3/14/2022

உக்ரைன் போர், 19ஆம் நாளை நோக்கி

இருபக்கமும் பலத்த உயிரிழப்புகள். யார் வெற்றி, தோல்வி எனக் கணக்குப் போடுவதற்கான நேரமல்ல. ஓர் உயிர் என்றாலும், அது வாழப்பிறந்த உயிர்தானே? யாரோ சிலர் எடுக்கும் முடிவுகளுக்காக பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாவது சகித்துக் கொள்ள முடியாதவொன்று.

இரஷ்யா, நேட்டோ இருதரப்பும்தான் இதற்குப் பொறுப்பு. பரமபத விளையாட்டின் நகர்வுகளை ஒரு பார்வையாளனாகப் பார்க்கின்றோம். அது தவிர்க்க முடியாதது.

இப்படியான போர் வரும், நமது நகர்வுகள் இப்படித்தான் இருக்க வேண்டுமென அங்குலம் அங்குலமாகத் திட்டமிட்டுக் கொண்டதில் மேற்குலக நாடுகள் முன்னணி வகிக்கின்றன. எப்படி? ஒவ்வொரு துறையிலும், சொல்லி வைத்தாற்போல தடைகள் உடனடியாக அமுலுக்கு வருகின்றன. நினைத்தால் அணைப்பதற்கு இது ஒன்றும் நம் படுக்கறை விளக்கின் சுவிட்ச் அல்லவே? அணைப்பதற்கும், நிறைய வேலைகள் தேவைப்படும். ஒருநாளில் செய்யக்கூடிய காரியமல்ல அது. ஆனால் இவர்கள் செய்கின்றனர். ஆகவே, முன்கூட்டிய திட்டமிடல் இருந்திருக்கின்றது எனக் கருதவேண்டி உள்ளது. 

இரஷ்யாவைப் பொறுத்த வரையில், முன்னுக்கும் செல்லமுடியாமல் பின்வாங்கவும் முடியாமல் சிக்குண்டு கிடக்கின்றதென்றே சொல்லலாம். ஏன்? முதல்வாரத்தில் பிடித்த இடங்கள்தாம். அதற்குப் பிறகு சொல்லிக் கொள்ளும்படியான தரைவழி முன்னேற்றம் இல்லை. மாறாக, ஏவுகணை வீச்சுகளால் சேதத்தை உண்டு செய்து வருகின்றது. அதில் உக்ரைன் தரப்பில் பலத்த உயிர்ச்சேதம். எத்தனை நாளைக்கு இது நீடிக்கும்?

இரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சரே சொன்னது இது, ”எங்களது பணம் 650 பில்லியன் டாலரில் 300-350 பில்லியன் மேற்குலக நாடுகளிடம் சிக்குண்டு போய்விட்டது. எஞ்சியது தங்கமாகவும், சீனப்பணமாகவும் உள்ளது”. இந்த சீனப்பணத்தை டாலராக மாற்ற முடியாது. ஏனென்றால், வங்கிப் பரிவர்த்தனைக்குள் வந்தால் இரஷ்யப் பணம் மீண்டும் சிக்குண்டு போய்விடும். சீனப்பணமாக மற்ற நாடுகளுடன் வணிகம் செய்யலாம் அல்லது தன் பணமான ரூபிளுக்கு மாற்றிக் கொள்ளலாம். 

ஒருநாள் போருக்கு இரஷ்யாவுக்கு ஆகும் செலவு 20 பில்லியன் டாலர்கள் என்கின்றது உலகவங்கி. நாம் 10 பில்லியன் டாலர்கள் என்றேவும் வைத்துக் கொள்வோம். எஞ்சிய பணமான 300 பில்லியன் டாலர்களில், நாளைக்கு பத்து பில்லியன் என்றால், இன்னும் 30 நாட்கள் வரை நீடிக்கலாம் எனக் கணக்குப் போடுவதா தெரியாது. இதேவேளையில், எதிர்வரும் புதன்கிழமை, 117 மில்லியன் டாலர்கள் தவணைத் தொகை கட்ட வேண்டி உள்ளது. அதை இரஷ்யாவால் திருப்பிச் செலுத்த முடியாமற்போவதற்கான வாய்ப்புகள் இல்லாமலில்லை என்கின்றார் உலக நிதி ஆளுநர் அவர்கள். https://fortune.com/2022/03/14/russia-sovereign-debt-default-imf-kristalina-georgieva-bonds/

இதற்கிடையே, நாட்டில் இருக்கும் சுயசார்புத் தொழில்கள் முற்றாக முடங்கிப் போய்விட்டன; இன்ஸ்டகிராம் முடக்கத்தால் மட்டுமே 8 கோடிப் பேர் பாதிப்புக்குள்ளாவர் என்கின்றது நியூஸ்வீக் நாளேடு. 

இளைஞர்கள், இரஷ்யாவை விட்டு வெளியேறுவதும் இடம் பெற்று வருகின்றது. பக்கத்து நாடான, ஜியார்ஜ்யாவுக்குச் செல்பவர்கள் அங்கே வங்கிக் கணக்கு துவங்குகின்றனர். துவக்கும் போது வைக்கப்படுகின்ற நிபந்தன, “நான் உக்ரைன் போருக்கு எதிரானவன்” என உறுதிமொழிச் சான்று கொடுக்க வேண்டும். கொடுத்துத்தான் அவர்கள் அங்கே வாழத் தலைப்படுகின்றனர்.

https://www.consultancy.eu/news/7433/research-ukraine-war-costs-russian-military-20-billion-per-day

https://fortune.com/2022/03/03/russia-sanctions-central-bank-ruble-us-eu-foreign-reserves/
No comments: