1/30/2022

சாவு

நாகரிகம், பண்பாடு, வாழ்வுமுறை என்பனவற்றை, உலகப் பொருளாதாரமயமாக்கலுக்கு முன்பு, உலகப் பொருளாதாரமயமாக்கலுக்குப் பின்பு என நாம் பகுக்கலாம். என்ன காரணம்? பல காரணங்கள். முக்கியமாக, நகரமயமாதல், தொழில்மயமாதல், உலகளாவிய தகவற்தொழில்நுட்பத்தின் காரணம் மனிதனுக்கான தன்னார்ந்த வேலைப்பாடுகள் என்பவற்றைச் சொல்லலாம்.

வேளாண்மை, இயற்கைசார் தொழில்களான மீன்பிடி, வேட்டையாடல், குடிசைத்தொழில்கள் போன்றவையெல்லாம் கணிசமாகக் கைவிடப்பட்டு மக்கள் தொழிற்சாலைகளுக்குச் செல்வது தேவையாகிப் போனது. அதன்நிமித்தம் ஊரகங்களிலிருந்து நகரங்களை நோக்கி, அடுக்ககங்களை நோக்கிப் பயணிக்கப்பட்டனர். செல்போன் என்பது, கணினி, டிவி, தந்தி, தபால், சினிமா, நாடகம், விளையாட்டு எனப் பலவற்றையும் தன்னகத்தே இழுத்துக் கொண்டது.  பிழைப்புக்கொரு வேலை, வேலை தவிர்த்த பொழுதில் செல்ஃபோன் என்றாகிவிட்டது. இதனாலே வாழ்வுமுறையில் பெருத்த தாக்கம். மனிதனை மனிதன் சார்ந்திருக்கத் தேவையில்லை என்றாகிவிட்டது. உலகின் மக்கள்தொகை சரியும் என்பது கணிப்பாக இருக்கின்றது. சில பல நாடுகளிலே ஏற்கனவே மக்கள்தொகை குறையத் துவங்கி விட்டது. தாம்பத்திய வாழ்க்கையைக் கூட தகவற்தொழில்நுட்பம் விழுங்கிக் கொண்டது. இனப்பெருக்கத்துக்கு ஊட்டத்தொகை அறிவிக்கப்படுகின்றது. பையன்களை ஆண்மைமிகு பையன்களாகப் பள்ளிகள் ஆக்கித்தர வேண்டுமென சீனநாட்டுக் கல்வித்துறை அறைகூவல் விடுக்கின்றது.

உலகப் பொருளாதாரமயமாக்கலுக்கு முன்பு(உ.பொ.மு) மக்கள் பழைய வாழ்வுமுறையின் பண்புகளை அறிந்தவர்கள். உ.பொ.பி மக்களுக்கோ அவற்றை அறிந்த கொள்ள நாட்டம் இல்லை. அல்லது உ.பொ.முவினர் சொன்னாலும் புரிவதில்லை. கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக, உ.பொ.மு மக்கட்தொகை வேகமாகக் கரைந்து வருகின்றது. எஞ்சி இருக்கும் உ.பொ.முவும் பழையனவற்றைக் கடாசிவிட்டு(இயலாமைதான்) உ.பொ.பி வாழ்வுக்கு மாறிக்கொண்டிருக்கின்றனர். அதன்விளைவாகப் பல மேம்பாடுகள், கூடவே பல பின்னடைவுகள். உலகமயமாக்கலின் பொருட்டு, மேலைநாட்டுப் பழக்கங்களும் இறக்குமதியாகிக் கொண்டிருக்கின்றன. தவறில்லை. ஆனால் நல்லபலவற்றையெல்லாம் மக்கள் கண்டுகொள்வதில்லை. அந்நிய நாட்டில் வாழும் நம்மவர்கள் சொன்னாலும், ‘இவன் அங்கிருப்பதால் நமக்குப் பாடமெடுத்துப் பகட்டுப் பசப்புக் காட்டுகின்றான்’ எனும் மனம் மேலிடுகின்றது. இதில் முக்கியமானவொன்றுதான், சாவு, சாவினை எதிர்கொள்தல், துயரில் பங்குபெறலுக்கான முறைமைகள் என்பதும்.

கிராமத்திலே சாவு நேர்ப்பட்டால், ஊருக்கே அது துக்ககாலம். ஊர்வாயிலில் இருக்கும் தோரணங்கள் அவிழ்க்கப்படும். கோலங்கள் போடப்படாது. வாசல்கள் தெளிக்கப்படாது. நல்லடக்கம் முடிந்தபின்னர்தாம், எல்லா வீட்டு வாசல்களிலும் வாசற்தெளிப்பு இடம் பெறும். ஊருக்குள்ளே நல்லகாரியங்கள் மூன்று நாட்களுக்கு நிறுத்தப்படும். இப்படியெல்லாம் மரபுகள் இருந்தன. தற்போது அப்படியில்லை. அதைத் தவறென நாம் கருதலாகாது. ஆனால் அதே வேளையில், அதற்கான நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும்தானே? ஊரே சேர்ந்து, அவரவரது அன்றாடப் பணிகளைக் கைவிட்டுவிட்டு துக்கம் கடைபிடிக்க வேண்டுமென்பதல்ல. ஆகக் குறைந்தபட்சம், உற்றார், உறவினர், நண்பர்கள் துயராற்றப்படுகையில் கலந்து கொண்டாக வேண்டும். மேலைநாடுகளிலே அதற்கான நெறிமுறைகள் உண்டு. பணிபுரிகின்ற அலுவலகம் துயராற்றுப்படுகையில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. தொடர்புடைய சமயம்சார் அமைப்புகள் நேரடியாகக் களத்தில் இறங்குகின்றன. சட்டதிட்டங்களிலே அவற்றுக்கான காப்பீடுகள், முறைமைகள், துயர்காலப்பயனீடுகள் எனப்பலவற்றுக்கும் இடமளிக்கப்பட்டு இருக்கின்றது. இவற்றையெல்லாம் மக்கள் பேசித்தான் கடக்க வேண்டும். தனிப்பட்ட உள்ளக்கிளர்ச்சிகளுக்காக அடுத்தவரது மனத்தை நோகடிக்கச் செய்யும் மீம்களையும், ஃபேக்வீடியோக்களையும் பகிர்ந்து சுய இன்பம் கொள்வதிலே இல்லை மேம்பாடு. அவையெல்லாம் அவரவர் மனத்தின் கோணல்களாகப் மனப்பதிவில் நிலைபெற்று, மன அழுத்தம், சோகை, வாட்டம் போன்றவற்றுக்குத்தான் வழிவகுக்கும். 

ஒரு நண்பனாக, துயர்காவியிருப்பவருக்கு நான் என்ன செய்துவிட முடியும்?

நேராகச் சென்று சந்தித்துக் கைகளைக் கோர்த்துக் கொண்டாலே போதும். துயரில் ஆழ்ந்திருப்பவருக்கு பேராதரவுச் சமிக்கைகள் தொடுவுணர்வு வழியாகப் பாய்ச்சலெடுக்கும். செல்லவில்லை. என்ன நடக்கும்? அன்பார்ந்தவரின் மரணம், வெற்றிடம் என்பது ஒரு வலியென்றால், இப்படியானவர் வரவில்லையே என்பது பெருவலியாக உருவெடுக்கும். அனாதை போல அவர் உணருவார். அதனாலே நம்பிக்கையின்மை, பாதுகாப்பின்மை போன்ற சிக்கலகள் உருவெடுக்கும். மரணத்தின் காரணம் ஏற்பட்ட வெற்றிடத்தைக் காட்டிலும், ஏதற்றதன் பெருவலி உளைச்சலைப் பன்மடங்காக்கும்.

துயராற்றுதலின் பரிமாணங்களைத் தெரிந்து வைத்துக் கொள்தல் அவசியம். இழப்புக்குள்ளானவரது உடல்நலம், மனநலம் கவனிக்கப்பட வேண்டும். பொருளாதாரத் தேவைகள், அன்றாடத் தேவைகளில் நாட்டம் குறையக் கூடும். அப்படியான நிலையில் அவரது குடும்பத்தாருக்கு ஏதுவாக இருந்து தம்மால் இயன்ற உதவிகளைச் செய்யலாம். அவையாவற்றுக்குமான பணச்சூழ்நிலை தேவைப்படாமல் இருந்தாலும் கூட, அவர்களின் பணிகளில் தொய்வேற்படலாம். அதனைக் கண்டு உதவுவது தேவையானது.

அவர்களைப் பேசவிட வேண்டும். அழவிட வேண்டும். அவர்கள் பேச, நாம் பொறுமையாகச் சொல்வதைச் சகிப்போடு கேட்டுப்பழகுதல் நன்றாம். ஒரே விசயத்தை, இழந்தவரின் நினைவுகளை, இப்படிப் பலதையும் அவர்கள் கொட்டித்தீர்க்க இடமளிக்க வேண்டும். அப்போதுதான் மனத்தின் பாரம் குறைந்து அது சமநிலைக்கு ஆட்படும். சமநிலையை எட்டினால்தான் அவர்களின் சாமான்யவாழ்க்கை நடைமுறைக்கு வரும்.

குற்றேவற்பணிகளைச் செய்து கொடுக்கலாம். வீட்டுப் பராமரிப்பு வேலைகளில் பங்கெடுக்கலாம். உணவுக்கான தேவைகளைக் கேட்டறிந்து நிறைவேற்றிக் கொடுக்கலாம். குழந்தைகளின் கல்வி, பராமரிப்பு, கவனிப்புகளிலே பங்கெடுக்கலாம். மின்மயானம் சென்றோம் வந்தோமென இருந்தகாலும் போய், அலைபேசியில் சடங்காகப்பேசும் காலம் வந்தாகிவிட்டது. இழந்தவர் எரியூட்டப்பட்டநாள் மாலைநேரத்து வீட்டை எண்ணிப் பாருங்கள். வெறுமையாகிக் கிடக்கும் வீட்டிலே சிலர், குறிப்பாக நண்பர்கள் சிலர் இருக்குங்கால் அதைவிடச் சிறந்த தொண்டு வேறெதுவும் இருக்க முடியாது. சாதல் என்பது விடுதலை. வலியில்லை. ஆனால் சாதலின் பொருட்டு இழப்பை நேர்கொள்ளும் அந்த முதற்சிலநாட்களின் வெறுமைதான் மரணவலி என்பதாகும். ஆகவே அப்படியான பொழுதில் உடனிருத்தல்தான் மனிதனின் தலையாயக் கடமை.

துயரை, துக்கத்தை, மடைமாற்றிப் பொழுதினைக் கழித்தல் எதிர்விளைவுகளையே பெருக்கும். ஆமாம். துணை இல்லாப் பொழுதுகளில், வெறுமையும் இழப்பும் காவிக்கொள்ளும் அபாயம் உண்டு. ஆகவே துயரை, துக்கத்தைப் பங்குபோடத் தலைப்பட வேண்டும்.

கொண்டாட்ட நிகழ்வுகளுக்குச் செல்லவில்லையாயினும் துயராற்றுப் பொழுதுகளுக்குச் சென்றே தீர வேண்டும். அதன்வழி, அவரவர் மனத்துக்கும் நலம் பயக்கும்.  இழந்தவரின் கோபதாபங்களுக்கு ஆட்பட்டிருக்கலாம். அல்லது, அவரது ஆசைகளை நிறைவேற்றித் தராமல் இருந்திருக்கலாம். அவையெல்லாம் குற்றவுணர்வுகளாக மாறி நம்மைத் துரத்தத் துவங்கலாம். துயராற்றில் கலந்துகொள்வதின்வழி, வடுக்கள்நீங்க வழி பிறக்கும். You can’t truly heal from a loss until you allow yourself to really feel the loss. The pain passes, but the beauty remains. Let's reach out to our near and dear as and when it is warranted.

Grieving doesn’t make you imperfect. It makes you human. -Sarah Dessen


1/28/2022

நிமலன்

குடும்பம் வறுமையில் ஆட்பட்டிருந்த காலம்.  35 வீடுகளே இருக்கும் ஒரு மிகவும் எளிய சிற்றூரில் குடியிருந்தேன். எதற்கும் சிலபல மைல்கள் நடந்துதான் செல்ல வேண்டும். ஊரில் ஒரு கடை கூடக் கிடையாது. அவசரத்துக்கு ஏதாகிலும் வேண்டுமென்றாலும் கூட, அடுத்தவரிடம்தான் யாசகம் பெற வேண்டும்; கையில் பணமிருந்தாலும் கூட. காலை ஏழு மணிக்கு வகுப்பு. ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து என் அண்ணா சமைத்து டிஃபன் பாக்சில் போட்டுக் கொடுப்பார். தூக்கமும் கலக்கமுமாக நடந்து மெயின்ரோட்டுக்கு வந்து, பஸ் பிடித்து ஆறே முக்கால் மணிக்குக் கல்லூரியின் முன் வந்திறங்க வேண்டும். ஒவ்வொருநாளும் சவாலான நாள்தான். பெரும்பாலும், ஒரு டம்ளர் வரக்காப்பியுடன்தான் வகுப்புக்கு வருவோம். கிராமத்து மாணவர்களைச் சுலபமாக அடையாளம் கண்டுவிடலாம். வறிய தோற்றத்துடன், அதே உடுப்புகளை அடுத்தடுத்த நாட்களில் என்பதாக.  வகுப்பில் நான் மற்றவர்களுடன் பேசியது மிக மிகக் குறைவு. 

தாழ்வுமனப்பான்மை ஒருபுறம். வறுமை ஒருபுறம். கல்லூரியின் ஆங்கிலவழிக்கல்வி, நகரப்பண்பாடு இதெல்லாம் தமிழ்மீடிய ஊர்ப்புற மாணவர்களுக்கு முற்றிலும் புதியது. வயது 15. மனமெல்லாம் பயம். யாராவது அதட்டிப் பேசினால்கூட அழுதுவிடும் மனநிலையில்தான் முதலிரண்டு ஆண்டுகளும் கழிந்தன. அப்படியான காலகட்டத்தில்தான் இவனைப் பார்த்து அதிசயத்தோம். சக கிராமப்புற மாணவன். ஆனால் துடுக்கோடு திரிவான். அவனைப் போல நம்மால் இருக்க முடியாதாயென்கின்ற ஏக்கம், அவ்வப்போது வந்து போகும். முதலாம் ஆண்டு, ஒரு சில மாதங்கள் கழிந்தநிலை, மார்கழிமாதம், நல்லகுளிர், காலையில் எழுந்து வருவது சிரமமான காரியம். இவன் பத்து நிமிடங்கள் லேட். ஆசிரியர் ராவ் அடிக்கப் பாய்ந்தார். இவனது டிஃபன் பாக்ஸ் நழுவிக் கீழே விழுந்து விட்டதும், அதில் இருந்த ’பட்டண ரவை உப்புமா’ மட்டும் வட்டவடிவில் பிரிந்து தனியாக உருண்டோடிப் போய் வெளித்திண்ணையிலிருந்து கீழே விழுந்து விட்டது. டிஃபன் பாக்ஸ் அங்கே கிடக்கின்றது. வகுப்பே சிரித்தது. கண்ணாடி போட்டிருக்கும் இவன் மலங்க மலங்க முழிப்பில். ஆசிரியர் பணம் கொடுத்து, சாப்பாட்டுக்கு வைத்துக் கொள்ளச் சொன்னார்.

மனத்துக்கு ஏழு அடுக்குகள் உள்ளன. The seven-levels of mind have been explained by Upanishads by comparing them with the ‘Seven Horses of the Sun‘. Conscious Mind, Subconscious Mind, Unconscious Mind, Super Conscious Mind, Collective Conscious Mind,  Spontaneous Mind, Ultimate Mind என்பதாகப் புரிந்து கொள்ளலாம். இவற்றுள், அந்தந்த அடுக்குகளின் வீரியம், திறன் என்பது ஆளுக்காள் மாறுபடும். அதைப் பொறுத்து ஒவ்வொருவருடைய பண்பு, செய்கை, நடத்தை என்பது மாறுபட்டு இருக்கும். இவனுக்கோ உடனடி எண்ணம், ஸ்பாண்ட்டேனியஸ் என்பதன் தாக்கம் அதிகம். இப்படியான தன்மை உடையவர்களை நீங்கள் அவ்வப்போது எங்கும் காணலாம். 

இளம்பிராயத்து பிருந்தாவனத்துக் கண்ணன் கூட அத்தகைய தன்மை உடையவர்தான். வெண்ணெய்ச் சட்டிகளை உடைப்பான். குறும்புகளைச் செய்வான். காரணம், அந்தத் தருணத்து வேடிக்கைகளில் ஆழ்ந்து போகக் கூடிய தன்மை உடையவர்கள் இவர்கள். பின் விளைவுகளை யோசிக்க மாட்டார்கள். ஆனால் அடிப்படையில் நல்லவர்கள். காலஞ்சென்ற எழுத்தாளர் க.சீ.சிவகுமார் எல்லாம் இந்த வகைக்கு உட்பட்டவர்தாம். இப்படியானவர்களிடம், கலை, படைப்பாற்றல், நகைச்சுவை தூக்கலாக இருக்கும். இது அவர்களின் பலம்.  கால்குலேட்டிவ் மைண்ட் என்பது கான்சியஸ் மைண்ட் இருப்பவர்களுக்கானது. இவர்களுக்கு ஸ்பாண்ட்டேனியஸ் அதீதமாகப் போய்விடுவதால் கால்குலேட்டிவ் அளவு குறைவாகி, முனைப்பில்லாமல் மேம்போக்காக, பெரும்படியாக இருப்பதென்பது பலவீனமாகி விடும். காலப்போக்கில் சிலர் சமநிலையை அடைந்துவிடுவர்; சிலர் கடைசி வரையிலும் எதார்த்தமிகு பெரும்படியாகவே இருந்துவிடுவர்.

இப்படியானவர்களை ஊர்களிலே நீங்கள் பார்க்கலாம். அவரவர் பொழுதுபோக்கிற்காக, வேடிக்கைக்காக பயன்படுத்திக் கொள்வர். வேளை வந்ததும், அவரவர் போக்கில் சென்றுவிடுவர். அப்படியான பின்னணியில்தான், நானும் அவரின் வேடிக்கை, துடுக்குத்தனம் போன்றவற்றுக்கு பயனாளியாகிவிட்டேன். மற்றவர்கள் அவரை இன்ன சொல் என்றில்லை, அப்படியான சொற்களாலே பகடி செய்வர். இவரும் பதிலுக்கு அதேவண்ணம் செய்வார். சுற்றி இருப்பவர்கள் சிரிப்போம். எல்லாமும் சரி, எதையும் தனிப்பட்ட முறையில் பெர்சனலாக எடுத்துக் கொள்ளாத வரையிலும். The true secret of happiness lies in taking a genuine interest in all the details of daily life.

யாரும் யாரையும் துன்புறுத்த நினைப்பதில்லை. கூட்டமாகக் கூடும் போது, கூட்டத்தில் இருக்கும் எளியவர்மீது வேடிக்கைகள் பாய்வதும் பகடிகள் நிகழ்வதும் இயல்பு. ஆனால் சில தருணங்களில் நிலைமை கைமீறிச் சென்றுவிடும். At times, such behavior is repeated and habitual. நீங்களும் நாளைக்கே கூட இப்படியான மனிதர்களைச் சந்திக்கக் கூடும். அவர்கள் மீது கூடுதல் அன்பு செலுத்துவோம்; முற்றிலும் வேடிக்கைப் பொருளாக மட்டுமே ஆக்கிவிடல் தகுமா?

Never perfect, always genuine.



1/27/2022

தனிமனித விமர்சனம் Personal Attack

வன்மம் என்பது காயப்படுத்தக் கூடிய கூரிய ஆயுதங்கள், பொருட்கள், உடலின் மீதான தாக்குதல் என்பது மட்டுமேயல்ல. சொற்களாலும் நேரடித் தாக்குதலற்ற செயற்பாடுகளாலும் கூட இடம் பெறும். எடுத்துக்காட்டாக, மனமறிந்தே பொய்ச்செய்திகளைப் பரப்புவதும் உருவாக்குவதும் கூட வன்மம்தான். அதுபோன்றதுதான் நற்பெயருக்குக் குந்தகம் விளைவிக்கக் கூடியதும், தனிமனித வாழ்க்கைச் செயற்பாடுகள், அந்தரங்கம் குறித்தானதுமான பேச்சுகளும் வசைகளும். இது டிஜிட்டல் யுகம். எல்லாமும் உடனுக்குடனே பதிவுகளாக நிலைபெற்று விடுகின்றன. ஆகவே, ’என்ன மாதிரியான சொற்களைப் பாவிக்கின்றோம், விமர்சனம் தொடுக்கின்றபோது பேசுபொருளின்பாற்பட்டுத்தான் பேசுகின்றோமா?’ என்பதெல்லாம் அறிந்து செயற்படல் காலத்தின் தேவை. 

அவதூறும், உண்மைக்குப் புறம்பானதுமான செயல்களைச் செய்தோமேயானால், அது நம்மைத் துரத்திக் கொண்டேயிருக்கும்; என்றோவொருநாள் அவை நம்மைப் பதம் பார்க்கக் கூடும். Your digital footprints speak volumes than your CV.- Bernard Kelvin Clive.

எப்படி ஒருவர்மீது தனிமனித விமர்சனம் வைப்பதை மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டுமென நினைக்கின்றோமோ, அதே அளவுக்கு, வைக்கப்படும் அத்தகைய விமர்சனங்களை எதிர்கொள்ளப் பழகிக் கொள்வதும் இன்றியமையாததாகும்.

ஒருவரை நோக்கி வசையோ, காழ்ப்போ, அவதூறோ நிகழ்கின்றது. தொடர்புடைய நபருக்கு எளிமையான முறையில் சுட்டிக் காண்பிக்கலாம். புரிந்து கொள்ளக் கூடிய மனநிலையில் அவர் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. இருந்தாலும் சுட்டிப் பார்க்கலாம். பயனளிக்காத நிலையில், அத்தோடு விட்டுவிட வேண்டும். பொருட்படுத்தாமல் விட்டுவிடுவதுதான் சிறந்த வழி. மனத்திலேற்றிக் கொண்டால், அது விடுக்கப்பட்டவருக்கான வெற்றியாக அமைந்துவிடும். கூடவே நம் மனநலத்தையும் பாதிக்கும்.

’அப்படியான விமர்சனம், தமது பண்பின் தன்மையல்ல; மாறாக விடுப்பவரின் உணர்வுக்கொந்தளிப்பு, உணர்வுத்தேவை, பேச்சுத்திறன் குறைபாடு’, என்பதாகப் பொருள்கொள்ளப் பழகுதல் நல்லது.

பாராட்டுகளும் நன்மதிப்பும் எல்லாரிடமும் பெறுதல் சாத்தியமற்றவொன்று. அப்படி எண்ணுவது, தன்னுமை (liberty)யுடன் வாழ்வதற்கு நேர் எதிரானது. தனக்குத் தானே இட்டுக்கொள்ளும் அடிமைத்தளை.

மனச்சாட்சிக்கும், குடும்பத்துக்கும், தாம் கொண்டிருக்கும் கொள்கைகளுக்கும், சமூகத்துக்கும்தான் விசுவாசமாக இருக்க வேண்டுமேவொழிய, எதிர்கொள்ளக் கூடிய தனிமனித விமர்சகர்களுக்கல்ல எனும் மனப்பான்மை பெறுதல் பயனளிக்கும்.

இப்படியான தனிமனிதத் தாக்குதல்கள், தமக்குள் வினாக்களை விதைக்கும். கூனிக்குறுகக் கூடிய சூழ்நிலைகூட ஏற்படலாம். அவமானத்தால் புழுங்கக் கூடிய தருணம் வரும். அப்படியான தருணங்களைத் தனதாக்கிக் கொளல் அவசியம். பழிக்குப் பழி என்பதான இம்ப்பல்சிவ் ரியேக்சன் எனும் மனத்தூண்டலைக் கட்டுப்படுத்தும் பயிற்சியாக மேற்கொள்ளலாம். அப்படிச் செய்வதன்வழி மனநலம் மேம்படும்.

நியூயார்க் நகர மையம், சார்லட் நகர மையம் என்பதெல்லாம் மக்கள்திரள் வெகுவாக இருக்கக் கூடிய இடங்கள். ஸ்டாக் எக்சேஞ்ச், வங்கித் தலைமையகங்கள் இருக்கக் கூடிய இடங்கள். சென்று கொண்டிருக்கின்றோம். திடீரென கால்தடுக்கிக் கீழே விழுகின்றோம். ஏற்பட்ட தடங்கலின் வலி அல்லது காயத்தின் வலியைக் காட்டிலும், மனத்தில் ஏற்படும் எமோசனல் அட்டேக் என்பதன் வலி,  இத்தனை பேர் பார்க்கக் கீழே விழுந்து விட்டோமேயென்கின்ற உணர்வுவலியும் மனஅதிர்ச்சியால் ஏற்படும் உடம்பின் வேதிமாற்றங்களும் பலமடங்கு அதிகம். ஆனால், பார்ப்போரில் நிறையப் பேரின் கண்கள் மட்டுமே அதைக் கண்டிருக்கும். மனத்தில் பட்டிருக்காது. அப்படியே பட்டிருந்தாலும், அடுத்த சில நொடிகளில் அது அவர்களை விட்டுச் சென்றுவிடும். ஆனால் கீழே விழுந்தவருக்கான மனவலியடங்க சிலநாட்கள் கூட ஆகும். அப்படியான மனவலியைப் பெற வேண்டிய அவசியம் என்ன? அது போன்றதுதான், இப்படியான தனிமனித விமர்சனத்துக்கான வலியும்.

பேசுபொருளின் மீதான, இலக்கின்மீதான கவனத்தைத் திசை திருப்புவதற்காகக் கூட நிகழ்த்தப்பட்டிருக்கலாம். இலக்கின் மீதான கவனத்தைச் சிதையா வண்ணம் தரித்தல் நன்றாம்.

இளைப்பாரலுக்கான வாய்ப்பாகவும் அதை கருதலாம். சிந்தனைக்கான வாய்ப்பாகவும் அமையும். டிபேட், உரையாடல், உரிமைகோரல் போன்ற தருணங்களில், இத்தகைய போக்கையே, கோரிக்கைக்கான சான்றாக, முகாந்திரமாக அமைத்துக் கொள்ளலாம்.

When they go low, we go high. - Michelle Obama





1/26/2022

ஊட்டமிகுதல்

நம் திருமேனி 70% வரையிலும் நீராலானது. எஞ்சியது மட்டுமே திண்மத்தால் ஆனது. அதுபோன்றே நம் வாழ்வின் ஊட்டமும் தொன்னூறு விழுக்காடு வரையிலும் உணர்வுகளால் ஆனது. எஞ்சிய பத்து விழுக்காடுதான் புறவயப்பட்ட பொருட்களால் ஆனது. எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்ல முடியும்?

வாழ்ந்த வாழ்க்கையும் வாசித்த நூல்கள் கொண்டும் எண்ணமுடிகின்றது. எப்படி? ஊரகத்தில் பிறந்து வளர்ந்த வேளாண்மைச்சூழல். அடுத்து, வாழ்ந்திருந்த பன்னாட்டுச் சமயங்களும் நாடுகளும்(இந்தியா-இந்து, மலேசியா-இசுலாம், சிங்கப்பூர்-பெளத்தம், கனடா/அமெரிக்கா-கிறித்துவம், சைப்ரசு/இசுரேல்-எகுதா,யூதம்) . பணிபுரிந்திருந்த பன்னாட்டுப் பெருநிறுவனங்கள். கூடவே வாசித்த நூல்கள்.

வேளாண்மை செய்ய வேண்டும், பொருட்கள் உற்பத்தி பெருக வேண்டும், மேம்பாட்டுக்கு என்ன அடிப்படை? செய்நுட்பமும் கருவிகளும் அடிப்படை. எண்ணிப் பாருங்கள். ஆணி அடிக்க வேண்டும். ஒரு பெரிய கல்லையோ அல்லது தடிமனான இரும்புக்கனத்தையோ கொண்டு அடித்தால் ஆணி இறங்கி விடும். ஆனால் அந்த கனத்தைச் செல்லுமிடமில்லாம் தூக்கித் திரிய வேண்டும். நேரவிரயமும், ஆற்றல்விரயமும் ஏற்படும். பத்து ஆணி அடிக்க வேண்டிய இடத்தில் ஒரு ஆணிதான் அடித்திருக்க முடியும். உற்பத்தித்திறன் குறைவு. சிறு எடையுடன் கூடிய கனத்திற்கு வால்போன்ற கைப்பிடி, அதைக் கொண்டு அடிக்குங்கால் சுலபமாக அடித்திறக்க முடிகின்றது. அதன் எடையும் குறைவு. இப்படித்தான் சுத்தியல் பிறந்திருக்க முடியும். ஆக, ஒரு எளிய கருவி, உற்பத்தியை, செய்நுட்பத்தை மேம்படுத்துகின்றது. We shape our tools, and afterwards our tools shape us. உணர்வால் கட்டுண்ட மாந்தனுக்கும், செய்நுட்பத்தை மேம்படுத்த சிலபல கருவிகள், உளவியற்கருவிகள் தேவையாய் இருக்கின்றன. அவற்றைக் கண்டு பாவிக்கப்பழகிவிட்டால் ஊட்டமிகு வாழ்வுதான் நம் எல்லாருக்கும்.

நாட்டுப்புற வேளாண் வாழ்வுக்கும் சரி, இந்து, இசுலாம், புத்தம், பெளத்தம், யூத எகுதா, கிறித்துவம், சமயப்பற்றில்லா வாழ்வுமுறைக்கும் சரி, பெருநிறுவன இயக்கத்துக்கும் சரி, பொதுவானது இந்த ஒன்றே ஒன்றுதான். எது? சரடொன்றில் எட்டுவிதமான பூக்கள் கொண்டு கோக்கப்பட்ட மலர்க்கொடிதான் இவற்றுக்குப் பொதுவான ஒன்று. அஃதென்ன அந்த எட்டுவிதமான மலர்கள்?

களைந்துவிடல்/மன்னித்தல்: ஒரு வங்கியில் சிலபல வாராக்கடன்கள் உள்ளன. நிறுவனத்தில் சிலபல காலாவதியான பொருட்கள் உள்ளன. ஸ்டாக்மார்க்கட் ஃபோர்ட்ஃபோலியோவில் சோபிக்காத சிலபல ஸ்டாக்குகள் உள்ளன. காலம்முழுமைக்கும் அதைக் கட்டிக்கொண்டு திரிவார்களா? மாட்டார்கள். அவ்வப்போது கணக்கில் இருந்து கழட்டிவிடுதல் நன்றாம். ஈகோவுக்காக வைத்திருத்தல், வீண்சுமையாகி செலவீனத்துக்கு வழிவகுக்கும். அதுபோன்றதுதான், ஒருவரின்பால், ஒன்றான்பால் வெறுப்போ, மனத்தாங்கலோ இருப்பின் அவ்வப்போது களைந்துவிடல் நன்றாம். அல்லாவிடில் அது மனப்பாரமாகும். கனம் கூடும். கவலைக்கும் மன அழுத்தத்துக்கும், சோகைக்கும் இட்டுச் சென்று வாழ்வின் தரத்தைச் சீர்குலைக்கும். ஆக மன்னித்தல், விட்டொழித்தல் என்பதுவோர் உளவியற்கருவி.

ஊக்கமுறுதல்: மோட்டிவேசன் என்கின்ற பெயராலே, கூட்டியக்கம் என்கின்ற பெயராலே, கதைகள் கொண்டும் கலை, இசை,பாடல்கள்கொண்டும், சொற்பொழிவுகள் கொண்டும் நல்லதொரு ஊக்கமிகு சூழலைப் பெருவணிகநிறுவன எக்ஸ்பர்ட்டுகள்/சமயப்பெரியோரின் பேச்சுகளும் ஆக்கங்களும் இலக்கியங்களும், மாந்தனுக்கு ஊக்கத்தையூட்டிக் கொண்டே இருப்பன. ஆக, ஊக்கமுறுதல் என்பதோர் உளவியற்கருவி.

நோக்கமுறுதல்: இன்னின்ன விளைச்சலால் பணமீட்டி இன்னின்ன காரியங்களைச் செய்தாக வேண்டும், இன்னின்ன செயற்பாடுகளால் இன்னின்னவற்றை அமைத்துக் கொள்ள வேண்டும், நிறுவனத்தின் மூன்றாவது காலாண்டு விற்பனை இன்னதாக இருக்க வேண்டுமென்பதெல்லாம் இலக்குத்தரித்தல் என்பதாகும். ஆக, நோக்கமுறுதல் ஓர் உளவியற்கருவி.

கொண்டாடுதல்: அந்தந்த நேரத்தில் மனமூக்கம் பெறுவதற்காகவும், பாராட்டுதலைத் தெரிவித்து மேம்பட்டுக் கொள்வதற்காகவும், சமயத்திலே, பெருநிறுவனத்திலே, ஊருக்குள்ளே, சமூகத்திலே பலவிழாக்கள் இடம் பெறும். அல்லது, நாமாகவே ஏற்பாடுகள் செய்து கொள்வதன்வழி மனம் புத்துணர்வு கொண்டு புதுப்பாய்ச்சல் பெறுகின்றது. ஆக, கொண்டாடுதல் ஓர் உளவியற்கருவி.

பொறுப்பேற்றல்: இன்ன வேலை என்றில்லை, உயிர்த்திருக்கும் ஒவ்வொரு மனிதனும் ஏதோவொன்றின்பால் உழைக்கப் படைக்கப்பட்டவன். அதன்நிமித்தம் இன்னது செய்துவிடலெனும் பொறுப்பேற்றுக் கொள்தல், மனநிறைவை அவனுக்கு ஈட்டித்தரும். உழைப்பைத் தவிர வேறெதுவுமே மனநிறைவுக்கு இட்டுச் செல்லாது. மனநிறைவு இல்லாதோன் மனப்போதாமைக்கு ஆட்பட்டு அல்லலுறுவான். ஆகவே பொறுப்பேற்றல் என்பதோர் உளவியற்கருவி.

ஈதல்: எல்லா நேரத்திலும் எல்லாரும் அவரவருக்கானவற்றைச் செய்துவிட முடியாது. இளம்பிராயம், மூப்பு, நோய்ப்பு, சுற்றுச்சூழல் போன்றவற்றின் நிமித்தம் அடுத்தவர் உதவியைப் பெற்றே தீர வேண்டும். ஆக, நம்மால் இயன்ற உதவியை நல்குங்கால், நமக்கான உதவியும் எதன்புலத்திலிருந்தோ கிட்டும். அப்படியான ஈதலின் பொருட்டும் மனச்செழிப்பு உண்டாகும். ஆக, ஈதல் என்பதோர் உளவியற்கருவி.

உயிர்நலம்: சுவரிருந்தால்தான் சித்திரம் வரைய இயலும். படகு இருந்தால்தான் பயணிக்க முடியும். ஆகவே, உடலும் மனமும் சேர்ந்த உயிர்நலப் பேணல் இன்றியமையாதது. ஆக, உயிர்நலம் என்பதோர் உளவியற்கருவி.

போற்றல்: மாந்தன் கூட்டமாக, இயைந்து இணக்கத்துடன் வாழப்பழக்கப்பட்டவன், படைக்கப்பட்டவன். கூட்டம் கூட்டமாக ஊர்ந்து சென்று சேர்ந்ததாலேதான் அது ஊர். அப்படியான கூட்டத்தில், அடுத்தவரின் திறமைகள், தனித்துவங்கள், ஆக்கங்கள் காணத்தலைப்பட்டால் தயங்காது போற்றலும், கண்டுணர்ந்து உடைத்தாவதும் இணக்கத்தை பாதுகாப்புவுணர்வைக் கட்டமைக்கும். ஆக, போற்றல் என்பதோர் உளவியற்கருவி.

சமயம், நிறுவனம், ஊர், காடு, அது எதுவானாலும் சரி, சரடில் கோக்கப்பட்ட மன்னித்தல், ஊக்கமுறுதல், நோக்கமுறுதல், கொண்டாடுதல், பொறுப்பேற்றல், ஈதல், உயிர்நலம், போற்றல் ஆகிய எட்டுவகை மலர்களாலே ஒருவன் தன் வாழ்வை ஊட்டமிக்கதாக ஆக்கிக்கொள்ளலாம். இவற்றுள் ஒன்று மிகுந்து இன்னொன்று மட்டுப்படும் போது அல்லல் பிறக்கின்றது. மனிதன் உணர்வால் கட்டுண்டவன். மனவுணர்வுப்பொறிகளால் மட்டுமே மேன்மை பிறக்கும்.

Fulfillment result when you feel that you are becoming everything that you are capable of becoming.

1/25/2022

தன்னுமை

இந்தியக் குடியரசுநாள் வாழ்த்துகள். தன்னாட்சிநாளுக்கும் குடியரசுநாளுக்குமான வேறுபாடு என்ன? அந்நிய ஆட்சியினின்று விடுவிக்கப்பட்ட நாள் விடுதலைநாள். நாட்டுக்கான அரசியல் சட்டதிட்டங்கள் நிறுவப் பெற்று, அவை நடைமுறைக்கு வந்தநாள் குடியரசு நாள். அப்படியானால், தன்னாட்சிக்குப் பிறகான குடியரசுக்கு முந்தைய ஆட்சிமுறை? மேலாட்சி(dominion) முறை என்பதாகும். 1947 - 1950 வரையிலும் ஆறாம் ஜியார்ஜ் மன்னரால் நியமனம் செய்யப்பட்ட மெளண்ட்பேட்டன், இராஜகோபாலாச்சாரி ஆகியோர் கவர்னர் ஜெனரலாக ஆட்சி புரிந்தனர். 1950 ஜனவரி 26 ஆம் நாள், இராஜேந்திர பிரசாத் அவர்கள் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்று குடியரசு ஆட்சியினை நடைமுறைக்குக் கொணர்ந்தார்.

அப்படியானால் தன்னாட்சி(independence), தன்னுமை (liberty), விடுதலை(freedom) என்பவற்றுக்கான வேறுபாடு என்ன?

அந்நிய அடிமைத்தனத்தினின்று விடுபட்டுக் கொள்வது விடுதலை. தனக்கான ஆட்சிமையைத் தானே நிறுவிக் கொள்வது தன்னாட்சி. தன்னுடைய இயல்பைத் தன்னுள்ளே செயற்படுத்திக் கொள்வது தன்னுமை. உரிமைப் போர்களினூடாக விடுதலை பெற்றுக் கொள்கின்றோம். சட்டதிட்டங்களைக் கட்டமைத்து நெறிப்படுத்திக் கொள்வதன் வாயிலாக தன்னாட்சியை அமைத்துக் கொள்கின்றோம். தன்னுமையை எப்படிச் செயற்படுத்திக் கொள்வது?

தனக்கான உரிமைகளை, ஆசைகளைச் சமூகத்துக்குப் பங்கம் நேராத வகையில், தன்னியல்போடு செயற்படுத்தி முழுமுற்றாகத் தன் போக்கில் வாழத்தலைப்படுவதே தன்னுமையின் இலக்கணமாய் இருக்கும். பொதுச்சமூகத்துக்குக் கேடு நேராதவரையில், அடுத்தவர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோயெனக் கவலை கொள்ளத் தேவையில்லை. சுருங்கக் கூறின் அடுத்தவரின் அபிலாசைகளுக்காக நாம் வாழ்தல், நம்மை நாமே சிறைப்படுத்திக் கொள்வதற்கு ஒப்பானதேயாகும். எப்படி? அவர் தவறாக எண்ணுவார், இவர் தவறாக எண்ணுவாரென்றோ, அல்லது அவரிடம் நற்பெயர் வாங்க வேண்டும், இவரிடம் நற்பெயர் வாங்க வேண்டுமென்றோ வாழத்தலைப்படும் போது நாம் நம் வாழ்க்கையை வாழவில்லை, தன்னுமையை இழந்து விட்டோமென்றே பொருள்.

மார்கஸ் எரேலியஸ் சொல்லியதினின்று. ஒரு விடுதியில் இருவர் சந்தித்துக் கொள்கின்றனர்.

“அடுத்தவரின் எண்ணங்களுக்குட்பட்டு இருந்தால், உனக்கான எதையும் உன்னால் செய்து கொள்ள முடியாது”

“என்ன சொல்கின்றாய்?”

“நீ, நீயாக இருக்கும் போதுதான் நீ தன்னுமையுள்ள மனிதன். அந்த மரத்தைப் பார். அது, அதுவாக இருக்கின்றது. அதன் வெளிப்பாடாக, பழங்களும் ஆக்சிஜனும் நமக்குக் கிடைக்கப் பெறுகின்றன. அதுபோலவே, நீ, நீயாக இருக்கும் போதும் ஏதோவொன்று சமூகத்துக்கு உதவிகரமாய் அமையும்.”

“அப்படியானால், நான் நானாக இல்லையா இப்போது?”

“அப்படியல்ல. மரத்துக்கும் சவால்கள் உள்ளன. நீர் இல்லாமற்போகலாம். சூரிய ஒளி கிட்டாமற்போகலாம். சூழல் மாசுபட்டுப் போகலாம். நோய்நொடிகள் வரக்கூடும். அத்தனையையும் சமாளித்து வரும் போது, பழங்களும் ஆக்சிஜனும் அவுட்புட். அதுபோலத்தான், அடுத்தவரது எண்ணங்கள் எனும் இடர்ப்பாட்டிலிருந்து சமாளித்து வரும் போது உன்னிலிருந்தும் இன்னும் மேம்பட்டவை சமூகத்துக்குக் கிடைக்கும்”

”ஆமாம். நிறைய நேரங்களில் நான் என்னை மற்றவருக்காக ஒப்புக் கொடுத்துவிடுகின்றேன்தான். என்ன செய்வது?”

“எல்லாரும், எல்லா நேரமும் நம்மை விரும்ப வேண்டுமென்கின்ற எண்ணத்தைக் கைவிடல் நன்று. தயக்கமின்றி நம் கருத்தைச் சொல்லத் தலைப்பட வேண்டும். உயர்வு தாழ்வில்லை. அடுத்தவரினின்று அறிந்து கொள்வது வேறு; அறிவுறுத்தலின்படி நடந்து கொள்வது வேறு. நம்மில் பலரும் அடுத்தவரின் பார்வைக்குக் கட்டுப்பட்டோ, அறிவுறுத்தலுக்கிணங்கவோ வாழ்ந்து கொண்டிருக்கும் தன்னுமையற்றவர்களாகவே இருக்கின்றோம். Let's be cognizant about propaganda and hidden agenda nonsense.”

Life without liberty is like a body without spirit. -Khalil Gibran

1/24/2022

பகுத்தறிவுப் பன்னாடை

பகுத்தறிவு (rational thinking) என்பது பகடிக்காட்படுவதைக் காண்கின்றோம். என்ன காரணம்? இறைமறுப்பை பகுத்தறிவு எனப் புரிந்து கொள்வதும், துய்நிலைச் சிந்தனை உடைத்தாவதும்தான் காரணம். இதற்கும் மேற்பட்டதொரு காரணம், அது அவர்களின் கல்வித்தரம். இஃகிஃகி.

மாந்தராகப் பிறந்த எல்லாருக்குள்ளும் பகுத்தறிவு இயற்கையிலேயே அமைந்துள்ளது. அதன் பயன்பாட்டில்தான் ஆளுக்காள் வித்தியாசம். எந்தவொரு மனிதனும் தோராயமாகக் குறைந்தபட்சம் அறுபது விழுக்காட்டு அளவுக்குப் பகுத்தறிவைப் பாவிக்கின்றான். எஞ்சியதில்தான் ஆளுக்காள் வேறுபாடுகள்.

பகுத்தறிவுச் சிந்தனைக்கு முந்தைய நிலைதாம் உய்நிலைச் சிந்தனை (critical thinking) என்பதும், துய்நிலைச் சிந்தனை (passive thinking) என்பதுமாகும். துய்நிலைச் சிந்தனையானது பகுத்தறிதலுக்கு இட்டுச் செல்லாது. ஏன்?

ஒரு பற்றியம்(subject) கிடைக்கின்றது. சிந்தனை வயப்படுகின்றோம். இருவிதமாக அது எதிர்கொள்ளப்படுகின்றது. பார்த்தவுடனே, கடந்தகால அனுபவம், நம்பிக்கை, விருப்பு வெறுப்பின் அடிப்படையில் ஒரு முடிவினை மேற்கொள்வது துய்நிலைச் சிந்தனை. காரணம்(reason), ஏரணம் (logic), சான்றுகள்(evidence), தரவு(fact) முதலானவற்றைத் தேடவும் நாடவும் தலைப்படுவது உய்நிலைச் சிந்தனை. உய்வது, தன்னை ஈடுபடுத்திக் கொள்வது. துய்வது, இருப்பில் இருப்பதை அனுபவிப்பது. உய்வுற்றபின்னர், காரண ஏரணம், தரவுகள், சான்றுகளைக் கொண்டும் கலந்துரையாடியும் ஒரு முடிவுக்காட்படுவது பகுத்தறிதல். கலந்துரையாடலுக்கான தேவையென்ன?

காலை 10 மணி: அலெக்சாண்டர் அவ்வழியாகச் சென்று கொண்டிருந்தான். அங்கே ஒருவர் கையேந்திப் பணம் கேட்டுக் கொண்டிருந்தார். இவன் மனத்தில் நினைத்துக் கொண்டது, “உழைத்துப் பிழைக்க ஆயிரம் வழிகள் உண்டு. ஏமாறுவோர், ஏமாற்றுவோர் இருக்கும் உலகில் நாம் ஏமாறுவோனாக இருத்தலாகாது. இவருக்கு நாம் ஏன் பணம் கொடுக்க வேண்டும்? கூடாது.”

காலை 10 மணி: பீட்டர் அவ்வழியாகச் சென்று கொண்டிருந்தான். அங்கே ஒருவர் கையேந்திப் பணம் கேட்டுக் கொண்டிருந்தார். இவன் மனத்தில் நினைத்துக் கொண்டது, “ஏன் இந்தப் பெரியவருக்கு இப்படியானதொரு நிலை? இந்த உலகம் இன்னும் சிறப்பாக இருக்கலாம். மனிதனை மனிதன் அரவணைத்து எல்லாரும் நல்லபடியாக இருந்தால்தான் என்ன? இப்படியான இழிநிலைக்கு ஒருவிதத்தில் நானும் காரணம். ஒரு பத்து டாலர் கொடுப்போம்!.”

தெருவோரம் கையேந்தி நிற்கும் மனிதர் ஒருவர்தான். ஆனால், இவர்கள் இருவருக்குள்ளும் இருவிதமான யோசனைகள். ஏன்? அது, அவர்களின் கடந்தகாலம், கல்வி, பின்புலம் இப்படிப் பலவற்றையும் கருத்திற்கொண்டு அமைந்தவை. ஆனால் இருவரது சிந்தனையுமே துய்நிலைச் சிந்தனைதான்.

காலை 10 மணி 10 நிமிடங்கள்: கெவின் அவ்வழியாகச் சென்று கொண்டிருந்தான். அங்கே ஒருவர் கையேந்திப் பணம் கேட்டுக் கொண்டிருந்தார். இவன் மனத்தில் நினைத்துக் கொண்டது, “ஏன் இந்தப் பெரியவருக்கு இப்படியானதொரு நிலை? பேசிப் பார்க்கலாம்”. “என்ன ஐயா பிரச்சினை?” “தன்னிடம் நூறு டாலர் பெறுமானமுள்ள பிட்காயின் இருக்கின்றது. யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்கின்றார்கள். ஊர் திரும்ப நாற்பது டாலர் வேண்டும். முப்பது டாலர் திரட்டி விட்டேன், இன்னும் பத்து டாலருக்காக நிற்கின்றேன்”. 25 டாலர் பெறுமானமுள்ள பிட்காயினுக்கு உரிய பணம் கொடுத்துவிட்டு, அந்த பிட்காயினை வாங்கிச் சட்டைப் பையில் இட்டுக் கொண்டு கிளம்புகின்றான் கெவின். கெவின் பேசநினைத்தது உய்நிலை. அதன் பின் தீர்வு கண்டமை பகுத்தறிதலின் பொருட்டு. ஒருவேளை அவர் யாசகம் கேட்டிருப்பாராயின், இவன் கொடுக்காமற்சென்றிருக்கக் கூடும்.

இப்படியான மாறுபட்ட பின்புலத்தை, காரண ஏரணங்களை, சான்றுகளை அறிந்து கொள்ளக் கலந்துரையாடல் அவசியம்.

பொதுவாக எல்லாருக்குள்ளும் இலக்குகள் இருக்கும். அந்த இலக்குகளை அடைய சில நேரங்களில் துய்நிலை, சிலநேரங்களில் உய்நிலை என்பதாக ஒரு சீர்நிலை(பேலன்ஸ்) இருத்தல் நன்றாம். ஒவ்வொன்றுக்கும் மெனக்கெட்டுக் கொண்டிருக்க முடியாது. ஆகவே நிபுணர்களின் உதவியோடு இலக்குகளை அடையலாம். சிலநேரங்களில் உய்நிலை கொண்டாக வேண்டும். அல்லாவிடில் காலம்முழுமைக்கும் அடுத்தவரின் உதவியை நாட வேண்டி, அல்லது அடுத்தவரின் தயவில் பிழைக்க வேண்டியதாகி விடும். In Life, everything is balance of acting. அலெக்சாண்டர், பீட்டர், கெவின் எல்லாருமே சரிதான்; சில இடங்களில் மட்டும். இஃகிஃகி!! பகுத்தறிவைக் கேலி செய்பவன் இவர்கள் மூவரிலும் இல்லை என்பதுதான் எதார்த்தம்.

1/22/2022

கிறுக்கலும் நன்றே

நிகழ்காலத்தில் வாழ்வதே வாழ்வின் பயனைக் கூட்டும். கடந்து காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் திமிறிச் செல்லும் மனத்தை நிகழ்காலத்துக்கு இழுத்துவர எத்தனையோ வழிகள் உண்டு. உடற்பயிற்சி, நீச்சல், பாடுதல், இசைப்பயிற்சி, கூட்டுக்கேளிக்கை, விளையாட்டு, இப்படியானவற்றுள் ஒன்றுதாம் எழுதுவதும். மாலையின் மணிகளை உருட்டிக் கொண்டேவும் சிவாயநம சொல்வதும், தாளில் ஆயிரத்தெட்டு முறை சிவாயநம எழுதுவதும் ஒன்றுதான். ஆனால் நாட்கள் செல்லச்செல்ல, அப்படி எழுதுவதும் கூட அனிச்சைச்செயலாக அல்லது மெக்கானிக்கலாக மாறிவிடக் கூடும். அதாவது உடல் இயங்கிக் கொண்டும், மனம் எங்கோ மேய்ந்து கொண்டிருக்கும். ஆக, அதனின்று தற்சிந்தனையுடன் ஏதாகிலும் ஒன்றினை எழுதினால் மனத்துக்கு இன்னும் அது சிறப்புச் சேர்க்கும்.

தற்சிந்தனையென்றால்? சாக்ரடீஸ் உரையாடலின் வழி அறிதலைக் கட்டமைக்கலாமென்றார். தொடர்ந்து வந்த பிளேட்டோ, உரையாடலின் வழி எல்லாராலும் அறிந்திருத்தல் எதார்த்தமாக இராது. ஆகவே அறிந்தோரில் சிறந்தோரைக் கொண்டு மட்டுமே ஆட்சியை, நெறியாள்கையைக் கட்டமைக்க வேண்டுமென்றார். ஆனால் அது எல்லாநிலை மக்களின் குரலையும் கொண்டு வந்து சேர்க்காதென வாதிட்டனர் மற்றோர். இப்படித்தான் படிப்படியாக மக்களாட்சி, மக்கள்குரல், ஜனநாயகம் என்பது நடைமுறைக்கு வந்தது. சரி, நல்லதுதானே? நல்லதுதான். ஆனால், பிளேட்டோ சொல்லிச் சென்றதும் சரியோயெனும் எண்ணமும் வந்து போகின்றது.

எடுத்துக்காட்டாக, யுடியூபை எடுத்துக் கொள்வோம். எதை வேண்டுமானாலும் தரவேற்றலாம். பார்ப்போர் எண்ணிக்கை, பயனர்களுக்கு எந்த வீடியோவை முதலில் காண்பிக்க வேண்டுமென்பதை (டிரெண்டிங்) முடிவு செய்யும். அதுவே இன்னும் கூடுதலாக நிறையப் பேரைச் சென்று சேரும். தரம், உண்மை என்பதெல்லாம் இந்த அல்கோரிதத்தில் இல்லை. மதிப்புக் கொண்ட பதிவுகள் புதைந்து விடுகின்றன. மக்களுக்கு விருப்பமானவை வெல்லும். மக்களின் மனமோ, சார்புத்தன்மைக்கு சொம்படிக்கக் கூடியதை விரும்பக் கூடியது. பிளாட்பார்ம் புரவைடருக்கு, வணிகம் செழிக்க வேண்டும். பொருளின் தரம், நயம், நேர்மை என்பதைப் பற்றியெல்லாம் கவலையில்லை. இந்த இடத்தில்தான், பிளேட்டோ சொன்னது நினைவுக்கு வருகின்றது.

அறிந்தோரில் சிறந்தோர்? அதையெப்படி வகுத்தெடுப்பது? சிக்கல் நீள்கின்றது. தொழில்நுட்பத்தில் கொடிகட்டிப் பறக்கின்ற நிறுவனங்களெல்லாம், நுட்பத்திற்கும் திறமைக்கும் முன்னுரிமை கொடுக்கின்றன. மக்களைச் சார்ந்தியங்கும் மருத்துவம், உணவு, போக்குவரத்து போன்ற துறைகளைச் சார்ந்த நிறுவனங்கள் பண்புக்கும் அனுபவத்திற்கும் முன்னுரிமை கொடுக்கின்றன.

தகவற்தொழில்நுட்பம் வழங்கப்படுவது நுட்பத்திறமையானவர்களாலே. தானியக்கமாகச் சேவை வழங்குவதன் பொருட்டு, அவை அப்படித்தான் இருக்கும். தரமானவற்றை நுகர வேண்டுமாயின், நாம்தாம், நேர்மை, வெளிப்படைத்தன்மை, சார்பின்மை முதலான பண்புகளை வளர்த்துக் கொண்டாக வேண்டும். பின் அத்தகைய பண்புகளைக் கொண்டேவும், தேவையான எல்லாவற்றையும் மதிப்புணர்ந்து நுகரத்தலைப்பட்டாக வேண்டும். அல்லாவிடில், ஏமாற்றப்படுவோம், ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றோமென்பதே மெய்.

சரி, இப்படியான தற்சிந்தனையின்பாற்பட்டு எழுதுதலின் நன்மை? 1. நம் அகம்/புறம் செம்மைப்படுத்திக் கொள்தல் 2. சிந்தனையை வார்த்தெடுத்தல் 3. சொல்லாற்றலை மேம்படுத்திக் கொள்தல் 4. பிறரின் பார்வையை பார்க்கப் பழகுதல் 5. நாடலையும் தேடலையும் விதைத்தல் 6. மக்களொடு பிணைப்புக் கொள்தல் 7. சமூகப்பங்களிப்புச் செய்தல், முதலானவற்றை ஈட்டிக் கொடுக்கும்.

கிறுக்கலும், மனக்கிறுக்கலும் நன்றே! We write to taste life twice, in the moment and in retrospect!!

-பழமைபேசி, pazamaipesi@gmail.com