7/02/2011

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றம்!

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவைத் திருவிழாவில், கலைமாமணி கவிஞர் நா.முத்துக்குமார் அவர்களது தலைமையில், உணர்வுமிகு கவியரங்கம் நடைபெற்றது. மிகவும் உணர்வுப்பூர்வமாக இருந்தது. அன்பர் உதயசூரியன் மிகச் சிறப்பாக தொகுத்தும், ஒருங்கிணைத்தும் இருந்தார். இதோ, அதில் இடம் பெற்ற ஒரு கவிதை!!

அவையோரே, சபையோரே
அன்பான நண்பர்களே,
எம் தீந்தமிழ் உறவுகளே வணக்கம்!

அவையோரே, சபையோரே
அன்பான நண்பர்களே,
ஆண்டுபல மூத்தோரே,
எம் தீந்தமிழ் உறவுகளே வணக்கம்!!
திருவாசகம் படைத்த
மணிவாசகர் நாமம்
தாங்கித் திரியும் இவ்வுடலுக்கு

திருவாசகம் படைத்த
மணிவாசகர் நாமம்
தாங்கித் திரியும் இவ்வுடலுக்கு

கல்தோன்ற மண்தோன்ற முன்தோன்றிய முதுபெரும் தமிழே
முதுகெலும்பாகட்டும்!!
ஆம், முதுபெரும் தமிழே
எமக்கு முதுகெலும்பாகட்டும்!!

புழுதி தடவி, விழுந்து கிடந்து
ஆடி ஆடி விளையாடிப்
புரண்டு தழுவிய எம்நிலத்தைத்
தழுவித் தாவிவரும் செங்காற்றே
சற்றே என்மீது மோதிவிடு
என்னைக் கொஞ்சம் பேசவிடு

எழுதக் கையும்
எழுதக் கையும் நடுங்கி விடும்
எம்மவர் துயர வரலாறு

சிட்டுக்குருவிகள் போல் பறந்து திரிந்திருந்தோம் - இன்று
விட்டில்பூச்சிகளாய் தீயில் வீழ்ந்து மாய்ந்து விட்டோம்

அழுது அழுது ஒடுங்கியதால்
அடங்கிய கண்கள் பலநூறு
எத்தனை எத்தனை உயிர்களடா?
அரும்பு மொட்டுகளாய்
பிஞ்சுக் குழந்தைகளாய்
தவழும் மழலைகளாய்
எத்தனை எத்தனை உயிர்களடா??
அழுது அழுது ஒடுங்கியதால்
அடங்கிய கண்கள் பலநூறு

தெருமுனை முதல் பாராளுமன்றம் வரை
சொல்வதற்கு
உனக்குத் தமிழ்ச் சொல்லேதும் கிடையாதா?
மெல்லத் தமிழ்ச் சாக
வேடிக்கை பார்க்கின்றாய்
உள்ளம் குமுறாதோ? ஓங்கி ஒலி வாராதோ?

மெல்லத் தமிழ்ச் சாக
வேடிக்கை பார்க்கின்றாய்
உள்ளம் குமுறாதோ? ஓங்கி ஒலி வாராதோ??

நமக்கான அந்நானிலத்தில்
தமிழுக்கும் தமிழனுக்கும் நாதியுண்டோ??
ஆம், பிறந்தோம் என்று அடங்கி அழிவோமா?

கல்லாத மாந்தர்க்கு
கற்றுணர்ந்தார் சொல் கூற்றம்!
அல்லாத மாந்தர்க்கு
நல்லோர் மொழிதல் கூற்றம்!
கிடக்கும் நுணலுக்குத்
தன் வாயதுவே கூற்றம்!
மெல்லிய வாழைக்குத்
தானீன்ற காய் கூற்றம்!
அரசியல் பிழைத்தோர்க்கு
அறம் கூற்றாம்!

கல்லாத மாந்தர்க்கு
கற்றுணர்ந்தார் சொல் கூற்றம்!
அல்லாத மாந்தர்க்கு
நல்லோர் மொழிதல் கூற்றம்!
கிடக்கும் நுணலுக்குத்
தன் வாயதுவே கூற்றம்!
மெல்லிய வாழைக்குத்
தானீன்ற காய் கூற்றம்!
அரசியல் பிழைத்தோர்க்கு
அறம் கூற்றாம்!
ஆனால் அந்த அறமே பிழைத்து நிற்கும் போது,
எது கூற்றம்?!

அரசியல் பிழைத்தோர்க்கு
அறம் கூற்றம்!
ஆனால் அந்த அறமே பிழைத்து நிற்கும் போது,
எது கூற்றம்?!

தேமதுரத் தமிழோசை
வீடுகளில் ஒலிக்கச் செய்திடுவோம்!
பன்னாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்பல
கற்றுத் தேர்ந்திடுவோம்!
பார் பார்க்கக் கனடியச் சபையில்
தமிழ்க்குரலிட்ட
இராதிகா சித்சபேசன்கள் பெருகட்டும்
மொத்தத்தில்
நம்குரல் அவனியெங்கும் ஒலிக்கட்டும்
அரவணைத்த நாட்டுக்குப்
பெருமைகள் பல சேரட்டும்
நம் பிள்ளைகள்
பேறுகள் ஏராளம் பெற்றிடட்டும்

ஐநா சபையில்
பல்இளித்து
ஆடையின்றி
அம்மணமாய்ப்
பிழைத்து நிற்கும் அறமதற்கு

முச்சந்தியில்
பல்இளித்து
ஆடையின்றி
அம்மணமாய்ப்
பிழைத்து நிற்கும் அறமதற்கு
நாமே கூற்றாவோம்!!
நம் உயர்வே கூற்றாகட்டும்!!

வாழ்க தமிழ்!!

No comments: