3/19/2022

திடம்

 

ஆங்கிலத்தில் ஒரு சொல் உண்டு, Robust. தமிழில் திடமான, வலுவான எனப் பொருள் கொள்ளலாம். கம்ப்யூட்டர் துறையில், குறிப்பாக மென்பொருள் கட்டுமானத்தில் அடிக்கடி இந்த சொல் பயன்படுத்துவதைக் காணலாம். அதாவது, எந்தவொரு அப்ளிகேசனைப் பயன்படுத்தும் போதும், அதன் செக்யூரிட்டி முக்கியம். அல்லாவிடில், களவாளிகள் உட்புகுந்து தகவல்களைத் திருடிச் செல்லலாம்; அப்ளிகேசனை, ஏன் நிறுவனத்தையே கூட முடக்கலாம். அது நிகழாதவண்ணம் இருக்க வேண்டும். எந்தநேரத்திலும், பயனீட்டாளர்களின் எண்ணிக்கை திடீரென உயரக்கூடும். அப்படி உயரும் போது, அத்தனை பேருக்கும் சேவையளிக்கக் கூடிய வகையில் அது தாங்கி நிற்க வேண்டும். எந்த நேரத்திலும் சேவையின் அளவு அதிகரிக்கக்கூடிய தேவை வரலாம். அந்தவகையில் அது தாங்கக்கூடியதாக இருக்க வேண்டும். சேவையின் தரமும் நிலைத்திருக்க வேண்டும். சேவையின் பரப்பளவு, பலமாநிலங்களுக்கும் பலநாடுகளுக்கும் விரிந்து கொண்டேயிருக்க வேண்டும். தங்குதடையற்ற சேவையாக இருக்க வேண்டும். இப்படிப் பல பரிமானத்திலும், தாங்கி நிறகக்கூடியதாக இருத்தலைத்தான் திடமான அமைப்பு, robust system என்கின்றோம்.

அமெரிக்காவின் ஜனநாயக அமைப்பு திடமானதா? அவ்வப்போது விமர்சனங்கள் எழும். அதிகாரம் ஓரிடத்தில் குவிந்திருக்கக் கூடாது. தன்னாட்சி மிக்க படிநிலைகள் இருக்க வேண்டும். மக்களின் பங்களிப்பால் பொறுப்புகள் கையாளப்பட வேண்டும். மக்களின் நேரடி பங்களிப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் தேர்தல்கள் இடம் பெற வேண்டும். அந்தத் தேர்தல்கள், சட்டத்தின்பாற்பட்டு நியாயமான முறையில் இடம் பெற வேண்டும். இவையெல்லாமும் அதனதன் கிரமத்தில் செவ்வனே இயங்கினால்தான் அது திடமானதாகக் கருதப்படும். டிரம்ப், இத்தனையையும் உடைத்து முன்னேற எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொண்டார். முடியவில்லை. ரோபஸ்ட்னஸ் ஸ்ட்ரஸ் டெஸ்ட்டில், சோதனையில் அமெரிக்காவின் டெமாக்ரசி எளிதில் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்புகள் இடம் பெற்றன.

நாட்டுக்கு, நிறுவனங்களுக்கு, தனிமனிதனுக்கு என எல்லா இடத்திலும் திடம் என்பது அவசியம். அதனைச் சோதிப்பதற்கான வழி என்ன? மாற்றுக்கருத்துகளும் விமர்சனங்களும்.

ஒரு புராடக்ட். ஒரு கட்டுரை. ஏன் இந்தக் கட்டுரை என்பதாகக் கூட வைத்துக் கொள்ளலாம். கட்டுரையாளர் தன் எண்ணங்களை, சிந்தனைகளை, தகவல்களைக் கொண்டு கட்டுரையை எழுதுகின்றார். படிப்பவர்கள், கட்டுரையாளனை மனத்தில் கொண்டு, ஊக்கமளிக்கும் பொருட்டும் ஆதரவளிக்கும் பொருட்டும், பாராட்டுதல்களையும் நன்றிகளையும் சொல்லிச் செல்கின்றனர். என்ன ஆகும்? காலப்போக்கில், திடமற்ற ஒருநிலையையே அது அடையும். மாறாக, படிப்பவர்கள் வினாக்களைத் தொடுக்கின்றனர். மாற்றுக்கருத்துகளை வைக்கின்றனர். என்ன ஆகும்? கட்டுரையானது மென்மேலும் வலுப்பெறும். முழுமையை நோக்கி நகரும். கட்டுரையாளன் அடுத்த பதிப்பில் அவற்றையெல்லாம் செம்மைப்படுத்துவார். ரோபஸ்ட் ஸ்ட்ரஸ் டெஸ்ட்டில் பாஸ் ஆகும்.

மாற்றுக்கருத்துகள் மனிதனை முழுமையாக்கும். படைப்பின் உட்பொருளை நோக்கியே பார்வை இருக்க வேண்டும்; படைப்பாளனை நோக்கியதாக இருக்கக் கூடாது. விமர்சகர்கள் கொண்டாடப்பட வேண்டும். வசைக்கு ஆட்படக் கூடாது.

நிதி அமைச்சர் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்கின்றார். அதன் சாரங்களைச் சாமான்யன் அறிந்து கொள்ள முற்பட வேண்டும். சமூகத்துக்குப் பயனளிக்கக் கூடியதுதானா? தேவையானதுதானா? சரியானதுதானா? நோக்கத்தில் பிழை இருக்கின்றதா? இதெல்லாமும் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும். அப்போதுதான் மாநில நிர்வாகம் ரோபஸ்ட்னஸாக இருக்கும். நாம் என்ன செய்கின்றோம்? மூன்று மணி நேரப் பேச்சில், எங்கெல்லாம் அவரது உச்சரிப்புக் குளறுபடியாகின்றதோ, அந்தக் காட்சிகளையெல்லாம் தொகுத்து ஒருசில நிமிடக் காணொலியாக்கி, அதைப் பார்த்துக் கேலியும் கிண்டலுமாகப் பொழுதைக் கழிக்கின்றோம். அமெரிக்கா வல்லரசுத்தன்மையை இழப்பதற்குக் கனவுகாணும் நாம், நம் ஜனநாயகத்தைத் திடமாக்குகின்றோமா?!


No comments: