3/03/2022

கருத்துரிமை

கருத்துரிமை என்பது அடிக்கடி சர்ச்சைக்குள்ளாகும் ஒரு விசயம். ஏன்? அதன் வரையறை ஆளுக்காள் மாறுபடுவதுதான். ஒருவர் பார்வையில் சரியாக இருக்கும். இன்னொருவர் பார்வையில் தவறாக இருக்கும். இதற்கு அடுத்த கட்டம், கொடுத்த சலுகையைப் பயன்படுத்திக் கொண்டு, பயங்கரவாதச் செயல்களுக்குப் பாவிப்பது. 2012 துவக்கம், அமெரிக்காவில் ஃபேக்நியூஸ் என்பது பெருவேகம் கொண்டு கொடிகட்டிப் பறந்தது. காரணம் டிரம்ப். நாடாளுமன்றத் தாக்குதலுக்குப் பின்னர், எல்லா சோசியல் மீடியா பிளாட்பார்ம்களில் இருந்தும் கழட்டி விடப்பட்டார். 

இரஷ்யாவில், தனியார் ஊடகங்களுக்கு இடமில்லை. அரசாங்க ஊடகங்களுக்கு மட்டுமே இடம். அத்தகைய ஊடகங்களையும் அமெரிக்காவில் இருக்கின்ற சோசியல் மீடியா பிளாட்பார்ம்கள் தடைசெய்யவில்லை. ஆனால், உக்ரைன் குறித்து அப்பட்டமான ஃபேக்நியூஸ்கள் எனும் வகையில், அரசாங்கத்தின் ஆணைக்கிணங்க மட்டுப்படுத்தித்தான் வைத்திருக்கின்றன. தோதாக, அமெரிக்காவின் இப்படிப்பட்ட முன்னெடுப்புகளைக் குறைகூறுவோர், இரஷ்யாவின் கருத்துரிமை நசுக்கலைப் பற்றிப் பேசுவதே இல்லை. இரும்புத்திரை கொண்டு தன் நாட்டுமக்களைப் பிரித்து வைத்திருக்கும் சர்வாதிகாரியைப் பற்றியும் பேசுவதில்லை. மாறாக, ஃபேசுபுக்/வாட்சாப் போன்றவற்றுக்கு மாற்று என வெட்டிப்பேச்சுப் பேசுகின்றனர். இப்படித்தான், வாட்சாப் பிரைவசி பாலிசிகள் நிமித்தம் எல்லாரும் டெலிகிராம் எனும் பிளாட்பார்ம்க்கு சென்றனர். சென்ற வேகத்தில், வாட்சாப்புக்கே திரும்பினர். என்ன காரணம்? மென்பொருள் வடிவமைப்பு, பயன்படுத்துவதில் இலகுதன்மை போன்றவைதாம். நிற்க. இப்போது டெலிகிராம் பற்றிப் பேசுவோம்.

டெலிகிராம் என்பது இரஷ்யர்களால் உருவாக்கப்பட்டு, இன்றளவும் இரஷ்யாவின் முக்கிய தளமாக இருந்து வருகின்றது. பேசுபுக் என்பதற்கு மாற்றாக விகே எனும் தளம், அதுவும், இரஷ்யாவின் முக்கிய தளமாக இருந்து வருகின்றது. அதை உருவாக்கியவர் யார்? Pavel Durov. புடின் அவர்களுடைய சொந்த ஊரான செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரைச் சார்ந்தவர். தன் 21ஆவது வயதில், விகே எனும் நிறுவனத்தைக் கட்டமைத்து ஃபேசுபுக்கிற்கு இணையாக விகே எனும் தளத்தை உருவாக்கினார். மிகவும் பிரபலமானது.

இரஷ்யநாட்டு எதிர்க்கட்சித் தலைவருக்கான பக்கமும் அதில் இயங்கி வந்தது. அந்த பக்கத்தை முடக்கி வைக்க வேண்டுமென ஆணையிடப்பட்டது. உரிய காரணங்களின்றி முடக்க முடியாதென்றார் பேவல். மேலும், தனக்கு வந்த கடிதத்தை வெளியிட்டுப் பகிரங்கப்படுத்தினார். இது கண்டு, இவர்களின் புகழ் மேலும் ஓங்கத் துவங்கியது. அதே காலகட்டத்தில் டெலிகிராம் எனும் மெசஞ்சரையும் கட்டமைத்து, அதுவும் பிரபலமானது. 2010 துவங்கி, 2013 வரையிலும், சமூக ஊடங்களினால் ஏற்பட்ட புரட்சி உலகை உலுக்கியது. அதன் நீட்சியாக, உக்ரைன்,இரஷ்யாவிலும் இளைஞர்கள், தத்தம் அரசுகளுக்கெதிராக சமூக வலைதளங்களில் தகித்தனர். குறிப்பாக, உக்ரைனில் இரஷ்ய ஆதரவு பிரசிடெண்ட்டுக்கு எதிராக எழுதுவோர் கணக்கு வழக்குகளைத் தம்மிடம் ஒப்படைக்குமாறும், பரிமாறப்பட்ட தகவல்களை டிகிரிப்ட் செய்துதருமாறும் இரஷ்யத்தரப்பின் கண்கள் கனன்றன. பாவெல் மசியவில்லை. அவரை, அவரின் நிறுவனங்களில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் துவங்கின. ஒருகட்டத்தில், நாட்டை விட்டு வெளியேறுவதாகச் சொல்லி, பிரான்சு நாட்டுக் குடிமகனாகிவிட்டார் பாவெல். படிப்படியாக புடினின் ஆட்கள் நிறுவனைத்தைக் கைப்பற்றிக் கொண்டனர். It is better for Durov to lose 50 percent of 10 million users in Russia than to lose the entire world with its potential billions.

பாவெல் வெளியேறியதைக் கண்டு, ஏராளமான இளம் தொழில்முனைவோரும் இரஷ்யாவை விட்டு வெளியேறினர். ஏனென்றால், தம் கண்டுபிடிப்புகள் வெற்றி பெறவேண்டுமானால் அது உலகத்தைச் சென்று சேர வேண்டும். குளோபல் சிட்டிசனாக இருக்க வேண்டும். இரும்புத்திரைக்குள் உழன்று கொண்டிருந்தால், குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டிருக்க வேண்டியதுதான். எல்லாமே, இருப்பதில் எது பெஸ்ட் என்பதுதான்.  அமெரிக்கா ஒன்றும், பெர்ஃபெக்ட் இல்லைதான். ஆனால், freedom of expression என்பதில் உலகத்தின் தலைவன்.

சீனாவின் கதை இன்னும் விநோதமானது. தம் நாட்டு மக்கள், வெளிநாட்டு மக்களுடன் தொடர்பில் இருக்கக் கூடாது. அதே போல, தம்நாட்டு விசயங்கள் வெளியுலகுக்குத் தெரியக்கூடாதென்பதற்கான இரும்புத்திரை. இப்படியான நாடுகளை நம்பி, அவர்கள் கட்டமைக்கும் நெட்வொர்க்குக்குள் அந்தந்த நாட்டு மக்கள் வருவரா? மக்களிடம், நம்பகத்தன்மை பெறுவதும், மனிதநேயம் போற்றுவதும் முதன்மை. முதலில் அவை நிலைநாட்டப்படட்டும். மக்கள் விடுதலை பெறட்டும்!! அதுவரையிலும், அமெரிக்கா குறித்தான கூச்சல்கள் இளைப்பாரலாம்.


No comments: