3/12/2022

உக்ரைன் வான்வெளி ஆதிக்கம் யார் கையில்?

வெளியாகும் செய்திகளை வைத்து நாம் ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது. ஆனால், இடம் பெற்ற நகர்வுகளைக் கொண்டு சிலவற்றை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். அதற்கு, அதுகுறித்த விரிவான பார்வை நமக்கிருத்தல் வேண்டும். சில அடிப்படை விபரங்கள் தெரிந்திருக்கப்பட வேண்டும்.

வட வியட்நாம் கம்யூனிச ஆட்சி. தென் வியட்நாம் ஜனநாயக ஆட்சி. இருபிரிவுகளுக்கும் இடையேயான பிணக்கில், தென் வியட்நாமுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்குகின்றது. வான்படைகள் தோற்றுப் போகின்றன. வான்வெளியில் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. அந்த காலகட்டத்தில், வான்படைத் தடுப்பு அழிப்பு எனும் தொழில்நுட்பம் இருந்திருக்கவில்லை. அதற்குப் பிறகு படிப்படியாக பரிணாமம் பெற்று அமைந்ததுதான் சீட்/டீட் எனப்படும் வான்படைத் தடுப்பு அழிப்பு தொழில்நுட்பம் (Suppression of Enemy Air Defenses (SEAD)/Destruction of Enemy Air Defenses (DEAD)). சீட்/டீட் என்பது ஒரு கட்டமைப்ப்ய், ஃப்ரேம்வொர்க். அந்தக் கட்டமைப்புக்கள் பல பாகங்கள் இடம் பெற்றுள்ளன.

Radar: மின்காந்த அலைகளை வெகுதொலைவுக்கு வெளிப்படுத்தும்(radiation). அந்த அலைகளுக்குக் குறுக்கே வரும் பொருட்களைத்(மேகம், வான்கலம்) துல்லியமாக அளந்து, அதன் உருவைக்கூட வெளிப்படுத்தும்.

Surface-to-air missiles (SAMs): நிலப்பரப்பிலிருந்து ஏவப்படக் கூடிய ஏவுகணைகள்

anti-aircraft artillery (AAA): வானூர்திகளைக் குறிவைத்துத் தாக்கக்கூடிய பீரங்கிகள்

command, control and communication (C3): வான்வெளியில் இருப்பனவற்றைக் குறித்த தகவற்பரிமாற்றமும், ஏவுதலைக் கட்டுப்படுத்துதலும்

ground-controlled interception (GCI): வான்வெளியில் வருவனவற்றை (ஏவுகணை, வான்கலம்)த் தடுத்தழிப்பது அல்லது செயலிழக்கச் செய்வது.

electronic-warfare aircraft (EWA): தடுத்தழிக்காமல், தொலைவிலிருந்தேவும் மேற்கூறியவற்றின் மின்னணுக்கருவிகளைக் கரப்ட் செய்து செயலிழக்கச் செய்யும் சாதனங்களைக் கொண்ட விமானம்.

anti-radiation missiles (ARMs): ரேடாரிலிருந்து வெளிப்படும் மின்காந்த அலைகளைக் கொண்டே அவற்றின் இருப்பிடமறிந்து தாக்கியழிக்கும் ஏவுகணை

ballistic missiles: எரிபொருள் வெடிப்பதன்மூலம்(ராக்கட்) சக்தியுற்று வேகமெடுத்து, பிற்பாதியில் அதுவாக வந்து விழும் ஏவுகணை

cruise missiles: எந்தப் பாதையில் செல்லவேண்டுமென்கின்ற சக்தியுடன்கூடியதும் கடைசி வரையிலும் கட்டுப்பாடு கொண்டதுமான ஏவுகணை

Stinger missile: கைகளில் எடுத்துச் செல்லக்கூடிய கையேவுகணைகள்

பிப்ரவரி 24ஆம் நாள், இரஷ்யா தன் ஆக்கிரமிப்புப் பணியினை தோராயமாக 100 பாலஸ்டிக்/குரூஸ் ஏவுகணைகளை உக்ரைனின் இராணுவத்தளங்களின் மீது ஏவியதன் மூலம் முன்னெடுத்தது. இவையெல்லாமுமே, ஏற்கனவே தெரியப்பட்ட இராணுவநிலைகள். நகரக்கூடியன அல்ல. எனவே எல்லாமுமே துல்லியமாகச் சென்று தாக்கின. இருந்தாலும் கூட, எண்ணிக்கையில் மிகவும் குறைவு. கூடவே தரைவழியாக, உக்ரைனின் தென்பகுதியிலிருக்கும் கிரேமியா, வடபகுதியில் இருக்கும் பெலருசியாப் பகுதியில் இருந்து தரைப்படைகள் தன் நகர்வைத் துவக்கின. அவர்களுக்குத் துணையாகப் பறந்த விமானங்கள் தாக்குதலை எதிர்கொண்டன. வீழ்த்தப்பட்ட விமானங்கள், பீரங்கிகள் ஆங்காங்கே கிடப்பதை உக்ரைன் தரப்பு சோசியல் மீடியாக்களில் பகிர்ந்தது. அதற்குக் காரணம், இரஷ்யத் தரப்பு எவ்விதமான சீட்/டீட் பணிகளை மேற்கொள்ளாதது அல்லது மேற்கொள்ள முடியாமல் உக்ரைன் தரப்பு வியூகம் வகுத்துக் கொண்டதெனலாம். எப்படி செய்ய முடியும்?

தனது ரேடார்களை அணைத்து வைப்பதன் மூலம், ஏஆர்எம்(anti-radiation missiles)களுக்கு இலக்கில்லாமல் ஆக்குவது. அதன்காரணம், ரேடார்கள் இல்லை அல்லது தடுக்கும் மெக்கானிசம் இல்லையென்கின்ற மனப்பான்மையில் வெளிப்படும் விமானங்களை, நேட்டோ தரப்பு ரேடார் தகவல் உதவியுடன் AAA அல்லது ஸ்டிங்கர் ஏவுகணைகள் மூலம் தடுத்தழிக்கும் வேலைகளில் இறங்கின உக்ரைன் தரப்பு. எனினும் பல்வேறு இடங்களுக்கும் சென்று வந்தன இரஷ்ய விமானங்கள். பிப்ரவரி 28ஆம் நாள், உக்ரைன்பகுதியின் ஒட்டுமொத்த வான்வெளியும் தன் கட்டுப்பாட்டுக்குள் வந்ததாக அறிவித்தது இரஷ்யா.

மார்ச் முதல் வாரத்தில், உக்ரைனின் ஹெலிகாப்டர்கள் ஆங்காங்கே சென்று வந்தன. உக்ரைன் தரப்பிடம் இருக்கும், துருக்கியில் இருந்து வாங்கப்பட்ட ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) ப்லவும் சென்று இரஷ்யத்தரப்பு பீரங்கிகளையும் படைவீரர்களையும் வாகனங்களையும் தாக்கி ஒழித்தது. இதன் காரணம், இரஷ்யாவின் கூற்று உண்மை அல்ல என்பதும், உக்ரைன் தரப்புக்கும் வான்வெளி ஆதிக்கம் இருப்பதென்பது தெரிய வருகின்றது. கூடவே, நிலப்பரப்பில் இருந்து ஏவப்படக் கூடிய SAMகளும் சிலமுறை பயன்படுத்தப்பட்டு ஓரிரு இரஷ்ய விமானங்கள் தாக்கப்பட்டு, அதன் விமானிகள் சிறைபிடிக்கப்பட்டனர். மார்ச் ஏழாம் நாள், உக்ரைன் வான்வெளி சமபலத்துடன் விளங்குவதாக அமெரிக்காவின் பெண்டகன் தலைமையகம் அறிவித்தது. நேட்டோவிடம் இருந்து கிடைக்கப்பெற்ற ஸ்டிங்கர்களுடன், சோவியத் அரசில் இருந்து கிடைக்கப்பெற்ற பல AAA, SAM, C3 ஆகியன இன்னமும் உக்ரைன் தரப்பிடம் இருப்பதாகக் கருதப்படுகின்றது. கூடவே, அண்மையிலிருக்கும் நேட்டோ நாடுகளிலிருந்து, ரேடார் தகவல்கள் உடனுக்குடன் உக்ரைன் தரப்புடன் பகிரப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகின்றது.

நிலைமையை உணர்ந்த இரஷ்யா, முன்கள விமானத்தை அனுப்பியது. அதனைக் கண்டவுடன், எந்தப்பக்கமிருந்து தடுப்பு ஏவுகணை வருகின்றனவோ அவற்றைக் குறி வைத்து பின்னால் வரும் இரண்டாவது விமானத்தால் தாக்கியழிக்கும் வேலைகளைச் செய்யத் துவங்கியது. ஆனால் அதில் சில முறை வெற்றியும், சில முறை தோல்வியும் ஏற்பட்டது. இதை ஏற்கனவே எதிர்பார்த்திருந்த உக்ரைன் தரப்பு, இரவுண்ட் ராபின் முறையில் எதிர்ப்பு ஏவுகணைகளைச் செலுத்தத் துவங்கின. அதாவது முதல் முறை ஓரிடம் என்றால், இரண்டாவது முறை வேறொரு இடம். இப்படிச் செய்கின்றபோது, இரண்டாவதாக வரும் விமானமும் தாக்குதலுக்கு உண்டானது.

உக்ரைன் தரப்பு, தன் விமானங்களைப் பெரிதாக வெளியே எடுப்பதில்லை. காரணம், பெலருசியா, இரஷ்யாவில் நிறுத்தப்பட்டிருக்கும் S-400 தடுப்பு ஏவுகணைகள் தம் தரப்பு விமானங்களைப் பதம் பார்த்துவிடுமென்கின்ற காரணத்தால். குறுகிய தொலைவுத் தாக்குதலுக்கு மட்டும், தானியங்கி விமானங்களைப் பயன்படுத்தி வருகின்றது உக்ரைன். தற்போதைக்கு, நேட்டோ ரேடார்களில் சிக்காதவண்ணம் தாழ்வாகப் பறந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றது இரஷ்யா. அதிலும் சில ரிஸ்க்குகள் உண்டு என்றாலும், ஓரளவுக்குச் சேதங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டதெனச் சொல்லலாம்.

இந்தநிலையில்தான், நோ ஃப்ளை சோன்(no fly zone) அறிவிக்கப்பட வேண்டுமென்கின்ற குரல்களும் ஒலிக்கத் துவங்கி இருக்கின்றன. ஆனால் அதற்கு சாத்தியமில்லை. அறிவிக்கப்பட்ட பின்னர், இரஷ்ய விமானம் அத்துமீறி நுழைகின்றது. நேட்டோ குறுக்கிட வேண்டும். நேட்டோ குறுக்கிட்டால், பெலருசியா/இரஷ்யாவில் இருக்கும் S-400 தடுப்பு ஏவுகணைகள் பாயும். அவற்றைத் தடுக்க வேண்டுமானால், பெலாரஸ்/இரஷ்யா மண்ணில் தாக்குதல் நடத்தப்பட வேண்டும். அது, உலகப் போருக்கு இட்டுச் செல்லும். ஏன், அணு ஆயுதப் போருக்கேவும் இட்டுச் செல்லும்.

அடுத்து என்ன நடக்கும்? இரஷ்யா, படிப்படியாக பல நகரங்களையும் சுற்றி வளைக்கத் துவங்கி விட்டது. ஆனாலும் ஒப்பீட்டளவில், வான்வெளி ஆதிக்கம் குறைவேயென்கின்றனர். இடைப்பட்ட நேரத்தில், எப்படியான எதிர்ப்பு ஏவுகணைகள் உக்ரைன் வந்து சேருமெனத் தெரியவில்லை. நேட்டோ நாடுகளில் இருக்கும் இரஷ்யாவின் ஒரே ஒரு S-400 எதிர்ப்பு ஏவுகணை பேட்டரியானது வந்துவிட்டாலும் கூட, இரஷ்யாவின் வான்வெளித்தாக்குதல் படுத்துவிடும். மாறாக, இரஷ்யா இன்னமும் தன் அதிநவீன, உயர்ரக விமானங்களைப் பயன்படுத்தவில்லை. அவற்றைப் பயன்படுத்தத் துவங்கிவிட்டால்?


No comments: