7/20/2010

FeTNA: சுட்டும் நேரமிது!!!

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் விழா முடிந்த உடனே, வாசிங்டன் முத்தமிழ் விழா, அடுத்து வந்த உள்ளூர் நிகழ்ச்சிகள் என காலம் விரைந்தோடி விட்டது. இதற்கிடையே, வெளியூர்ப் பயணத்திற்கான ஏற்பாடுகளின் முனைப்பும் இணைந்து கொண்டமையால் எழுத்திற்கான தற்காலிக இடைவெளி தவிர்க்க இயலாதது ஆகிவிட்டது.

கடந்த டிசம்பர் மாதம் முதலே, திருவிழாவை மனதிற் கொண்டு ஒரு தன்னார்வத் தொண்டர் என்கிற முறையில் நாம் செயல்பட்டு வந்தமை அனைவரும் அறிந்ததே! சுய விருப்பின் அடிப்படையிலே, கிடைத்த நல்ல வாய்ப்புகளைப் பயன்படுத்தியமையால், கிட்டத்தட்ட பதினான்கு நகரங்களுக்குச் சென்று, அங்குள்ள தமிழ் நண்பர்களைச் சந்தித்து அளவளாவியதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். சென்ற இடமெலாம், திருவிழாவுக்கு வாருங்கள் எனச் சொல்லத் தவறவே இல்லை நாம்.

நாட்டின் சகல இடங்களில் இருந்தும் வந்திருந்த நண்பர்களைக் கண்டோம், மகிழ்ந்தோம். இயன்ற அளவுக்கு நமது பங்களிப்பையும் நல்கினோம். அந்த அடிப்படையிலே, இதோ எமது சில அவதானிப்புகளும், மனதில் எழும்பும் சுட்டலைகளும்!!

திருவிழாவானது, கோலாகலமாகவும் சிறப்பாகவும் செம்மையாகவும் நடைபெற்றது என்பதில் மிக்க மகிழ்ச்சியுறுகிறோம். ஆனாலும், சுட்டிக்காட்டும் வகையில் சிலவும் உள என்பதில் ஐயமேதும் இராது.

விழா அரங்கம், எழிலோடும் மிகப் பிரமாண்டமாகவும் இருந்தது என்பதும் உண்மை. அதே அளவு, அரங்கின் முன்புறம் குறுகலாகவும், நெரிசலைக் கூட்டுமுகமாகவும் இருந்ததும் உண்மை. குறிப்பாக, இளஞ்சிறார்களை ஆற்றுப்படுத்தும் வகையில் எந்த இடமும் இல்லாமற்ப் போனது பெரும் குறை.

உணவு ஏற்பாடுகள் வெகுபிரமாதம்! இதைவிட மேலும் சிறப்பாகச் செய்ய இயலுமா, என்ன??

நுழைவுச் சீட்டு விநியோகமும், வரவேற்பும் நல்லபடியாகவே நிகழ்ந்தது. ஆனாலும், எத்துனை நாட்களுக்குத்தான் இன்னமும் இப்படிக் களேபரகதியில் இயங்கிக் கொண்டு இருக்கப் போகிறோம் எனும் கேள்வியும் எழமால் இல்லை. கணினி யுகமிது. தக்க மென்பொருளை நிறுவி, பயனர் கணக்கையும், சீட்டு விநியோகத்தையும் செம்மைப்படுத்த வேண்டியது உடனடிக் காரியமாக இருத்தல் மிக அவசியம். ஆண்டு தோறும் விழா நடந்து வருகிறது. அப்படியாக, இருபத்து மூன்று ஆண்டுகளாகக் கற்ற அனுபவம் இதில் வெளிப்படவில்லை என்பதே நிதர்சனம். உள்ளூர்த் தமிழ்ச் சங்கம் என்பதைவிட, பேரவையின் பங்களிப்பு இதில் இருத்தல் மிக அவசியம்.

நிகழ்ச்சி நிரல் மேலாண்மை என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல என்பதை அருகில் இருந்து அவதானித்தவன். எனினும், நிரலில் நுண்ணியத்தைக் கடைபிடிக்கத் தவறவிட்டு விட்டோம். அரிய செய்திகளை, எழுச்சியூட்டும் உரைகளை அதற்கான நேரத்தில் மட்டுமே வெளிப்படுத்த வேண்டும். உணவு இடைவேளைக்கு முன்பு, அன்றைய நாளானது நிறைவு பெறும் நேரம் போன்ற தருணத்தில் அது போன்ற நிகழ்ச்சிகளை இடம் பெறச் செய்து, நோக்கர்கள் அதே மனநிலையோடு வெளியே சென்று, கேட்டது மற்றும் கண்டதைப் பற்றின சிந்தனைகளை அசை போடும் விதமாக இருத்தல் வேண்டும். அதைவிடுத்து, துள்ளாட்டமும், செறிவான உரையும், சிந்தனையூட்டும் நாடகமும், துள்ளிசையும் என ஒன்றோடு ஒன்று கலந்திருப்பது எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பது திண்ணம்.

மேலும், வட அமெரிக்காவில் பேரவையின் பங்கு மற்றும் அதன் வளர்ச்சிக்கான திட்டங்கள் என்பது பற்றிய தகவல்கள் எவரது உரையிலும் விரிவாக வெளிப்படவே இல்லை. ஆண்டு தோறும் நன்றாக நிகழ்ச்சி நடத்துவது, எவராவது வந்திருந்து இலைமறை காயாக எவரையாவது சாடுவது எனும் பாங்கில் நிலவி வரும் விமர்சனத்திற்குப் பதிலடி கொடுக்கும்படியான உரையை நாம் கேட்காமற்ப் போனதில் மிகுந்த வருத்தமே!

பேரவையின் முன்னோடிகள், தத்தம் வேலைகளில் மூழ்கி இருந்து, நிகழ்ச்சிகளைக் குறித்த நேரத்தில் நடத்தி முடிப்பதில் குறியாக இருந்தார்களே தவிர, வந்திருக்கும் பார்வையாளர்களைச் சந்தித்து உரையாடி, அவர்களது பங்களிப்பை ஈர்க்கும்படியான உரையாடல்களை மேற்கொண்டதாக நாம் பார்க்கக் காணோம். ஒவ்வொரு முன்னோடியும், தலா நூறு பேருடன் கலந்து பேசி, பேரவையுடனான பிணைப்பை வலியுறுத்த வேண்டும் என்கிற பாங்கு மிக அவசியமானது.

தன்னார்வத் தொண்டர்கள், வெகுவாகப் பாராட்டப்பட வேண்டியவர்கள். தேனீக்களாய்ப் பறந்து பறந்து வினையாற்றிக் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்களுக்கான பயிற்சி என்பது அளிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. வட அமெரிக்காவின், வலுவான கட்டமைப்புக் கொண்ட எந்தவொரு அமைப்புக்கும் தன்னார்வத் தொண்டர் பாசறை என்பது மட்டுமே அடிப்படையாக இருக்க முடியும். இங்கே, தன்னார்வத் தொண்டர்கள் நிறைய இருக்கிறார்கள். அரவணைப்பு மற்றும் போதிய வழிநடத்துதல் என்பது இன்னமும் செழுமையை ஊட்டும் என்பதில் இரு வேறு கருத்துகள் இருக்க முடியாது!

இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு, குறிப்பாக இலக்கிய விநாடி வினா நிகழ்ச்சிக்கு குறைவான நேரம் ஒதுக்கப்பட்டு, அந்நிகழ்ச்சியின் மகத்துவம் மேலோங்கிய நிலையில் வெளிப்படாமற்ப் போனதிலும் ஏமாற்றம்.

பட்டிமன்றம் வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆனால், கவியரங்கம் குறித்த நேரத்திற்குள் முடிக்காமற் போனதிலும் பெருத்த ஏமாற்றம் எமக்கு. நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில், அக்குறைபாட்டுக்குத் தார்மீகப் பொறுப்பேற்பது எம் கடமை.

விழா மலர் சிறப்பாக வந்திருப்பதில் பெரு மகிழ்ச்சி. ஆனாலும், ஒருவருக்கு ஒரு படைப்பு மட்டுமே என்பதைக் கையாண்டு, புலம் பெயர்ந்து நாட்டில் இருக்கும் தமிழருக்கான செறிவார்ந்த படைப்புகளை இடம் பெறச் செய்வதில் முனைப்புக் கூட்டுவதும் நலம் பயக்கும்.

நிகழ்ச்சிக்கு வரும் முக்கியப் பேச்சாளர்கள், இங்கொன்றும் அங்கொன்றுமாகச் சாடிப் பேசுதல் என்பது தவிர்க்க இயலாதது. ஆனால், அதுவே பிரதானம் என்பதை இயன்றளவு தவிர்க்க வேண்டும். புலம்பெயர்ந்த நாட்டிலே, பல பாகங்களிலும் இருந்து வருபவர்கள், சக மனிதனுக்கு உதவ வேண்டும் என்பதனை உறுதியடையச் செய்வதில் குறியாய் இருக்க வேண்டும். மொழி, இனம் முதலானவற்றில் முனைப்புக் கூட்டும்படியாக இருத்தலே இன்றியமையாததாய் இருக்க வேண்டும்.

விழா என்பதே, கூடிக் களிக்கவும், சமூகத்திற்கு செய்திகளை அளிக்கவும், பண்பாட்டைப் பேணுவதற்கும்தான். அவ்வகையிலே, மேற்சொன்ன மேம்பாட்டுக்கானவை இருப்பினும் விழாவானது வெகு சிறப்பாக நடைபெற்று இலக்கினை எய்தியது என்பதை எவரும் மறுக்க இயலாது. அடுத்து வரும் ஆண்டுகளில், தலைவர் உரையானது புலம் பெயர்ந்து வாழும் மக்களுக்குப் பேரவையின் அவசியம், பேரவையின் சாதனைகள், பேரவை வளர்ச்சிக்கான திட்டங்கள் போன்றனவற்றோடு எழுச்சியுறும் என்பதில் நாம் உறுதியாக இருப்போம்!தமிழால் இணைந்தோம்!!!

குறிப்பு: இவை பழமைபேசியின் கருத்துகள் அன்று; நண்பர்களுடன் இணைந்து கோர்த்தவை!!

7 comments:

Anonymous said...

Hi Anna,

I used to read your blogs,But i am not having that much capability to write a comment (either +Ve or -Ve)
to your blog.

But I admired about your writtings na.

Keep writting and Keep doing your good work;na

With Regards
Karuppu

ஆரூரன் விசுவநாதன் said...

நடுநிலையான விமர்சனங்கள். ஆரோக்கியமாக எடுத்துக் கொண்டால் வருங்காலம் மிகச் சிறப்பாக அமையும். அதுவே அனைவரின் விருப்பமும்....

அன்புடன்
ஆரூரன்

எம்.எம்.அப்துல்லா said...

//தன்னார்வத் தொண்டர்கள், வெகுவாகப் பாராட்டப்பட வேண்டியவர்கள். தேனீக்களாய்ப் பறந்து பறந்து வினையாற்றிக் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்களுக்கான பயிற்சி என்பது அளிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

//

நான் அங்கு கண்டு வியந்த விடயம் இது.முறையான பயிற்சியின்றி தன்னார்வத்தில் சுறுசுறுப்பாக பணியாற்றிய உங்கள் தொண்டர்கள் பெரும் பாராட்டுக்குறியவர்கள்.குறிப்பாக பதிவர் சின்னப்பையன் மற்றும் பின் மேடை மேலாண்மையை கவனித்த திரு.நாஞ்சில் பீட்டர் அவர்களின் புதல்வி (அவர் பெயர் தெரியவில்லை).//கவியரங்கம் குறித்த நேரத்திற்குள் முடிக்காமற் போனதிலும் பெருத்த ஏமாற்றம் எமக்கு.

//


நிகழ்வு குறிப்பிட்ட நேரத்திற்குமேல் செல்கின்றது என்பதை உணர்ந்து ஒரே ஒரு கவிஞர் மட்டும் இரண்டிரண்டு முறையாப் படிக்காம காலத்தைச் சுருக்கும் நோக்கில் ஒரேமுறை மட்டுமே படித்தாரே!கவனித்தீர்களா?

:)

vasu balaji said...

காணொலியில் பார்க்கும்போதே நினைத்தேன். இன்னோர் விடயம், பேச்சாளர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே பார்வையாளர்களோ மைக் அருகில் இருப்பவர்களோ கதைத்துக் கொண்டே இருந்தது உறுத்தல் மட்டுமல்ல எரிச்சல். சில நேரங்களில் பேச்சே கேட்காத அளவுக்கு. நல்ல ஆக்க பூர்வமான ஆலோசனைகள். பகிர்வுக்கு நன்றி.

தாராபுரத்தான் said...

நம்ம ஊரில் விழா நடத்துனவருக்கு விழா நடத்தறாங்க..நீங்க என்னடான்னா சுய பரிசோதனை செய்யறீங்க.

Sabarinathan Arthanari said...

விழா மேலும் மேலும் செழுமை பெற வாழ்த்துகள்

naanjil said...

தம்பி மணி
நல்ல கருத்துக்களுக்கு நன்றி.
தமிழ்ப்பேரவையின் நிர்வாக குழுவுக்கு உங்கள் கருத்துக்களை எடுத்துச் செல்கிறேன்.
வருங்காலத்தில் தழிழ்விழா மேலும் சிறப்பாக அமையும் என உறுதியளிக்கிறேன்.

அண்ணன் நாஞ்சில் பீற்றர்