7/05/2011

பேரவையின் தமிழ்த்திருவிழா இரண்டாம் நாள்


முதல்நாள் நிகழ்ச்சியின் போழ்து கண்ட தமிழ்க் கலை நிகழ்ச்சிகளின் தாக்கம், அனைவரையும் ஊக்கமூட்டி சரியான நேரத்துக்கு தமிழ் உறவுகள் அனைவரையும் அரங்குக்குக் கூட்டி வர, விழா நிகழ்ச்சிகள் சரியான நேரத்திற்கு, காலை 8.30 மணிக்குத் துவங்கியது.

முதலில், திருக்குறள் மறைமொழி ஓதல் இடம் பெற்றது. பிறகு, அன்பர் யுவராஜ் அவர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்தளிக்கப் பணிக்கப்பட்டார். தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் அமெரிக்க தேசிய கீதம் பாடப்பட்டது.

அடுத்து, அரங்கத்தில் இருப்போரைப் பரவசப்படுத்தும் விதமாய் இருந்தது கிரீன்வில் தமிழ்ச்சங்கத்தாரின் நாட்டிய நிகழ்ச்சி. முழுத்திறனும் ஒருங்கே வெளிப்பட்டது. மெய்சிலிர்த்துப் பார்த்திருந்தேன்.

முனைவர் பிரான்சிசு முத்து அவர்கள், தமிழர் பண்பாட்டு ஆய்விதழ் எனும் தலைப்பில் தெளிதமிழில் உரையாற்றினார்.

வட அமெரிக்க தமிழ்ச்சிறார்கள் பங்கேற்ற தமிழ்த்தேனீ நிகழ்ச்சியின் ஒரு பங்காக, பன்முகத்திறன் போட்டியை பேராசிரியர் புனிதவதி ஏகாம்பரம் அவர்கள் அட்டகாசமாய், சுவைக்கூட்டி நடத்திச் சென்றார். நண்பர் பொற்செழியன் ஒருங்கிணைத்திருந்தார்.

கரோலைனா தமிழ்ச்சங்கத்தின், இசையும் நளினமும் சந்திக்கின்றன நடன நிகழ்ச்சி அருமையாக இருந்தது. அடுத்து, கெழுமைமிகு நண்பர் அட்லாண்டா இராசா அவர்கள் தமிழ்த்தேனீ போட்டியின் பரிசு வழங்கலைத் தொகுத்தளித்தார். முனைவர் அரசு செல்லையா, முனைவர்.மு.இளங்கோவன், பேராசிரியர் புனிதா ஏகாம்பரம் ஆகியோர் பரிசு வழங்கிச் சிறப்பித்தனர். செல்வன் பவுர்னிகா அவர்கள், மூன்று போட்டிகளில் வென்று வாகைசூடி எனும் பட்டத்தை வென்றார். கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு வென்ற ஸ்ரீநிதி மணிவாசகம் அவர்களது கட்டுரை வெகுவாகச் சிலாகிக்கப்பட்டது மேடையில். பன்முகத்திறனில் செல்வி மாதவி சங்கரும் செல்வன் நம்பி பொற்செழியன் சிறப்பிக்கப்பட்டனர்.

அடுத்து வந்தது, நாஞ்சில் பீற்றர் அய்யா மற்றும் ஆசான் கொழந்தைவேல் ஆகியோர் இணைந்து அளித்த இலக்கிய விநாடி வினா நிகழ்ச்சி. மிக மிக இலக்கியச் செறிவோடு, பதினென்கீழ்க் கணக்கு நூல்களை அடிப்படையாக வைத்து நடத்தப்பட்டது. பொறிஞர் சுந்தர் குப்புசாமி அவர்களும், முனைவர் இரமா ஜெயபாலன் அவர்களும் அணித்தலைவர்களாகச் செயல்பட்டனர். எட்டிலிருந்து எண்பது வரை எனக்குறிப்பிட்டு, எண்பது வயது நிரம்பிய பெருமதிப்புமிகு அமிர்தலிங்கம் அண்ணாதுரை அவர்களும் எட்டு வயது நிரம்பிய செல்வி ஸ்ரீநிதி மணிவாசகம் அவர்களும் சிறப்பிக்கப்பட்டனர்.

கரோலைனா தமிழ்ச்சங்கத்தினரின் நடன நிகழ்ச்சி இடம் பெற்றது. அதற்குப் பின்னாலான கடும் உழைப்பினைப் புரிந்து கொள்ளும் விதமாக அமைந்திருந்தது. அடுத்து கரோலைனா தமிழ்ச்சங்கதினர் வழங்கிய, காவடி ஆட்டம் கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. மிசெளரி தமிழ்ச்சங்கத்தின் சங்கே முழங்கு நிகழ்ச்சி, விவரிக்க சொற்கள் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர், கொலம்பியா, தென்கரோலைனா தமிழ்ச்சங்கத்தின் நடனக் கோர்வை நிகழ்ச்சி இடம் பெற்றது. பிறகு, பாரியின் கதை எனும் நாடகம், வாசிங்டன் வட்டார தமிழ்ச்சங்கதினரால் இடம் பெற்றது. ஒப்பனைகள் வெகு பிரமாதம்.

வானொலி அறிவிப்பாளர் திரு.அப்துல ஜப்பார் அவர்கள் நடுவராக இருந்து நடத்திய பட்டிமண்டபம், தமிழைச் சிதையாமல் காப்பது பொதுமக்களா அல்லது ஊடகங்களா எனும் தலைப்பில் இடம் பெற்றது. அணித் தலைவர்களாக, பேராசிரியர் புனிதவதி ஏகாம்பரம் அவர்களும், நண்பர் திரு.ஜான் பெனடிக் அவர்களும் பேசினர். சிறப்பாக இருந்தது.

தமிழின் இன்றைய நிலை எனும் தலைப்பில் முனைவர் சு.பழனியப்பன் பேசினார். கருத்துச் செறிவோடும், ஆதாரப்பூர்வமாகவும் பேசியமை குறிப்பிடத்தக்கது. வெள்ளுடையில் அரங்கத்தைக் கலக்க வந்தார்கள், கரோலைனா தமிழ்ச்சங்கத்தினர். அவர்களது ஒயிலாட்டம், வெகுசிறப்பாக இருந்தது. சீட்டி ஒலி விண்ணைப் பிளந்தது. அடுத்து, தென்கரோலைனா சங்கத்தினரின் சிறப்பு நாடகத்தின் ஒரு பகுதியான நடனம் இடம் பெற்றது. எழிலார்ந்த காட்சியது.

வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை வரலாற்றிலேயே இடம் பெறாத சாதனை ஒன்று நிகழ்த்தப்பட்டது. வயதில் மூத்தவர்கள், சுகாதாரத்தில் நாங்கள் இன்னமும் இளையோரே எனப் பறைசாற்றக் களமிறங்கினர், மிசெளரி தமிழ்ச்சங்கப் பெரியோர். என்னே கண்கொள்ளாக் காட்சியது?!

புதுகை பூபாளம் குழுவினரும், நடிகர் சார்லியும் இணைந்து நடத்திய நாடகம் அனைவரையும் விலா எலும்பு முறியுமளவிற்குச் சிரிப்பைக் கூட்டியது.

மனித உரிமை வழக்கறிஞர் கெரன் பார்க்கர், நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் மாண்புமிகு விசுவநாதன் உருத்திரகுமாரன் உரையாற்றினர். அழுத்தத்திருத்தமாக பேசினர். தமிழர் அனைவரும், அவர்களது பேச்சினை அவசியம் காணொலியில் காண வேண்டிய உரையது. இந்நிகழ்ச்சியைப் பேரவைத் தமிழர் முனைவர் பழனி சுந்தரம் அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.

திருவிழாவின் உச்சகட்ட நிகழ்ச்சி இது என்று உறுதியாகச் சொல்ல முடியும். அரங்கம் அதிர்ந்து, தமிழர் அனைவரும் உற்சாக வெள்ளத்தில் நீந்தினர். ஆம. திண்டுக்கல் சக்தி குழுவினரின் தப்பாட்டம் மற்றும் தமிழ்க்கலைகள் பல சுற்றுகளாக இடம் பெற்றன. சகோதரி சந்திரா அவர்களைக் கண்கள் பனிக்க பாராட்டி மகிழ்ந்தேன்.

இரவு உணவு இடைவேளையில், முனைவர் மு.இளங்கோவன் மற்றும் முனைவர் சு.பழனியப்பன் அவர்க்ள் சிறப்பாளர்களாய் இருக்க, முனைவர் சொர்ணம் சங்கரும் பதிவர் பழமைபேசியும், தமிழ்மணம் பட்டறை மற்றும் பதிவர் சந்திப்பினை இணைந்து நடத்தினர். நிகழ்ச்சியில், சிறப்பான கருத்துகள் பல அலசப்பட்டன.

இளந்தமிழர்களின் சாதனைகளும், சவால்களும் எனும் தலைப்பில் இடம் பெற்ற நிகழ்ச்சி, பெற்றோருக்கும் வளர்ந்து வரும் இளந்தமிழருக்கும் பயனளிக்கும் வகையில் இருந்தது. பயனுள்ள இந்நிகழ்ச்சிகள் தொடர வேண்டும்.

பேரவை சிறப்பு விருந்தினர் சிறப்பிக்கப்பட்டார்கள். தன்னார்வத் தொண்டர்கள் சிறப்பிக்கப்பட்டார்கள். நிறைவாக, அட்லாண்டா சகானா டிரீம்சு குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழர் கூட்டம், இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் திளைத்துப் போய் தத்தம் உறைவிடம் நோக்கித் திரும்பும்போது நடுநிசியைத் தாண்டிய நேரமது. அட்லாண்டிக்கடல் கானப் பறவையொன்று, கானம் பாடி அவர்களைக் வழியனுப்பிக் கொண்டிருந்தது அரங்க வாயிலில்!!

தமிழால் இணைந்தோம்! தமிழராய் வாழ்ந்திடுவோம்!!

4 comments:

ஓலை said...

தந்தையை காட்டிலும் வெற்றி வாகை சூடி வரும் ஸ்ரீநிதி மணிவாசகத்திர்க்கு மனதார பாராட்டுகள்.

Mahi_Granny said...

இலக்கிய விநாடி வினா காணொளி பார்க்கக் கிடைத்தால் நல்லது. இந்த வருடமும் காணக் கொடுத்து வைக்கவில்லை. வழக்கம் போல் மேற்கு கடற்கரை வர வேண்டிய சூழ் நிலை. ஸ்ரீநிதிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

சத்ரியன் said...

//மனித உரிமை வழக்கறிஞர் கெரன் பார்க்கர், நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் மாண்புமிகு விசுவநாதன் உருத்திரகுமாரன் உரையாற்றினர். அழுத்தத்திருத்தமாக பேசினர். தமிழர் அனைவரும், அவர்களது பேச்சினை அவசியம் காணொலியில் காண வேண்டிய உரையது.//

காணொளி பதிவேற்றுவீர்கள் என்று நம்புகிறேன்.

சத்ரியன் said...

//கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு வென்ற ஸ்ரீநிதி மணிவாசகம் அவர்களது கட்டுரை வெகுவாகச் சிலாகிக்கப்பட்டது மேடையில்//

எங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரியப் படுத்துங்கள்.