7/08/2009

Fetna... தமிழ் விழா மலர்! ஒரு கண்ணோட்டம்!!

வணக்கம்! கருத்துச் செறிவான ஆக்கங்களைக் கொண்டு, கலை, பண்பாடு, கலாசாரம் போற்றக்கூடிய வகையில் ஒரு விழா மலரைப் படைப்பதென்பது எளிதான காரியமன்று! வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 22வது தமிழ் விழா மலருக்குப் பின்னால் கடும் உழைப்பு தென்படுகிறது. செறிவான கட்டுரைகள் நிறைய இடம் பெற்றிருக்கிறது.

வடிவமைப்பு மற்றும் தாளின் தரம் என்பன உச்சத்தில் இருக்கும்படியாகப் படைத்து இருக்கிறார்கள். விழா மலரின் ஆசிரியர், நண்பர் பா. சுந்தரவடிவேல் மற்றும் மலர்க் குழுவினருக்கு வாழ்த்துகளும், நன்றியும்! தமிழர்கள் நன்கொடை கொடுத்தாவது வாங்கிப் படிக்க வேண்டிய நூல் அது!

விமர்சனம் என்று, மேதாவித்தனமாக எதையாவது சொல்லியாக வேண்டுமே? ஆகவே, நாமும் நமது பங்குக்கு மனதில் தோன்றியதைச் சொல்லி வைப்போம்! விழாக் குழுவினர் அதை ஒரு எளியவனின் கருத்தாக மட்டுமே எடுத்துக் கொள்வார்கள் எனப் பெரிதும் நம்புகிறேன்.

செம்மொழியாம் எம்தமிழ் எந்த உணர்வையும், உள்ளது உள்ளபடியே பிரதிபலிப்பதில் உச்சமொழி என்று நாம் அடிக்கடி குறிப்பிடுவது உண்டு. அவ்வகையிலே, முனைப்பு(proactive) மற்றும் தீவிரம்(aggressive) என்ற இரு சொற்களை நாம் கவனமாக அலசியாக வேண்டும்.

முனைப்பு என்றால், எதோ ஒன்றில் முனைந்து செயல்படுவது. தீவிரம் என்றால், எதோ ஒன்றில் வீரியத்துடன் செயல்படுவது. இரண்டுக்கும் இடையில் மெல்லிய கண்களுக்கு புலப்படாத ஒரு உளவியல்க் கீற்றுதான் மாறுபாட்டை உண்டு செய்கிறது.

உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமானால், தமிழ்த் திருவிழா குறித்துக் குறிப்பிடலாம். தமிழகத்திலே, தமிழனின் கட்டமைப்பு வலுவிழந்து வரும் இக்கால கட்டத்திலே, புலம்பெயர்ந்த மண்ணில் ஒரு இனக் கட்டமைப்புக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதென்பது ஒரு வருத்தமான உண்மை.

அவ்வேளையில், வட அமெரிக்கத் தமிழ்ப் பேரவையானது நேர்த்தியுடன் ஒரு பெரும் விழாவை நடத்தி முடித்துள்ளது, அதுவும் ஆக்கப்பூர்வமான முறையில்! அதன் தாக்கத்தில், ஒரு விழிப்புணர்வை உண்டு செய்யும் நோக்கில், தானாகவே தன் உழைப்பில் ஆற்றும் பணிகள் முனைப்பானது என்று சொல்லலாம்.

அதுவே, மக்களை வற்புறுத்துவதும், அவர்களைத் தொடர்பு கொண்டு அங்கலாய்ப்பதும், திணிப்பதும் அவர்களிடத்தே ஒருவிதமான சலிப்பை உண்டு செய்யக்கூடும். சில வேளைகளில், ஆர்வத்தின் மிகுதியால் எவரும் அத்தகைய செயல்களைச் செய்வது உண்டு. ஆகவேதான் குறிப்பிட்டேன், சிறு உளவியல்க் கீற்றுதான் இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்று.

கிராமத்திலே மிக அழகாகச் சொல்வார்கள் நம் முன்னோர், போக்குல விட்டுத்தான் திருப்பணும்டா கண்ணூ என்று! அவர்கள் அனுபவித்துச் சொன்ன சொலவடை அது!! அது போல, ஒரு சிலவற்றை காலமறிந்து செயல்படுத்த வேண்டும். புரதம், மாவு, நார்ச்சத்து உள்ளிட்ட சமச்சீர் உணவு போல, பலதரப்பட்ட பற்றியங்களும் காலத்திற்கேற்ப சமச்சீராகத் தருவது இன்றியமையாதது. எது ஒன்று அதிகமாயினும், அது அதற்கான விளைவுகளை ஏற்படுத்திவிடும்! குறையத் தருவதும் நலம் பயக்காது!!

அந்த மனநிலையோடு, மலரில் எனக்குப் பிடித்த ஒரு கட்டுரை; அட்லாண்டா உதயகுமார் அவர்கள் தொகுத்தளித்த தொல்காப்பியப் பாடல் அடங்கிய கட்டுரையின் சாராம்சம் உங்கள் கவனத்திற்கு:

நூலின் குற்றங்கள் எனக் குறிப்பிட்டு இருக்கிறார் ஆசிரியர். ஆனால், அது இடும் இடுகைகளுக்கும் கூட பொருந்தக் கூடியதுதான். இதோ தொல்காப்பியரின் வழிகாட்டுதல்:


சிதைவெனப் படுபவை வசையற நாடில்
கூறியது கூறல், மாறுகொளக் கூறல்,
குன்றக் கூறல், மிகைபடக் கூறல்,
பொருள் இல மொழிதல், மயங்கக் கூறல்,
கேட்போர்க் கின்னா யாப்பிற் றாதல்,
பழித்த மொழியான் இழுக்கக் கூறல்,
நன்னா நொருபொருள் கருதிக் கூறல்,
என்ன வகையினும் மனங்கோ ளின்மை
அன்ன பிறவும் அவற்றுவிரி யாகும்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர் சொல்லி வைத்தது இன்றளவும் சரியான வழிமுறையாக இருப்பதைத்தான் இந்த செய்யுளில் காண்கிறோம். நூலின் குற்றங்கள் என அவர் சொல்வது யாதெனில்,

1. மீண்டும் மீண்டும் ஒன்றைத் திரும்பச் சொல்தல் (Repetition)

2. முன்னுக்குப் பின் முரணாகச் சொல்தல் (Contradiction)

3. அரை குறையாகச் சொல்தல் (Reduction)

4. மிதமிஞ்சி ஏற்றிச் சொல்தல் (Exaggeration)

5. உள்ளீடின்றிச் சொல்தல் (No Substance)

6. குழப்புதல் (மயக்கம், Confusion)

7. சோர்வுறச் சொல்தல் (Unpleasant)

8. காழ்ப்புடன் சொல்தல் (Abusive)

9. விருப்பு வெறுப்பு ஏற்றிச் சொல்தல் (Prejudice)

10. ஒவ்வா நடையில் சொல்தல் (Unimpressive)


மீண்டும் ஒருமுறை மலர்க் குழுவினருக்கு வாழ்த்துகளும் நன்றியும்! சுவாரசியம் மிக்க விழா மலர் கண்டிப்பாக பாராட்டிய வேண்டிய, அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டிய இதழ்!!


(விழா பற்றிய முந்தைய இடுகைகளுக்கு, தமிழ்விழா(Fetna) எனும் வகைப்பாட்டுச்(label) சுட்டியைச் சொடுக்கவும்!)

2 comments:

சுந்தரவடிவேல் said...

மலரைப் பற்றிய கருத்துக்களுக்கு நன்றி பழமைபேசி! தவிர்க்க முடியாமலும், தவறுதலாகவும் சில படைப்புகள் இடம்பெறாமல் போய்விட்டது வருத்தமளிக்கிறது! வரும் ஆண்டுகளில் உங்களைப் போன்ற ஆர்வலர்கள் மலர்க்குழுவில் இடம்பெற்றால் மலர் மேலும் மணக்கும்!

பழமைபேசி said...

//சுந்தரவடிவேல் said...
மலரைப் பற்றிய கருத்துக்களுக்கு நன்றி பழமைபேசி! தவிர்க்க முடியாமலும், தவறுதலாகவும் சில படைப்புகள் இடம்பெறாமல் போய்விட்டது வருத்தமளிக்கிறது! வரும் ஆண்டுகளில் உங்களைப் போன்ற ஆர்வலர்கள் மலர்க்குழுவில் இடம்பெற்றால் மலர் மேலும் மணக்கும்!
//

உங்களுக்குத்தான் நன்றி சொல்லணுமுங்க!