7/10/2011

இனிமைத் தமிழ்மொழி

வாழ்வில் எப்போதும் இன்புற்றிருக்க முடிகிறதா? என்னதான் நாம் அகம் காத்து இனிமை போற்றினாலும் கூட, அவ்வப்போது வேண்டாத அல்லனவை நம்மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தத்தான் செய்கிறது. அப்படித்தான் யானும் ஏதோ ஒரு காரணத்தால் அகத்தாக்குதலுக்கு ஆட்பட்டு இருந்த வேளையது.

“இந்தாங்க, இதுல இருக்குற பாடல்களைக் கேளுங்க.. எல்லாம் தெளியும்” எனச் சொல்லி நகர்ந்தாள். மனையாள் சொல்லி, அதற்கு உடனே செவிமடுத்தால் என்னாவது?! கிருதா எகிறியது. சிறிது நேரங்கழித்தே அவள் கொடுத்த குறுவட்டுப் பேழையை அவதானிக்கலானேன்.

இனிமைத் தமிழிமொழி எனும் முகப்பு மொழியுடன் கூடிய அழகான அட்டைப்படக் காட்சியானது எம்முள் ஒருவித மலர்ச்சியை உண்டு செய்தது. பேழையின் பின்பக்கத்தை நோக்கினேன். இன்ப அதிர்ச்சியில் மெய்மறந்தேன்.

ஆம், வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் இலச்சினை இருப்பதன் மூலம், இக்குறுவட்டானது பேரவையின் விழாவில் கையளிக்கப்பட்டிருக்கிறது எனத் தெரியவருகிறது. திருவிழாவின் போழ்து, மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, இணைய வர்ணனை அளிப்பது, இணையரங்குகளில் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது, விருந்தினரைக் கவனிப்பது என அங்குமிங்குமாய் இருந்தநிலையில் இக்குறுவட்டினைக் கவனிக்க இயலாது போய்விட்டிருக்கிறது போலும்.

பேழையைத் திறந்ததும், அதனுள் கையடக்க குறுநூல் ஒன்று சொருகப்பட்டு இருக்கக் கண்டேன். தரம்மிகு, நயம்மிகு நூலது. உள்ளீடாக, தெளிதமிழில் தமிழிசைத் தேனமுதத்திற்கான முன்னுரை. அதைத் தொடர்ந்து முத்தான தமிழ்ப் பாடல்கள் பத்து.

ஒவ்வொரு பாடலுக்கும் அமிழ்தாய்த் தலைப்பு, இணைப்புரை, தீந்தமிழ்ப்பாடல், ஆங்கிலத்தில் சுருக்கவுரை என மிக நேர்த்தியாக தொகுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு பாடற்பகுதியையும் ஓரிரு முறை மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன். பிறகு பதினைந்தாம் இலக்கம் இட்ட பகுதிக்குள் வாசிப்பின் மூலம் நுழைகிறேன்.

மீண்டும் பேரின்ப அதிர்ச்சி எம்முள். இந்த அரிய படைப்பினை நமக்களித்திருப்பது கெழுமைமிகு நண்பர் பொற்செழியன் அவர்கள் எனத் தெரிய வருகிறது. உற்சாகமிகுதியுடன் குறுவட்டினைக் கணினியில் இட்டு இசைக்கச் செய்கிறேன்.

சென்ற ஆண்டு தமிழ்விழாவில் கேட்டு இன்புற்ற அதே குரல். அறவாழி இராமசாமி அய்யா அவர்களின் தமிழ்வீச்சு தேனாய்ப் பாய்கிறது. முன்னுரை கேட்ட ஒரு மணித்துளியில், இயற்கையைச் சிலாகித்தபடியே இணைப்புரை. கேட்ட தெளிதமிழில் சொக்கிப் போகிறேன்.

ஈரோடிலிருந்து கிட்டத்தட்ட எட்டு கல் தொலைவில் இருக்கும் திருநணா(கூடுதுறை)வில் இருக்கும் காயத்திரிமடுவின் அண்மையில், அந்த படித்துறையில் நின்று நோக்கின் பொன்னியானவள் எழிலாய் ஒருபக்கம் வளைந்து நெளிந்து வருவாள். மறுபக்கம் பார்த்தால், பவானி ஒயிலாய் வந்து உடன் சேர்வாள். நிலத்தடியில் இருந்து அமுதநதி சுரந்து வந்து பொன்னியோடு கலப்பாள். பார்க்கப் பார்க்க பரவசமாய் இருக்கும். கொங்குக்கு அமைந்த ஒரு சிறப்பு அது.

அதைப் போல எம் தமிழும், இன்னிசையேந்தல் திருபுவனம் ஆத்மநாதன் அவர்களது இசையும், நம்மவர்கள் அமுதயாழினி, நம்பி பொற்செழியன் குரலும் முக்கூடலாய்க் கலந்து கற்கண்டொடு கலந்த தேனாய்ப் பாய்கிறது நம் செவியுள். ஞாயிறு, திங்கள், மாமழை, பூம்புகார் என இயற்கையின் கூறுகளான நீர், நெருப்பு, காற்று, மண் முதலானவற்றைப் போற்றிப் பாடும் செந்தமிழ்ப்பாடல் ஒன்று. மெய்மறந்தேன். செந்தமிழால் தேனிசைக் கடலில் முக்கிக் குளித்தவனாயினேன்.

ஐந்து பாடல்களைக் கேட்டு முடிக்கும் வரையில், என்னைச் சுற்றி நடப்பது யாதொன்றும் யானறிந்திருக்கவில்லை. மெல்ல என்நிலை அறிந்தேன். செய்த முதற்செயல், அன்பர் பொற்செழியனை அழைத்துப் பாராட்டியதுதான். மனதாரப் பாராட்டி உவப்பெய்தினேன்.

எஞ்சிய பாடல்களையும் பலமுறை கேட்டு மகிழ்ந்தேன். அனைத்துமே முத்தான பாடல்கள். அகத்திற்குச் சுகமும், சிந்தனைக்கு விருந்துமாய் அமைந்திருக்கின்றன. அதன் தாக்கத்தில் இருந்து விடுபட நெடுநேரமானது. அவர்களுடைய அனுமதியின்றியே ஒருபாடலை வலையேற்றி இருக்கிறேன். ஆர்வமிகுதியால் நேர்ந்த அத்துமீறலை நண்பர் பொற்செழியன் ஏற்றுக்கொள்வார் எனும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இதோ அந்தப் பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள்.
நண்பர் பொற்செழியன், இன்னிசையேந்தல் திருபுவனம் ஆத்மநாதன், பாடகர்கள் அமுதயாழினி மற்றும் நம்பி பொற்செழியன், வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை உள்ளிட்ட அனைவருக்கும் நன்றிகள் உரித்தாகட்டும்.

எனக்கு இன்னும் சில படிகள் வேண்டுமென யாத்திருக்கிறேன். வாழ்க தமிழ்! வளர்க அவர்தம் தொண்டு!!

10 comments:

naanjil said...

தம்பி மணி

மிக்க நன்றி. நல்லதொரு தகவல் அளித்திருக்கிறீர்கள். நண்பர் பொற்செழியனை நாளை அழைத்து எனது பாராட்டுகளைக் கூறி அவரை ஊக்குவிக்கிறேன்.

2011 தமிழ் இலக்கிய விநாடி வினாவை இணையத்தில் ஏற்றியதற்கு நன்றி.

அன்புடன் நாஞ்சில் இ. பீற்றர்.

-/சுடலை மாடன்/- said...

அன்பு மணி,
பேரவை விழாவிலிருந்து வந்த கையோடு என்னுடைய வண்டியில் இந்த ஒலித்தட்டைக் கேட்டு மகிழ்ந்து கொண்டிருக்கிறேன். அருமையான பாடல்கள் மிக இனிமையான இசை மற்றும் குரலில் இசைக்கப் பட்டுள்ளன. மிக அரிய முயற்சி. நண்பர் பொற்செழியனுக்கு என்னுடைய கருத்துகளை விரிவாக எழுதி அனுப்ப வேண்டுமென்று இரண்டு நாட்களாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் செய்ய அவகாசமில்லை. விரைவில் செய்கிறேன்.

உங்களுடைய பிற பேரவைப் பதிவுகளையும், படங்களையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் முடியவில்லை.

நன்றி - சொ.சங்கரபாண்டி

ஓலை said...

அருமை பழமை.

இதை கூகுளே+ உங்க அட்ரஸ் புக் கில் உள்ள எல்லா ID க்கும் அனுப்பியுள்ளது.

vidivelli said...

நல்ல பதிவு சகோ
வாழ்த்துக்கள்,,,

can you come my said?

நிரூபன் said...

வணக்கம் சகோ,
இனிமைத் தமிழ் மொழி இறுவட்டுப் பற்றிய அலசல் அருமை, அதனைப் பொன்னி நதி எனும் மண் வாசனயோடு ஒப்பிட்டு வர்ணித்துப் பாடல்களைச் சிறப்பித்த விதம் இன்னும் அழகு.

பாடல்களும் உங்களின் சிறு அறிமுகத்தை மெச்சும் வண்ணம் சிறப்பாக இருக்கும் என்பதற்குச் சான்றாக,
அறிமுகப் பாடல்- மழலைகளின் மொழியில் அமைந்திருக்கிறது.

பகிர்விற்கு நன்றி சகோ.

ராஜ நடராஜன் said...

உங்கள் தமிழ் எழுதும் நயம் தமிழகத்தை வலம் வரும் காலம் வருமா!

தாராபுரத்தான் said...

நன்றிங்க..

இராஜராஜேஸ்வரி said...

பேரின்ப அதிர்ச்சி அளித்த இனிமைத்தமிழ் மொழிப் பகிர்விற்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

senthil said...

வணக்கம் பழமைபேசி,

இக் குறுந்தகட்டினை அளித்த நண்பர் பொற்செழியனை அழைத்துப் பாராட்ட வேண்டும் என எண்ணியுள்ளேன். குறிப்பாக, எனது ஆசிரியரின் குரல் மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பல வருடங்களுக்கு முன்னர் கேட்ட அதே குரல்.வயதானாலும் குரலில் மாற்றமில்லாதது கண்டு பேரானந்தம் அடைந்தேன். சின்னக் குயில்கள் தேமரத் தமிழோசையை மணம் பரப்புகின்றன. இக்குறுந்தட்டினைத் தமிழக நண்பர்களுக்கு அனுப்புவதாக உள்ளேன்.

தங்களது வலையேற்றிய செய்திகளைப் படிப்பதா, புகைப்படங்களைக் கண்ணுறுவதா அன்றி காணொளிகளைக் காணுவதா, சுருங்கக் கூறின், தேனுண்ட உண்ட வண்டினைப் போல் சற்று கிறு கிறுத்துப் போயுள்ளேன்.

நன்றி - செந்தில் முருகன்

KRISHNARAJ said...

dear maplai
the song is super. very nice to hear.
I dont have tamil fonts in my system for typing. hence comment in english.pls bear