3/11/2022

delusion கானல்நீர்

எதையும் ஒரு குறுகிய பார்வையில் பார்த்தால், அது முற்றிலும் மாறுபட்ட புரிதலையே கொடுக்கும். விரிவாகப் பார்க்கப் பழகிக் கொள்ள வேண்டும்.சொல்வதைக் கூட, அப்படியப்படியே உள்வாங்கிக் கொள்ளலாகாது. அதன் பின்னணி என்ன என்பதைப் பொறுத்து அதன் பொருள் மாறுபடும். அதைத்தான் நம் பெரியோர், விசாலமான(அகலமான) பார்வை வேண்டுமெனச் சொன்னார்கள்.

ஜியோபாலிடிக்ஸ் என்றாலே, சாய்வுச் செய்திகளை உள்ளடக்கியதுதான். ஒரே பிரச்சினையை, ஒவ்வொரு நாடும் தத்தம் பார்வையில் சொல்லும். அமெரிக்காக்காரன், அமெரிக்க ஊடகங்களில் சொல்லப்பட்டதற்கொப்பப் பேசுவான். இரஷ்யாக்காரன், இரஷ்ய ஊடகங்களில் சொல்லப்பட்டதற்கொப்பப் பேசுவான். சீனாக்காரன் சீன ஊடகங்களில் சொல்லப்பட்டதற்கு ஏற்றபடிப் பேசுவான். இதற்கு மேல், அவரவருக்கு அவரவர் தாய்நாட்டின் மீதான பற்றுதலும் இருக்கும். எனவே அவரவர் பார்வை மாறுபடும். நிற்க.

அந்தந்த நாட்டு ஊடகங்களின் பேச்சுக்கொப்ப மக்கள் பேசுவர் எனப் பார்த்தோம். இங்குதான், ஒருநாட்டின் பேச்சுரிமை, கருத்துரிமை, அரசியற்தன்மை என்பது முக்கியமாகப்படுகின்றது. அமெரிக்காவில், புடினுக்கு ஆதரவாகப் பேசலாம். வீட்டிற்கு முன்பாக எந்த நாட்டுக் கொடியை வேண்டுமானாலும் நட்டு வைக்கலாம். பைடனைக் கண்டபடி ஏசலாம். https://twitter.com/TulsiGabbard/status/1497879015998197765 அரசியல் சாசனம் அந்த உரிமையைக் கொடுக்கின்றது. இரஷ்யாவிலும் சீனாவிலும் செய்ய முடியுமா?

 உக்ரைன் போர் எனச் சொன்னால் குற்றம். இரஷ்யா படையெடுப்பு என்று சொன்னால் குற்றம். சிறப்புச் சட்டம் கொண்டு வரப்படுகின்றது. 15 ஆண்டுகள் வரை சிறைவாசம். ’இராணுவ நடவடிக்கை’ என்று மட்டுமே சொல்ல முடியும். ஓவர் நைட்டில் அலிபாபாவின் ஜேக்மாக்கள் காணாமற்போகலாம். இப்போது கூட, இரஷ்ய அரசுதரப்புச் செய்திகளை மட்டுமே நுகர்ந்திருக்க என்னால் முடியும். rt.com, themoscowtimes.com இப்படிப் பலவும் நுகரக்கிடைக்கின்றன. நுகர்வதற்குத் தடையேதும் இல்லை. அதேபோல, அமெரிக்கச் செய்திகள், வலைதளங்கள் இரஷ்யாவிலும் சீனாவிலும் காணக்கிடைக்குமா? கிடைக்காது. ஏன்? சர்வாதிகாரம், இரும்புத்திரை.

அமெரிக்காவின் மீது பல விமர்சனங்கள் இருக்கலாம். விமர்சனத்திற்கு உட்படாதவர், உட்படாத நாடென எதுவும் இருக்க முடியாது. ஆனால், கண்மூடித்தனமாகப் போரில் இந்தத் தரப்பு வெற்றி, தரைமட்டம், அப்படி இப்படி என்பதெல்லாம் பத்தாம்பசலித்தனம். தோராயமாக, இருதரப்பிலும் சேர்ந்து 20,000 பேர் இதுவரை மரணம். ஒரு இறையாண்மையுள்ள நாட்டின் மீது படையெடுத்தது இரஷ்யா எனும் நாடா? இல்லை. அந்த நாட்டுமக்களின் விருப்பமல்ல. அந்த நாட்டின் தலைவன் எனும் ஒரு சர்வாதிகாரியின் முடிவு. அமெரிக்காவில் மட்டும், 35 இலட்சம் இரஷ்யநாட்டு மக்கள் வாழ்கின்றனர். அந்தப் புரிதல் இருக்கின்றபடியினாலேதான், அவர்கள் வெகு இயல்பாகத் தங்கள் வாழ்க்கையை அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

ஒரு தனிநபரின் முடிவு, அந்த நாட்டுமக்களை ஏழைகளாக்கி இருக்கின்றது. அந்த நாட்டுப் பங்குச்சந்தை மூடப்பட்டு இருக்கின்றது. நாட்டு மக்களுக்குத் தங்கள் பங்குகளை விற்றுப் பணமாக்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டிருக்கின்றது. அதேநேரம், இரஷ்யநாட்டு நிறுவனங்களின் பங்குகளின் விலை 95% பறிபோய் விட்டது. 100 ரூபிளுக்கு விற்ற பங்கின் விலை இன்று 5 ரூபிள். Russian Stocks in London Wipe Out 98% of Value in Two Weeks https://www.bloomberg.com/news/articles/2022-03-02/london-listed-russian-stocks-erase-570-billion-in-two-weeks அந்நிய நாடுகளில் இருப்பவர்கள் ஏற்கனவே விற்றுத் தீர்த்து விட்டனர். உள்நாட்டில் இருப்போருக்கு பட்டைநாமம். பெரும்பாலான நிறுவனங்கள் திவாலாகப் போகின்றன. நாடும் ஏப்ரல் மாதவாக்கில் திவாலாகி விடும். இரஷ்யநாட்டுப் பணம் அதன் மதிப்பைக் கிட்டத்தட்ட ஒன்றுமில்லாமல் இழந்து விட்டிருக்கின்றது. கடைசியில், பாதிக்கப்படுவது இரஷ்யநாட்டுச் சாமான்யர்கள்தாம். 

எண்ணிப் பாருங்கள். இரண்டு இலட்சம் வீரர்கள், உறைநிலைக் குளிரில் அந்நிய மண்ணில் இரவுபகலெனப் பாராமல் சண்டை இட்டுக் கொண்டிருக்கின்றனர். வாரக்கணக்கில், மாதக்கணக்கில் இழுத்துக் கொண்டு போய்க் கொண்டிருக்கின்றது. எதிரி வந்துவிடக் கூடாதென்பதற்காகப் பாலங்கள் எல்லாம் தகர்த்தெறிப்பட்டு விட்டன. இவர்களுக்குச் சோறு தண்ணி எங்கிருந்து வரும்? எப்படி வரும்??

அமெரிக்கா ஒன்றும் வெல்ல முடியாத நாடல்ல. போட்டியிட முடியாத நாடல்ல. ஆனால், எதனை முன்வைத்துப் போட்டியிடுகின்றோம் என்பதே முக்கியம்? சும்மாவேனும் பொறுமிக் கொண்டிருப்பதில் ஒரு பயனுமில்லை. அப்படியான பதிவுகள், உங்கள் உணர்வுகளை வைத்துக் காசாக்கும் செப்பிடுவித்தை; அதுவும் அமெரிக்காக்காரனின் யுடியூப் கொண்டேவும். இஃகிஃகி.  

இது உலகமயமாக்கல் யுகம். உற்பத்தி பெருகினால், வலுக்கூடும். உற்பத்தி பெருக வேண்டுமானால், பெண்களும் வேலைக்குச் செல்ல வேண்டும். சட்டம் ஒழுங்கு மேம்பட்டால், உள்ளூர் நிறுவனங்கள் பெருக்கெடுக்கும். சட்டம் ஒழுங்கு மேம்பட வேண்டுமானால், தனிமனிதர்கள் சிறக்க வேண்டும்.


No comments: