7/03/2009

வட அமெரிக்க தமிழ்த் திருவிழா(Fetna 2009): முதலநாள் பற்றிய கண்ணோட்டம்!

பெற்றிட விரும்பும் பேறுகள் யாவினும்
இனத்தாரைக் காண்பதே மாபெரும் பேறென
உலகம் மகிழ்வது கண்கண்ட உண்மை! அதில்
இந்த எளியவன் அடைந்ததோ அளப்பரியது!!

அதிகாலை நேரம், வழக்கத்தினும் மாறாக அட்லாண்டா வெம்மையிலிருந்து விடுதலை ஆனது போன்றதொரு தட்பவெப்பம். தங்கி இருந்த அறையிலிருந்து ஏழு மணிக்கெல்லாம் புறப்பட்டு, புறப்பட்ட நேரத்திலிருந்து அரை மணி நேரத்திற்கெல்லாம் விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிற வளாகத்தை அடைந்தோம்.

வரவேற்புக் கோலத்தையும், கூப்பிய கைகள் வணக்கம் சொல்வது போன்ற சிற்ப வேலைப்பாட்டைக் கண்டதும், ஏதோ எனக்கு சகோதரி என்று ஒருவள் இருந்து, அவளுக்கான திருமணப் பந்தல் இதுதானோ என்கிற நினைவு மேலிட்டது. வரவேற்புப் பரப்புக்காலியில் மலர்கள் தவழ்ந்திருக்க, வருவோரை அந்தச் சிறுமியர் இருவர் வரவேற்ற விதம் மனதைக் கொள்ளை கொண்டது. அந்த சிறு வயதிலும் அவர்கள் காண்பித்த அந்த பணிவான வரவேற்பில் வந்த கூட்டம் சரண் அடைந்தது என்றே சொல்லலாம்.

நான் யாரிடமும் ஒரு சொல்கூடப் பரிமாற யத்தனித்து இருக்கவில்லை. எனக்கு யாரையும் முன்கூட்டியே தெரியவும் தெரியாது. அந்தச் சிறுமியர் நீட்டிய திருநீறில் விரல்விட்டு சிறிதெடுத்து நெற்றியில் இட்டு நிமிர்ந்ததுதான் தாமதம் பழமைபேசி வந்துவிட்டார் என்று உவகையுடன் ஒருவர் கூறிச் செல்ல, மற்றவர் உமக்கான அடையாள அட்டையை உள்ளே சென்று பெற்றுக் கொள்க என்று சொல்லிவிட்டுச் செல்கிறார். எழுத்தின் வலிமை தெரிந்தது அந்த விநாடியில்.

அரங்குக்குள் செல்லவும் தமிழ்த்தாய் வாழ்த்து முடியவும் சரியாக இருந்தது. வட அமெரிக்க தமிழ்ச் சங்கத் தலைவர் வரவேற்புரை ஆற்ற, சிறு அறிமுகத்தோடு விழாவை நடிகை ஜெயஸ்ரீ அவ்ர்கள் தொகுத்து வழங்கப் பணிக்கப்பட்டார்.

மண், மொழி, மனிதர் நாட்டிய நாடக நிகழ்ச்சி முதல் நிகழ்ச்சியாகத் துவங்கியது. முதல் நிகழ்ச்சிக்குரிய முக்கியத்துவத்திற்கு ஏற்பவும் தலைப்பை ஒட்டியும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக இருந்தது. மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தது.

அரங்கமே சலனமற்று, நெகிழ்ந்து மெய் மறந்து போன நிகழ்ச்சி இதுவென்றால் மிகையாகாது. தென் கரோலினாவைச் சார்ந்த தமிழர்கள் கூத்துப்பாட்டு, தெரிந்தெடுத்த உணர்வுமிகு நெறியாள்கையுடன் ஈழம் குறித்த நாடகம் இடம் பெற்றது. அழும் சிறு குழந்தைகளே கூட வாயடைத்துச் சலனமற்றுப் போனது. முதன்முதலாக கிராமியப் பாடலை பாடியபடி வந்தவர், தேர்ந்த படைப்பாளியும், கலைஞானம் கொண்டவராகவும் இருந்திருக்க வேண்டும். அதற்கு மேலாக, அவர் ஒரு பதிவர் என்று எண்ணுகிறேன். தென் கரோலினா தமிழ்ச் சங்கத்தினர் எவ்ராவது இது குறித்து மேலதிகத் தகவல்கள் இட்டுத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

அடுத்ததாக பாரம்பரிய நடனம், லயா கவிதை எனும் தலைப்பில். விழாக் குழுவினருக்கு இங்கு நன்றி சொல்லியாக வேண்டும். உணர்ச்சிப் பிழம்பாய் ஆனவர்களை ஆசுவாசப்படுத்தும்படியாக இந்நிகழ்ச்சி இருந்தது.
அரங்கத்தை விட்டு வெளியே வர நேரிட்டது. நடிகர் பசுபதி, நடிகர்கள், நடிகைகள் எனப் பலர் வந்த வண்ணம் இருந்தார்கள். கூடவே, ப்திவர்களும் பதிவுலக வாசகர்களும். நிறையப் பேர் என்னைப் பார்த்துக் குறுஞ்சிரிப்புடன் செல்வதைக் காண முடிந்தது. கோமாளி எனும் தொனியில் சிரித்தார்களோ என்னவோ, அது எனக்குத் தெரியாது.

அடுத்த கட்டமாக நடைபெறும் நிகழ்ச்சிக்காக மேடையின் பின்புறம் சென்றேன். பத்திரிகையாளனுக்குத் த்ரும் ஒரு முக்கியவத்தை பதிவருக்கும் அளித்தார்கள். மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், நான் அங்கு சென்றது நிகழ்ச்சியின் ஒரு பங்காளியாக என்பதை அவர்கள் தெரிந்திருக்கவில்லை போலும்.

தமிழ் இலக்கிய வரலாறு குறித்த பல்லூடக விநாடி வினா நிகழ்ச்சி. சிறு அறிமுகத்திற்குப் பிறகு நிகழ்ச்சி துவங்கியது. அருமை, அருமை... நாஞ்சில் பீட்டர் ஐயா அவர்கள் வெகு நேர்த்தியாக, சுவாரசியம் கூடிய வகையில் நெறியாள்கையை வெளிப்படுத்தினார். இரு அணியினரும் வெகு உற்சாகமாகக் கலந்து கொண்டு அரங்கத்தினரின் கரவொலியைப் பெற்றார்கள்.

நான் பங்குபெற்ற அணியின் தலைவர் குழந்தைவேல் இராமசாமி அவர்கள், அறிவு முதிர்ச்சியை அமைதியாக வெளிப்படுத்திய விதம் சிறப்பாக இருந்தது. மாற்று அணியின் தலைவி மேகலா அவ்ர்கள், தமிழன்னையே அவ்ர்கள்தானோ என அனைவரும் வியக்கும்படியாகப் பங்களித்ததைக் காண முடிந்தது. அவ்ர்களே வெற்றியும் பெற்றார்கள்.

அடுத்தபடியாக, ‘பிரதி மெய்’ எனும் நாடகம் புதுமையாக, சிந்தனையைத் தூண்டும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தது. நெறியாள்கை, ஆக்கம், கதை இவற்றுக்குச் சொந்தக்காரரான செல்வகுமார் அவர்கள் மிகவும் பாராட்டுக்குரியவர். நாடகத்தில் இடம் பெற்ற குந்தவை, இராஜேந்திர சோழன், கம்பர் மற்றும் இதர கதாபாத்திரமாக வந்த அனைவரும் தேர்ந்த வகையில் நடிப்பை வெளிப்படுத்தினார். குந்தவை, சொல்ல வார்த்தைகளே இல்லை! அபாரம்!!

மதிய உணவு இடைவேளை... விழாக் குழுவினரின் ஒருங்கிணைப்பு, கடும் உழைப்பு இவற்றைக் காண முடிந்தது. அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்! பெரும் கூட்டத்திற்கு உணவளித்து, கட்டுக் கோப்பாக நடத்திச் சென்ற விதம் அருமை! அட்லாண்டா தமிழ்ச் சங்கத்தின் மகுடத்தில் இது ஒரு முத்தாகப் பதிக்கப்படும் என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது.

நண்பகல் உணவுக்குப் பின்னர், நடிகை கனிகா அவ்ர்கள் விழா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க பணிக்கப்பட்டார்கள். அவரது எளிய தமிழ் இயல்பாக இருந்தது.

திருப்புகழ் மற்றும் திருப்பாவைப் பாடல்கள் பற்றின நாட்டியம் இடம் பெற்றது. சுருதியாலயாக் குழுவினரால் வழங்கப்பட்ட நிகழ்ச்சி. தேர்ந்த ஆசிரியரின் உழைப்பு மற்றும் பங்கேற்ற பிட்சுபர்க் மாணவிகளின் தேர்ச்சியை உலக்குக்கு வெளிப்படுத்தும் விதமாக இருந்தது. எல்லோரது மனதும் அமைதியில் கட்டுண்டு போய், இரசிப்பில் ஆழ்ந்து போனார்கள் என்பதே உண்மை.

நடிகை கனிகா அவர்கள் மேடையில் தோன்றி, ஒரு மணித் துளிக்குள் கவிதை எழுதும் திறம் படைத்தவர்கள் இனிவரும் கவியரங்கத்தில் பங்கேற்கலாம் எனும் அறிவிப்பு வெளியிட, உடனே மேடையை நோக்கி விரைந்தேன். மேடைக்குச் சென்ற பின்னர்தான் தெரிந்தது, தமிழாயினி மேகலா அவ்ர்கள், அமெரிக்காவின் கவிச்சோலை அண்ணன் ஜான் பெனடிக் ஆகியோர் ஏற்கனவே பல பக்கங்களுடன் கவிதை எழுதித் தயாராக வந்திருக்கிறார்கள் என்று.

என்றாலும், மேடை ஏறியாகிவிட்டது, இனி ஏதாவது செய்தாக வேண்டுமே. தாள் ஒன்று வேண்டுமெனக் கேட்க, அது கிடைக்காமல் தாமதம் ஆகவே, வலிய வந்து தழலில் அகப்பட்டுக் கொண்டேனோ என நினைத்தேன். கடைசியாக, கவியரங்கத்தின் தலைவர் கவிஞர் ஜெயபாசுகர் அவர்களின் கையேட்டில் இருந்து சிறு பக்கங்கள் கிழிக்கப்பட்டு, அதில் குறிப்புகளை மட்டும், அதாவது ஒரு சில முக்கியமான சொற்களை மட்டும் குறித்துக் கொண்டேன். பழமைபேசி என்றே விழா மேடையில் அறிமுகப்படுத்தப் பட்டேன்.

தமிழன்னையின் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு, ஒலிபெருக்கியின் முன்பாக நான். வென்றாக வேண்டும் தமிழ் எனும் தலைப்பில், எம்முள் நான் அத்தருணத்தில் (real time) எண்ணியதை வெளிப்படுத்தினேன், அவ்வளவுதான். கூறி முடித்ததும் கரவொலி கேட்டதும் எண்ணிலடங்காத மகிழ்ச்சி. நான் வளாகத்தில் இருக்கும் வரையிலும் நிறையப் பேர் அவ்வப்போது வந்து பாராட்டிய வண்ணம் இருந்தனர்.

அறிவியல் அறிஞர் முனைவர் மயில்சாமி அண்ணாதுரை உரையாற்ற அழைக்கப்பட்டு, பின்னர் அவர் வந்து சிறப்புரை ஆற்றினார். எளிமையான நடை, இயல்பான தமிழ், பணிவான கருத்துகள். தாய்ப்பால் குடித்தவன் கெட்டுப் போவதும் இல்லை; தாய் மொழியில் கற்பவன் சோரம் போவதும் இல்லை என ஆணித்தரமாக எடுத்துரைத்தார். அகம்பாவமும், செருக்கும் மயில்சாமி அண்ணாதுரை என்ற பெயரைக் கேட்டால் ஏழேழு சமுத்திரத்துக்கு அப்பால் ஓடிவிடும் என்பதே மெய்.

அடுத்ததாக ரேவதி இராமச்சந்திரன் வழங்கிய சிவதாண்டவம் எனும் நிகழ்ச்சி. மற்ற நிகழ்ச்சிகளைப் போலவே கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. அடுத்ததாக நடிகர் ஜீவா, வழமை போலவே இயல்பாகப் பேசி அரங்கத்தினரை உற்சாகப்படுத்தியதைக் காண முடிந்தது.

புட்பவனம் குப்புசாமி அவர்களின் பாடல்களோடு கிராமிய நாட்டிய நாடகம். நகைச்சுவையாகவும், எளிமையாகவும், வித்தியாசமாகவும் இருந்தது. கிராமம் போலவே குழுவினர் உடை உடுத்தி நாட்டியமாடியது மிகவும் தத்ரூபமாக இருந்தது.

நான் வளாகத்தில் இருந்து புறப்படும் முன், தமிழருவி 35 மணித்துளிகள் அருவியாய் சொரிந்தது. அம்மா என்றழைப்பது உத்தமம் என்று சொல்லிவிட்டு, தமிழ் மொழிக்கு மட்டுமே அம்மாவின் சிறப்பை உணர்த்தவல்ல ஆற்றல் இருக்கிறது என்று விளக்கினார்.

ஆய்தம் வேண்டாம் என்றாகி விட்டது. ஆகவே எஞ்சி இருப்பது, உயிரும், மெய்யும், ஒன்று சேர்ந்த நிலையில் இருக்கும் உயிர்மெய்யும். என்பது உயிர். ம் என்பது மெய். மா என்பது உயிமெய். கருவின் புள்ளியில் இடப்படுவது உயிர். அதுவே கருவறையில் பத்து மாதங்கள் வளர்ந்து ஆவது மெய். கருவறையில் இருந்து வெளிப்படுவது உயிரும் மெய்யும் ஒன்றான உயிமெய். இந்தக் குறியீடுதான் அம்மா என்றார். மெல்லினத்தில் மென்மையாக அடையாளம் காணப்பட்டவள் அம்மா. அவளைப் போய் மம்மி, மாம் என்பது சரியாகுமா?

பாட்டன், பாட்டனுக்குப் பாட்டன், அந்தப் பாட்டனோட பாட்டன் என இரண்டாயிரம் ஆண்டுகளாகப் பேணிப் பாதுகாத்து வந்து உம் அப்பனாலும் அம்மாவாலும் உனக்குத் தரப்பட்ட மொழியைச் சிதைப்பது ஞாயமா?? என வினவி விட்டு, உயிரைத் தியாகம் செய்தவர்களுக்கு ஒரு நிமிடம் அஞ்சலி என சிறப்பாகவும் உணர்வூட்டும்படியாகவும் நிறைவாகக் கடமையாற்றினார் தமிழருவி மணியன்.

கொசுறு:
வளாகத்தில், கிராமத்துப் பெட்டிக்கடை போன்ற குடிசைக் கடை அனைவரையும் கவர்வதாக இருந்தது.

5 முதல் 10 வயதுச் சிறுவர் சிறுமியருக்கு தமிழ் நிகழ்ச்சிகளின் மீது நாட்டமில்லாமல் இருப்பதைக் காண முடிந்தது. பெற்றோர்களே, உங்கள் குழந்தைகளை நீங்கள் இழந்து வருகிறீர்கள் என்பதையே இது காண்பிக்கிறது. அவர்கள்பால் குற்றம் காண்பது சரியன்று.

விகடன் பத்திரிகையாளர் பிரகாஸ் சாமி நிகழ்ச்சியில் இருப்பதைக் காண் முடிந்தது. விழா குறித்த அவரது கட்டுரையையும் காண மிக ஆவலுடன் இருக்கிறேன்.

14 comments:

வில்லங்கம் விக்னேஷ் said...

//கவிச்சோலை அண்ணன் ஜான் பெனடிக் ஆகியோர் ஏற்கனவே பல பக்கங்களுடன் கவிதை எழுதித் தயாராக வந்திருக்கிறார்கள் //

தேவுடா. இந்த வருசமும் வந்துடுச்சா ரப்சர். நல்லநேரம். ஆபிசுல அமுங்கிடவேண்டியதாச்சு

/விகடன் பத்திரிகையாளர் பிரகாஸ் சாமி நிகழ்ச்சியில் இருப்பதைக் காண் முடிந்தது. விழா குறித்த அவரது கட்டுரையையும் காண மிக ஆவலுடன் இருக்கிறேன்./

என்ன எழுதுவாரு. புலி வந்துச்சு. நம்மவா சுட்டுடணுமுன்னு எழுதுவாரு. இந்தாளு காரேக்டரு பத்தி நெஜமாலுமே தெரியாதுங்களா? சந்திரிகா காலுல நியூ யார்க்குல வுழுந்து கும்பிட்டாத கொறையா தூக்கி வெச்சு தமிழனுங்கள அடிச்ச ஆளூ ஆச்ச்சே. பெட்னா பத்தி இவரோட தோஸ்துங்க கட்சி என்னான்னு ஒங்களுக்கு தெரியாதுங்களா?

கோவி.கண்ணன் said...

சிறப்பான பகிர்வு !

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அழகான தொகுப்பு. அருமையான நிகழ்ச்சியாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.
//பதிவர்களும் பதிவுலக வாசகர்களும். நிறையப் பேர் என்னைப் பார்த்துக் குறுஞ்சிரிப்புடன் செல்வதைக் காண முடிந்தது. கோமாளி எனும் தொனியில் சிரித்தார்களோ என்னவோ, அது எனக்குத் தெரியாது. //
ஊர்க்குசும்போ?
//என்றாலும், மேடை ஏறியாகிவிட்டது, இனி ஏதாவது செய்தாக வேண்டுமே. தாள் ஒன்று வேண்டுமெனக் கேட்க, அது கிடைக்காமல் தாமதம் ஆகவே, வலிய வந்து தழலில் அகப்பட்டுக் கொண்டேனோ என நினைத்தேன்//

அடக்கமாக இருப்பது இது தானோ?

//
ஆய்தம் வேண்டாம் என்றாகி விட்டது. ஆகவே எஞ்சி இருப்பது, உயிரும், மெய்யும், ஒன்று சேர்ந்த நிலையில் இருக்கும் உயிர்மெய்யும். அ என்பது உயிர். ம் என்பது மெய். மா என்பது உயிமெய். கருவின் புள்ளியில் இடப்படுவது உயிர். அதுவே கருவறையில் பத்து மாதங்கள் வளர்ந்து ஆவது மெய். கருவறையில் இருந்து வெளிப்படுவது உயிரும் மெய்யும் ஒன்றான உயிமெய். இந்தக் குறியீடுதான் அம்மா என்றார். மெல்லினத்தில் மென்மையாக அடையாளம் காணப்பட்டவள் அம்மா. அவளைப் போய் மம்மி, மாம் என்பது சரியாகுமா?
//

அருமையான விளக்கம். உங்கள் பதிவை மிகவும் ரசித்தேன். வாழ்த்துகள்

தமிழ் சசி | Tamil SASI said...

உங்களுடைய தொடர் வர்ணனை சிறப்பாக உள்ளது. மிக்க நன்றி...

குடந்தை அன்புமணி said...

உங்களுடைய தொகுப்பு சிறப்பாக இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி. கொசுறு செய்தி படித்ததும் மிகவும் வருந்தினேன்.

ஆ.ஞானசேகரன் said...

//அந்த சிறு வயதிலும் அவர்கள் காண்பித்த அந்த பணிவான வரவேற்பில் வந்த கூட்டம் சரண் அடைந்தது என்றே சொல்லலாம். //

நல்லதொரு பகிர்வுக்கு நன்றி நண்பா....

ஆ.ஞானசேகரன் said...

///நான் வளாகத்தில் இருக்கும் வரையிலும் நிறையப் பேர் அவ்வப்போது வந்து பாராட்டிய வண்ணம் இருந்தனர். ///

பாராட்டுகளும் வாழ்த்துகளும் நண்பா...

ஆ.ஞானசேகரன் said...

//5 முதல் 10 வயதுச் சிறுவர் சிறுமியருக்கு தமிழ் நிகழ்ச்சிகளின் மீது நாட்டமில்லாமல் இருப்பதைக் காண முடிந்தது. பெற்றோர்களே, உங்கள் குழந்தைகளை நீங்கள் இழந்து வருகிறீர்கள் என்பதையே இது காண்பிக்கிறது. அவர்கள்பால் குற்றம் காண்பது சரியன்று.//

சிறுவர்கள் அப்படிதான் கவணிக்காதபோல தெரியும் ஆனால் நன்றாக கவணித்திருப்பார்கள்

Mahesh said...

சுவையான தொகுப்பு !!!

பழமைபேசி said...

@@வில்லங்கம் விக்னேஷ்

அப்படீங்களா? எனக்கு எந்த விபரமும் தெரியாதுங்களே?

@@கோவி.கண்ணன்

நன்றிங்க!

@@ ச.செந்தில்வேலன்

வாங்க தம்பி! இஃகி!!

@@தமிழ் சசி / Tamil SASI

மிக்க நன்றி நண்பரே!

@@குடந்தை அன்புமணி

குடந்தையார், நன்றி!

@@ஆ.ஞானசேகரன்

நன்றிங்க ஞானியார்!

@@ ஆ.ஞானசேகரன்

உள்ளப்டியே சொல்கிறேன்...வருந்தக்கூடிய ஒன்று!

@@ Mahesh

நன்றிங்க அண்ணே!

Renga said...

Congratulations Mate!!!

slowly you are getting into next phase of your blog life.. You have to start writing for print media / mass media, so that many of the readers (not only the blogging community) can get your knowledge..

Once again congratulations...

Boston Bala said...

excellent coverage. many many thanks!

அது ஒரு கனாக் காலம் said...

சுவையான , அருமையான தொகுப்பு, ... அம்மா , பற்றிய விளக்கம் அருமை

Unknown said...

உங்களுடைய தொகுப்பு சிறப்பாக இருந்தது