7/04/2009

வட அமெரிக்க தமிழ்த் திருவிழா(Fetna): July 04, காலை 10.40 மணி

குறித்த நேரத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் துவங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்தவுடன், அமைதி குறித்த பாடல் பாடப்பட்டது. தொடர்ந்து நடிகை கனிகா அவர்கள், கிராமியப்பாட்டை சொந்தக் குரலில் பாடிக் காண்பித்தார். பின்னர் கிராமியப் பாடலுக்கு ஆட நடனக்குழுவினரை அழைத்தார்.

வட அமெரிக்கக் கலைஞர்கள் மட்டுமே இடம்பெற்ற குழுவினர், பதினாறு வயதினிலே எனும் படத்தில் இடம் பெற்ற ‘செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா’ என்ற பாடலுக்கான நடனத்துடன் மேடையை ஆக்கிரமித்தார்கள். அரங்கமே கரவொலியில் அதிர்ந்தது.

தொடர்ந்து உப்புக்கருவாடு, ரெண்டக்க ரெண்டக்க, அவளுக்கென்ன அம்பா சமுத்திரம், பல்லேலக்கா போன்ற பாடல்களுக்கு குழுவினர் ஆடினார்கள். ஒப்பனை, உடை, மேடை வடிமமைப்பு போன்றவைச் செம்மையாக இருந்தது. நிகழ்ச்சி முடியும் தருவாயில், ‘மீண்டும், மீண்டும்’ என அரங்கம் ஆர்ப்பரித்தது.

அந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, இங்கேயே பிறந்து வளரும் சிறுமி காவியாவை சிறப்பிக்கும் நிகழ்வு இடம் பெற்றது. குறளின் வரிசை எண்ணைக் கூறினால், அதற்கான குறளைச் சொல்லும் ஆற்றல் பெற்றவர்தான் காவியா. மேலும், தமிழிசையில் சில குறள்களைப் பாடிக்காட்டினார். மெய் சிலிர்த்தது. சில குறள்களை ஆங்கிலத்திலும் வெளிப்படுத்தி விளக்கியது அபாரமாகவும், சூழலுக்கேற்றதாகவும் இருந்தது. காவியாவின் தாக்கம் வட அமெரிக்க தமிழ் மாண்வர்களிடத்தும், பெற்றோரிடத்தும் ஒரு மாற்றத்தை உண்டு செய்யும் என்பது திண்ணம்.

தொடர்ந்து சந்திரிகா சந்திரன் வழங்கிய வள்ளி திருமணம், நாட்டிய நாடகம் இடம் பெற்றது. என்ன ஒரு நேர்த்தியான நிகழ்ச்சி?! வடிவாக, பொழிலாகவும் எழிலாகவும் இடம் பெற்ற நிகழ்ச்சி இது. அதில் இடம் பெற்ற காவடிச் சிந்துப் பாடலும், அதற்கான நாட்டியமும் என் கண்கள் பனிக்கச் செய்தது. தமிழிசையில் என் மனம் சிலிர்த்துச் சில்லாட்டம் ஆடியது என்பதே சரி.

தற்போது கொங்குமாமணி சிலம்பொலி செல்லப்பன் ஐயா அவர்கள் உரையாற்றிக் கொண்டு இருக்கிறார். செறிவான கருத்துகள், விபரங்களைப் பொழிகிறார். என்னால் அவற்றை எல்லாம் குறிப்பெடுக்க இயலவில்லை. காணொளியைக் கண்டுதான் தகவல்களை அளிக்கும் நிலையில் இருக்கிறேன். அவர் விரைவாகவும், செறிவாகவும் விபரங்களைத் தருவதால் அதனால் என்னையே இழக்கிறேன் என்பதே உண்மை.

மீண்டும் விரைவில் ....

4 comments:

Prasanna Rajan said...

இது போன்ற நிகழ்ச்சிகள் இங்கு நடப்பது மகிழ்ச்சி. என்னைப் போன்ற வர முடியாதவர்களுக்கு உங்களின் அப்டேட்டுகள் தான் ஆறுதல்.

RRSLM said...

வழங்கியதற்கு நன்றி பழமை!!! என்னால் வரமுடியவில்லையே என்ற ஏக்கம் வாட்டுகிறது.....

வில்லங்கம் விக்னேஷ் said...

‘செவ்வந்திப் பூவே’

செந்தூரப்பூவே

ILA (a) இளா said...

//செவ்வந்திப் பூவே’ /
செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா.. 16 வயதினிலே படம்