுப்பணிகள் மட்டுமேயல்ல. மாதாமாதம் சில பல கட்டணங்கள் கட்டியாக வேண்டும். அவையெல்லாம் கிரமத்தில் இருக்கின்றனவாயெனப் பார்த்துக் கொள்ள வேண்டும். இப்படி வீட்டுக்குள்ளேயும் ஏராள பணிகள் உண்டு.
சில பல குழுக்கள். அமைப்புகள். அவற்றுக்கும் தீனி போட்டாக வேண்டும். ஒரு கை நமக்கு வேலை செய்து கொள்கின்றதென்றால், இன்னொரு கை சமூகத்துக்காக எதையாவது செய்துதானே ஆக வேண்டும்? ஊரைத் திருத்தி விட முடியுமாயென்றால் முடியாதுதான். ஆனால் நம்மால் பயன் அடைபவர் ஏதோவொருநாள், ஏதோவொருவர் இருக்கத்தானே செய்வர்? அந்த ஒருவருக்காக நாம் தொடர்ந்து இயங்கித்தானே ஆக வேண்டியுள்ளது??
இத்தனைக்கும் மேற்பட்டு பொழுது போக்க வேண்டிய தேவை ஏற்படாது. ஏதோவொன்றின் காரணம், மனவலி, மனச்சோகை. இருக்கவே இருக்கின்றது மணிவாசகரின் திருவாசகம். 13 ஆண்டுகட்கு முன்பு நண்பர் ஆரூரன் அவர்கள் கொடுத்தது. பிரித்து உரக்கப் படிக்கலாம். பாடலாம். பழந்தமிழ்ப் பாடல்களுக்கு இசைப்பயிற்சி தேவையே இல்லை. உரக்கப் பாடுங்கள். கோர்வையாக வராமல் தடுமாற்றம் ஏற்படும். அதற்கொப்ப சொல்லை நீட்டியும் விரைவாக்கிக் குறுக்கியும் பலுக்க முற்படுவோம். பாடலாக அதுவாகவே உருவெடுத்து விடும். தொடர்ந்து பாடிக் கொண்டே இருக்கலாம். இஃகிஃகி. மனம் எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டு அம்மணமாக நிலைகொண்டிருக்கும். தமிழ் கற்கலாம். நம் சிந்தனை என்பதையே ஈசனாக உருவகப்படுத்தி, பாடலுக்குக் கீழே கொடுத்திருக்கும் உரையை வாசிக்கும் போது புதுப்புது தத்துவார்த்த எண்ணங்கள் மேலெழும். எடுத்துக்காட்டாக,
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகிஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே!
ஆகாயம், மண், காற்று, ஒளி, ஊன், உயிர், உண்மை இன்மை என எல்லாமும் தாமேயெனவும் கருதிக் கொள்பவரைக் கண்டு மனம் கோணாமல் தற்காலிகக் கொண்டாட்டத்தில் இருப்பவரெனக் கருதுகின்ற சிந்தையை நான் வாழ்த்துவனே!!
இப்படியாக, தனியாக ஓர் அறையில் இருந்து படிக்கப் படிக்கப் போதாமை எங்கிருந்து வந்து விடப் போகின்றது? கருவிகளின் உதவியோடு பலவற்றையும் செய்யத் தலைப்படும் போது போதாமை வரும். நினைத்துப் பாருங்கள். 100 ஆண்டுகட்கு முன்னம், உடற்பயிற்சி செய்தாக வேண்டுமென்கின்ற கட்டாயம் இருந்ததா? இல்லை. ஏதோவொரு வகையில் உழைப்புக்காட்பட்டதாக இருந்தது உடல். பாடுவதைக் கூட ஏனோதானோவெனப் பாடிக்கொள்ளலாம். அந்த ஒலியைக் கருவிக்குள் செலுத்தி எடுத்துவிட்டால் அது தரம்கூட்டப்பட்டதாக ஆகிவிடுகின்றது. பாடும்கலை செத்துப் போகின்றது. கலை செத்துப் போவதுமட்டுமன்று. அந்த இடத்தில் வேறு ஏதோவொரு பிரச்சினை வந்து உட்கார்ந்து கொள்கின்றது. புலன்செய்ப்(conventional methods) பண்புகள் நம்முள் குடிகொண்டிருக்கும் வரையிலும் போதாமைக்கு இடமில்லை.