சங்ககாலப் படங்கள், தமிழன்னை உருவப்படம், திருவள்ளுவர் படம், பண்பாட்டுப் பதாகைகள், நல்வண்ணக் கோலங்கள், அழகு வேலைப்பாடுகள் என அரங்கம் மிக எழிலோடும், பொழிலோடும் காட்சியளித்தது.
மாபெரும் அரங்க வளாகம். வாகனத்தரிப்பு இடங்கள், வணிகக்கடைகள் பரப்பிடம், விசாலமானதொரு உணவுக்கூடம். வசதிக்குறைவில்லாதொரு இடத்தைத் தேர்வு செய்திருந்தனர் விழாக் குழுவினர்.
மங்கள் இசையுடன் விழா துவங்கியது காலை 8.30 மணிக்கு. உள்ளூர்ச் சிறார்கள் தமிழ்த்தாய் வாழ்த்தும், அமெரிக்கப் பாடலும் இசைத்தனர். அரங்கம் எழுந்து நின்று மரியாதை செலுத்தியது.
வாழ்த்துப்பா இசைத்தலைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்கள் நீலவண்ண தமிழ்ச் சீருடை அணிந்த பெண்டிர் புடைசூழ குத்துவிளக்கேற்றினார்கள். சிறுகச் சிறுக மக்கள் கூட்டம் உள்ளே வந்து கொண்டிருந்தார்கள்.
முனைவர் தண்டபாணி குப்புசாமி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். தலைவர் முனைவர்.பழனிசுந்தரம் அவர்கள் உண்ர்வுமிகு தலைமையுரை ஆற்றினார்கள். இனமாண்பு போற்றுவது மட்டுமே பேரவையின் வேலை, தம்கடமையில் அரசியலைக் கலப்பதே இல்லை என ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.
கவிஞர் சேரன் அவர்களின் பாடலுக்கு, வாசிங்டன் வட்டார தமிழ்ச்சங்கத்துச் சிறார்களின் நடனம் இடம் பெற்றது. பூமியின் அழகே, பரிதியின் சுடரே எனுமந்தப் பாடல் அரங்கத்தைக் கட்டிப் போட்டது. நடனமும் நேர்த்தியாய் வடிவமைக்கப்பட்டு இருந்தது.
அதனை அடுத்து, அன்பர் பொற்செழியன் இராமசாமி அவர்கள் அமெரிக்க சிலம்பம் மற்றும் குத்துவரிசைக் கழகத்தை அறிமுகப்படுத்தி வைத்தார். அறிமுகத்தைத் தொடர்ந்து சிலம்பம் மற்றும் குத்துவரிசை இடம் பெற்றது.
அமெரிக்காவில் ஏராளமான தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அத்தகைய பள்ளிகளில் எல்லாம் ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தினைக் கொண்டு வருமுகமாக அமையப் பெற்றதுதான் அமெரிக்க தமிழ் கல்விக்கழகம். அதனை அறிமுகப்படுத்தியும், அதன் கட்டமைப்புப் பணிகள் பற்றியும் எடுத்துரைத்தார் முனைவர் அரசு செல்லையா அவர்கள். அட்லாண்டாவில், தமிழ்ப் பாடம் அங்கீகாரம் பெற்றது எப்படி என்பதை விரிவாக எடுத்துரைத்து நம்பிக்கையும் ஊக்கமும் ஊட்டினார் அட்லாண்டா மாநகர் தமிழ் சங்கத் தலைவர் முனைவர். திரு. ரவி பழனியப்பன் அவர்கள்.
அமெரிக்க தமிழ் கல்விக்கழகத்தின் கட்டமைப்புக்கு வலு சேர்த்த அன்பர்கள் திரு.செளந்திர பாண்டியன், முனைவர் சொர்ணம் சங்கர் முதலானோர்க்கு சிறப்புச் செய்யப்பட்டது.
பேராசிரியர் புனிதா ஏகாம்பரம் அவர்கள், தம் சொல்வீச்சாலும் நகைச்சுவையாலும் அரங்கத்தினைக் கவர்ந்தார். இந்த நேரத்தில் நாம் ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். விழாவைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த இலதா கண்ணன் அவர்களது தெளிதமிழும் உச்சரிப்பும், அரங்கத்தில் இருக்கும் ஒவ்வொருவரையும் இதுவல்லவோ தமிழ் என உணர்ந்து சிலாகிக்கத் தூண்டியது.
சார்ல்சுடன் மாநகர உறுப்பினர் திருமதி காத்லீன் வில்சன் என்பார் வாழ்த்துரை வழங்கினார்கள். டெலவர் பெருநிலத் தமிழ்ச்சங்கத்தாரின், அமெரிக்க மருமகள் ஆண்டிபட்டி மாமியார் எனும் நாடகத்தின் மூலம் சிரிப்பொலி மூலம் அரங்கத்தை அதிர வைத்தார்கள்.

உணவு இடைவேளைக்குப் பின்னர், கொலம்பசு நகரத் தமிழ்ச்சங்கத்தினரின் நடனம் இடம் பெற்றது. வெகு அருமையாக இருந்தது. மிகுந்து இரசித்துப் பாராட்டப்பட்டது. தனித்தமிழே நனிச்சிறப்பு எனும் தலைப்பில், நண்பர் துரைக்கண்ணனின் தந்தையாரும் தமிழறிஞருமான திரு.துரை எழில்விழியன் அவர்களின் சொல்வீச்சு இடம் பெற்றது. சிந்தனைகளைக் கிளறுவிதமாக இருந்தது அவரது பேச்சு.
அடுத்து, கவிஞர் நா.முத்துகுமார் அவர்களது தலைமையில் கவியரங்கம் இடம் பெற்றது. அரசியல் பிழைத்தார்க்கு அறம் கூற்றம் எனும் தலைப்பில் இடம் பெற்றது கவியரங்கம். உணர்வுப்பூர்வமாக இருந்தன கவிதைகள். கவிநயம் சில இடங்களில் மிகவும் தூக்கலாக இருந்தது. அனைவருக்கும் பாராட்டுகளை அள்ளி வழங்கினர் பார்வையாளர்கள்.
அரசி நகரத்து அருங்கலைகள் எனும் தலைப்பில், சார்லட் நகர தமிழ்ச்சங்கத்தினர் வழங்கிய வில்லுப்பாட்டு, முளைப்பாரிப் பாட்டு, கும்மிப்பாட்டு, கரகாட்டம், காவடியாட்டம் முதலானவை அடங்கிய கதம்பம் அனைவரையும் கவர்ந்து, நாட்டுப்புறத்துக்கே இட்டுச் சென்றது. மிகவும் அருமை!!
அட்லாண்டா நகரத்தினர் வழங்கிய வீணை இசை, தெவீகக்களையோடும் இனிமையோடும் சிறப்புற அமைந்தது.
புதுகை பூபாளம் குழுவினர் வழங்கிய நிகழ்ச்சியில் மொத்த வருகையாளர்கள் ஒருங்கே அமர்ந்திருந்தார்கள் என்றே கூற வேண்டும். அடுத்தடுத்து நகையுணர்வுக்கு ஆட்பட்டமையால், ஏராளமானோர்க்கு விலா எலும்பு வலிக்கத்துவங்கின என்றே கூற வேண்டும். அடுத்தடுத்து சர வெடிகளை வெடித்துக் கொண்டே இருந்தனர் பிரகதீசுவரனும் செந்திலும்.
இடையில், தமிழிசைப்பேழை குறுந்தகடு வெளியிடப்பட்டது. நடிகர் சார்லியின் மேடை நிகழ்ச்சியும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. மனிதர் தனது அனுபவ நடிப்பை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தினார். கவிஞர் நா.முத்துக்குமாரின் வினாவுக்கு விடையளித்தல் நிகழ்ச்சியும் சுவாரசியமாக நடத்தப்பட்டது.
கோடைமழை வித்யா அவர்களது சிவகாமியின் சபதம் நாட்டிய நாடகம் அருமையாக இருந்தது. உணவு இடைவேளை சிறிது தள்ளிப் போகவே, முனைவர் சுந்தரவடிவேலுவும் பதிவர் பழமைபேசியும் இணைந்து தமிழ் மொழி குறித்தான கலந்துரையாடலை நடத்தினர். கூடியிருந்தோர் வெகுவாக அதனைப் பாராட்டி மகிழ்ந்தனர்.
உணவு இடைவேளைக்குப் பிறகு முக்கிய நிகழ்ச்சிகள் இடம் பெற்றன். விழா மலர் வெளியீடு, முக்கிய விருந்தினரைச் சிறப்பித்தல் ஆகியன்வற்றைத் தொடர்ந்து, முனைவர் மு.இளங்கோவன் சிறப்புரை ஆற்றினார். அழகான பாடலை, இசையறிவோடு தோய்த்துப் பாடினார் முனைவர். அரங்கம் கரவொலியால் அதிர்ந்தது. தொடர்ந்து, பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் அவர்கள் குறித்தான தமிழ்ப் பேச்சால் அரங்கத்தைக் கட்டிப்போட்டார் என்றே சொல்ல வேண்டும். சக பதிவர் என்கிற முறையிலே, நமது பாராட்டுகள் அவருக்கு உரித்தாகட்டும்.
முனைவர் மு.இளங்கோவன் அவர்களைத் தொடர்ந்து, கனடியப் பாராளுமன்ற உறுப்பினர் இராதிகா சிற்சபேசன் அவர்கள் தான் கடந்து வந்த பாதை எனும் தலைப்பில் தன் அனுபவத்தைப் பகர்ந்தார். அடுத்த தலைமுறையினருக்கு மிகவும் பயனுற அமைந்தது அவரது பேச்சு.
தொடர்ந்து பண்பட்ட மனதுக்குச் சொந்தக்காரர், கலையாற்றலும் நயமும் மிகுந்த நடிகர் நாசர் அவர்கள் திரைப்படம் குறித்தான் கருத்துகளை மிகச் செறிவாக எடுத்துரைத்தார். மிக, மிகப் பணிவோடும் பண்போடும் ஆற்றிய உரை என்றே கூறுவேன்.
நிறைவு நிகழ்ச்சியாக, தமிழிசையேந்தல் திருபுவனம் ஆத்மநாதன் அவர்களது தமிழிசை இடம் பெற்றது. இன்னிசையில் நனைந்த தமிழ் நரம்புகள் காதில் தேனைக் கொண்டு செவியுணர்வாகப் பாய்ச்சியது. மொத்தத்தில் முதல் நாள் நிகழ்ச்சியானது, மிகுந்த செறிவோடும் நல்லதொரு ஒழுங்கோடும் அமைந்திருந்தது. ஒளிப்பதிவுகளை இங்கே சென்று கண்டு களித்திடுவீராக.
நாளை இரண்டாம் நாள் நிகழ்ச்சிகளைத் தொகுத்தளிக்க முற்படும் வரையிலும் உங்களிடமிருந்து விடை பெற்றுக் கொள்வது,
--சார்ல்சுடன் இஃகயாத் விடுதியில் இருந்து உங்கள் பழமைபேசி.
2 comments:
அளப்பரிய மகிழ்ச்சியும் பரவசமும் பெருவியப்பும். சங்ககால்த்துற்குள்ளாகவே காலடி எடுத்து வைத்தாற் போன்றதொரு மனநிலை.//
எங்களுக்கும் அளித்த பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
தல வைஃப் ஆஃபீஸில் இருந்து அவசரம்னு சொல்லி கூப்பிட்டாங்கன்னு, அதிகாலையிலேயே அவங்க கிளம்பிட்டாங்க. நான் அஞ்சலிக்கு காவல். அவங்க திரும்பி வந்ததும்.. கிளம்பனும். இங்கிருந்து 240 மைல். இப்ப மணி 9.15
எப்படி பார்த்தாலும், மதியத்துக்கு மேல்தான் அங்க வந்து சேருவேன். கிளம்பும் முன்னாடி ஒரு sms அனுப்பறேன்.
Post a Comment