7/06/2009

Fetna: வட அமெரிக்கத் தமிழ்த் திருவிழா.... ஏனிந்தச் செருக்கு?!

வணக்கம் நண்பர்களே! தமிழனின் தனித்தனமை போற்றும் விருந்தோம்பலுக்கு இலக்கணமான அட்லாண்டா தமிழ்ச் சங்கத்தாரே, மூன்று நாட்களும் செறிவான நிகழ்ச்சிகளைத் தந்து அமெரிக்க மண்ணில் தமிழ் வளர்க்கும் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கத்தாரே, விருந்தூட்டி, களிப்பூட்டி, தமிழூட்டி, இறுதியில் நோக்கர் கருத்துக்கான படிவமும் கையளித்தீர்கள். அது உங்கள் மாண்பை மெய்ப்பிக்கிறது.

என்றாலும், படிவம் கையளிக்கப்பட்ட இரண்டாம் நாள் நிகழ்ச்சி நடுநிசியையும் கடந்து நிறைவுற்றதின் காரணமாய் எம்மால் படிவத்தை நிரப்பி எமது கருத்துகளைத் தெரிவிக்க இயலவில்லை.

பதிவனே ஆயினும், இதுகாறும் நடுநிலை இதழியலாளனாகவே நான் நிகழ்ச்சிகளைப் பற்றி இடுகைகள் இட்டு வருகிறேன். அதை ஒட்டியே இந்த இடுகையும். நல்ல மனதோடு இதையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் சங்கத்தாருக்கு உண்டு என்பதை நானறிவேன்.

தமிழனுக்கு சில பல நேரங்களில் தலைவலியாய் அமைவது, ஆங்கிலத்திலே body language என்று சொல்லப்படுகிற அங்க மொழி. குரல் உயர்த்திப் பேசுவதும், முறையற்ற செய்கைகள் செய்வதுமாய்.... அவற்றை நான் அறவே சங்கத்தின் தன்னார்வத் தொண்டர்களிடத்து கிஞ்சித்தும் காணவில்லை. மகிழ்ச்சி!

வென்றாக வேண்டும் தமிழ்! இது கொடுக்கப்பட்ட தலைப்பு. இதிலே பங்கேற்ற கவிஞர் ஒருவர், தன் உள்ளக் குமுறல்களை வெளியிட்டார். அதிலே நியாயம் இருக்கிறது. ஆனால் ஒருவரை விழா மேடையில் வசை பாடுவதென்பது கவியாகுமா? நியாயம் கேளுங்கள், அநியாயம் தேடிக் கொள்ளாதீர்கள்!! அந்த முறையற்ற வார்த்தைப் பிரயோகங்களை அவைக் குறிப்பிலே இருந்து நீக்குவதாக அறிவித்த கவியரங்கின் தலைவர் கவிஞர் செய பாசுகரன் பாராட்டப்பட வேண்டியவர். எனவேதான் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டவற்றை நான் இங்கே குறிப்பிடவில்லை.

இரண்டாம் நாள் நிகழ்ச்சி... அமெரிக்காவிற்குப் புலம் பெயர்ந்ததில் அதிக முன்னேற்றம் கண்டவர் ஆண்களா? பெண்களா?? இது நீயா, நானா நிகழ்ச்சிக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு. சுவையாக நேர்த்தியாக நிகழ்ந்த நிகழ்ச்சி! பாராட்டுகள்!! ஆனால், தமிழனுக்கு ஒரு செயலலிதா போதாதா என்கிற வாசகம் இடம் பெற்றது விரும்பத்தக்கது அல்ல. எனக்குத் தெரியும், அது ஒரு tongue slip, விவாதத்தின் இடையே தடுமாற்றத்தில் வந்து விழுந்த வாச்கம் என்பதை நானறிவேன்.

என்றாலும், பெண்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டுப் போராடிக் கொண்டிருக்கிற ஒரு சமூகத்தில் இது போன்ற வாசகங்கள், அதுவும் ஒரு கண்ணியமான மேடையிலே கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டியவை. பெண்களை ஊக்குவியுங்கள், தன்னம்பிக்கையை ஊட்டுவது ந்ம் கடமை. நகரத்திலே, மேட்டுக்குடியிலே பிறழும் நிகழ்வுகளே சமூகம் என்பது சரியாகாது.

இன்னும் கிராமங்களிலே பாராமுகமாய், கண்டுங் காணாததுமாய் பெண்கள் ஏராளம், ஏராளம். ஆகவே பெண்களுக்கென சிறப்பு நிகழ்ச்சிகளை எதிர்வரும் தமிழ் விழாக்களிலே சங்கத்தார் இடம் பெறச் செய்ய வேண்டும். அதற்காக மேலதிக நாட்டியங்களை வைத்து வெறுப்பேற்ற வேண்டாம், சிந்தனை, நம்பிக்கை ஊட்டும் நிகழ்ச்சிகள் தந்தாக வேண்டும்.

இரண்டாம் நாள் பின்னேர நிகழ்ச்சிகள்.... அமெரிக்க வெள்ளைக்கார மருத்துவர், பெருமாட்டி சாண்டா அவர்கள் ஈழம் பற்றிப் பேசி உரையை நிறைவு செய்கிறார். அரங்கம் எழுந்து நின்று, standing ovation மரியாதை அளிக்கிறது. சென்னையிலே இருந்து வந்த விருந்தினருக்கு எழுந்து நின்று மரியாதை செய்வதில் என்ன தயக்கம்? ஏன், தனக்கு முக்கியத்துவம் கிடைக்காதோ என்ற உறுத்தலா??

பெரியார் மண்ணில் இருந்துதானே Dr. Martin Luther King அவர்களின் மண்ணுக்கு வந்து இருக்கிறீர்கள்?? கேள்வி எழுகிறதே?! பிறகு வேறு வழியின்றி எழுந்து நின்று தமிழனின் மானத்தைக் காப்பாற்றினீர்கள், நன்றி!!

சங்கத்தாரே, இதுகாறும் நேரிடையாக உங்களைச் சுட்டவில்லை. ஆனால் அதற்கும் வேலை வந்து விட்டது. எம்மைப் பொறுத்தவரையில் நிலவு மன்னன், தாய்மொழியின் மகத்துவம் உரைத்த எளிய மனதுக்குச் சொந்தக்காரன் மயில்சாமி அண்ணாதுரைதான் முதன்மை விருந்தினன். சரி, விட்டுத் தள்ளுங்கள். அனைவருமே முக்கிய முதன்மை விருந்தினர்கள் என்றே ஏற்றுக் கொள்கிறேன்.

பிறகு ஏன் எவருக்குமில்லாத சிறப்பு மரபு, special protocol, வைரமுத்து அவர்களுக்கு மட்டும்? ஒருவர் சிரம் தாழ்த்தி அவரை மேடைக்கு அழைத்துச் செல்கிறார். அவர் மேடையை அடைந்ததும் தலைவரும், உபதலைவரும் பிரத்தியேகச் சிறப்பு செய்கிறார். நல்லது!

ஏன் நிலவு மன்னனுக்கும், தமிழருவிக்கும், அண்ணாவின் தம்பி விசுவநாதனுக்கும், மூத்த தமிழ் ஆசான் சிலம்பொலி ஐயாவுக்கும் இன்னபிற முக்கிய விருந்தினருக்கும் அது இல்லை? புலம்பெயர்ந்து வாழும் மண்ணில், இம்மாதிரியான யதார்த்தமற்ற மரபுகளைக் கட்டுடைத்துச் செயலாற்றுங்கள். அடுத்த தலைமுறைக்கு நல்லதொரு முறையைக் கற்றுத் தருவோமாக!

கவிப் பேரரசு அவர்களே நல்ல இலக்கியச் செறிவு மிக்க தகவல்களை அளித்தீர்கள். தமிழ்ச் சமூகம் உங்களிடம் எதிர்பார்ப்பதும் அதுவே! நன்றாகப் பேசுவதற்கும், சரியாகப் பேசுவதற்கும் விளக்கவுரை அளித்த தாங்கள், தாங்கள் நன்றாகப் பேசினீர்களா, சரியாகப் பேசினீர்களா எனப் பட்டிமன்றம் வைத்து விவாதிக்கும்படி செய்துவிட்டீர்களே ஐயா?!

தாங்கள் பிறந்த நாள் கொண்டாடுவீர்களா, மாட்டீர்களா என்று எந்த ஈழத் தமிழன் அழுகிறான் இந்தப் புவியில்? மேதாவிலாசம் பற்றிப் பரப்புரை ஆற்றிய நீங்கள், இந்த ஆண்டு நான் பிறந்த நாள் கொண்டாடப் போவதில்லை என்று சொல்லி மேதாவிலாசம் தேடுகிறீர்களே? இதற்கு மாற்றாய் நான்கு பட்டி தொட்டிகளுக்குச் சென்று ஈழத்தில் மனிதாபிமானம் சின்னாபின்னம் ஆவதைப் பற்றிப் பேசுங்கள். உலகமே உங்களுக்கு விழா எடுக்கும்.

புறம் பேசுதலும், மறதியும் தமிழனுக்கு நேர்ந்த சாபக் கேடு என்றீர்கள். ஆனால் தாங்கள் உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவது புலம் பெயர்ந்த தமிழனுக்குத் தெரியாது என்று நம்புகிறீர்கள்தானே? ஏன் ஐயா, தமிழில் தலைசிறந்த உங்களுக்கு, அதுவும் வயோதிகம் வாசற்படியில் நிற்கும் இந்தப் பருவத்தில் இந்த வேலை?? உங்களிடம் இருந்து நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய தமிழ் கடலளவு. அவற்றை அடுத்த தலைமுறைக்கு இட்டுச் செல்லுங்கள். மேலும் மேலும் உங்கள் புகழ் ஓங்கும்!

எவனொருவன் சமூகத்தின் அங்கமாய் இருந்து, சமூகத்தின் யாதார்த்தத்தைப் பிரதிபலிக்கிறானோ அவன் கவிஞன் என்றார் சக கவிஞர் செய பாசுகரன் அவர்கள். உண்மை! இலக்கியவாதியான தாங்கள், இலக்கியத்தின் பேராலே அழைக்கப்பட்டு இருக்கிறீர்கள். இருந்தும், இலக்கிய வட்டச் சொற்பொழிவுக்கு வந்து தமிழனொடு தமிழனாய்ச் சங்கமிக்க மனம் வரவில்லையே தமிழ்க் கடலே? ஏன்?? தங்களின் தமிழ் நுகரக் கிடைக்காத வருத்தமுடன்,

சாமான்யத் தமிழன்,
பழமைபேசி.

(விழா பற்றிய முந்தைய இடுகைகளுக்கு, தமிழ்விழா(Fetna) எனும் வகைப்பாட்டுச்(label) சுட்டியைச் சொடுக்கவும்!)

19 comments:

ரவி said...

கனிகா ரசிகர் மன்ற தலைவர் ஒருவர் அங்கே ஜொள் பேக்டரியை நடத்தியதாக கேள்வி. உண்மையா கழுகாரே?

குடுகுடுப்பை said...

செந்தழல் ரவி said...

கனிகா ரசிகர் மன்ற தலைவர் ஒருவர் அங்கே ஜொள் பேக்டரியை நடத்தியதாக கேள்வி. உண்மையா கழுகாரே?
//

அது ஜெயஸ்ரீ, சமயங்களில் கழுகாரும் ரசிகர் மன்றத்தலைவராக இருப்பார்.

குடுகுடுப்பை said...

கவிஞர????????????????!!!!!!!!!!!

Thekkikattan|தெகா said...

மணி,

நச், நச்சென்று கேள்விகளை அள்ளி வீசியிருக்கிறீர்கள்.

அனைத்தும் கவனிக்கப்பட்டது. முரண்களின் மூட்டைகள்தானே மனிதன் என்பதனை நிரூபிக்கிறார்களோ! ஊருக்கொன்று தனக்கொன்று என்று... ம்ம் என்னாத்தை சொல்றது.

வருத்தம் புரிகிறது, பழமை!

பழமைபேசி said...

//செந்தழல் ரவி said...
கனிகா ரசிகர் மன்ற தலைவர் ஒருவர் அங்கே ஜொள் பேக்டரியை நடத்தியதாக கேள்வி. உண்மையா கழுகாரே?
//

இஃகிஃகி.... நெசத்தை இப்பிடி சனங்க முன்னாடி சொல்ல முடியுங்ளாக்கூ?

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said... //

இக்காலப் புதுக்கவிதை....

திருக்குவளை இருக்கிறது!
ஆனால் இருகுவளையாய்!!

பழமைபேசி said...

//Thekkikattan|தெகா said... //

கருத்துகளுக்கு நன்றிங்க!

நசரேயன் said...

அண்ணே தமிழ் வணக்கம்

ஒரு காசு said...

ஈசியா டிக்கட் கெடச்சதுல புகழ மட்டும் தான் செய்வீர்னு நெனச்சேன்.

அதே நேரத்துல சவுக்கடி குடுக்கவும் தயங்கல - சபாஷ் பழமைபேசி.

பதி said...

நண்பர்கள் மின்னஞ்சல்/ஒர்குட் மூலம் பகிர்ந்த புகைப்படங்களும், உங்களுடைய இடுகைகளும் தமிழ்ச் சங்க திருவிழாவை நேரில் கண்ட உணர்வை ஏற்படுத்துகின்றது.

வைரமுத்துவைப் பற்றி நீங்கள் கேட்டுள்ள கேள்விகள் மிக நியாயமானவை.. சமீபத்தில் பாடல்கள் வெளிவந்துள்ள ஆயிரத்தில் ஒருவன் படத்திலிருந்து அவர் எழுதிய சில பாடல்களை நண்பர்களிடம் பகிர்ந்து கொண்ட பொழுது, ஒருவர் கூறினார், அவர் ஒரு வார்த்தை வியாபாரி.. மக்களின் உணர்ச்சியை காசாக்கும் வித்தை தெரிந்தவரென... பதிலளிக்க முடியவில்லை....

பழமைபேசி said...

@@நசரேயன்

நன்றிங்க தளபதி!

@@பதி

புகைப்படங்களை எனக்கும் அனுப்பி வைக்கவும்...நன்றி!

பழமைபேசி said...

//ஒரு காசு said...
ஈசியா டிக்கட் கெடச்சதுல புகழ மட்டும் தான் செய்வீர்னு நெனச்சேன்.

அதே நேரத்துல சவுக்கடி குடுக்கவும் தயங்கல - சபாஷ் பழமைபேசி.
//

அது எழுத்துக்கு அறமாகாதே? இஃகிஃகி! உடனுக்குடனே எழுதி, என் எழுத்தால் விழாவுக்கு எந்தவொரு குந்தகமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதாலேயே உடனுக்குடனே எழுதவில்லை....

kicha said...

த‌மிழ் ச‌மூக‌ம் திரைப்ப‌ட‌த்துறையுட‌ன் தொட‌ர்புடைய‌வ‌ர்க‌ளுக்கு அப‌ரிமித‌மான‌ ம‌ரியாதை செலுத்துவ‌து, துர‌திர்ஷ்ட‌வ‌ச‌மான‌தே. திரு. க‌லாம் ம‌ற்றும் திரு. அண்ணாத்துரை க்கு கிடைத்த‌ ம‌ரியாதை, ம‌ற்ற‌ ப‌ல‌ விஞ்ஞானிக‌ளுக்கு கிடைக்க‌வில்லை என்ப‌தே உண்மை. க‌ஞ்சா க‌ருப்புவை தெரிந்த‌ ந‌ம் ச‌மூக‌த்திற்கு, திரு. ராம‌ச்ச‌ந்திர‌னை ("புர‌த‌ங்க‌ளின் ம‌டிப்பு" ப‌ற்றிய‌ மிக‌ முக்கிய‌மான‌ க‌ண்டுபிடுப்புக‌ளுக்கு கார‌ண‌மான‌வ‌ர். இன்ற‌ள‌வும் "ராம‌ச்ச‌ந்திர‌ன் வ‌ரைப‌ட‌ங்க‌ள்" புர‌த‌ங்க‌ள் ப‌ற்றிய‌ ஆர‌ய்ச்சியில் முக்கிய‌ ப‌ங்கு வ‌கிக்கின்ற‌ன‌. நோப‌ல் ப‌ரிசு பெற‌ அனைத்து த‌குதியும் உள்ள‌வ‌ர் என்று உல‌கின் ப‌ல்வேறு விஞ்ஞானிக‌ளாள் -லின‌ஸ் பாலிங் உட்ப‌ட‌- புக‌ழ‌ப்ப‌ட்ட‌வ‌ர்) தெரியாது என்ப‌து ந‌ம் ச‌மூக‌ அவ‌ல‌த்திற்கு சிற‌ந்த‌ உதார‌ண‌ம். இத‌ற்கு மிக‌ முக்கிய‌ கார‌ண‌ம் ஊட‌க‌ங்க‌ளே. அதிர்ஷ்ட‌வ‌ச‌மாக‌ திரு. க‌லாம் ம‌ற்றும் திரு. அண்ணாத்துரை அவ‌ர்க‌ளின் ஆராய்ச்சி ஏவுக‌ணைக‌ள், விண்க‌ல‌ன்க‌ளுட‌ன் தொட‌ர்புடைய‌தால், அவ‌ர்க‌ளை ப‌ற்றி எழுத‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் ஊட‌க‌ங்க‌ளுக்கு ஏற்ப‌ட்டு விட்ட‌து. த‌மிழில் மிக‌ச்சிற‌ந்த‌ அறிஞ‌ர்கள் எப்ப‌டி புற‌க‌ணிக்க‌ப் ப‌ட்டார்க‌ள் என்ப‌து ப‌ற்றி, விரைவில் எழுதுகிறேன்.

எம்.எம்.அப்துல்லா said...

ஏதோ விஷயமுள்ள மேட்டரா தெரியுது. நான் எஸ்கேப் ஆயிக்கிறேன்.

:)

பழமைபேசி said...

//kicha said... //

ஒத்த கருத்துங்க... அதேதான் சிலம்பொலி ஐயாவும் சொல்லி வருத்தப்பட்டாங்க...

Unknown said...

ஏறி போற ஏணிய ஒதச்சி தள்ளுறது தமிழனுக்கொன்னும் புதுசில்லெ! அதுக்கு கவியரசொன்னும் விலக்கில்லெ!

தமிழ், தமிழர்-ன்னு பேசி ஆட்சிக்குப் போன அவரு ஆசானே தமிழனை கை கழுவிட்ட போது, அடிவருடியப் பத்தி சொல்லவா வேணும்.

பெரியார் சொன்ன தன்மதிப்பை(சுயமரியாதை) எப்போ ஒவ்வொரு தமிழனும் பெற்று வாழ கற்க்குறனோ அப்பதான் எல்லாம் மாறும். ஊடகத்துலெருந்து ஊர் தலைவர்லேருந்து முதல்வர்லேருந்து எல்லாம்.....

சரண் said...

இதெல்லாம் நம்மூர்ல இன்னிக்கு நேத்தாங்க நடக்குது..? எப்பவுமே பணத்துக்குத்தானுங்க மரியாத.. எவ்வளவுதான் நல்லவனா, வல்லவனா இருந்தாலும், பணமில்லீன்னா இளிச்சவாயந்தான். ஒரு மரியாதயயும் எதிர்பார்க்க முடியாது. வைரமுத்து வெவரமானவர்.. அப்புறம் நம்ம மக்கள்கிட்ட இப்படி படம் போட்டாத்தான் வேலைக்காகும். எளிமையாலம் இருந்தா.. தூக்கிப்போட்டு முதிச்சுட்டு போய்டுவாங்க..

நமக்கு இந்தமாதிரி செயலையெல்லாம் பாத்து இப்ப கோபம் வருது.. ஆனா நாளைக்கே பேரும் புகழும், பணமும் நெறயா கெடச்சுத்துன்னு வெச்சுக்கோங்க.. நாமலும் அப்படி பந்தா பண்ணினாதான் நம்மல மதிப்பானுங்க..

ச்சே... நம்மூர்லதான் இப்படி, இங்க பணக்காரன் ஏழை வித்தியாசமெல்லாம் பாக்கரதுல்லைன்னு இருந்தா.. நம்மாளுங்க இங்க வந்தும் திருந்த மாட்டேங்கறாங்க..

பழம.. FETNA - ல ஒரு கலக்கு கலக்கீட்டீங்க போலிருக்கு.. பதிவெல்லாம் அருமையா இருக்கு..
அசத்துங்க..

பழமைபேசி said...

//kicha said... //

நண்பா, மேலதிக தகவலுக்கு நன்றி!

//எம்.எம்.அப்துல்லா //

இஃகிஃகி!

//நசரேயன் said... //

பதில் வணக்கம்!

//எழுத்தாணி //

ஆமாங்க...

//சூர்யா //

சூர்யாக் கண்ணூ... நல்லா இருக்கீங்களா?

சரண் said...

//சூர்யாக் கண்ணூ... நல்லா இருக்கீங்களா?//

பழமையண்ணா.. நல்லா இருக்கேணுங்..