வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை போன்ற ஒரு முக்கிய இலாப நோக்கற்ற அமைப்பின் இயக்குநராகவோ அல்லது பொறுப்பாளராகவோ செயல்படும்போது, சட்டப்பூர்வ, அறநெறி சார்ந்த கடமைகள் மிக அதிகம். இதனை ஆங்கிலத்தில் Fiduciary Duties (நம்பிக்கைப் பொறுப்புக் கடமைகள்) என்று அழைப்போம். இந்தக் கடமைகளின்படி, ஒரு இயக்குநர் (Board Member) முக்கியமாக என்ன செய்யக்கூடாது என்பதை மூன்று முதன்மைக் கோட்பாடுகளின் கீழ் பின்வருமாறு பிரிக்கலாம்:
தன்முனைப்பு, தன்விளம்பரமின்மை
அமைப்பின் நலனைத் தவிர்த்து, தனது சொந்த அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவின் நலனுக்காகச் செயல்படக் கூடாது. தன்னல முரண்பாடுகளை (Conflicts of Interest) மறைக்கக் கூடாது: உங்களுக்கோ, உங்கள் நண்பர்களுக்கோ அல்லது உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கோ நிதி ரீதியாகவோ அல்லது தகுதி ரீதியாகவோ நன்மைதரும் எந்தவொரு ஒப்பந்தம், வாக்கெடுப்பு தேர்விலும் நீங்கள் தலையிடவோ அல்லது அதை மறைக்கவோ கூடாது. (எகா: தன் சங்கத்துக்கு நிதி ஒதுக்கீடு, பொறுப்பளித்தல் போன்ற வாக்கெடுப்பில் கலந்து கொள்ளக் கூடாது)
தன்-வணிகம் செய்யக்கூடாது. உங்கள் பொறுப்பினைப் பயன்படுத்தி முறையற்ற பயணப் படிகள், கட்டணத் திருப்பிச் செலுத்தல்கள் அல்லது அமைப்பின் வளங்களை தனிப்பட்ட தேவைக்கு பயன்படுத்தக் கூடாது. (எகா: பேரவையின் மின்னஞ்சல்களைத் தன்னலத்துக்குப் பயன்படுத்துவது குற்றம்)
அமைப்பின் இணையதளங்கள், சமூக ஊடகப் பக்கங்கள், வர்த்தக முத்திரைகள், துணைக்குழுக்கள் அனைத்தும் ஒட்டுமொத்த அமைப்புக்குச் சொந்தமானவை. அதை ஒரு தனிநபரோ அல்லது ஒரு குறிப்பிட்ட அணியினரோ தங்களுக்கு மட்டும் சிறப்பு உரிமை உடையது எனக் கோரக் கூடாது. (எகா: வாட்சாப் குழுக்கள் அமைப்பின் வசம் ஒப்படைக்காமல் இருப்பது, TamilER முதலானவற்றை தம் அணிக்கு மட்டும் ஏதுவாகப் பயன்படுத்துதல் முதலானவை குற்றம்)
பொறுப்புக் கண்காணிப்பு
அமைப்பின் செயல்பாடுகளைக் கவனத்துடனும், விழிப்புடனும் கண்காணிக்க வேண்டும். அதில் கவனக்குறைவு இருத்தல் கூடாது. கூட்டங்களில் பங்கேற்காமல் இருப்பது, நிதிநிலை அறிக்கைகளை முறையாகப் படித்துப் பார்க்காமல் இருப்பது, அல்லது பெரிய திட்டங்களுக்குக் கண்மூடித்தனமாக "ஆம்" என்று வாக்களிப்பது கடமைத் தவறுதலாகும். அலட்சியமாக இருப்பதும் சட்டப்படி குற்றமே. (எகா: கூட்டத்தில் கலந்து கொள்ளாமலே, கூட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிப்பது குற்றம்)
அமைப்பின் நிதி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாமலோ, கணக்குகளில் குளறுபடிகளோ, அல்லது நிர்வாகத்தில் சர்வாதிகாரப் போக்கோ தெரிந்தால், அதைத் தட்டிக்கேட்காமல் மௌனம் காக்கக் கூடாது. (எகா: தான் செயலாற்றும் குழு தாக்கல் செய்திருக்கும் வருமான வடிப் படிவத்தில் என்ன இருக்கின்றதெனக் கூட தெரியாத நிலையில் இருப்பது குற்றம்)
அமைப்பின் நிதியைத் தனிப்பட்ட கணக்குகளுடன் இணைப்பதோ அல்லது பெரிய செலவுகளுக்கு இருவர் கையொப்பமிட வேண்டும், வழங்குநர், வணிகர் தகவலைப் பகிர்தல் போன்ற உள்முகக் கட்டுப்பாட்டு விதிகளை மீறுவதோ பெரும் தவறாகும். (எகா: வெண்டர் தகவலைப் பகிராமல் இருப்பது குற்றம்)
சட்ட விதிமுறைப் பாதுகாப்பு
அமைப்பின் நோக்கங்களுக்கும், அதன் சட்ட விதிகளுக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். தேர்தல் நடைமுறைகள், உறுப்பினர்களின் குறைகளைத் தீர்க்கும் வழிமுறைகள் (Grievance procedures) ஆகியவை விருப்பத்தின் பேரில் பின்பற்றுபவை அல்ல; அவை சட்டப்பூர்வமாகக் கட்டுப்படுத்தக் கூடியவை. தங்களுக்குச் சாதகமான முடிவுகளைப் பெற விதிகளையும் நடைமுறைகளையும் மாற்றுவதோ அல்லது புறக்கணிப்பதோ கூடாது. (எகா: திட்டமிட்டே விண்ணப்பத்தைக் கிரீவன்சு கமிட்டிக்குக் கடைசி நாளான 15ஆம் நாளில் அனுப்பி இருந்தால் அது குற்றம்)
ஒரு குறிப்பிட்ட மாநாட்டிற்காகவோ (Convention) அல்லது கலைத் திட்டத்திற்காகவோ திரட்டப்பட்ட நிதியை, முறையான வெளிப்படையான ஒப்புதல், மறுசீரமைப்பு இல்லாமல் மற்ற பொதுவான செலவுகளுக்குப் பயன்படுத்தக் கூடாது. (எகா: மாநாட்டுச் செலவினைப் பொதுக்கணக்கில் எழுதுவது குற்றம்)
501(c)(3) வரிவிலக்கு பெற்ற ஓர் அமைப்பு, அதன் பண்பாட்டு, கல்வி நோக்கங்களிலிருந்து விலகி, ஒரு தரப்புக்கு ஆதரவளிப்பதோ அல்லது விளம்பரம், பரப்புரையில் ஈடுபடுவதோ கூடாது. (எகா: அரசியல், திரைப்பட வணிகம் முதலானவற்றுக்கு அமைப்பினர் அமைப்பினைப் பயன்படுத்துவது குற்றம்)
ஒரு நிர்வாகி எப்போது வெளிப்படைத்தன்மையைக் குறைத்து, பொதுவான உறுப்பினர்களின் குரலை நசுக்கி, தனது சொந்த அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவின் நிகழ்ச்சி நிரலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாரோ, அப்போதே அவர் தனது நம்பிக்கைப் பொறுப்புக் கடமையிலிருந்து தவறிவிடுகிறார். (எகா: கடைசி நேரத்தில் நிர்வாகிகள் அஜண்டாவைத் தனதாக்கிக் கொள்வது மாபெரும் குற்றம்)
அமைப்பு நாளுக்கு நாள் வளர்கின்றது, விரிவடைகின்றது. பேரவை என்பது மட்டுமன்று; தமிழ்ச்சங்கங்களும்தான். ஆகவே, அமெரிக்காவில் அமெரிக்கராக வாழ்வது காலத்தின் கட்டாயம். செயற்குழுவில் பங்கேற்கு முன், விழிப்புணர்வு கொள்ள வேண்டும். புகழ்போதைக்கும் தன்விளம்பரத்துக்கும் ஆசைப்பட்டு, வணிக சக்திகளுக்கும் ஆதிக்க சக்திகளுக்கும் சோரம் போதல் கூடாது. உறக்கத்தினூடே எழுப்பிக் கேட்டாலும், சட்டவிதிமுறைகளைச்(bylaws) சரியாகச் சொல்லும்படியாகப் புரிந்து வைத்திருக்க வேண்டும்.
-பழமைபேசி, 05/26/2026.